கர – என்ன கண்றாவியா படம் எடுத்து வைக்கிறீங்க! பார்க்க முடியல. 1980ல் வந்திருந்தால் கூட காமெடியாகத்தான் இருந்திருக்கும். கே.எஸ்.ரவிக்குமாருக்கு யாரோ நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அவரது நடிப்பைப் பார்க்கவே எரிச்சலாக வருகிறது. மேக்கப் நன்றாக இருந்தாலும் கூட அவரது நடிப்பைப் பார்க்க முடியவில்லை.
தனுஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை எதையோ சாப்பிடக்கூடாத ஒன்றைச் சாப்பிட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.
பல காட்சிகள் இன்னுமாயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என நினைக்க வைத்தது. போலீசை முதுகிலிருந்து கீழே தூக்கிப் போட்டு அடிக்கும் காட்சியில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். டிராக்டரிலேயே பேங்க் மேனேஜர் இடித்து உயிரிழப்பதெல்லாம் பெரும் கொடுமை. அதில் கருப்புசாமி துணை வேறு. ஹீரோ கருப்பு சாமியை திருடுவதற்கு மட்டுமே கும்பிடுகிறான். குடும்பம் குட்டி நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதே இல்லை. அதைவிட கொடுமை, பணம் கட்ட ஒருவர் பேங்குக்கு வரும்போது அவரிடம் திருடாமல் அதை பேங்க்கிலேயே போட்டுவிட்டு பிறகு பேங்கில் இருந்து திருடுவதெல்லாம் அடேய்களா…
முதலில் ஆரம்பக் கட்சியிலே திருடனாகக் காட்டிவிட்டு, நான் என் பணத்தைத் திருடுகிறேன் என்று சொல்வதெல்லாம் பெரும் கொடுமை.
படம் பேங்கைப் பற்றிய படம் என்று புரியவே ஒரு மணி நேரம் ஆனது. இதில் இன்னொரு கொடுமை, இது 1990களில் நடக்க நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே முக்கால் மணி நேரம் எனக்கு ஆகிவிட்டது. இந்த லட்சணத்தில் திரைப்படம் எடுத்தால் எவன் பார்ப்பான்?
அதைவிட மன்னிக்கமுடியாத கொடுமை, அப்பாவின் பிணத்தை அனாதைப் பிணமாக ஆஸ்பத்திரியில் வைத்து விட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் பணத்தைத் திருடப் போராடுவதெல்லாம் என்ன விதமான லாஜிக்? அதை விட நாலு கொள்ளிக்கட்டையை வாங்கிக் கொள்ளி வைத்து எரித்துத் தொலைத்திருக்கலாம்.
இந்த ‘கொடுமை’ இயக்குநரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பக்கமே இனி திரும்பக் கூடாது.


