SIR initial mess ups in Tamilnadu – 1

எஸ் ஐ ஆர் இல் எந்தக் குழப்பமும் இல்லை, எளிதாக இருக்கிறது என்று ஆளாளுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சம் குழப்பம் இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கேட்டால் என்ன என்னவோ காரணம் சொல்கிறார்கள். எலக்‌ஷன் கமிஷன் கொடுத்திருக்கும் நம்பருக்கு எல்லாம் போன் செய்து கேட்டாகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லையா என்று என்னிடமே மீண்டும் கேட்கிறார்கள். தெருவில் கேட்டால், வந்தார்கள், ஆனால் அவர்களிடம் பெரும்பாலான வாக்காளர் பட்டியல் படிவங்களே இல்லை, தெருவின் முக்கில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் உங்களுக்குத் தெரியாதா என்கிறார்கள். அவர்கள் சேர் போட்டு அமர்ந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களிடமும் பெரும்பாலான படிவங்கள் இல்லை. ஆனால் தெருக்காரர்கள்‌ அனைவரிடமும் ஓட்டர் ஐடி இருக்கிறது. இவர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டு விட்டு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் மீண்டும் அப்ளை செய்ய வேண்டும் என்றால், இது என்ன லாஜிக்? என்னவோ பெரிய குழப்படி நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சரியாகத் திருத்தாவிட்டால் தேர்தலின் போது பொதுமக்கள், கட்சிகள் பாகுபாடு இல்லாமல் கதறப் போகிறார்கள். போகிறோம்.

தற்போது இருக்கும் ஓட்டர் ஐடி சரியாக இருந்தால் அவர்கள் பெயரை நீக்கக் கூடாது. இதை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2002-2005 பட்டியலைப் பார் என்பதெல்லாம் சென்னை போன்ற நகரங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

எஸ் ஐ ஆர் எளிய விளக்கம் என்று டிவிகளில் வருகிறது. அதில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது, ஆனால் படிவம் கொண்டு வருபவர்களிடம் என்னைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய படிவம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? மிக சாதாரணமாகச் சொல்கிறார்கள், வரைவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யுங்கள் என்று. அப்படியானால் இத்தனை நாள் என்னிடம் இருந்த ஒட்டர் ஐடியும் நான் போட்ட ஒட்டும் என்ன? இது தவறில்லையா?

அதேபோல் முகவரி மாறி வேறு ஒரு தொகுதிக்குப் போயிருந்தால் அப்போதும் நாம் வரைவுப் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தவரை என்னவென்று சொல்வது.

ஓட்டர் ஐடி சரியாக இருந்து, நீங்கள் இருக்கும் வீடும், அங்கே நபர்களும் சரியாக இருந்தால், அதை சரியான வாக்காளர் விவரமாக எடுத்துக் கொள்ளாத வரை இந்தத் திருத்தம் பல குழப்பங்களை மட்டுமே கொண்டு வரும்.

***

எஸ் ஐ ஆர் விஷயமாக இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து பாஜக பி எல் ஏ அலுவலரின் நம்பரை பெற்றேன். ஒரு பெண் பேசினார். மிகப் பொறுமையாக எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலைத் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் தந்த நபரை அழைத்தேன். அவரும் பெண். அவரும் மிகப் பொறுப்பாகப் பேசி யாரிடம் நான் பேச வேண்டும் என்று இன்னொரு தகவலைச் சொன்னார். கூடவே எனது வாக்காளர் அட்டையை வாங்கி யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூன்றாம் நபரை அழைத்தேன்‌ அவர் ஓர் ஆண். அவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு நபரிடம் பேசச் சொன்னார் அதற்குள். முதலாம் நபர் மீண்டும் அழைத்து, சரியான நபரிடம் பேசச் சொல்லி இன்னொரு எண்ணைக் கொடுத்தார். அவரும் அவரால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினார். இந்த நான்கு பேருமே பிஜேபிக்காரர்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் 2002க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்தான் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருவார்கள் போல. இல்லையென்றால் வரைவுப் பட்டியல் வந்த பிறகு நாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு நான் புரிந்து கொண்ட தலைவிதி.

Share

Badri’s daily news coverage in Kizhakku News YouTube channel

பத்ரி தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் யூடியூப் வீடியோ கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலில் நேற்றில் இருந்து வருகிறது. சுவாரசியமாக இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது இதைப் போன்ற ஒரு வீடியோ மிகவும் உதவியாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் இதைக் கேட்டுவிட்டால் முக்கியமான செய்திகளில் 25 சதவீதமாவது தெரிந்து கொள்ளலாம். அதிலும் பத்ரிக்கு இருக்கும் உலகளாவிய ஞானம் இதில் பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது.

இதில் சில சுவாரசியமான விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்த செய்தி குறித்து வந்திருக்கும் ஹெட்லைனையும் முதல் இரண்டு வரிகளையும் மேம்போக்காக வாசிக்கலாம். இது நேரத்தைக் கூட்டும் என்றாலும் சுவாரசியமாக இருக்கும். ஒரே விஷயத்தைப் பல பத்திரிகைகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்க்க உதவியாக இருக்கும். இதை பத்ரியே செய்வது கடினம் என்றால், கூட ஒருவரை வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் கூட ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்றே சொல்லி இருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம், முரசொலி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ்கள் அங்கே இல்லாமல் இருப்பது. முடிந்தால் கி வீரமணியின் பத்திரிகை ஏதேனும் இருந்தால் அதையும் வைக்கலாம். தலைப்புச் செய்திகள் மட்டுமாவது அவற்றிலிருந்து சொல்வது நிச்சயம் சுவாரசியமாகவே இருக்கும்.

அதேபோல் தமிழ்நாட்டளவில் நான்கு செய்திகள், இந்திய அளவில் ஒன்றிரண்டு செய்திகள், வெளிநாட்டு அளவில் ஒரு செய்தி என்று ஒரு வரைமுறை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் மூன்று நிமிடம் ஒதுக்கினாலே 25 நிமிடங்கள் தாராளமாக வரும். சில சமயங்களில் முக்கியத்துவம் கருதி இவற்றை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

அதேபோல் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் இருப்பது நல்லது. நாளை யூடியூபில் தேடும்போது வசதியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பெயர் வைக்கிறார்கள். கூடவே அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொதுப்பெயர் நிச்சயம் தேவை. அதற்கான ஒரு தனி கேட்டகிரி லின்க் இருப்பதும் நல்லதுதான்.

https://youtube.com/@kizhakkunews?si=r-PLn91uMOV7PVvw

Share

Idli Kadai

இட்லிக்கடை – படமாய்யா எடுத்து வெச்சிருக்கீங்க. அடப் பக்கிகளா. முதல் 10 நிமிஷம் நல்லா இருக்கேன்னு நெனச்சேன், அது ஒரு குத்தமாய்யா. வெச்சு செஞ்சிட்டீங்களே.

1960ல‌ இந்தப் படத்தை எடுத்திருந்தா கூட பழைய படமாத்தான் இருந்திருக்கும். ராயன் எடுத்த தனுசுக்கு ஏன் இப்படிப் புத்தி போனது என்று தெரியவில்லை. கதை திரைக்கதை என ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இரண்டே நிமிடத்தில் ஒரு பாடலில் முடிக்க வேண்டிய கதையை 3 மணி நேரம் கண்றாவியாக இழுத்து இழுத்துச்‌ சாவடித்து விட்டார்.

ஃபீல் குட் மூவி என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் பேய்ப் படம் போல இருக்கிறது. ராஜ்கிரனும் அவர் மனைவியும் செத்தும் கடைசிக் காட்சி வரை பேயாக வந்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.

கொடுமை ஒன்றாய் இரண்டா. சமுத்திரகனி வடிவில் இன்னொரு கொடுமை. தாங்கிக்கொள்ள முடியாத நித்யா மேனன் வேறு.

நமத்துப் போன‌ நாலு‌ இட்லியும் அவிஞ்சி போன அந்த ரெண்டு கரண்டி சாம்பாரையும் தின்றதற்காக ஊரே உயிரைக் கொடுத்து இவன் பின்னால் நிற்குமாம். கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம்.

இது எல்லாமே கூட மன்னித்து விடலாம். ஆனால் கருப்பசாமி காலில் சலங்கை கட்டி பவ்யமாகப் போவது இட்லி சுடுவதற்காகத்தான்னு காமிச்சீங்களே, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.

படம் முழுக்க ஹிந்துக் குறியீடுகள் வருவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா, இல்லை இந்தக் கொடுமையைப் பார்த்தால் பாதி பேர் இன்னும் மதம் மாறி போய் விடுவானே என்று வருத்தப்படுவதா… டெலிகேட் பொசிஷன்.

ஆனாலும் ஒரு சந்தோஷம். இன்பக்குட்டியண்ணாஜியையே தனுஷ் காண்டாக்கிப் பார்த்ததுதான்.

பிகு: இடது கையால் மாவை தள்ளும் இட்லிக்கா இவ்ளோ மவுசு? உவ்வேக்.

Share

Dies Irea

Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.

பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு. 

இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.

பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம். 

இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.

Spoiler alert.

படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச்‌ சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.

தமிழில்,‌ கன்னடத்தில்,  ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.

 அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.

மேலதிக எண்ணங்கள்

Full of spoilers

திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.

எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?

திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.

படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.

நானே சிந்தித்தேன். : )

Share

Mirage

Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது‌ அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.

முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.

படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.

ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.

Share

Sridhar Subramaniyam on Taliban

11.10.2025

ஸ்ரீதர் சுப்ரமணியம் வழக்கம் போல் பாஜகவைத் திட்ட ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். எப்போதும் போல் காவிகளைத் திட்டுவதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது நேரம், தாலிபானையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஒரு படி மேலே போய், முகத்தை மூடாத பெண்களைப் பார்த்தால் தாலிபன் அமைச்சருக்கு மூடு வருமே என்றெல்லாம் கேட்டுவிட்டார். அவர் நினைத்துக் கொண்டு எழுதியது, ‘நாம் திட்டுவது தாலிபனைத்தான், லைக் அள்ளப் போகிறது’ என்று. ஆனால் கமெண்ட் போட்டவர்கள் அவர் தாலிபனைத் திட்டுவதாக நினைக்கவில்லை. அப்புறம் என்ன நடக்கும்? அவரைக் காவியாக்கிவிட்டார்கள்.  அதிலும் மயிலாப்பூர் மாமி என்றெல்லாம் கமெண்ட் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் முழுக்க என்னதான் நீங்கள் கரடியாகக் கத்தினாலும் நீ பாப்பான்தானே என்று சொல்லக்கூடிய டெம்ப்லேட் ஞாநி தொடங்கி இன்று வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. (ஸ்ரீதர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது)

அது எப்படியோ போகட்டும், அங்கே கமெண்ட் போடுபவர்களுக்கு… நீங்கள் பாஜகவைத் திட்டுங்கள் அல்லது ஸ்ரீதரைத் திட்டுங்கள், ஆனால் ஸ்ரீதர் காவி என்று சொல்லி பாஜகவை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Sridhar’ post:

https://www.facebook.com/share/p/1GvLV377vx

13.10.2025

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது நடுநிலைமையைப் பறைசாற்றிக் கொள்ள கொஞ்சம் கூட அடிப்படை நியாய உணர்வே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ம் தாலிபனும் ஒன்றுதான் என்று தீர்ப்பளித்து விட்டார். 

ஏன் இவர்களையெல்லாம் மறந்தும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஆதரிப்பதில்லை என்பதும், இப்படிப்பட்டவர்கள் அடிப்படைவாதிகளால் திட்டப்படும் போது ஏன் ரசிக்கிறார்கள் என்பதும் இந்த அராஜகத்துக்காகதான். 

இப்படிப்பட்டவர்கள் நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என் நியாய உணர்வுக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளை எழுதுகிறேன்.

https://www.facebook.com/share/p/1DBuveS7Zt

Share

Justice Gavai And Rakesh Kishore

நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.

Share

Puthiya Thalaimurai Blocked in Arasu Cable

புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.

நாம் என்னதான் கண்டனம் தெரிவித்தாலும், நாளையே இந்தப் புதிய தலைமுறை திமுகவுக்குச் சொம்படிக்கத்தான் போகிறது என்றாலும், இப்போது ஓர் அநியாயம் நடக்கும்போது அதைக் கண்டிக்கவேண்டியது அவசியம்.

இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.

எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.

Share