2015 மழையின் போது நான் கிழக்கில் வேலையில் இருந்தேன். நவம்பர் 23ம் தேதி என நினைக்கிறேன். மதியம் 3 மணிக்கெல்லாம் மழை வெளுத்துக் கட்டப் போவது எனக்குப் புரிந்துவிட்டது. பைக்கை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஓலாவில் புக் செய்யப் பார்த்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை. நிச்சயம் இன்று தவிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன். பி.ஆர்.மகாதேவன் அலுவலகத்துக்கு
காந்தாரா
கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம். நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂 ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன்
விநோதக் கனவுகள்
சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில்
கமல் அரசியல்
கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் – பூ அல்ல விதை – இந்த விளையாட்டெல்லாம் மலையேறி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கருணாநிதி இதையெல்லாம் மாஸ்டர் செய்து, அவருக்கே போரடித்து, அது மக்களுக்கும் போரடிக்கிறது என்று உணர்ந்து, கட்டுப்படுத்திக்கொண்ட வார்த்தை விளையாட்டை, கமல் தொடங்கி இருக்கிறார். இது போன்ற அறுவைகள் தரும் எரிச்சலெல்லாம் சொல்லி முடியாது.
பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பார்த்ததுபோல, பேசிப் பேசியே டெபாசிட் இழக்கப் போகிறவர்களின் காலத்தில் இருக்கிறோம்.
—
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும், கருணாநிதியின் அரசியல் ஓய்வுக்குப் பிறகும், சோபை இழந்த தொலைக்காட்சி ஊடகங்கள், ரஜினி மற்றும் கமல் வருகையை ஒட்டி, சிக்கினாய்ங்கடா என்று ஓவர் கூச்சல் போடுகின்றன. தினம் தினம் கமல் மற்றும் ரஜினி சொல்லும் விஷயத்தை ஒட்டி வெட்டி விவாதங்கள். இதில் நான் பார்த்தது என்னவென்றால், கமல் பற்றிய விவாதமெல்லாம் தூர்தர்ஷனில் வரும் அஞ்சலி இசை நிகழ்ச்சிகள் போலவும் ரஜினி பற்றிய விவாதம் தீப்பொறி பறப்பது போலவும் தோன்றுகிறது இது என் தோற்ற மயக்கம்தான் 🙂 இத்தனைக்கும் அத்தனை ஊடகங்களும் கிட்டத்தட்ட கமலுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவுமே இருக்கின்றன. ரஜினிக்கு இது பெரிய மாரல் சப்போர்ட். இப்படியே இருந்தால் ரஜினிக்கு ரொம்ப நல்லது. 🙂
—
கலாம் பெயரைச் சொல்லி இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ரஜினியும் கமலும் நம்பினால் அதைவிட ஏமாளித்தனம் வேறெதுவும் இல்லை. அப்துல் கலாமை எல்லாருக்கும் பிடிக்கும். பொதுவாக. அவரே அரசியலில் நின்றிருந்தால் டெபாசிட் போயிருக்கும். எனவே யாரை எதற்காகப் பிடிக்கிறது என்பதறிந்து அரசியல் செய்யவும். ஆத்மார்த்தமாக அப்துல் கலாமின் புகழ்பாடுவதெல்லாம் வேறு. அது அவரவர் தேர்வு. அரசியலில் அவரை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தால், அரசியலின் அரிச்சுவடியே இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசியல் பேய் இன்னும் உங்களை செவுளோடு சேர்த்து அறையவில்லை என்று அர்த்தம். சீக்கிரம் அடிக்கும்.
பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்
பேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்
தமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.
சென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.
சென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறித்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.
இடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.
வட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.
பேட்டை, நல்ல முயற்சி.
எரடனே சலா – கன்னடம் – குசும்பு
எரடனே சலா என்றொரு கன்னடப்படம். இன்னும் பார்க்கவில்லை. தொடக்கத்தில் புகை பிடிப்பது தீங்கானது என்று போடுவார்களே, அப்படியான ஸ்லைடில் இடம்பெற்ற படங்கள் ஆர்வத்தை வரவைத்தன. எனக்குக் கன்னடம் தெரியாது என்பதால் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் அவருக்குத் தெரிந்த கன்னடம் வரையில் படித்துச் சொன்னவை:
நித்யானந்தா உள்ள படம் சொல்வது: புகை மட்டுமல்ல, பெண் தொடர்பும் சில சமயங்களில் தீங்கானது என்னும் அர்த்தத்தில்.
நேரு உள்ள படம் சொல்வது: புகை பிடிப்பது உடலுக்கும் நாட்டுக்கும் தீங்கானது, சாமானியர்களாக இருந்தாலும் பெரிய மனிதராக இருந்தாலும் என்னும் பொருளில்.
தில்லுதான். இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள்?
இதில் உள்ள சுவாரஸ்யம், நித்யானந்தாவின் முகத்தை மறைத்ததுதான்!
Pad Man
Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.
தனக்குத் திருமணம் ஆகவும்தான் ஒரு பெண்ணின் பிரச்சினையையே உணர்ந்துகொள்கிறான் இப்படத்தின் கதாநாயகன். இத்தனைக்கும் அவருக்கு வயதுக்கு வந்த சகோதரிகள் உண்டு. இதுதான் யதார்த்தம். தன் மனைவிக்கு எவ்வித நோயும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நேப்கின் வாங்கச் செல்லும் அவன், எப்படி உலகப் புகழ் பெறுகிறான் என்பதை, தமிழரான அருணாசலம் முருகானந்தம் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொண்ட கதையின் வழி திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.
திரைப்படம் என்று பார்த்தால் சில காட்சிகள் இழுவையாக உள்ளன. ஆனால் இப்படி ஒரு கதையை இத்தனை சுவாரஸ்யமாகப் படமாக்கியதே பெரிய சாதனைதான். ஹிந்தித் திரைப்படங்களுக்கே உரிய புல்லரிப்புக் காட்சிகள் படம் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நன்றாகப் புல்லரிக்க வைத்து கண்ணில் நீர் கோர்க்க வைத்தே அனுப்புகிறார்கள். அதிலும் உச்சக் காட்சியில் அக்ஷய் குமார் பேசும் லிங்கிலீஷ் காட்சி அட்டகாசம்.
தமிழரின் கதையை எப்படி ஹிந்தியில் எடுக்கலாம் என்று சிலர் கோபப்பட்டிருந்தார்கள். தமிழில் யாரும் எடுக்கவில்லை. அப்படியே எடுத்திருந்தாலும் அது எப்படியான படமாக இருந்திருக்கும் என்று யூகிக்கவே முடியாது. ஹிந்தியில் அது ஒரு டீஸண்டான படமாக வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் உள்ள ஹிந்தி பேசும் பெரிய அளவிலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. முன்னாபாய், ட்யூப் லைட், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற உணர்ச்சிபூர்வமான திரைப்படங்களைப் போன்ற ஒரு படமாக உருவாகி இருக்கிறது.
அக்ஷய் குமார் முடிந்த அளவு நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே அழுதுகொண்டே இருக்கிறார். ட்ரம் அடிக்கும் பொம்மை வெங்காயம் வெட்டுவது, அனுமார் வாய்க்குள்ளே போகும் தேங்காய் உடைந்து வெளிவருவது, ரூபாய் வைத்தால் அனுமாருக்கு பூஜை செய்ய உள்ளே போய் திரும்பி வரும்போது லட்டுக்களுடன் வரும் பொம்மை போன்ற யோசனைகள் நன்றாக வந்திருக்கின்றன.
குறை என்று பார்த்தால், அக்ஷய் குமாருக்கு உதவ வரும் பெண் அவரைக் காதலிப்பாகக் காட்டி இருப்பது. இதைத் தவிர்த்திருக்கலாம். எத்தனையோ படங்களில் பார்த்துச் சலித்தாகிவிட்டது.
இசை ஹிந்தித்தன்மையில் இருக்கவேண்டும் என்பதற்காக ராஜாவைத் தேந்தெடுக்கவில்லை என்று பால்கி சொன்னதாக இணையத்தில் பார்த்தேன். என்ன ஹிந்தித்தன்மை உள்ளது என்பதை நான் இனிமேல்தான் கண்டுபிடிக்கவேண்டும். எனக்குத் தெரியாத ஹிந்தித்தன்மை என்னவோ இருந்திருக்கலாம்.
பார்க்கவேண்டிய திரைப்படம்.
பிகு: இப்போது இந்த பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் சமூகம் இருக்கிறது. இதை எரிக்கத் தேவையான எந்திரங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தகட்ட நகர்வு.
உரிமையின் அரசியல்
உரிமையின் அரசியல்
ஒருவருக்கு எதற்கும் உரிமை இருக்கிறது. அடுத்தவரை துன்புறுத்தாவரை அவருக்கு இருக்கும் யாரும் உரிமையை மறுக்கவே முடியாது. வைரமுத்து ஆண்டாளைப் பற்றி மட்டும் ஏன் எழுதினார், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றி எழுத தைரியம் இல்லையே என்று கேட்டால், ஹிந்துக்களைப் பற்றி மட்டும் தேர்ந்து எழுத வைரமுத்துவுக்கு உரிமை இருக்கிறது என்கிறார்கள். யார் மறுத்தது? நிச்சயம் வைரமுத்துவுக்கு அந்த உரிமை இருக்கவே செய்கிறது.
பொதுவாக ஹிந்து மதத்தை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாத்துகிறவர்களை ஏன் கேள்வி கேட்கிறோம் என்பதற்கு என்னுடைய வரையறைகள் இவை. அதாவது இந்த வரையறைகளுக்குள் இருந்தால், ஒருவர் நிச்சயம் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசலாம். திட்டலாம். இந்த வரையறைக்குள் இல்லாமல் போகும்போது கேள்வி கேட்கிறோம்.
* ஹிந்து மதம் என்றில்லாமல் கிறித்துவ இஸ்லாம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மதங்களையும் அம்மதங்களின் போதாமைக்கும் அராஜகங்களுக்கும் விமர்சிப்பது, கேள்வி கேட்பது. இது ஒரு உச்சகட்ட நிலை. இந்நிலையை மிகச் சிலரிடம் மட்டுமே காணமுடியும். இப்படி இருப்பவர்கள் ஹிந்து மதத்தையும் நிச்சயம் கேள்வி கேட்கலாம்.
* இரண்டாவது வகை, எம்மதத்தின் பிரச்சினைகளுக்குள்ளும் புகாமல் இருப்பது. இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.
* மூன்றாவது வகை, நான் ஹிந்து என்று அறிவித்துக்கொண்டு, எனக்கு ஹிந்து மதத்தின் மீதான விமர்சனங்களே முக்கியம் என்று சொல்வது. இவர்களை மற்ற ஹிந்து மத மற்றும் ஹிந்துத்துவ ஆதராவளர்கள் ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏற்கிறேன்.
* நான்காவது, ஹிந்து மதத்தின் சீர்திருத்தவாதியாக தன்னை நினைத்துக்கொண்டு கருத்துச் சொல்வது.
இப்படி இல்லாமல் ஹிந்து மதத்தை ஊறுகாய் போல மட்டும் தொட்டுக்கொண்டு பேசும்போது நிச்சயம் கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள். இந்த கேள்விகளை எழுப்பும்போது உரிமை பற்றிப் பேசி நழுவப் பார்ப்பது இன்னுமொரு எஸ்கேப்பிஸம்.
உண்மையில் யாரும் யாருடைய உரிமையையும் கேள்வி எழுப்புவதில்லை. ஒருவர் முட்டாளாக இருப்பதற்கு, சிறிய சிறிய அளவில் பொய் சொல்வதற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்வதற்கு, கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதற்கு என்று ஏகப்பட்ட உரிமைகள் உள்ளன. இவை அனைத்தும் உரிமைகளே.
அப்படி இருந்தும் ஏன் கேள்வி கேட்கிறோம்? ஏனென்றால் உங்கள் கருத்தின் பின்னால் நீங்கள் உருவாக்க நினைக்கும் அரசியலை வெளிப்படுத்த. உங்களை எக்ஸ்போஸ் செய்ய. உங்களை உங்களுக்கே உணர்த்த. இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் இல்லை என்றால், ஹிந்து மதத்தை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் எளிதானதாக இருக்கிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றிப் பேச அச்சமாக இருக்கிறது என்ற உண்மையை மட்டுமாவது சொல்லிவிட்டு விமர்சியுங்கள்.
இல்லையென்றால், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் பற்றிப் பேசும்போதெல்லாம், கூடவே ஹிந்து மதத்தைப் பற்றியும் பேசி, ஊருக்கு ஏற்ப நீங்கள் எழுதவேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஆனால் ஹிந்து மதத்தைப் பற்றி எழுதும்போது எக்கவலையும் இல்லாமல் எழுத முடியும் என்பதை உங்கள் ஆழ்மனம் உணர்ந்திருக்கும். இதை உணர்ந்திருந்தால் நீங்கள் ஹிப்போகிரைட் மட்டுமே, குறைந்த பட்சம் வெளிப்படையாக உங்களது இயலாமையை வெளியே சொல்லாதவரை.
எனவே மிகத் தெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லிவிடுவது நல்லது. அதைவிட்டுவிட்டு உரிமை பஜனையைக் கையில் எடுத்தால் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், இரட்டை நாக்கு வெளியே தெரிகிறது, ஒன்றையும் மறைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.
துப்பறிவாளன் – துப்பறிய நிறைய இருக்கிறது
துப்பறிவாளன் திரைப்படம் பார்த்தேன். (கொஞ்சம் மெல்லத்தான் வருவோம்…)
ஏன் இத்தனை கொலைகள்? வெறும் பணத்துக்காகவா? பணத்துக்காக ஒருவர் சாகலாம், ஒட்டுமொத்த கூட்டமும் ஒருவர் பின் ஒருவராகவா? இது என்ன லாஜிக்? ஒரு கொள்கைக்காக தன் உயிரை தீர்த்துக்கொள்வதில் ஒரு ஏற்பு உள்ளது. அதெப்படி வெறும் பணத்துக்காக எல்லாரும் சாவார்கள்? ஜப்பானிய முறைப்படி தன் வயிறை அறுத்து ஒருவர் சாவது வெறும் பணத்துக்காகவா? இதில் பெரிய அளவில் மிஷ்கின் சறுக்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய கெடுதல் நடந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும்போது, மாட்டிக்கொள்பவர்கள் இப்படிச் சாவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாமல் பணம் ஒன்றே குறிக்கோள் என்பதற்காகச் செயல்பட்டவர்கள், கூலிப்படையினர், இப்படி மாட்டிக்கொண்டதும் வரிசையாகத் தற்கொலை செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய பிசகு என்றுதான் இப்போதும் தோன்றுகிறது.
ஒருவேளை எனக்குத்தான் படம் புரியவில்லையோ என்னவோ.
எடிட்டிங் – சில அனுபவங்களும் கருத்துகளும்
புனைவில் (உண்மையில் ஒட்டுமொத்தத்தில்) எடிட்டர் பற்றிய தேவைகளை, எல்லைகளைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ஜெயமோகன்.
அதனால்தான் நான் ஏதேனும் புத்தகத்தை வாசித்து திருத்தி கருத்து சொல்ல நேர்ந்தால், படைப்பாளியின் ஒப்புதல் இல்லாமல் வரிகளைச் சேர்க்கவே மாட்டேன். அவரிடம் தெளிவாகச் சொல்லித்தான் செய்வேன். அவர் அதை மறுக்கும் பட்சத்தில் நான் அதை வற்புறுத்தவும் மாட்டேன். என் கருத்தை, என் நோக்கைச் சொல்வது மட்டுமே என் வேலை என்கிற அளவில் மட்டுமே செயல்படுவேன்.
யாரேனும் என்னை எடிட்டர் என்று சொன்னாலும் தெளிவாக நான் எடிட் செய்யவில்லை, திருத்தம் மட்டுமே செய்தேன் என்று சொல்லி, படைப்பு அவர்களுக்குரியது என்கிற எண்ணத்தை அவர்களுக்கு வரும்படிப் பேசுவேன். ஏனென்றால் நான் செய்ததும் அதை மட்டுமே.
பிரதியை மேம்படுத்துவது மட்டுமே என் நோக்கம். மாறாக மீள உருவாக்குவது அல்ல. அப்படி தேவை என்றால் அதையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும். அந்த வகையில் அது முழுக்க முழுக்க அவர்களுடைய படைப்பாகிறது.
தமிழின் மிகச் சிறந்த எடிட்டர்களுள் ஒருவர் பத்ரி சேஷாத்ரி. பத்ரியின் பங்களிப்பு, மொழி சார்ந்து மட்டுமின்றி, அதன் கண்டெண்ட் சார்ந்ததாகவும் இருக்கமுடியும் என்பது அவரது ப்ளஸ். குறிப்பாக அபுனைவுகளில்.
எனவே ஒரு எடிட்டராக என் வேலை, பிரதியை ஆசிரியர் மூலம் மேம்படுத்துவது மட்டுமே. ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் என்று பலருடன் அவர்களுக்குச் சொல்லி, அதன் பதிலைப் பெற்றுத்தான் பொதுவாக மாற்றுவேன். நான்கைந்து புத்தகங்களுக்குப் பிறகு நமக்கே தெரிந்துவிடும், ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் எதிர்பார்ப்பது என்ன என்பது.
சில புத்தகங்களை முழுவதுமாக மீள எழுதுவது அவசியமாகும். (ரீ ரைட் செய்வது.) அந்த சந்தர்ப்பம் எப்போது வரும் என்றால், ஒரு துறை சார்ந்த எக்ஸ்பெர்ட் ஒருவர் தன் புத்தகத்தை எழுத முயலும்போது. அப்போது அவர்களுடன் இருந்துதான் அதைச் செய்யவேண்டி இருக்கும். அப்போதும் அதிலுள்ள கண்டெண்ட் விஷயம் ஆசிரியர்களுக்கு உரியதுதான். ஆனால் அதன் மொழிநடை அவருக்கு உரியது அல்ல, ரீ ரைட் செய்பவருக்கு உரியது. தமிழில் பல கொடைகள் இப்படி வருபவைதான். இங்கே ஆசிரியரைவிட அதன் கண்டெண்ட்டே முக்கியம்.
இதனால்தான் சரியாக எடிட் செய்யப்படாத நூல்களும் கூட, அதன் உண்மைத்தன்மைக்காக, அதன் வீரியத்துக்காக, அதன் rawness-க்காக முக்கியம் என்று நான் கருதுகிறேன். சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் சிலர் வருத்தப்படக்கூடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.
நாவலை எடிட் செய்ய அதன் எல்லைக்குள் நின்று பழகிய ஒருவர் அமைவது ஒரு வரம். நான் எடிட் செய்த புத்தகங்களுக்கு அல்லது திருத்திய புத்தகங்களுக்கு அந்த நியாயத்தை இந்த நிமிடம் வரை நம்புகிறேன் என்பதுதான் எனக்குள்ள நிறைவு.
*
எடிட்டிங் தொடர்பாக சில தனிப்பட்ட அனுபவங்கள் – என் கதை தொடர்பானவை.
நான் எழுதும் கதைகளில் உள்ள பிரச்சினைகளை எத்தனை முறை நான் படித்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் எழுதுவதில் உள்ள சிக்கலை ஒரே வாசிப்பிலேயே ஓரளவுக்குக் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலையில் என்னிடம் அகப்பட்டவர்தான் ஜெயஸ்ரீ கோவிந்த ராஜன். எழுதத் துவங்கியதில் இருந்து சமீப காலம் வரை என் எல்லாக் கதைகளையும் படித்து அதிலுள்ள பிரச்சினைகளை, பொருத்தமின்மைகளை, குளறுபடிகளைச் சொல்பவர் அவர்தான். (யார் கதை எழுதினாலும் எடிட் செய்வார்.
)
ஒரு கதையில் கதையின் நாயகன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து எதிர் வரும் பேருந்தில் அடிபட்டுச் சாவதாக எழுதி இருந்தேன். இதன் தர்க்க அபத்தத்தைச் சுட்டிக் காட்டி இருந்தார். அவர் சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது. அதை, ஓடும் பேருந்தில் இருந்து குதிக்கும் ஒருவனை அப்பேருந்தை முந்திக்கொண்டிருக்கும் இன்னொரு வண்டி அடித்துப் போடுவதாக மாற்றினேன். இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படிப் பலவற்றைச் சுட்டிக் காண்பித்திருக்கிறார். குறிப்பாக இன்னொன்றைச் சொல்லவேண்டும் என்றால், கதையில் நாம் கொள்ளும் கதாபாத்திரத்தின் வயது தொடர்பான குழப்பத்தை. அல்லது தொடக்கத்தில் வரும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா என்பதை வாசிப்பவர்கள் அவர்களது இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஆபத்தை. இது தொடர்பாக எனக்கும் முதலில் இருந்தே தெளிவு இருந்தது என்றாலும் கதை எழுதும் வேகத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளவே தோணாது. ஒரு சிறுகதையை அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவேன். எழுதத் துவங்கி தடுக்கி நின்று மீண்டும் எழுதி – இப்படியெல்லாம் எதுவும் செய்ததில்லை. அதனால் இப்பிரச்சினைகளை எனக்கு எதிர்கொள்ள உதவியர் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
கடந்த ஆறேழு மாதங்களாக அவர் பிஸியாகிவிட்டதால், எழுதிய கதைகளை யாருக்கும் அனுப்பாமல் வைத்திருந்து பிறகு நானே படித்துத் திருத்தி அனுப்புகிறேன்.
இன்னொரு கதை, பதாகையில் வெளி வந்தது. கதையின் முடிவில் எதோ ஒரு நெருடல் இருப்பதாக பதாகை பாஸ்கர் உணர்ந்தார். அதனால் அக்கதையின் முடிவை மட்டும் வெகு சில வரிகளில் மாற்றி அனுப்பினேன். பின்பு படித்துப் பார்த்தபோது அவர் சொன்னது சரி என்றே எனக்குப் பட்டது.
அதேபோல் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதி இன்னும் வெளிவராமல் இருக்கும் சிறுவர் கதைகளில் ஒரு கதையை அரவிந்தன் நீலகண்டன் படித்துவிட்டு வழக்கம்போல பீராய்ந்து போட்டார். அதில் அவர் சொன்ன திருத்தங்கள் முக்கியமானவை. தனிப்பட்ட திருத்தமல்ல அது, ஒட்டுமொத்த தொனியின் திருத்தம்.
இப்படி இன்னொருவர் படிக்கும்போது நம்மால் தொடமுடியாத ஒன்றைத் தொடத்தான் செய்கிறார்கள். இவற்றால் நாம் எழுதியதையே மாற்றுகிறோம் என்பதல்ல. அது ஒரு கருத்து. திருத்தம் செய்தால் நல்லது என்பதான கருத்து. அதைச் செயல்படுத்துகிறோம் அல்லது நிராகரிக்கிறோம். பலமுறை நிராகரித்திருக்கிறேன்.
புனைவுக்கோ அபுனைவுக்கோ வெளியாள் ஒருவரின் பார்வை முக்கியமானது என்று தொகுக்கலாம். அவர் எடிட்டரா திருத்துனரா கருத்தரா என்பதெல்லாம் அவர் செய்யப்போகும் செயலுக்கேற்ற தேர்வுகள் மட்டுமே.
வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை
வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை.
இந்தக் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன், தொண்டன் பத்திரிகையை சந்திரஹாஸ வாளுடன் ஒப்பிடுகிறார். பொதுவாகவே அரவிந்தனின் இது போன்ற ஒப்பீடுகள் மிக ஆழமான ஒன்றாக இருக்கும். வரலாற்றில், புராணத்தில், இந்திய/ஹிந்து மரபில் இருக்கும் ஒன்றுடன் வரலாற்றைப் பிணைப்பது அவரது பாணி. இதன் மூலம் அவர் வெளிக்கொண்டு வர நினைக்கும் வரலாற்றுடனான மரபில் உரையாடலை அவர் தொடர்ந்து தரப்போகும் உதாரணங்களில் நிலைநிறுத்துவார். எனவே இது வெறும் ஒப்பிடுதல் என்கிற வாள் சுழற்றலைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தக் கட்டுரையும் இப்படியே.
தொண்டன் இதழ் முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை என்பதுவே அரவிந்தன் சொல்லித்தான் நான் அறிந்துகொண்டேன். தொண்டனின் தேவையையும் அருமையையும் திருவிக போன்றவர்களின் கூற்று மூலம் முன்வைப்பதும் நல்ல சாதுர்யமான பாணி. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்னும் சமீபக் கூச்சல்களுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லி வைத்தது போல் அமைகின்றன இக்குறிப்புகள்.
ஹிந்து மதமும் தமிழும் இப்போதுதான் முற்போக்காளர்களாலும் திராவிட அரசியல்காரர்களும் பிரிக்கப்படுகின்றன. சமீப பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இரண்டும் ஒன்றாகக் கலந்தே கிடந்தன. கே ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலர் அல்ல) நடத்தி இருக்கும் இப்பத்திரிகை இதை உரக்கச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.
நாம் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்பவர்களுக்கு தொண்டன் பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு கட்டுரையை ஹிந்துத்துவத்தின் சாசனம் என்றே அரவிந்தன் நீலகண்டன் குறிக்கிறார். மிக முக்கியமான கட்டுரை அது.
உண்மையில் இன்று வலம் பத்திரிகை செய்ய நினைக்கும் ஒன்றை பல மடங்கு வீரியமாக அன்றே செய்திருக்கிறது தொண்டன் பத்திரிகை. இதனால்தான் வலம் இதழ் மிகவும் பேலன்ஸிங்காக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள் போலும். திராவிடர்களே அன்றி ஹிந்துக்கள் அல்ல என்பவர்களை தொண்டன் இதழ் இப்படிச் சொல்கிறது – “இனவேற்றுமையைவிட இந்து மத அழிப்பே அவர்கள் ஆர்வம்”. ஆலயப் பிரவேச சட்டத்துக்கு இந்த இதழ் துணை நின்றிருக்கிறது. தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், ”ஆலயப் பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல், கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத் துணிந்த கிழவியில் செயலை ஒத்திருப்பதாக” எழுதுகிறார்.
அரவிந்தன் நீலகண்டனின் முக்கியமான கட்டுரை.
எனவே… இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வாசிக்க வலம் இதழுக்கு சந்தா செலுத்துங்கள். நல்ல இதழ்களை ஆதரியுங்கள்.