Archive for திரை

ASI Babita Singh Reporting

Babita Singh Reporting (H) – நிமிஷா அப்படியே கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஆச்சரியம். ஒரு கட்டத்தில் நமக்கே அவர் நடிப்பில் மூச்சுமுட்டத் தொடங்குகிறது.

படத்தின் மிகப்பெரிய குறை, மிக மெதுவாகப் போகிறது. மற்ற எல்லாமே ப்ளஸ்தான். படம் எடுத்த விதம், கேமரா கோணங்கள், முக்கியமாக லொக்கேஷன் என அனைத்தையும் பார்த்து பார்த்து தூள் பரத்தியிருக்கிறார்கள். தரமோ தரம்.

ஆனால் கடைசி ஐந்து நிமடங்கள் நம்மைப் பைத்தியக்காரனாக்கிவிட்டார்கள். ஒரு தற்கொலையை கொலையாக நிரூபிப்பது நம்பும்படி இருக்கலாம். ஆனால் அதையே மாற்றிச் சொன்னால், இந்தக் கொடுமைக்காகவா இரண்டு மணி நேரம் பார்த்துத் தொலைத்தோம் என்று வெறுப்பு வந்துவிடுகிறது.

இன்னொரு‌ ப்ளஸ் சொல்ல வேண்டும்‌ என்றால், போலிஸ் வேலைக்குச் செல்லும் பெண் எதிர்கொள்ளும் குடும்பப் பொறுப்புகள் தொடர்பான ஸ்ட்ரெஸ் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கேமரா எடிட்டிங் மற்றும் பின்னணி இசை இவற்றிற்காகப் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதும் ஒளிப்பதிவுக்கான விருதும் இந்தத் திரைப்படத்துக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Share

Uyir – Malayalam Movie

உயிர் (M) – படமாகச் சுமாரான திரைப்படம் தான் என்றாலும், கடைசியில் திரையில் காட்டப்பட்ட ஒரு விவரம், அதாவது இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று பார்த்தபோது, அந்த விவரங்களைத் தேடி எடுத்தேன். சாட்ஜிபிடி பல விவரங்களைக் கொடுத்து உதவியது. அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படம் நிஜமாகவே உண்மைக்கு இயன்ற அளவு நெருக்கமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதை நிச்சயம் பார்க்கலாம்.

Spoiler ahead.

குழந்தைகள் மீதான வன்முறை என்ற அடிப்படையில் பார்த்தால், பெரிய வன்முறை எதையும் நேரடியாகக் காட்டாவிட்டாலும், அவர்கள் அடையும் உளவியல் ரீதியான வன்முறை, உண்மையிலேயே மனதைப் பிசைகிறது. எனக்கு இந்தச் சிறிய வன்முறையைக் கூடத் தாங்க முடியவில்லை. பெரும் மனப்போராட்டம் நிகழ்ந்துவிட்டது. கடைசியில் அவர்கள் நிம்மதியாக மீட்கப்ப்பட்ட பின்னர்தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன். உண்மையை இத்தனை நெருக்கமாக எடுத்ததற்காகவும் கடைசி 20 நிமிடங்களுக்காகவும் பார்க்கலாம்.

ஒரு படமாக மட்டுமே அணுகினால், உண்மைக்கு நெருக்கமாக எடுத்ததாலேயே என்னவோ, எந்த விதத் திருப்பமும் இன்றி, மிக நேரடியாகச் செல்லும், எளிதாக யூகிக்க முடியும் கதை என்கிற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாது.

சிலர் இந்தப் படத்தில் தேவையின்றி ஒரு இஸ்லாமியப் பாடல் நுழைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அது தவறு. இந்தப் படத்தின் உண்மைக் கதைக்கான போலீஸும் ஓர் இஸ்லாமியராகவே இருந்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் மனப் போராட்டத்தோடு அந்தக் குழந்தைகளைத் தேடிப் போகும் போது, அவர் நம்பிக்கையுடன் கூடிய ஒரு பாடலைப் போட்டிருப்பது நியாயமாகத்தான் தெரிகிறது.

From ChatGpt

சமீபத்தில் வெளியான மலையாளப் படம் ‘Uyir’ ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 2017-ல் கண்ணூர் மாவட்டம் Iritty பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கையும், அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி S. Anshad-ன் அனுபவங்களையும் மையமாகக் கொண்டது.

இந்தக் கதை தொடங்கியது 2015-லேயே.

கர்நாடகாவின் Tumakuru பகுதியைச் சேர்ந்த Raju என்பவர், தனது மனைவி Shobha மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த T.K. Manjunath ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 2015 டிசம்பர் 21 அன்று Raju-வை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொன்று, உடலை காட்டுப் பகுதியில் எரித்ததாக Manjunath பின்னர் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு Shobha மற்றும் Manjunath கண்ணூர் மாவட்டம் Iritty-க்கு வந்து வாழ்ந்தனர். Shobha-வுக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருந்தனர். Aryan-க்கு 6 வயது, Amrutha-வுக்கு 4 வயது.

2017 ஜனவரி 21 அன்று Iritty பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் அழுகிய உடல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது Shobha என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் மரணம் குறித்து சந்தேகம் இருந்தாலும், பின்னர் அது கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீசாரின் சந்தேகம் Shobha-வுடன் வாழ்ந்து வந்த Manjunath மீது திரும்பியது. அவரை விசாரித்தபோது, Shobha-வின் மரணத்திற்கும், ஏற்கெனவே நடந்த Raju கொலைக்கும் தொடர்புடைய அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன.

Shobha-வுடன் ஏற்பட்ட தகராறில் Manjunath அவரது கழுத்தை நெரித்ததாகவும், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து கிணற்றில் போட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சில போலீஸ் தகவல்களின்படி, Shobha கிணற்றில் போடப்பட்டபோது உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், பின்னர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

Shobha இறந்த பிறகு, அவரது இரண்டு சிறு குழந்தைகளான Aryan மற்றும் Amrutha-வை Manjunath Bengaluru-க்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து Mumbai செல்லும் ரயிலில் அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டார்!

அம்மா இறந்துவிட்டார். அப்பா ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டார். அவர்களுடன் இருந்த Manjunath-ம் அவர்களை ரயிலில் தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.

சுமார் 45 நாட்களுக்குப் பிறகு அந்த இரண்டு குழந்தைகளும் Mumbai-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பில் எடுத்த அதிகாரிகள், Kerala Police-க்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது Iritty Police குழு Mumbai சென்று அந்தக் குழந்தைகளை மீட்டு Kerala-க்கு அழைத்து வந்தது. இந்த விசாரணை மற்றும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் அப்போது Iritty Police-ல் இருந்த S. Anshad முக்கிய பங்கு வகித்தார்.

இந்த உண்மைச் சம்பவத்துடன்தான் Uyir திரைப்படத்தின் தொடர்பு இருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம் மட்டும்: Manjunath-க்கு இறுதியில் நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது, அந்த இரண்டு குழந்தைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து நம்பகமான பொது பதிவுகள் கிடைக்கவில்லை.

Share

Chinna Chinna Aasai Malayalam

சின்ன சின்ன ஆசை (M) – எப்படி இப்படி ஒரு செயற்கைத்தனமான கண்றாவியை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முழுக்க காசி வருகிறது என்பதற்காகப் பார்த்தேன். காசியே பிடிக்காமல் போய்விடும் போலிருக்கிறது. ஒரு காட்சி கூட உருப்படியாகவோ ஒட்டுதலாகவோ இல்லை. ஏன் இந்தக் கருத்தைப் பார்த்தோம் என்று நான் நொந்து கொண்டே படம் முழுக்கவும் பார்த்து முடித்தேன். இரண்டு கிழடுக்களுக்கும் நடிக்க வரவில்லை. படம்தான் அழுது கொண்டே இழுத்துக் கொண்டே போகிறது என்றால், அந்த இசையமைப்பாளர் அதைவிட இழுவையான பாடல்களைப் போட்டுச் சாவடித்து விட்டார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ஒரு டயலாக், என் மாமியாருக்கு என்னைப் பிடிக்காது என்று… அதன் ஃப்ரெஷ்நெஸ்ஸைக் கேட்டு ஆஹா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்… அது ஹிட் காக்ரோச் விளம்பரம். இந்த கொடுமையில் தான் படம் இருந்தது. இதில், ஏதோ மலையாளியை வைத்தே தமிழ் வசனங்களையும் எழுதி இருப்பார்கள் போல‌. அது ஐயையோ ரகம்.

தயவு செய்து சொல்கிறேன், அந்தப் பக்கமே ஒதுங்கி விடாதீர்கள். சமீபத்தில் பார்த்த மிக செயற்கைத் தனமான திரைப்படம் என்றால் இந்தக் கண்றாவி தான். இந்தப் பாவத்தைப் பார்த்ததற்காகவே மீண்டும் ஒருமுறை காசிக்குச் செல்லத்தான் வேண்டும்.

Share

Baalan Malayalam Movie

Baalan (M) – தரமான படம். ஆஹா ஓஹோ படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நல்ல படம் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தப் பையன் மற்றும் அம்மாவாக வரும் பெண்ணின் நடிப்பும் கேமராவும் கேரளச் சூழலும் மனதை அள்ளுகின்றன. முதல் பாதி வரை மிகவும் விறுவிறுப்பாகவே செல்லும் திரைப்படம், பின்னர் கொஞ்சம் அலைபாய்ந்தாலும், இறுதிக் காட்சியில் மனம் கணக்க வைத்து விடுகிறார்கள். நிச்சயம் பாருங்கள்.

Share

Anomie Malayalam Movie

Anomie (M) – ஒரு நண்பர் பரிந்துரைத்த மலையாளத் திரைப்படம். தரமான திரைப்படம். மேக்கிங் மற்றும் நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. மலையாள வழக்கம் போல மிக மெதுவாக நகரும் திரில்லர் வகைத் திரைப்படம். கொஞ்சம் மெடிக்கலையும் கொஞ்சம் தத்துவத்தையும் தொட்டு என்னவெல்லாமோ காண்பிக்கிறார்கள். அதுவுமே நன்றாகத்தான் இருக்கிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்வு குறித்த பல விதமான கற்பனைகளை இத்தனை விஷுவலாகக் காண்பிக்க ஏன் முயன்றார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அதை ஓரளவுக்கு நம்புபடியாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை பரபரப்பையும் தக்க வைத்திருக்கிறார்கள். ஆஹா ஓஹோ என்று புகழும்படியான திரைப்படமல்ல என்றாலும் நிச்சயம் தரமான திரைப்படமே.

Share

Karakkam and Mollywood Times

Karakkam (M) – என்ன எழவு படம் இது? இதெல்லாம் பேய்ப்படம்னு சொன்னா பேயே காறித் துப்பும். சேட்டன்ஸ் ஆன் கொலைவெறி மோட். அது தெரியாமல் நான் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போய்விட்டேன்.

Mollywood Times (M) – நஸ்லேன் கஃபூர் நடித்திருக்கிறார் என்பதற்காகப் பார்த்தேன். ஏமாற்றவில்லை. எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். பலருக்கும் பல குழப்பங்கள் இந்தப் படத்தின் கதையில் நிச்சயம் வந்தே தீரும். ஆனால் இரண்டு விஷயங்களுக்காக நிச்சயம் பார்க்கலாம். ஒன்று திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், திரைத்துறை பற்றிய பரீட்சயம் உள்ளவர்கள் தவற விடக் கூடாத திரைப்படம். இரண்டாவது நஸ்லேன் ஃகபூர் பிடிக்கும் என்பவர்கள் தவறவிடக் கூடாத திரைப்படம். இந்தச் சிறிய வயதில் என்ன ஒரு மெச்சூரிட்டியான நடிப்பு!

திரைத்துறை சார்ந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கை தகர்ந்து போவது, மதிப்பீடுகள் மாறிப் போவது, மீண்டும் நம்பிக்கை கொண்டு எழுவது, தொடர்ந்து மீண்டும் மீண்டும் முதுகில் குத்தும் நயவஞ்சகர்கள், தானே செய்யப் போகும் ஏமாற்று வேலை & நயவஞ்சகம் என அனைத்தையும் இப்படி ஒரு திரைப்படம் கலந்து கொடுத்து நான் பார்த்ததே இல்லை. மேக்கிங் சில இடங்களில் சுமார்தான் என்றாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிகிறது.

என்னதான் கேமியோ ரோலில் வந்தாலும், இப்படி ஒரு ரோலில் பஸில் ஜோசஃப் நடிப்பதெல்லாம் ஆச்சரியப்படுத்துகிறது.

மனோரமா மேக்ஸில் கிடைக்கிறது. ஹாட்ஸ்டாரிலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Share

KD The Devil Kannada Movie

KD The devil (K) – மூன்று மடங்கு ஹரி திரைப்படத்தின் வேகத்துடனும் 100 மடங்கு நெல்சன் திரைப்படத்தின் ரத்தத்துடனும் ஆயிரம் மடங்கு தங்கர் பச்சான் திரைப்படத்தின் சத்தத்துடனும் ஒரு கன்னடப் படம் வந்தால் எப்படி இருக்கும்? மிரண்டு போய்விட்டேன். மேலே உள்ள ஜானரில் எதுவுமே பிடிக்காது என்றால் இந்தப் பக்கமே தலை வைத்து விடாதீர்கள். மேலே உள்ள ஜானர் பிடிக்கும் என்பவர்கள் தவற விட்டு விடாதீர்கள்.

துருவா சர்ஜா நடித்த படத்தை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். முதலில் என்னடா இவர் என்று தோன்றியது. அவரது அதீத நடிப்பும் ஹீரோயினாக வரும் பெண்ணின் ஓவர் நடிப்பும் ஒரு கட்டத்தில் பிடித்துப் போனது. முதல் காட்சியில் இருந்து கடைசி நொடி வரை எல்லாமே ஓவர்தான்.

படத்தில் திடீரென்று ரமேஷ் அரவிந்த் வரவும், இவர் இருக்கிறாரா என்று நினைக்கும் போது, அடுத்து ரவிச்சந்திரன் வரவும், அட இவருமா என்று நினைக்கும் போதே, அட ஷில்பா‌ ஷெட்டி, என்ன இவர்களை டம்மியாக வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், கடைசிக் காட்சியில் உண்மையிலேயே மிரண்டு போய் விட்டேன். எதிர்பாராத டிவிஸ்ட்.

சஞ்சய் தத்தை ஹிந்திப் பட இயக்குநர் கூட இத்தனை விரும்பி இருக்க மாட்டார். அத்தனை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வன்முறை ஓவராகியும், தொடக்கம் முதல் இறுதிவரை செயற்கைத் தனமான செட்டிங்ஸ் மற்றும் ஒளிப்பதிவுடன் இருந்தும், யார் எப்போது எங்கே டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியாமல் ஒருவித தினசாக ஒரு திரைப்பட அனுபவத்தைப் பார்க்க நினைத்தால்,‌டோண்ட் மிஸ்.

துருவா சர்ஜா மிரட்டல்.

இரண்டாம் பாகத்தில் சுதீப் வேறு. தியேட்டர் தாங்குமா எனத் தெரியவில்லை.

Share

Haal Malayalam Movie

Haal (M) – ஹால் என்ற மலையாள வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சூஃபி மலையாள வார்த்தையாக இருக்குமோ என்னமோ. அது ஒரு நிலை என்பதாக இருக்கலாம். நாம் இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஏனென்றால் படம் மண்ணு மாதிரி இருக்கிறது.

ஒரே ஒரு நல்ல சீனை ரீல்ஸில் பார்த்துவிட்டு அடடா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று முழுமையாகப் பார்த்துத் தொலைத்தேன்‌ விக்கிபீடியாவில் லவ் ஜிகாத் என்றெல்லாம் போட்டிருக்க சம்பவம் பண்ணி இருக்காங்க மல்லூஸ் என்று நினைத்துப் பார்த்தால்… அந்தப் பெண் கிறித்துவப் பெண், பையன் முஸ்லிம் பையன் என்றதுமே ஒரு தமிழ்நாட்டுப் பார்வையாளனாக எனக்கு முற்றிலுமாக ஆர்வம் வடிந்துவிட்டது. ஒருவேளை கேரளாவில் கிறிஸ்தவப் பரவல் அதிகமாக இருப்பதால் கிறித்துவக் குடும்பங்கள் பதற்றத்துடன் பார்த்திருக்குமோ என்னவோ.

முஸ்லிம்‌ பையனும் கிறித்துவப் பெண்ணும் காதலிக்க, இதில் முஸ்லிம் குடும்பம் அவளை மதம் மாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்ல, அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள, மதமாற்றம் செய்யப்படும் நேரத்தில் அந்தப் பெண் என்னால் மதம் மாற முடியாது, கிறித்துவப் பெண்ணாகவே இருப்பேன் என்று சொல்லிவிட, இது பெரிய பிரச்சனையாகி, லவ் ஜிகாத், ஐ எஸ் என்றெல்லாம் போக, கடைசி அரை மணி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் காமெடிப் படம் போல என்னத்தையோ மாற்றிப் படத்தைக் கொன்று என்னையும் கொன்று விட்டார்கள்.

சேன் நிகமுக்காகப் பார்த்தது தவறாகிப் போனது.

Share