Kalamkaval review

களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.

Share

Sirai – Islamic appeasement movie

சிறை என்ற கொடுமையைப் பார்த்தேன். என்னடா அனைத்து ‘முற்போக்கு’களும் இப்படி டான்ஸ் ஆடுகிறார்களே என்று பார்த்தால், அது ஏன் என்பதற்கு இன்றுதான் பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் ஒரு தமிழ்ப்படம், வாரே வாஹ், என்னை தமிழ் இயக்குநர்கள் ஏமாற்றுவதே இல்லை.

அதே இஸ்லாமிய தாஜா ஜல்லி. உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் எந்த அச்சத்திலும் இல்லை. இருக்கவேண்டிய தேவையும் இல்லை. (பிராமணர்கள் பயந்து வாழ்கிறார்கள் என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு மதமாகவோ இனமாகவோ சாதியாகவோ அஞ்சி வாழவேண்டிய நிலையில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான். அவ்வப்போது எழும் பிரச்சினைகள் எல்லாம் எல்லாருக்குமே பொதுவானவை. ஒரு சாதி அல்லது மதம் மேல் இருக்கும் வெறுப்பு என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் அஞ்சி வாழ வேண்டிய அளவுக்கு இன்னும் போகவில்லை.) ஆனால் இந்தப் படம் இல்லாத ஒன்றை இருப்பது போல இட்டுக்கட்டிச் சொல்கிறது.

படம் முழுக்க புல்லரிப்புதான். ஒரே ஒரு இஸ்லாமியப் பையன், அன்பே உருவான பையன், அவன் விலகிப் போனாலும் காதலிக்கும் இந்துப் பெண். என்ன ஒரு டெம்ப்ளேட்! தெரியாமல் அவன் அந்தப் பெண்ணின் அப்பனைக் கொன்றுவிட, உண்மை தெரிந்து அவனையே உருகி உருகிக் காதலிக்கும் பெண்… இன்னொரு காட்சியை மறந்துவிட்டேனே… அந்த நீதிபதி மன்னிப்புக் கேட்கும் காட்சி… இதைச் சொல்வதா அல்லது நானும் முஸ்லிம்தான் என்று போலிஸ் சொல்வதைச் சொல்வதா… எத்தனை எத்தனை காட்சிகள். அதிலும் கோர்ட்டுக்கு முன்னால் அவன் நமாஸ் செய்யும் காட்சியில் நானே வாயடைத்துப் போய்விட்டேன். இயக்குநர் எங்கோ சென்றுவிடுவார் என்பது உறுதி.

ஈழத் தமிழர்களுக்காக முதலில் உயிர் இழந்தவர் என்று ஒரு இஸ்லாமியப் பெயரைச் சொல்லும் காட்சி உண்டு. அதற்குப் பிறகு அதே ஈழத்தில் அந்த இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து இந்தத் திரைப்படம் மூச்சே விடவில்லை.

இந்தப் படத்தின் ஹீரோவாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் அற்புதம். இத்தனை கிறுக்கான போலிஸை தமிழில் இதுவரை எந்தப் படமும் இத்தனை மெச்சூர்டாகக் காட்டியதில்லை. பைத்தியக்காரத்தனமான மெச்சூரிட்டியின் உச்சம் இந்தக் கதாபத்திரம்தான்.

தவறவே விடக் கூடாத படம். பார்த்துக் கண்ணீர்விட்டுத் தொலையுங்கள்.

Director has said this – https://www.facebook.com/share/p/1CBpXTPy7M

Share

Tamil pen puli

பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்தகம் படித்தபோதே அதில் பல இடங்களில் தமிழ்ப் பெண் பு₹லி என்ற புத்தகம் மேற்கோள் கட்டப்பட்டிருந்தது. அப்போதே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் தற்செயலாகக் கண்ணில் படவும் முதலில் அதைஒ படிக்க நினைத்து வாங்கினேன். படித்து முடித்தும் விட்டேன்.

முக்கியமான புத்தகம்தான். நிரோமி பெண் பு₹லியாகச் சேர்வதற்கு முன்பே அவருக்குப் பு₹லிகள் குறித்த சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்கள் ஏன் டெ₹லோ போன்ற சக போராட்டக்காரர்களை இப்படிச் சாகடிக்கிறார்கள் என்பது குறித்து அதிருப்தி அது. ஆனாலும் அவர் பு₹லிப் பிரிவில் சேர்கிறார். அதற்குப் பின்பு அங்கு நடந்தவற்றையெல்லாம் அவர் விரிவாகப் பதிவு செய்கிறார். அதில் நமக்குத் தேவையான பல தகவல்கள் கிடைக்கின்றன.

சந்தேகப்படுபவர்கள் எல்லாம் ஆதாரம் இல்லாவிட்டால் கூட, துரோகி என்று முத்திரை குத்திப் பு₹லி₹கள் கொன்றிருக்கிறார்கள். அடித்து துவம்சம் செய்து பின்னர் அவர் குற்றவாளி இல்லை என்ற பிறகு சில சமயம் விடுவித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் புத்தகத்தின் 181ம் பக்கம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

பு₹லிகள் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல், தப்பிக்க வேண்டும் என்றால் யார் வீட்டுக்குள்ளாவது சென்று புகுந்து கொள்வார்கள். அங்கேயே தங்குவார்கள். உணவருந்தி உறங்கிவிட்டு ஒரு நாளோ ஒரு வாரமோ கழித்துப் பின்னர்தான் போவார்கள். பல வீடுகள் காலியாகக் கிடந்ததால் அங்கேயே பல நாள்கள் தங்குவார்கள். பக்கத்தில் இருக்கும் கடைகளில் திருடி உணவு உட்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலவற்றை இந்தப் புத்தகத்தில் போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார் நிரோமி.

உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்ட திலீபன் பற்றிய மிக விரிவான சித்திரம் இந்தப் புத்தகத்தில் இணையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்த மரணம் குறித்த இன்னொரு பார்வை, பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூலில் அதிர்ச்சிகரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

சிறிய வயதில் புலிகள் இயக்கத்தில் சேரும் பெண்களுக்குரிய பல பிரச்சினைகள் இந்தப் புத்தகத்தில் அழகாக வெளிப்படுகின்றன. அழகான ஆண் பையன்களை பார்ப்பது, சைட் அடிப்பது, காதலிப்பது என்று வாழ்ந்திருக்க வேண்டிய வயதில் இவர்கள் துப்பாக்கியுடன் உயிருக்காக ஓடுகிறார்கள். ஆனாலும் அந்த உணர்வுகள் இந்தப் பெண்களை விட்டுப் போய் விடுவதில்லை‌ அழகான பையன்கள் வரும் இடத்துக்குக் காவலுக்குப் போகச் சந்தோஷப்படுகிறார்கள். கூடவே பேன் பிரச்சினைகள், மாதவிடாய்ப் பிரச்சினைகள் குறித்தவையும் உண்டு.

உயிருக்கும் மரணத்துக்கும் இடையே போராடும் போதும் அவர்களுடைய நகைச்சுவை உணர்வு குறையவே இல்லை. குறிப்பாக, சு சு சுடு என்று திக்கிக்கொண்டே தலைவர் ஒருவர் சொல்வதற்குள் நம்மைக் கொன்று போட்டு விடுவார்கள் என்று பேசிக் கொள்வது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் இந்தப் புத்தகம் கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், கூடவே ஒரு குறையும் உண்டு‌ பல வரிகளை மொழிபெயர்க்காமல் அதன் சாரத்தை மட்டும் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால் பல இடங்களில் தொடர்பறுந்து புத்தகம் வேகமாக ஓடுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. சில இடங்களில் ஏன் சில வரிகளை மொழிபெயர்க்காமல் விட்டார்கள் என்பதே புரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாகக் கவனித்திருக்கலாம். ஆங்கிலப் புத்தகத்தில் பின்னணைப்பாக உள்ள படங்களைக் கூட தமிழ்ப் புத்தகத்தில் சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள். அதேசமயம், ஆங்கிலத்தை ஒப்பிடாமல் படித்தால் தமிழில் படிக்கக் கச்சிதமாகத்தான் இருக்கிறது.

புத்தகத்தின் கடைசி வரியாக இன்றைய ஸ்ரீ லங்காவின் நிலையைத் தமிழில் சேர்த்திருக்கிறார்கள்‌ ஆனால் அது ஆங்கிலத்தில் இல்லை. ஒருவேளை நிரோமியின் ஒப்புதலின் பேரில் கூட இதைச் சேர்த்திருக்கக்கூடும்.

கேள்வி கேட்காதே – தலைவனை நம்பு – ஒரே ஒரு இயக்கம் இருந்தால்தான் தமிழீழம் சாத்தியம் – இவை அனைத்து பு₹லிகளுக்கும் போதிக்கப்படுகின்றன. அவர்களும் கேள்வியே இன்று அதை நம்புகிறார்கள். எத்தனை பேர் இறந்தாலும் அடுத்தடுத்துப் பு#லிகள் அந்தக் காலகட்டத்தில் வந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் காலமாற்றும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. எது யதார்த்தம் என்பதை நிரோமியின் புத்தகத்தில் அவர் வார்த்தைகளிலேயே நாம் தெளிவாகக் காணலாம். வன்முறைக்கு எதிராக இன்னொரு வன்முறையில் சேர்ந்து விட்டு, இப்போது வருத்தப்பட்டு எந்தப் பயனும் கிடையாது என்று நிரோமி தெளிவாக விளக்கமாக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் புத்தகம் முக்கியமான ஆவணம்தான்.

நிரோமிக்கும் ரோஷனுக்குமான காதல் அத்தியாயங்கள் அட்டகாசம். கிட்டத்தட்ட ஒரு நாவலைப் போல இருக்கின்றன. ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்ததாலோ என்னவோ மிக கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே இந்த நூலின் மிகப்பெரிய பலம். அப்படியே எந்தவித மாற்றமும் இன்றி அழகான திரைக்கதையாக மாற்றி ஒரு திரைப்படமாக எடுத்தால் சந்தேகமே இன்றி பிளாக்பஸ்டராக அந்தப் படம் அமையும்.

நிரோமி இப்படிப் பு₹லிகளைக் குற்றம் சாட்டுவதால் பு₹லிகள் ஆதரவாளர்களின் பார்வையில் நிரோமி கூட ஒரு துரோகியாக இருக்கக்கூடும். எனக்கு அது பற்றித் தெரியவில்லை. ஆனால் இந்திய அமைதிப்படையைப் பற்றியும் சில வரிகளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்‌ என்ன பிரச்சினை என்றால், பு₹லிகள் மற்றும் இந்திய அமைதிப்படை குறித்த அவரது பார்வை இரண்டையும் நாம் ஏற்க வேண்டும் அல்லது இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என்பதுதான்.


சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற புத்தகம் ஏன் முக்கியமானது என்பதற்கான சில ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சி வீழ்ச்சியும்’ தமிழில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நூல். பல புத்தகங்கள் பு₹லிகள் இயக்கத்தைப் பாராட்டியும் அங்கங்கே விமர்சித்தும் வரும்வேளையில், முற்றிலுமாக இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதைப் பற்றிப் பின்னர் இன்னொரு பதிவில்.


தமிழ்ப் பெண் பு#லிகள், நிரோமி டி சோய்ஸா, தமிழில் சிவகாசி பிரகாசம், உமா மகேஸ் டாட் காம், 200 ரூ

Share

Pathimoonaavathu maiyavaadi

தமிழில் கிறித்துவத்தை இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் நாவல்கள் குறைவு, இது அவற்றில் உச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் புரட்டு செய்வதாகவோ அல்லது அவர்கள் நிஜமாகவே செய்யும் அனைத்து விதமான புரட்டுகளுமோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஒரு சிறுவன் வயதுக்கு வரும் நாவல் என்று இதைக் கொண்டாலும், அதைப் பின்னணியாக மட்டுமே பார்க்கவேண்டி இருக்கிறது. மணிரத்னம் தன் படங்களில் பெரிய பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் தர்மன் வயதுக்கு வரும் ஒரு விடலையின் பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதைவிட பெரிய களத்தை நாவலில் சொல்லி இருக்கிறார். கன்னியாஸ்திரிகளுடன் உறவு, பெண்களுடன் உறவு, ஏமாற்று என பாதர்களை தேவைக்கும் அதிகமாகவே சோதித்துவிட்டார் தருமன். சில இடங்களில் இவை அத்துமீறுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். குறிப்பாக, எந்த எந்தக் காயை வாங்குவார்கள் என்பதும், ஆணி அடிக்கவேண்டும் என்று கொச்சையாகப் பேசுவதும். இவை ரசக்குறைவு. தவித்திருக்கலாம்.

நாவலின் குறைகள் என்று பார்த்தால் பலவற்றைச் சொல்லலாம். முதல் குறை, அனைத்துப் பெண்களும் கருத்தமுத்துவைப் பார்த்த உடனே படுக்கைக்கு அழைப்பது. இத்தனைக்கு அவன் சிறிய பையன். கொடுமை. இதிலும் மிக மோசமான பாத்திரப் படைப்பு ஜெஸ்ஸி. தன் தாயை அவள் எதற்காக வெறுக்கிறாளோ அதையே அவளும் செய்கிறாள். பின்னராவது அதைப் புரிந்துகொண்டு அவள் தாயை ஏற்றுக்கொண்டிருப்பது போல் சித்தரித்திருக்க இருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், ஜெஸ்ஸி கதாபாத்திரம் மிக மோசமான பாத்திரமாகத் தேங்கிவிட்டது. அதிலும் திருமணத்துக்குப் பிறகும் கருத்தமுத்துவுடன் உறவு, குழந்தை பிறந்தபிறகும் முத்தம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம். பிற குறைகள் — பல கதாபத்திரங்கள் அப்படி அப்படியே தேங்கி நிற்பது, நாவல் திடீர் திடீரென அறுந்து எங்கெல்லாமோ போவது, கடைசிச் சில பக்கங்கள் வேகமாகச் செல்வது, மீண்டும் மீண்டும் ஒரே போன்ற பாலியல் பிறழ்வுகளே கதைகளாக வருவது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட கிறித்துவத்துக்குள் இருக்கும் ஊழலை முன்வைப்பதே நாவலின் நோக்கம் என்றாலும், கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற தொண்டையும் இந்த நாவல் சொல்கிறது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கான மருத்துவம் குறித்த பக்கங்கள்.

மையவாடியைச் சுற்றி வரும் அத்தியாயங்கள் எல்லாமே அருமை. இந்த ஒன்றில் மட்டுமே தொடக்கம், மையம், முடிவு எல்லாமே ஒரே சீராக வெளிப்பட்டிருக்கிறது.

இறுதியில் வரும் கம்யூனிஸ்ட் ஒருவனின் சிந்தனை, இன்றைய ஹிந்துத்துவச் சிந்தனை போலத் தோன்றியது எனக்கு.

இத்தனையிலும் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மிக எளிதாக கருத்தமுத்துவை ஹிந்துச் சிந்தனை கொண்டவனாகக் காட்டி இருக்கும் வாய்ப்பு இருந்தும், முற்போக்காகக் காட்டி இருக்கிறார் தர்மன். எனவே அவரது நோக்கம் ஹிந்து எதிர் கிறித்துவம் என்று நிற்பதல்ல, மாறாக, அவரை உறுத்திய கிறித்துவ மடங்களுக்குள் நிலவும் பாரபட்சங்களை முன்வைப்பதே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தைரியமான நாவல்தான். இது உருவாக்கும் வித்தியாசமான உலகுக்காக நாவலை நிச்சயம் வாசிக்கலாம்.

புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/

Share

Chennai book fair 2026 final day

நேற்று புத்தகக் கண்காட்சி வேலையெல்லாம் முடிந்து இரவு 10:30க்குக் கிளம்பும்போது கண்காட்சி வாசலில் காத்திருந்த ஒருவர் பைக்கில் ஏறிக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு எலக்ட்ரிக் டிரைன் ஸ்டேஷனில் இறக்கி விடச் சொன்னார். கிண்டி வரை பேசிக்கொண்டே வந்தார். அவரே பேச ஆரம்பித்தார். யாரிடமாவது இதையெல்லாம் சொல்ல மாட்டோமா என்கிற ஏக்கம் அவர் குரலில் தெரிந்தது. அவர் பெயரும் ஊரும் வேண்டாம். கான்ஸ்டபிளாக இருக்கிறார். வயது 36. வரும் 23ஆம் தேதி மோடி வருவதை ஒட்டிய பாதுகாப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். நல்ல படிப்பு படித்துவிட்டு, சிவில் தொழிலில் நல்ல வேலையிலும் இருந்துவிட்டு, நுழைவுத் தேர்வுக்குப் படித்து, பாஸாகி கான்ஸ்டபிளாக மாறியிருக்கிறார். எட்டு வருடம் வேலை செய்து அவர் இப்போது பெறும் சம்பளம் 34,000 என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இத்தனை குறைவாகவா பணம் வருகிறது என்று கேட்டேன். இத்தனைக்கும் இரண்டு கழகங்களும் போலீசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார், போலீஸ் என்பது ஆளுங்கட்சியின் அடிமை மற்றும் அடியாள், அடிமைக்கும் அடியாளுக்கும் யாரும் அதிகப் பணம் தர மாட்டார்கள் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இன்ஜினியரிங் தொழிலிலேயே இருந்திருந்தால் இந்நேரம் எவ்வளவோ சம்பளம் வாங்கி எப்படி எல்லாமோ மரியாதையாக இருந்திருப்பேன், இங்கே எந்த மரியாதையும் இல்லை, குறிப்பாக புத்தகம் படிக்கிறவனக்கு எந்த மரியாதையும் கிடையாது என்றார். கிண்டியில் இறங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

ஒரே ஒரு நொடி மட்டுமே அவர் முகத்தைப் பார்த்தேன். பாவமாக இருந்தது.

Share

Chennai Book Fair 2026

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் கடந்த நான்கு நாள்களாகக் கண்ணில் பட்டவையும் அவை தொடர்பாக மனதில் தோன்றியவையும்.

* வழக்கம்போல முதல் வரிசைக் கடைகளில் மட்டுமே பெரும் கூட்டம். மற்ற கடைகளில் ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவு. வரிசைகளை மாற்றி மாற்றி டிக்கெட் கொடுத்தாலும், மக்கள் என்னவோ தொடக்க ஸ்டாலில் இருந்து பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சீரியஸாக பபாஸி யோசிப்பது நலம்.

* நான்கு ஸ்டால்கள் எடுத்தாலும் கூட, முதல் வரிசையில் அரங்கு இல்லாவிட்டால் விற்பனை ஒப்பீட்டளவில் குறையவே செய்யும்.

* இந்த முறை தமிழ்ப் புத்தகங்களைவிட ஆங்கிலப் புத்தக அரங்குகளில் அதிகம் கூட்டம் தென்படுவது போன்ற ஒரு பிரமை.

* தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளால் நிச்சயம் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் குறைந்திருக்கிறது. ஆனாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் மீதான மக்களின் ஆர்வம் கூடுதலாகவே இருக்கிறது. இந்திய அளவில் அதிக அளவில் மக்கள் புத்தகம் வாங்க வரும் புத்தகக் கண்காட்சிகளில் இது முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த பதிப்பு உலகத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது. இதற்கேற்றாற் போல் திட்டமிடாவிட்டால் கடினம்.

* பதிப்பகம் ஒரு பிராண்டாக நிலைபெறாவிட்டால் பதிப்பகமாகப் பெரிய சவாலைச் சந்திக்கவேண்டி இருக்கும். இப்படி நிலைபெற வைப்பது அத்தனை எளிதல்ல.

* எழுத்தாளரையே ஒரு வெற்றிகரமான பிராண்டாகக் கொண்டிருக்கும் பதிப்பகங்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால் அந்த எழுத்தாளர் அதே பிராண்டாக, நிலை பிறழாத ஒருவராக இருக்கவேண்டும்.

* ஃபேஸ்புக்கில் வரும் லைக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கு விற்றால் கூட ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் விற்கும்.

* சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாவிட்டால் புத்தகங்களை இத்தனை எளிதாகப் பிரபலப்படுத்த முடியாது. அதே சமயம் சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் புத்தக வாசிப்பும் விற்பனையும் கூடுதலாக இருந்திருக்கும். ஒருவகையில் இது வரமும் சாபமும்.

* புத்தக விமர்சனங்களை அதிகமாக்குவதன் மூலம் மட்டுமே புத்தகம் குறித்தான தொடர் கவனிப்பைக் கொண்டு வர முடியும். தொடக்க கால ப்ரொமோஷன்கள் அந்தக் காலத்துக்கு உதவுமே ஒழிய, தொடர் கவனத்தைக் கொண்டு வராது. இன்றிருக்கும் ஆகப் பெரிய சவாலே இதுதான்.

* புத்தகம் எழுதியவர் எழுத்தாளரல்ல. எழுத்தாளர் என்பது ஒரு நிலை. ஒரே ஒரு புத்தகம் எழுதியவர் முக்கியமான எழுத்தாளராகவும், பல புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் எழுத்தாளர் என்ற நிலையை அடையாமல் இருக்கும் வாய்ப்பு உள்ள சூழல் இது. தன்னை எழுத்தாளன் என்று நினைக்கும் கர்வமே, திறமையே ஒருவரை எழுத்தாளராக்கும்.

Share

Chennai book fair 2026 preparation

நான்கு மாத காலம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. செப்டம்பர் 1 அன்று தொடங்கிய ஓட்டம். அனைத்துப் புத்தகங்களும் முதல் நாளே புத்தகக் கண்காட்சியில் கிடைக்க நாங்கள் (எடி ட்டோரியல் டீம், ஃப்ரீலேன்ஸ் உதவி எடிட்டர்கள், லே அவுட், அட்டை வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள், பிரிண்ட்டர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர்கள்) பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. உயிரைக் கொடுத்து என்பார்களே, அது போன்ற வேலை, பேய் வேலை.

ஒரு மாதத்தில் குறைந்தது பத்து படங்கள் பார்க்கும் நான், இந்த நான்கு மாதங்களில் பார்த்தது இரண்டே படங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரம் அல்ல விஷயம், மூளை புத்தகக் கண்காட்சியைத் தவிர எதிலும் செல்லவில்லை! சுற்றி நடக்கும் மிகவும் பரபரப்பான அரசியல் நகர்வுகள் தவிர, பல செய்திகள் கூட கவனத்துக்குள் செல்லவில்லை.

இன்று நாங்கள் திட்டமிட்ட அனைத்துப் புத்தகங்களும் (ஒன்றே ஒன்று நீங்கலாக, அது பிப்ரவரியில் வரும், ஸாரி எழுத்தாளர் சார்) முதல் நாளான நாளை முதல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்னும்போது வரும் சந்தோஷமும் பரவசமும் நிம்மதியும் அனுபவித்தால்தான் புரியும்.

புத்தகங்களில் உள்ள குறைகள், விடுபடல்கள், செய்யப்படவேண்டிய மேம்படுத்தல்கள் உங்கள் கண்ணில் முதலில் படலாம். எங்களுக்கும் படுகிறது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உழைப்பு உண்மையானது. உழைப்பில் குறை இல்லை. இதற்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி. இதைப் பொதுவாகப் புத்தகக் கண்காட்சியின் முடிவில் சொல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை முதலிலேயே சொல்கிறேன்.

எந்த ஓர் உழைப்பும் அர்ப்பணிப்பும் வீண் போகாது. இது வேத சத்தியம். எனவே இதற்கான பலன் நிச்சயம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் தெரியும்.

நான் செய்த வேலைகளை விட அதிகம் செய்தவர்கள், மேலே நான் சொன்ன எங்கள் குழு. அவர்கள் இல்லையென்றால் ஒரு புத்தகம் கூட வந்திருக்காது. அனைத்துப் பெருமைகளும் அவர்களுக்கு மட்டுமே.

எழுத்தாள நண்பர்களும், பிற நண்பர்களும் இந்த வீடியோவை உங்கள் பதிவில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் புத்தகங்களைத் தாங்களே மார்க்கெட்டிங் செய்வதா என்று நினைப்பதில் தவறில்லை. அதேசமயம், இன்றைய உலகத்தை எண்ணி, தகவலாகவாவது சொல்லுங்கள். நாம் மார்க்கெட் செய்வது புத்தகத்தைத்தான் என்னும் பெருமிதத்தோடு செய்யுங்கள்.

நண்பர்களே, புத்தகங்களை வாங்குங்கள். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள். புத்தக விற்பனையே இந்தச் செயல்பாடு அனைத்திற்கும் அடிப்படை.

புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

Share

Reeta Compound

மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் ரீட்டா காம்பவுண்டில் நாங்கள் குடியிருந்தோம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால். அந்த இடத்தைத் தேடி இப்போது சென்றபோது, அந்தத் தெரு அப்படியே இருந்தது. அந்த காம்பவுண்டும் கூட அப்படியேதான் இருந்தது.

அதற்கு எதிரே இருந்த ஒரு வீட்டின் முகப்பு பால்கனியில் ஓவல் சைசில் ஒரு பெரிய துளை இருக்கும். அங்கே அமர்ந்துதான் அன்றைய இளைஞரான அண்ணன் ஒருவர்  — எம்எஸ்வியின் தீவிர ரசிகர் — மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி என்ற பாடலைப் போட்டுக் கொண்டே இருப்பார். போதும் போதும் என்று இரண்டு குரலில் யேசுதாஸ் பாடுவது மனப்பாடமாகிவிட்டது. அவர் வீட்டில் எப்போதும் எம்எஸ்வியின் பாடல்கள்தான் ஒலிக்கும். ஒன்றிரண்டு தடவை அவரது ஸ்கூட்டரில் என்னை குருகுலம் பள்ளியிலும் அவர் ட்ராப் செய்திருக்கிறார்.

அந்த ஓவல்சைஸ் பால்கனி வீட்டைக் கண்டுபிடித்து அதற்கு எதிரே இருந்த ரீட்டா காம்பவுண்டைப் பார்த்தபோது, காம்பவுண்டு என்ற பெயரிலான அந்தச் சிறிய முடுக்கு போன்ற சந்தில் அம்மிக்கல்லும் குழவியும் தோன்றி, அம்மா அரைத்துக்கொண்டு இருப்பது போன்ற பிம்பமும், பத்துக்கு பத்து ஒரே அறை மட்டுமே கொண்ட வீட்டுக்குள் அப்பா அமர்ந்து ரேடியோவில் சிந்து பைரவியின் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரமையும் பரவ, ஒரு கணம் விக்கித்து நின்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். இப்போது எழுதும் போது கூட அதே உணர்வு.

அந்தத் தெருவில் இருந்த சிறிய முருகன் கோவில் வாசலில் நின்றுதான் கந்த சஷ்டிக் கவசத்தை விடாமல் பாடுவேன். சஷ்டிக்கு 36 முறை பாடினால் நல்லது என்று ஒருதடவை அம்மா சொல்ல, ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கோவில் முன்னால் நின்று 36 தடவை பாடினேன்.

கார்த்திகை அன்று சகோதரிகளுக்கு ஆனை அடை செய்து கொடுப்பது நல்லது என்று அம்மா ஸ்டவ்வில் ஆனை அடை சுட்டுத் தந்து, பக்கத்தில் இருந்த ரமணி அத்தை விட்டுக்குக் கொடுத்துவிட்டு வரச்சொன்னது, மதியமானால் அம்மாவுக்கு அடிகுழாயில் நீர் அடித்துக் கொடுக்க சுரேஷ் பாவா வருவது, முருகன் தியேட்டரில் செங்கமலைத் தீவு, அன்னை பூமி போன்ற கணக்கற்ற படங்கள் பார்க்க ஓடியது எல்லாம் என் நினைவில் வந்து போயின.

இன்று அந்த ரீட்டா காம்பண்டு இல்லை. முருகன் தியேட்டர் இல்லை. அன்று இருந்தவர்கள் யாருமே இல்லை. அப்பாவும் பக்கத்து வீட்டு மாமாக்களும் அமர்ந்து அரட்டை அடித்த அந்த ஒற்றைச் சந்து மட்டும் அப்படியே இருக்கிறது.

எதிர்வீட்டில் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த ஓர் இளைஞரும் யுவதியும், நாங்க இங்கதான் பிறந்து வளந்தோம், ரீட்டா காம்பவுண்டுன்ற பேரையே கேள்விப்பட்டது இல்லை என்றார்கள். அவர்களுக்கு வயது அதிகபட்சம் 30 இருக்கலாம். நீங்கள் பிறப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்னாலேயே நான் இங்கே இருந்தேன் என்று சொல்லவும், அவரது அம்மா வந்து எட்டிப் பார்த்து, ஆமாம் அந்த பெண் பெயர் ரீட்டா, அவர் பெயரில்தான் அந்த காம்பவுண்டு இருந்தது, இப்போது அவர்கள் பக்கத்து தெருவில் இருக்கிறார்கள், இந்த இடத்தை விற்றுவிட்டார்கள் என்றார்.

எத்தனை எத்தனையோ மாற்றங்கள். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, அந்த காம்பவுண்டு மட்டும் அப்படியே இருப்பதில் என்னவோ ஒரு மகிழ்ச்சி.

Share