Stolen Hindi Movie

Stolen (H) – ஹிந்தித் திரைப்படம். முற்றிலும் விருதுத் திரைப்படம் போலவும் இல்லாமல் விறுவிறுப்பான திரைப்படம் போலவும் இல்லாமல் ஒரு மாதிரி குன்சாகப் படம் நகர்கிறது. தொடக்கக் காட்சியிலேயே விறுவிறுப்பாகத் தொடங்கும் கதை, பின்னர் காரில் நிகழும், கொட்டாவி விடக்கூடிய உரையாடல்களால் கொஞ்சம் டல்லாகிறது. குழந்தையைத் தேடி அந்தக் கிராமத்துக்கு வந்ததும் படம் விறுவிறுப்பாகிறது.

உணர்ச்சி பொங்க நடித்திருக்கும் நடிகர்கள், இயல்பான கிராமத்தையும் மக்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் கேமரா, இரண்டும்தான் படத்தின் உயிர் நாடி. அதற்காக இத்தனை மெதுவாகப் படம் நகர்ந்திருக்கத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள், ஒரே போன்ற வசனங்கள் என எரிச்சல் வருகிறது.

உண்மையில் நடந்த கதை என்று சொன்னாலும் கூட, இந்தப் படம் அதற்குரிய சில பதைபதைப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்றாலும் கூட, அண்ணனின் கதாபாத்திரம் இயற்கையாகப் படைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, ஏதோ ஒரு போதாமை படம் முழுக்க இருக்கத்தான் செய்கிறது. தொலைந்து போன குழந்தையைத் தேடுவதாகத் தொடங்கு கதை, மெல்லத் தடம் மாறிக் குழந்தையின் தாயின் மீதும், அண்ணன் தம்பியின் பாசம் மற்றும் கருத்து வேறுபாட்டின் மீதும் படிவதன் மூலம், அந்தப் பதற்றம் தொலைந்து போவதுதான் ஆதாரப் பிரச்சினை.

அண்ணன் மனம் மாறும் கட்சியில் அப்படியே பார்வையாளர்கள் உறைந்து விட வேண்டும் என்பது இயக்குநரின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த கிராமத்தினரும் அப்படி காட்டுமிராண்டிகளாகவா இருப்பார்கள் அரசியல் சரித்தன்மைக்காக அங்கே ஒன்றிரண்டு குரல்கள் ஒலித்தாலும் கூட இப்படி முத்திரை குத்தி இருக்கத் தேவையில்லை. இவையெல்லாம் யதார்த்தத் தளத்தில் இருந்து படத்தைக் கொஞ்சம் தள்ளி வைக்கின்றன.

மற்றபடி நல்லதொரு திரைப்பட அனுபவத்திற்காகப் பார்க்கலாம்.

தேவையற்ற பின்குறிப்பு: கமல்ஹாசனின் உறவினர் யாரோ திரைக்கதை எழுதுவதில் பங்கெடுத்திருக்கிறார் போல. அந்த இரண்டு சகோதரர்களின் அம்மாவுக்குக் கல்யாணம் என்றெல்லாம் என்னவோ சொல்கிறார்கள். அந்த போலீஸ்காரரைப் போலே நானும் சிரித்தேன் என்றால் இலக்கியவாதிகள் என்னை நொங்கெடுத்து விடுவார்கள் என்பதால் தந்திரமாக கமுக்கமாக இருந்து கொள்கிறேன்.

Share

Thug Life Tamil Movie Review

தக் லைஃப்

படத்தின் ப்ளஸ் – இடைவேளை வரை பார்க்கும்படியாக இருக்கிறது. சிம்புவுக்கும் கமலுக்குமான பல காட்சிகள் அருமை.

இடைவேளை ப்ளாக் – யூகிக்க முடியக்கூடியது என்றாலும் அருமை.

பின்னணி இசையும் கேமராவும் துல்லியமான ஒலியும் அட்டகாசம்.

பின்னர் ஆரம்பிக்கிறது சனி. இடைவேளைக்குப் பிறகு படம் நகரவே இல்லை. அப்படியே உட்கார்ந்துகொண்டு விட்டது. ஒரே பழி வாங்கும் படலம் மட்டுமே.

கமலின் வயதான ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை, சில காட்சிகளே வந்தாலும்.

காயல்பட்டின திருநெல்வேலி வட்டார வழக்கு – கமல் இதை தயவுசெய்து விட்டுவிடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

சிம்பு வெர்சஸ் கமல் என்று அட்டகாசமாக உருவாக்கிவிட்டு, அதிலும் குறிப்பாக திரிஷாவை மையப்படுத்தி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதை அம்போவென்று விட்டுவிட்டார்கள்.

தேவையற்ற டிஸ்டிராக்‌ஷன்ஸ் பல. போலிஸுக்கும் அவன் மனைவிக்கும் டைவர்ஸ் என்று காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படிப் பல.

பல நல்ல நடிகர்கள் வீண். ஜோர்ஜ் பாவம் சும்மா விடாது.

கமலுக்கு வயதாகிவிட்டது. உயிரைக் கொடுத்து நடிக்கிறார், ஆனால் ஒட்டவில்லை. பலவீனமான கதை, சொதப்பலான திரைக்கதையே காரணம்.

வயதான கமல் போதிதருமர் போல இருக்கிறார்.

பௌத்த கோவில் தற்காப்புக் கலை என்றதும் இங்கயுமா என்று ஜெர்க்கானது. அதேதான். மணிரத்னம் ஷங்கர்2வாகி மீண்டும் இந்தியன் 2 வைப் பார்ப்பது போலத் தோன்றிவிட்டது.

மணிரத்னம் போன்ற பொறுப்பான இயக்குநரின் படம் போலவே இல்லை. செக்கச்சிவந்த வானம் கலரில் இருந்து மணிரத்னம் இன்னும் வெளிவரவே இல்லை. அதே கேங்க் வார் எரிச்சல்தான் இதிலும்.

அதிலும் எந்த இடத்திலும் ஹீரோ வருவான், எப்படியும் பிழைப்பான் என்பதெல்லாம் தாங்க முடியவில்லை. முன்பெல்லாம் ரஜினியை கிண்டல் செய்வார்கள். மணிரத்னம் இருந்தும் பழைய ரஜினி படங்களைவிட மோசமான காட்சிகள் இதில்.

சக்திவேல் ராயப்பன் என்ன இண்டர்நேஷனல் டானா? நினைத்தால் விமானம், ஹெலிகாப்டர்! அவர் ஏன் நேபாள் போகிறார் என்பதே புரியவில்லை.

நாஸரைக் கொல்லும் காட்சியில் வசனம் அருமை. அதேபோல் வால்பேப்பரில் நாசரின் முகம் நல்ல யோசனை. ஆனால் யோசித்துப் பார்த்தால், அது தவறான காட்சி. அதை எப்படி ஒருவன் வைத்திருப்பான்?

அரதப்பழசான கதை. அதில் கூட பிரச்சினையில்லை. ஆனால் திரைக்கதை படு திராபை. அதிலும் க்ளைமாக்ஸ் பாசமலர் ரேஞ்ச்.

தியேட்டரில் பார்க்க காரணங்கள் – கேமரா, பின்னணி இசை, துல்லியமான ஒலி, முக்கியமாக சிம்பு. படத்தின் ஒரே ப்ளஸ் சிம்பு மட்டுமே.

பின்குறிப்பு: முத்தமழை எந்த வெர்ஷன்னா சண்டை போடறீங்கன்னு எந்த வெர்ஷனையும் இப்படத்தில் வைக்கவில்லை மணிரத்னம்!

இன்னொரு விஷயம். கமல் மனைவி மனைவி என்று உருகுவாராம். ஆனால் இன்னொரு செட்டப்பையும் வைத்திருப்பாராம். மனைவி அதை சாதாரண பொறாமையோடு பேசிவிட்டு, கணவனுடன் சந்தோஷமாக வாழ்வாராம். அதில் ஒரு டயலாக் வேறு, சிலருக்கு BP, சுகர் வர்ற மாதிரி எனக்கு இது என்று! ம்எதையெல்லாம் நார்மலைஸ் செய்வது என்று விவஸ்தை இல்லையா? அதிலும் மணிரத்னம் படத்தில்.

Share

Two voices

இரு குரல்கள்

ஒரு பேருக்காக இரண்டு குரல்கள் என்று தலைப்பு வைத்திருந்தாலும் பல்வேறு விஷயங்களைக் கலந்தடித்துச் சொல்லப் போகிறேன். கமல் ரசிகர்கள் இப்போதே இங்கிருந்து விலகிப் போய்விடும். குறிப்பாக கமல் குரல் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் போய் விடுங்கள்.

ஆரம்பக் காலத்தில் எனக்கும் கமல் குரல் என்னவோ பிடித்துத்தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கமல் குரலைக் கேட்கவே ஒரு எரிச்சல் வருகிறது. சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் தொடக்கக் காட்சியில் கமல் குரலைக் கேட்டபோது, இந்தக் கொடுமையைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்றியது.

கமல் நடிப்பில் புகுந்துகொண்டுவிட்ட செயற்கைத் தனம், அவரது குரலிலும் புகுந்துகொண்டு, மிகவும் சாதாரணப் பேச்சிலும் புகுந்துகொண்டு விட்டது. கதவு திறந்திருக்கிறது, போய்விடலாம் என்று அரசியல் பேச்சிலும் சரி, நாட்டுக்காக வந்திருக்கிறேன் என்ற அரசியல் பதிலிலும் சரி, முழுக்க செயற்கைத்தனமே.

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் கமல் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் எனக்கு அப்படித்தான். அப்படியே சோகத்தைப் பிழிகிறாராம். சிலர் இப்பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாட்டுடன் ஒப்பிட்டார்கள். இனி தென்பாண்டிச் சீமையிலே பாடலும் பிடிக்காமல் போய்விடக் கூடாது முருகா என்று வேண்டிக் கொண்டேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தக் லைஃப் படத்தில் வந்திருக்கும் முத்தமழை பாடலை சின்மயி பாடி இருக்கிறார். படத்தில் பாடி இருக்கும் தீ-யை விட இவர் நன்றாகப் பாடுகிறார் என்று அனைவரும் சொல்கிறார்கள். (எனக்கு தீ பாடியதே பிடித்திருக்கிறது. காரணம், அதில் ஒரு புதுமை இருக்கிறது. சின்மயி அட்டகாசமாகப் பாடி இருக்கிறார் என்றாலும் அது எப்போதும் போல் இருக்கிறது.) இப்படி ஒரு பாடலை இன்னொருவர் பாடமாட்டாரா என்று நான் யோசித்த காலங்கள் உண்டு. அது பின்னர் நினைவானது. யேசுதாஸ் பாடிய சில பாடல்களை எஸ்பிபி பாடிக் கேட்டேன். ஆனாலும் என்னவோ ஒரு நிறைவின்மை. ஏனென்றால், எஸ்பிபியோ யேசுதாஸோ பாடலைப் பாடிக் கெடுத்ததில்லை. இதனால் ஒருவர் பாடலை மற்றவர் பாடுவதில் ஓர் ஆர்வம் தாண்டி பெரிய கிக் இருக்க வாய்ப்பில்லை.

முன்பு கமல் நடித்து சத்யா என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அவர் ஆங்கரி யங் மேன். கோபக்கார இளைஞன் என்பதை கமல் எப்படிப் புரிந்து கொண்டாரோ, எல்லாக் கட்சியிலும் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார். முகத்தை என்னவோ போல வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அதில் கமல் பாடிய பாடல் தோட்டா துடிக்குது துடிக்குது. அந்தக் குரல் எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்பிபி பாடியிருந்தால் அந்தப் பாடல் வேறு தளத்திற்குப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதேபோல் கமல் குரலில் பாடிய ‘விகரம்’ பாடலை வேறு யாராவது பாட மாட்டார்களா என்று நினைத்திருந்தேன். இப்படி வேறு யார் பாடினாலும் எனக்கு மிக முக்கியமாக, மூலப் பாடலின் பாவம் மாறாமல் இருக்க வேண்டும். சில சமயம் எஸ்பிபி மேடைகளில் தன் இஷ்டம் போல் மாற்றிப் பாடி விடுவார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. பாடகர் ஒழுங்காக மாற்றாமல் பாடினால், பின்னணி இசை சிறப்பாக அமையாது. இப்படி எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மாற்றமே இல்லாமல் அதே பாடலை வேறொருவர் பாடிக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி நான் நினைத்துக் கொண்ட இன்னொரு கமல் பாடல் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல். இதில் கமல் குரலைக் கேட்கவே எரிச்சலாகத்தான் இருந்தது.

சமீபத்தில் ஏதோ ஒரு youtube சேனலில் விக்ரம் பாடலை பாடகர் கார்த்திக் பாடிக் கேட்டபோது அப்படியே மனம் அள்ளிக் கொண்டது. இந்தப் பாடலை கமல் கட்டைக் குரலில் பாடிக் கெடுத்து வைத்திருந்திருப்பார். அதையே தொழில்முறை பாடகர் கார்த்திக் பாடும் போது அதே பாடல் எங்கயோ போய் விட்டது. கார்த்திக்கின் வாழ்நாள் பாடலாக இது இருக்கும். இல்லையென்றாலும், எனக்கான கார்த்திக்கின் வாழ்நாள் பாடல் இதுவே.

மிகவும் உச்ச ஸ்தாயியில் கமல் பாடிய பாடல் என்று ‘நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலைச் சொல்வார்கள் அவரது ரசிகர்கள். அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. ஆனால் கமல் அந்தப் பாடலில் காட்டுக் கத்தலாகக் கத்தித்தான் பாடி இருந்தார். அந்த பாடலையும் கார்த்திக் பாடினால் அதையும் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

கமல் ரசிகர்கள் பொதுவாக எந்த நடிகர் கமலைப் போலப் பாட முடியும் என்பார்கள். அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பாடல்களைக் கேட்கலாம். குரலில் தேன் வழிகிறது என்றால் அது ராஜ்குமாரின் குரலில்தான்.

இரண்டு குரல்கள் என்று தலைப்பிட்டுவிட்டு இரண்டு மாற்றுக் குரல்களாகப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை. எனக்கு இரண்டு குரல்கள் சுத்தமாகப் பிடிக்காது. அதில் ஒன்றைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிவிட்டேன். இன்னொரு குரல் விஜய் சேதுபதி குரல்.

Share

Thudarum Malayalam Movie

துடரும் (M) – இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும். எப்படியோ தவறிப் போய்விட்டது. இன்றுதான் பார்த்தேன். (ஜியோ ஹாட்ஸ்டார்.)

ஒரு கமர்சியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் படம் மெல்ல சம்பந்தமில்லாமல் போவது போல் தோன்றினாலும் பின்னர் முடியும் வரை ஒரு நொடி கூட திரையிலிருந்து கண்ணை விலக்கத் தோன்றவில்லை. அப்படி ஒரு இறுக்கமான திரைக்கதை. இடைவேளைக் காட்சியும் அதன் பிறகு வரும் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக் காட்சியும் பதற வைக்கும் மாஸ் காட்சிகள். இப்படி இரண்டு காட்சிகள் ஒரு படத்திற்கு இருந்து விட்டால் நிச்சயம் அது பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும். வசூலுக்கும் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் 200 கோடி வசூலித்தது எந்தவித ஆச்சரியமும் இல்லை.

மோகன்லால் அதகளப்படுத்தி விட்டார். போலீசாக வரும் பிரகாஷ் வர்மா மோகன்லாலையும் மிஞ்சி விட்டார். சிறந்த வில்லனுக்கான விருது இவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல் இன்னொரு போலீசாக வரும் நடிகரும் கலக்கி விட்டார். இந்த மூவரும் திரைப்படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்கள். படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் ஷோபனா. மோகன்லால் ஷோபனா கெமிஸ்ட்ரி மேல் அந்தக் கால மலையாளிகளுக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. அதை நம்பி இப்படி ஜோடி வைத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை.

இந்தப் படத்தில் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் ரெஃபரன்ஸ் வருகின்றன. இளையராஜாவின் பாடல்கள் ஆங்கங்கே ஒலிக்கின்றன. தமிழில் பார்க்காமல் மலையாளத்தில் பாருங்கள். கேரளாவின் காடுகளும் மழையும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் பின்னணி இசையும் மறக்க முடியாத கமர்சியல் திரைப்பட அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

Share

IPL 2025

கிட்டத்தட்ட 13 வருடங்கள் வருடங்களுக்குப் பிறகு ஒரு ஐபிஎல் சீரியஸை முழுமையாகப் பார்க்கிறேன். மொத்தமாக ஒன்று இரண்டு ஆட்டங்கள் அதிலும் அந்தந்த ஆட்டங்களின் பாதி பாதி பார்க்காமல் போய் விட்டிருக்கலாம்.

எப்போதும் மும்பை அணி வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. காரணம் முன்பு சச்சின். இப்போது ரோகித் சர்மா. ஆனால் இந்த முறை மும்பை தவிர பல அணிகளின் பல ஆட்டக்காரர்களை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன், மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி என்று பலர் திறமையாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்கள். பும்ராவைத் தனியே சொல்ல வேண்டியது இல்லை. இவர்களெல்லாம் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள். வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடினால் ரசிப்பேன் என்பதைத் தாண்டி இந்திய அணிக்கான எதிர்கால ஆட்டக்காரர்களைப் பார்க்கும் அளவுக்கு விருப்பத்துடன் நான் பார்ப்பதில்லை.

இன்று நடக்க இருக்கும் பஞ்சாப் மற்றும் மும்பை இடையிலான எலிமினேட்டர் சுற்றில் மும்பை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. பஞ்சாப் போன்ற அணி தோற்கிறதே என்ற வருத்தத்தையும் சொல்லி மாளாது. எனவே 51 – 49 என்ற ஆதரவில் மும்பை – பஞ்சாப் ஆட்டத்தை நான் இன்று பார்க்கப் போகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரை போன்ற ஒருவரை டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கான கேப்டனாகப் போடாதது பெரிய தவறு.

ஆர்சிபி அணி எனக்கு அத்தனை இஷ்டமானது அல்ல என்றாலும், கோலியின் அர்பணிப்பும் ஆட்டமும் உலகத்தரம். ஏன் கோலி எல்லா வகை ஆட்டங்களிலும் கொண்டாடப்படுகிறார் என்றால், அவரது அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். சில சமயம் அவர் அதீதமாகக் கத்துவது எரிச்சலைத் தந்தாலும் கூட, இந்த வயதிலும் 18 வயது ஆட்டக்காரரின் மனோபாவத்தை அவர் கைக்கொண்டிருப்பதே அவரது வெற்றிக்கு அடித்தளம் என்றும் நினைக்கிறேன்.

Share

Ouseppinte Osiyathu Malayalam Movie

ஔசப்பின்டெ ஒசியத்து (M) – நல்ல திரைப்படம். அசல் மலையாளத் திரைப்படம். மெல்ல நகரும் திரைப்படம் என்றாலும் முழுக்கப் பரபரப்பைத் தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது. போலீசின் தேடுதல் காட்சிகள் ஆரம்பித்த பிறகு, ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ உயில் சம்பந்தப்பட்ட திரைப்படம் என நினைத்து விட்டேன். இல்லை. இதுவும் ஒரு வகையில் திரில்லர் போன்றதுதான். ஆனால் இந்த முறை கடுமையான கொலை, தேடல் என்றெல்லாம் இல்லாமல், ஏன் எதற்கு கொலை என்பதெல்லாம் முதலிலேயே காட்டிவிட்டு, அதை ஒரு பாசப் போராட்டமாகச் சித்திரித்து இருக்கிறார்கள்.

அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. அதிலும் திலீஷ் போத்தன் அட்டகாசம். கலங்கடிக்கிறார். அதேபோல் விஜயராகவன். அருமையான நடிப்பு. எந்த நடிகருக்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை இறுக்கி இருந்தால் படம் இன்னும் வேறு தளத்திற்குப் போயிருக்கும். இப்போதே கூட தவறவிடக் கூடாத படமே.

வழக்கம் போல கேரளத்தின் நிலமும் இயற்கையும் ஒரு கதாபத்திரத்தைப் போலவே திரைப்படம் முழுக்கத் தொடர்ந்து வருகிறது. கேரளத் திரைப்படத்துக்குள் நம்மை சட்டென இழுத்துக் கொள்வது அவர்கள் தேர்ந்தெடுக்கும் லொகேஷன்தான்.

நாராயணின்டெ மூணான்மக்கள் திரைப்படம் போன்ற ஒரு மனநிலை கொண்ட திரைப்படம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் தந்த எரிச்சலை இந்தப் படம் போக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்

Share

Agnyathavasi Kannada Movie

அக்ஞாதவாசி (K) – தொடக்கத்தில் படம் எங்கெங்கோ அலைபாய்ந்தாலும், பலப் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், சீரியஸ் திரைப்படமா அல்லது டார்க் காமெடி வகையா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ஒரு கட்டத்தில் படம் சுதாரித்துக் கொள்கிறது. படத்தை முழுமையாக, கொஞ்சம் கூட ஓடவிடாமல் பார்க்க வைப்பவை – படத்தின் மேக்கிங் (கேவலமான கிராஃபிக்ஸ் நீங்கலாக), கேமரா, பின்னணி இசை, கதை நிகழும் கிராமம், நடிகர்களின் நடிப்பு, முக்கியமாக ரங்காயன ரகு, சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு, இன்னும் குறிப்பாக கதாநாயகி பாவனா கௌடாவின் அநாயசமான நடிப்பு. ஒரு கொலை, அதற்கான தேடல்தான் கதை என்றாலும், படம் நிகழ்வது இரண்டு தளங்களில் என்பதுவும், நேர்க்கோடற்ற கதை சொல்லலும் படத்தைச் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆஹா ஓஹோ திரைப்படமல்ல. ஆனால் நிச்சயம் பாருங்கள். தொடக்கக் காட்சிகளைப் பார்த்துச் சலிப்பில் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

Share

Maamanithan Tamil Movie

மாமனிதன் – பல முக்கியமான தமிழ்ப் படங்களை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஒன்று மாமனிதன். இப்போதுதான் பார்த்தேன்.

எப்போது நினைத்தாலும் மனதில் பாரத்தைக் கொண்டு வரக் கூடிய திரைப்படமான மகாநதியின் இன்னொரு நகல் இத்திரைப்படம். கதையாக முதல் பாதி அப்படியே மகாநதி. அதிலும் மலையாளி ஒருவர் ஏமாற்றுவதை அப்படியே ஒரே போல் வைக்காமல் இருந்திருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் மகாநதியின் சாயலுடன்.

மகாநதியில் இருந்த யதார்த்தம் எப்போதும் நம் மனதைப் பதற வைத்தபடி இருக்கும். இதிலும் அப்படியே. இப்படத்தின் முதல் பாதி, தரத்திலும் உணர்விலும் மகாநதி அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சம் பதறத்தான் வைக்கிறது. இரண்டாம் பாதி வெறும் தேடலாக அமைந்துவிட்டது இத்திரைப்படத்தில். பெரிய பலவீனம் இது.

வலிந்து கதாநாயகன் மூலமாக மனிதம் மனிதம் என்று இயக்குநர் ஓரமாக நின்று சொல்லிக்கொண்டிருக்கிறாரோ என்கிற தோணல் இன்னொரு பலவீனம். மகாநதியில் இந்தக் குரல் இல்லை. அதேசமயம் கமல் தொடர்ந்து கேள்விகளை அதில் கேட்டுக்கொண்டே இருப்ப்பார். அவரது மகளைத் தொலைத்துவிட்டு அவர் கேட்கும் கேள்விகள் நம் சமூகத்தின் மீதான விமர்சனமாகவும் ஒலித்ததால் அது தனியே தெரியவில்லை. இதில் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது.

விஜய் சேதுபதி நன்றாகத்தான் நடிக்கிறார் என்றாலும், என்னவோ எனக்கு ஒரு விலகல் இருக்கத்தான் செய்தது.

யுவனின் பின்னணி இசை பல இடங்களில் ராஜாவின் இசை போலவே இருந்தது.

மலையாளம் பேசும் காட்சிகள் வருவதாலோ என்னவோ இப்படமும் மலையாளப் படம் போல மெல்ல நகர்ந்தது. பொறுமையாகப் பார்த்து முடித்தேன். முதல் பாதியில் முதல் அரை மணி நேரம் கொஞ்சம் பொறுமையைச் சோதித்தாலும், அடுத்த ஒரு மணி நேரம் தந்த பதற்றத்தைப் படம் முழுக்கத் தக்க வைத்திருந்தால், படம் இன்னும் ஆழமாக இருந்திருக்கும்.

Share