ஜெயிலர் 2 – உண்மையில் ட்ரெய்லர் பார்த்துவிட்டு கொஞ்சம்கூடப் பிடிக்காமல் அமைதியாக இருந்துவிட்டேன். திரைப்படம் பற்றிய பெரிய பரபரப்பும் இல்லை. ஆனாலும், முதல் காட்சி ரஜினியின் திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக புக் செய்தேன்.
கதையே இல்லாமல் ஒரு திரைப்படத்தைத் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் எந்த அளவுக்கு உயரத்துக்குக் கொண்டு போக முடியும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். திரைக்கதையும் கூட வெறும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்தான். தனியாக ஆழமான திரைக்கதை என்றெல்லாம் எதுவுமே இல்லை. ஆனால், தேர்ந்தெடுத்து நடிகர்களை நடிக்க வைத்ததன் மூலமும், அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சியிலும் நம்மைப் புன்னகைக்க வைக்கும் பஞ்ச் வசனங்களைப் படம் நெடுகத் தெளித்துவிட்ட வகையிலும், நெல்சன் இந்தத் திரைப்படத்தை எங்கோ உச்சிக்குக் கொண்டு போய்விட்டார்.
இன்றைய காலத் திரைப்படங்களில் சென்டிமென்ட் எந்த அளவுக்கு இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை நெல்சனிடம் இருந்து மற்ற இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இடைவேளைக்குப் பிறகு வரும் அந்த நெஞ்சைத் தொடும் காட்சி உண்மையிலேயே அபாரம்.
இடைவேளை வரும் ஹியூமர் காட்சிகள் – படம் போனதே தெரியவில்லை. யார் யாரெல்லாமோ ரஜினியைத் திட்டுவதெல்லாம் அருமையோ அருமை.
ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பதால், அவரை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, மற்ற நடிகர்களை வைத்தே ரஜினியின் ஸ்பேஸையும் கொண்டு வந்தது ஆச்சரியம். இனி ரஜினி திரைப்படங்களில் அடியாட்களாக மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் இப்படி வருவது பார்க்கக் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது.
ஜெயிலர் பார்ட் 1-ஐப் போலவே, இடைவேளைக்குப் பிறகு பத்து நிமிடம் படம் கொஞ்சம் தொய்வடைந்ததும், சரி, அவ்வளவுதான் முடிந்தது என்று நினைத்தேன். ஆனால், எஸ்.ஜி.சூர்யா படத்தைத் தூக்கி நிறுத்திவிட்டார். அபாரமோ அபாரம்!
அதேபோல், கிளைமாக்ஸின் பத்து நிமிடக் காட்சி வழக்கமான ரஜினியின் கிளைமாக்ஸ் திரைப்படங்கள் போலவே இந்தப் படத்திலும் சரியாக வரவில்லை. ஆனால், அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு நொடி கூட விடாமல் படம் பட்டாசு. சாதாரணமாகவே இரண்டு முறை பார்க்கலாம். ரஜினி ரசிகர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
லாஜிக் எதிர்பார்ப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது நல்லது எங்கெல்லாம் லாஜிக் இல்லையோ அங்கெல்லாம் அவர்களே டயலாகாக வைத்துத் திட்டிக்கொண்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுகிறார்கள். நீங்களே உங்கள கலாச்சிக்கிட்டா நாங்க எப்படி கலாய்க்கிறது மொமென்ட்.
படம் நெடுகிலும் பின்னணி இசை என்ற பெயரில் எதையாவது ஒலிக்கவிடாதீர்கள் என்று அனிருத்துக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள் போல. மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். தேவையான இடங்களில் கலக்கிவிட்டார். பல இடங்களில் மௌனமாகவும் இருந்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, கதையே இல்லாமல் வசனங்களுக்காகவே இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். படத்தின் ஹீரோ வசனம் எழுதியவர்தான். அதிலும் அந்த ஹ்யூமர் நோ சான்ஸ். படம் தொடக்கம் முதல் இறுதி வரை இப்படி மனம் விட்டு ஒரு தமிழ்ப் படத்தை பார்த்து நாளாகிவிட்டது. அதிலும் அனைத்து நடிகர்களும் கலக்கி விட்டார்கள்.


