தமிழக வெற்றி கழகம் தோற்றம்

விஜய் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’. தமிழ்நாடு என்று வைக்கவில்லை. தமிழகம் தமிழ்நாடு என்றொரு அரசியல் சிறிது காலம் சுற்றிக் கொண்டிருந்தது. இனி அது இருக்காது. இவரது அரசியல் கட்சியினால் கிடைத்த முதல் பயன் இது. ஒரே ஒரு பயனும் இதுவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

திடீரென்று தனது லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்று வெளிப்படுத்திக் கொண்டது போல, அரசியலில் இவரது பெயர் விஜய் என்றிருக்குமா ஜோசப் விஜய் என்றிருக்குமா என்று பார்க்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டை ஹிந்து அல்லாத வேற்று மதக்காரர்கள் ஆண்டதில்லை என்றே நினைக்கிறேன். (வேற்று மதக்காரர்களைவிட தீவிர வேற்று மத அபிமானிகள் ஆண்டிருக்கிறார்கள் என்பது தனி.) இவர் வெளிப்படையாக கிறித்துவர் என்று அறிவித்துக்கொண்டு வந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

ஒரு கிறித்துவர் என்றும், தீவிர முற்போக்காளர் என்றும் தன்னை விஜய் அரசியலில் முன்னிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவர் திமுகவுக்கே முதல் போட்டியாளராக இருப்பார். விஜய்யின் திரைப்படங்கள் வெளி வருவதில், விழா நடத்துவதில் இருந்த சிக்கல்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் நாம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

விஜய் வாங்கப் போகும் ஓட்டு சதவீதம் அதிகபட்சம் 4% என்று வைத்துக்கொண்டால், இவர் திமுகவிலிருந்து 2% ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சியில் இருந்து 1% ஓட்டுகளையும் பிரிக்கலாம். புதிதாக 1% ஓட்டுகளை வாங்கலாம். அதில் அண்ணாமலைக்குப் போகவேண்டிய 0.5% ஓட்டுகளும் குறையலாம். இது என் கணிப்பு. அல்லது யூகம். சரியாகச் சொன்னால், ஆசை. 2026ல் இந்த நிலை இன்னும் மோசமாகலாம் அல்லது விஜய் முன்னேறலாம்.

ஆனால் விஜய் முன்னேற வாய்ப்புக் குறைவு. ஏன்? இன்று அரசியலில் அண்ணாமலை நிர்ணயம் செய்து வைத்திருக்கும் பென்ச் மார்க். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஆதாரபூர்வமாக, அர்த்தபூர்வமாக பதில் சொல்கிறார் அண்ணாமலை. இனி புதிதாக வரும் அரசியல்வாதிகளிடமும் மக்கள் இதை எதிர்பார்ப்பார்கள். அப்படி பதில் சொல்ல முடியாமல் போகும்போது, எதாவது உளறும்போது, மீம்களும் ட்ரோல்களும் கடுமையாக இருக்கும். அதிலும் திமுகவுக்கு எதிர்த்தரப்பாக விஜய் நின்றால், இந்த மீம்களும் ட்ரோல்களும் இன்னும் தீவிரமாக இருக்கும்.

திமுகவா விஜய்யா என்று வந்தால் அடுத்த பத்து வருடங்களுக்காவது பத்திரிகைகள் திமுகவுக்குத்தான் ஜால்ரா அடிக்கும். விஜய்க்கு இது இன்னொரு பிரச்சினை. பத்திரிகை உலகம் அண்ணாமலை எதிர்ப்புக்கு திமுகவுக்கு ஜால்ரா தட்டி, கூடவே விஜய்யை அண்ணாமலைக்கு எதிராகப் பாராட்டியும் திமுகவுக்கு ஆதரவாகத் திட்டியும் காலத்தை ஓட்டவேண்டும். நல்ல பொழுதுபோக்கு நிச்சயம்.

மாறாக விஜய் ஹிந்து ஆதரவு ஓட்டுகளைக் குறி வைத்து, பாஜக ரக அரசியலைச் செய்தால் என்னாகும்? மிக எளிதாக விஜய்யை முத்திரை குத்தி ஓரம் கட்டிவிடுவார்கள். பாஜகவுக்கே ஹிந்து ஓட்டுகள் கிடைக்காத நிலையில் அதற்கு விஜய் குறி வைக்க காரணமே இல்லை. எனவே விஜய் அந்தப் பாதையில் செல்லவே மாட்டார்.

விஜய் இன்று அவரது திரையுலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். ஒரு படத்துக்கு சர்வ சாதாரணமாக 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நிலையில், அடுத்த பத்து வருடங்களுக்கு இதில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை என்னும் நிலையில், விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலுக்கு வரவே மாட்டார் என்பதே என்னுடைய தீர்மானமாக இருந்தது. ஆனால் கட்சியின் பெயரை அறிவித்து நேரடியாகவே வந்துவிட்டார். இனி திரைப்படமும் நடிக்கப் போவதில்லை என்று கிட்டத்தட்ட அறிவித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்தபிறகு திரைப்படங்களில் நடித்தால் எடுபடாது என்கிற எண்ணத்தை ரஜினியும் கமலும் உடைத்துக் காட்டிவிட்டார்கள். எனவே ஒருவேளை விஜய் கட்சி அறிவித்த பின்பும், அரசியலுக்கு வந்த பின்பும், திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்கள் கழித்து தேர்தல் அரசியலில் இறங்குவது நல்லதல்ல. வைகோ திமுகவைப் பிரிந்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஒரு சதவீதம் கூட வாக்காக மாறவில்லை. காரணம், இரண்டு வருடங்கள் கழித்துத் தேர்தல் வந்ததுதான். விஜய்க்கு இப்போது அந்தச் சலசலப்பு கூட இல்லை.

எதிர்பார்க்காத திடீர் மாற்றம் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நிகழ்ந்தால் ஒழிய, எதுவும் விஜய்க்குச் சாதகமாக நடக்க வாய்ப்புக் குறைவே. அப்படியே திடீர் மாற்றம் ஒன்று நிகழ்ந்தாலும், அங்கே அண்ணாமலையின் இருப்பையும் விஜய் சமாளித்தாகவேண்டும்.

விஜய்க்கு வாழ்த்துகள்.

Share

அயலான்

அயலான் – பல குறைகள் இருந்தாலும் தமிழில் வந்திருக்கும் ஒரு பொருட்படுத்தத் தக்க படமே. நல்ல கிராஃபிக்ஸ். குழந்தைகளுக்கான படம் என்ற தெளிவு. இந்த இரண்டும் படத்தை சுவாரஸ்யமானதாக்குகின்றன.

,ஹீரோ பெயர் தமிழ் & வில்லனுக்குப் பெயர் ஆரியன், ஆதார் கார்டைக் கிண்டலடிக்கும் ஐடெண்டிடி கார்ட் போன்ற குறியீடுகளைச் சமன் செய்யும் சில வசனங்களும் உண்டு, ‘இந்த ஊர்ல ஒரு திட்டத்தை செயல்பட விடமாட்டாங்களே… போராட்டம்னு ஆரம்பிச்சிருவாங்களே.’

மின்னல் முரளி, எந்திரன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விவசாயம், கிராமம் என்றெல்லாம் எரிச்சலைக் கிளப்பி கொட்டாவி வரும் நேரத்தில் அயலான் வருகிறான். பின்னரே படம் சுதாரித்துக் கொள்கிறது. முதல் அரை மணி நேரக் கிராமத்துக் காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு, ,நேரடியாக அயலான் காட்சியில் ஆரம்பித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை. அயலானின் கிராஃபிக்ஸ் நிஜ பிராணி என்று நம்ப வைக்கும் வகையில் இருப்பதும் அருமை. யோகி பாபு பெரிய ப்ளஸ். பின்னணி இசை கொடூரம். படத்தின் மிகப் பெரிய மைனஸ் இது. இன்னொரு மைனஸ் சித்தார்த்தின் குரல். அதேசமயம் விஜய் சேதுபதியைப் போடாததற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஆங்கிலப் படங்களில் இருக்கும் லாஜிக் தீவிரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தது, திரைக்கதை ரீதியாக மைனஸ். ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைப் படங்களே இல்லை என்ற நிலையில், இந்த அளவுக்கு ஒரு படம் வந்திருப்பதே சிறப்புதான்.

சிவகார்த்திகேயன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இஷா கோபிகர் பெயரைப் பார்த்ததும் பழைய நினைவுகள். எவ்வளவு பெரிய திறமைசாலி. கூகிள் தேடிப் பார்த்தேன். பிஜேபியில் இருக்கிறாராம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’ நல்ல சுவாரஸ்யமான அறிவியல் புனைகதைத் திரைப்படம். அயலான் இன்னும் சிறப்பு. தேவையற்ற அரசியல் வசனத் தெறிப்புகளில் சிக்கிச் சிதறிப் போகாமல் பெரிய இயக்குநராக இவர் வர வாழ்த்துகள்.

Share

பேரமைதி

முதலிரவு அறையில் இருந்து வெட்கத்துடன் முகம் திருத்தி வந்த பவித்ரா காலை குளித்து முடித்து தலைக்குத் துணி கட்டி அனைவருக்கும் பரிமாறத் தயாரான போது மாமியார் சுசிலா சொன்னாள், “ஏன் கொலுசுல இவ்ளோ மணி இருக்கு? கொஞ்சம் கம்மியா வாங்கிப் போட்டுக்கோ.” நடு இரவில் யுவன் பவித்ராவின் வாயைப் பொத்தியபடி உஷ் என்று சொன்னது ஒரு மின்னல் போல பவித்ராவுக்கு நினைவில் தோன்றி மறைந்தது.

யுவன் ஒரு வேலையாக வெளியே கிளம்பியதை ஆச்சரியமாகப் பார்த்த பவித்ரா, “இன்னைக்கே போகணுமா?” என்று கேட்டதும் யுவன், “அதுக்கு ஏன் இவ்ளோ சத்தமா பேசற?” என்றான்.

யுவன் கிளம்பிப் போனதும் வீடே நிசப்தமாக இருந்தது. டிவி ஓடிக்கொண்டிருந்தாலும் பவித்ராவின் மாமியார் ப்ளூ டூத்தில் அதை இணைத்திருந்தாள். எங்கேயும் எந்த ஒலியும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த பவித்ராவின் போன் திடீரென சத்தமாக ஒலிக்கவும், காதில் இருக்கும் ப்ளூ டூத்தைக் கழட்டிய பவித்ராவின் மாமியார், “வைப்ரேஷன்ல வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு மீண்டும் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டாள். பவித்ரா போனை கட் செய்தாள்.

மாமியார் ஒரு திரைப்படம் பார்த்து முடித்திருந்தாள். நேரம் போகாமல் தவித்துக்கொண்டிருந்த பவித்ரா, எப்போது யுவன் வருவான் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே நல்லவேளையாக யுவன் வந்துவிட்டான். சந்தோஷமாக ஓடிப் போன பவித்ராவைப் பார்த்த யுவன் என்ன என்பது போல், “ம்?” என்று மிகக் குறைவான ஒலியில் முகத்தில் கூடிய ஒரு பரபரப்புடன் சைகையுடன் கேட்கவும், பவித்ரா தன்னை உணர்ந்து அமைதியாக நடந்து போய் யுவன் முன்னால் நின்று என்ன சொல்வது என்று தெரியாமல், “சாப்பிடலாமா?” என்று கேட்க, யுவன், “ம்” என்றான்.

அனைவரும் சாப்பிட்டார்கள். ஏதோ ஒரு ஞாபகத்தில் பவித்ரா டம்ப்ளரைக் கொஞ்சம் வேகமாக வைக்கவும் யுவனின் முகம் ஒரு நொடி மாறி மீண்டும் சாதாரணமாக, பவித்ரா ஸாரி என்பது போல் புன்னகைத்தாள். பதிலுக்கு யாரும் சிரிக்கவில்லை என்பதையும் பவித்ரா கவனித்தாள்.

யுவனும் அவனது அம்மாவும் சாப்பிட்டபோது ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. கரண்டியால் குழம்பை எடுக்கும் சத்தமோ, பொறியல் பொறுக்கைச் சுரண்டி எடுக்கும் சத்தமோ, உணவை மெல்லும் சத்தமோ எதுவுமே இல்லை. தான் சாப்பிடும் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பவித்ரா கிட்டத்தட்ட அப்படியே விழுங்கினாள். கரண்டிக்கும் பாத்திரத்துக்கும் கூட வலிக்கும் என்றபடி மிக மென்மையாகப் பரிமாறிக் கொண்டார்கள். சாப்பிட்டபடியே பவித்ரா சாதாரணமாக, “சாம்பார் சூப்பரா இருக்குல்ல.. உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டதற்கு யுவன் பதில் சொல்லவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் யுவன் சத்தமின்றிக் கை கழுவினான். கிட்டத்தட்ட சத்தமே இல்லாமல் வாய் கொப்பளித்தான். தன்னால் அப்படிக் கொப்பளிக்க முடியுமா என்ற சந்தேகம் பவித்ராவுக்கு வரவும் அவள் வாய் கொப்பளிக்காமலேயே விட்டுவிட்டாள்.

யுவன் மாடியேறிப் போகவும் பின்னாலேயே பவித்ராவும் போனாள். அறைக்குள் நுழைந்ததும் பவித்ரா யுவனைக் கட்டிக்கொண்டு, “ரொம்ப போர் அடிக்குது” என்று சொல்லும்போதே யுவன் சொன்னான், “சாப்பிடும்போது மெல்ல பேசு.” தான் பேசவே இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த பவித்ராவின் போன் வைப்ரேட் ஆகவும் பவித்ரா யுவனிடம், “அம்மா கூப்பிடறாங்க… ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, போனுடன் மொட்டை மாடிக்குப் போனாள். போனை எடுத்ததும், “அம்மா… நல்லா இருக்கியா” என்றாள். அம்மா, “சத்தமாத்தான் பேசேண்டி… ஏதோ கிணத்துக்குள்ள இருந்து பேசற மாதிரி இருக்கு. நல்லா இருக்கேல்ல? மாப்ளை நல்லா பாத்துக்குறார்ல?” என்றாள்.

அம்மாவின் குரலுக்குப் பின்னால் தன் வீட்டுச் சத்தம் பவித்ராவுக்குக் கேட்டது. என்னென்னவோ சத்தங்கள். ஒவ்வொரு சத்தத்தையும் உற்றுக் கேட்டாள் பவித்ரா. “லைன்ல இருக்கியாடீ” என்று பவித்ராவின் அம்மா கேட்டதற்கு, “கொஞ்ச நேரம் பேசாம லைன்லயே இரும்மா” என்றவள் தன் வீட்டுச் சத்தத்தைக் கூர்ந்து கேட்டாள். “என்னடீ?” என்று கேட்ட அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் போனை கட் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வாய் விட்டுச் சத்தமாக அம்மா அம்மா அம்மா என்று நான்கைந்து முறை கத்தினாள். பின்னர் சத்தமே இல்லாமல் நடந்து வந்து, சத்தமே இல்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, சத்தமின்றி யுவன் அருகே அமர்ந்துகொண்டாள்.

Share

புதுத்துணி

புதுத்துணி

மகள் எப்போது உக்காருவாள் என்று புவனாவிடம் கேட்காத ஆளே இல்லை. தன் மகள் சீக்கிரமே பெரியவளாகிவிடுவாள் என்று அத்தனையையும் திட்டமிட்டுத் தயாராக இருந்தாள் புவனா. மகள் பெரியவளானதும் என்ன செய்ய வேண்டும், எங்கே மனை போட்டு புதுத்துணி கொடுத்து அவளை உட்கார வைக்கவேண்டும், சாப்பிட என்னவெல்லாம் செய்து தரவேண்டும் என்று புவனா கேட்காத ஆளே இல்லை. ஆளுக்கொன்று சொன்னார்கள். ஹுக்கி எனப்படும் பொங்கல் செய்து தரவேண்டும் என்று ஒருவர், சிகிலி எனப்படும் எள்ளுருண்டை செய்துதரச் சொல்லி இன்னொருவர் என அனைத்தையும் பொறுப்பாகக் குறித்து வைத்துக்கொண்டாள்.

லக்ஷ்மி மாமி ஒரு விஷயத்தைச் சொன்னபோதுதான் அதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே என்று புவனாவுக்குத் தோன்றியது. பெரியவளானதும் பார்த்து உறுதி செய்ய அம்மா போகக் கூடாது என்றாள் லக்ஷ்மி மாமி. “ஸ்கூல்ல இருக்கும்போதுன்னா ஆயா பாப்பா, வீட்ல இருந்தா வேற யாரையாவது பாக்கச் சொல்லுடீ” என்றாள். அம்மா பார்த்தால் ஆகாதாம். புவனா சரி மாமி என்றாள். மாமி இன்னொரு விஷயமும் சொன்னாள், “அப்படி பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி வாங்கித் தர்றது ஒரு ஐதீகம்.”

புவனா உடனே முடிவெடுத்தாள். தன் ஆசை மகள் பெரியவளாகப் போவதைப் பார்த்துச் சொல்பவளுக்கு பட்டுப் புடவை வாங்கித் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். இது ஒரு கொடுப்பினை என்றாள். புவனாவின் கணவன், ‘இதற்கெல்லாம் பட்டுச் சேலையா’ என்று அலுத்துக்கொண்டதை புவனா காதில் போட்டுக்கொள்ளவில்லை. அன்றே மிக நல்ல பட்டுப்புடவை ஒன்றை வாங்கியும் வைத்தாள். இந்தப் புடவை வந்த நேரம் சீக்கிரமே தன் மகள் பெரியவாளாவாள் என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் புவனாவின் மகள் எப்போதும் போல சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு, ஊரெல்லாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, வீட்டுப்பாடம் செய்யாமல் புவனாவிடம் அடி வாங்கிக்கொண்டு, டிவியில் கேட் நிஞ்சா பார்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தாள். அவள் ஒரே சமயத்தில் மிகச் சிறிய பெண்ணாகவும், எப்போது வேண்டுமானாலும் குதிரப் போகும் பெண்ணாகவும் புவனாவின் கண்ணுக்குத் தெரிந்தாள்.

இப்போது அப்போது என்று எதிர்பார்த்த நாளெல்லாம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. “பதினாலு வயசுதான் ஆகுது, அதுக்குள்ள ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று புவனாவின் கணவன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஊரெல்லாம் பெரு மழை பெய்தபோது தன் மகள் உட்கார்ந்தாள் என்ன செய்வது என்று புவனா யோசித்துக்கொண்டிருந்தபோது, வாசலில் பெரிய சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்த புவனாவைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரி திட்டு திட்டென்று திட்டினாள். மழைக்காலம் வந்தாலே இந்தப் பிரச்சினைதான். புவனா வீட்டுக் கழிவு நீர்த் தொட்டி நிரம்பி, வாசலில் நீர் ஓடும். எத்தனை சரி செய்து இந்தப் பிரச்சினை தீரவில்லை. இந்தத் திட்டுகளையெல்லாம் புவனா காதில் போட்டுக்கொள்ளாமலேயே சமாளித்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் பக்கத்து வீட்டுக்காரி புவனாவைக் காறித் துப்பிவிட்டுப் போனாள். மழைக்காலத்துல தண்ணி ரொம்பினா நாங்க என்ன பண்றது என்ற ரீதியில் இந்த முறையும் புவனா சமாளித்தாள்.

மழைக்காலம் முடிந்து வெயில் காலம் வந்து, சாலை நீரெல்லாம் வடிந்து காய்ந்து தெருவே பளிச்சென்று இருந்த நாளில், புவனாவின் மகள் அதே சாக்லெட்டைச் சாப்பிட்டுக்கொண்டு சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தாள். புவனா ஆசை ஆசையாக வாங்கி வைத்த பட்டுப் புடவை அவள் கண்ணில் பட்டது. ஏன் இவள் இன்னும் பெரியவளாகவில்லை? நான் பன்னிரண்டு வயதில் பெரியவளானேனே? இவளுக்கு பதினாலு ஆகப் போகிறதே! யோசனையில் இருந்த புவனாவுக்கு ஒரு போன் வந்தது. புவனாவின் தங்கை அழைத்து, “ஏன் உம் பொண்ணு பெரியவாளாவான்னு காத்துக்கிட்டு இருந்தா, என் பொண்ணு பெரியவளாயிட்டாடீ! நாலாவது நாள் தலைக்கு தண்ணி ஊத்தறோம், கிளம்பி வா” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். புவனாவுக்கு கொஞ்சம் சந்தோஷமாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருந்தது. ஐந்தாவது படிக்கும் அவளே பெரியவளாகிவிட்டாளா?

புவனா தன் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் ஊருக்குப் போனாள். தன் மகளைப் பார்த்தால் நிச்சயம் அவளிடம் எல்லாரும் ‘எப்படீ உக்காரப் போற?’ என்று கேட்பார்கள் என்பதற்காகவே அவள் தன் மகளை அழைத்துச் செல்லவில்லை.

தன் தங்கை வீட்டுக்குள் புவனா காலை வைக்கவும் பக்கத்து வீட்டுக்காரி போன் செய்தாள். இவள் எதுக்கு போன் செய்கிறாள் என்ற யோசனையில் புவனா போனை எடுத்ததும், புவனா பேசுவதற்குள் அவள் திட்ட ஆரம்பித்தாள். ஒரு பாட்டம் திட்டி முடித்துவிட்டு, “வெயில் காலத்துலயும் உங்க வீட்டு கக்கூஸ் தண்ணி ரோடெல்லாம் ஓடுது… இப்பவே வந்து நீங்க சரி பண்ணனும். இல்லைன்னா கார்ப்பரேஷன்ல சொல்லிருவேன்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாள். புவனா எரிச்சலில் மனதுக்குள் பக்கத்து வீட்டுக்காரியைத் திட்டியபடி தன் தங்கை மகளைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.

அங்குமிங்கும் பம்பரமாகச் சுற்றி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்த புவனாவின் போன் ஒலித்தது. மீண்டும் பக்கத்து வீட்டுக்காரியிடம் இருந்து போன். புவனா கோபமாக அவளிடம், “என்ன வேணும் உங்களுக்கு?” என்று சொல்லும்போதே அவள் சொன்னாள், “உம் பொண்ணு பெரியவளாயிட்டாம்மா! உங்க வீட்டுக்காரரு ஆஃபிஸுக்கு போயிருக்காராம். இப்ப எங்க வீட்லதான் இருக்கா. உடனே வா” என்று சொன்னாள்.

அடித்துப் பிடித்து புவனா கிளம்பி வந்து, வீடெல்லாம் அமளிதுமளியாக, மகளுக்கு ஹுக்கி கொடுத்து, அனைவருக்கும் தகவல் சொல்லி, நான்காம் நாள் சொந்தக்காரர்கள் எல்லாம் வந்து இறங்க, அனைவரும் சேர்ந்து புவனாவின் மகளுக்குத் தண்ணீர் ஊற்றி, புதுத்துணி கொடுத்து வீட்டுக்குள் கூட்டிவந்தாள். சொந்தக்காரர்கள் எல்லாம் போன உடன் புவனா பக்கத்து வீட்டுக்குப் போய் அவளைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு வந்தாள்.

அவள் வரவும் புவனா அவள் கையை அன்பாகப் பற்றிக்கொண்டு, “பெரியவளானதை பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி தரணும்மா.. எங்க பக்கத்து வழக்கம். உங்களுக்கும் தர்றேன். சந்தோஷமா தர்றேன். நமக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் மனசுல வெச்சிக்காம எம் பொண்ணை உங்க வீட்ல வெச்சிக்கிட்டீங்களே…” என்று சொன்னவள், தன் அறைக்குள் போய் புடவையை எடுத்துக்கொண்டு வந்து, தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுத்தாள். அவர்கள் ‘இப்படில்லாம் ஒரு பழக்கம் இருக்கு பாரேன்’ என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

புவனாவின் கணவன் புவனாவிடம், “பட்டுப் புடவை வாங்கி வெச்ச.. இப்ப இந்த சாதா புடவையைக் கொடுத்துருக்க” என்று கேட்டதை எப்போதும் போல் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த புவனா அவளை மீறிச் சொன்னாள், “சாஸ்திரம்தான? பட்டுப்புடவையே கொடுக்கணும்னா இருக்கு? இவளுக்கெல்லாம் இது போதும். பட்டுப் புடவை எனக்கு இருக்கட்டும்.”

Share

கருடா / ஸ்வாதி முத்தின மலெ ஹனியே

கருடா (ம)

நல்ல படம். நல்ல திரைக்கதை. ஆனால் மிகவும் முக்கியமான விறுவிறுப்பான காட்சிகளைக்கூட மெல்ல எடுப்பது ஏனென்று புரியவில்லை. யார் ஹீரோ என்பதில் திரைக்கதை ஏற்படுத்தி இருக்கும் சுவாரஸ்யம் முக்கியமானது. இதுதான் கதையின் வெற்றி. தமிழில் கொஞ்சம் மசாலா சேர்த்து விறுவிறுப்பாக்கி, இரண்டு இளைய நல்ல நடிகர்களை வைத்து எடுத்தால் படம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. சுரேஷ் கோபிக்குப் பதிலாக துல்கர் சல்மானும், பிஜூ மேனோனுக்குப் பதிலாக ஃபக்த் ஃபாஸிலும் நடித்து, கதைக்களத்தைக் கொஞ்சம் தட்டி இருந்தால் இந்தப் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.

*

ஸ்வாதி முத்தின மலெ ஹனியே (க)

இயக்குநராக ராஜ் பி ஷெட்டியின் திரைப்படங்கள் கொஞ்சம் வழவழ கொழகொழதான். ஒந்து மொட்டய கதா பார்த்து நொந்து போயிருந்தேன். ஆனால் கருட கமனா ரிஷப வாஹனா மிக நன்றாக இருந்தது. ராஜ் பி ஷெட்டியா இயக்கியது என்று ஆச்சரியமாக இருந்தது. அதிலும் சில தேவையற்ற காட்சிகள் உண்டு என்றாலும், கன்னடத்தில் அது முக்கியமான படமே. ஸ்.மு.ம.ஹ என்னைப் போட்டுச் சவட்டிவிட்டது. மலையாளத் திரைப்படம் போல மிக மெல்ல நகரும் பாணி. பாலுமகேந்திரா பாணி போல ஒவ்வொரு ஃப்ரேமையும் மெல்ல நின்று நிதானித்துக் காண்பிக்கும் கேமரா. போதாக் குறைக்கு இசை. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பது போல கதை. அதுவும் பத்தாதுன்னு திரைக்கதை. முடியலடா சாமி. இதில் ராஜ் பி ஷெட்டி ஒரு கவிஞன் வேறு. எனவே எதைப் பேசினாலும் தீர்க்கமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு சாவடிக்கிறான். செத்தும் இதைச் செய், அதைச் செய் என்று ஹீரோயினை சாவடிக்க, ஹீரோயின் நம்மை சாவடிக்க, படம் முழுக்க ஒரே வியாதி மயம். ஏண்டா பாத்தோம்னு நொந்து போனேன். மெல்ல நகரும் கலைப்படங்களைக் கண் கொத்தாமல் பார்த்து, அதில் வரும் ஷொட்டான வசனங்களைப் பாராட்டி, அதில் வரும் குறியீடுகளைக் கொண்டு இயக்குநர்களைப் பாராட்டும் ஸ்பீஸிஸ்களுக்கான திரைப்படம்.

Share

நவம்பர் மழை அனுபவங்கள்

2015 மழையின் போது நான் கிழக்கில் வேலையில் இருந்தேன். நவம்பர் 23ம் தேதி என நினைக்கிறேன். மதியம் 3 மணிக்கெல்லாம் மழை வெளுத்துக் கட்டப் போவது எனக்குப் புரிந்துவிட்டது. பைக்கை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஓலாவில் புக் செய்யப் பார்த்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை. நிச்சயம் இன்று தவிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன்.

பி.ஆர்.மகாதேவன் அலுவலகத்துக்கு ஒரு வேனில் வருவார். அவருடன் சேர்ந்து வேனில் ஏறிப் போனேன். டிடிகே சாலையிலும் எல்டாம்ஸ் சாலையிலும் வேன் மிதந்துதான் சென்றது. மாம்பலத்தில் இறங்கிக்கொண்டோம். மழை கொட்டிக் கொண்டிருந்தது. இருவரும் ஒரு டீக்கடை பக்கம் ஒதுங்கி நின்றோம். டீ சாப்பிட்டோம். வடை இருந்தது, ஆனால் சாப்பிடவில்லை. 🙂

நானும் மகாதேவனும் நடந்து எப்படியோ டிரைனுக்குள் ஏறினோம். ஆலந்தூர் வரை டிரைன் மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. நான் மவுண்ட்டில் இறங்கிக் கொண்டேன். இறங்கி வந்து, மவுண்ட்டிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலையைப் பார்த்தால், நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஏன் டிரைன் மெதுவாக வந்தது என்பது புரிந்தது.

மவுண்ட்டில் இருந்து மடிப்பாக்கம் செல்ல ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை. நீருக்குள் துழாவி துழாவி நடந்தேன். மடிப்பாக்கம் செல்ல 5 கிலோமீட்டர்! இந்த மழையில் எப்படி நடக்கப் போகிறோம் என்ற அச்சம். அரை கிலோமீட்டர் நடக்கவும் ஒரு ஆட்டோ அதிசயமாக வந்தது. மடிப்பாக்கம் என்றதும் வருகிறேன் என்றார். ஆச்சரியமாகி, வேறு யாரும் அந்த ஆட்டோவை மடக்குவதற்குள் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

ஒரு சின்ன பெண் ஓடி வர, நான் ஆட்டோவில் ஏறிவிடவும், வருத்தமாகி நகன்றார். ஆட்டோக்காரர் என்னிடம், அவங்களையும் ஏத்திக்கவா என்று கேட்டார். அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே என்றேன். அந்தப் பெண் ஆயிரம் நன்றி சொல்லி ஏறிக் கொண்டார். பாதி ரூபாய் நான் கொடுத்துடறேன் என்றார். அதெல்லாம் பரவாயில்லை என்றேன். ஆட்டோக்காரர் முதலில் என்னை இறக்கிவிட்டுவிட்டு, அங்கே இருந்து கீழ்க்கட்டளை செல்ல வேண்டும். செல்லும் வழியெங்கும் மழை நீர். சின்ன சின்ன தெருக்கள் வழியாக நுழைந்து, ஒருவழியாக என்னை வீட்டில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர்.

அப்பாடி, பெரிய நிம்மதி என்று பெருமூச்சு விடும்போது அந்தச் சின்ன பெண் என்னிடம், ‘தேங்க்ஸ் அங்கிள்’ என்றாள்.

பின்னர் டிசம்பர் 2 வந்தது.

Share

காந்தாரா

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம்.

நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂

ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன் என அசத்திவிட்டார்கள். கதை என்று பார்த்தால், பெரிய புதுமை எல்லாம் இல்லை. ஆனால் அதை கிராம தெய்வ வழிபாட்டுடன் இணைத்ததுதான் பெரிய விஷயம்.

படம் ஓடுமா ஓடாதா, யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் நம்பும் கதைக்கு 100% உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் ஆதார விதி. இயக்குநர், நடிகர் என அனைவரும் இந்தப் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சுர்ளி தெய்வ கடாக்‌ஷம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பன்றியை வேட்டையாடுகிறான் என்ற இருமைப் புள்ளி மிக அருமை. இதிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிட்டது.

ரிஷப் ஷெட்டிக்குள் குலிகா தெய்வம் வரவும், வெறி கொண்டது போல் அவர் நடித்த நடிப்பு அசரடித்துவிட்டது. படம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு பூத கோலா (தெய்வ ஆட்டம்) ஆட்டத்தைப் பொறுமையாகக் காண்பிக்கிறார்கள். அதில் அனைவரின் கைகளையும் இணைத்து ஒன்றாக்கி, ஓ ஓ என்ற சத்தத்தை மட்டும் தரும் காட்சி – புல்லரிக்க வைக்கிறது.

கடலோரக் கிராமக் கன்னட வட்டார வழக்கு வெறி கொள்ள வைத்துவிட்டது. பல வசனங்களை நிறுத்தி நிதானமாகக் கேட்டேன்.

ரிஷப் ஷெட்டி, ராஜ் ஷெட்டி, ரக்‌ஷித் செட்டி மூன்று பேரும் கன்னடத் திரையுலகத்தை எங்கோ கொண்டு போகப் போகிறார்கள். இதில் ரக்‌ஷித்தும் ரிஷப்பும் கடலோரக் கிராமக் கதைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் போல. சப்த சாஹரக்காச்சே எல்லோ – சைட் ஏ படத்தில் கடலையைக் கதாநாயகி கேட்கும் காட்சியும், உலிதவரு கண்டந்தெ (மறக்க முடியாத திரைப்படம்) படத்தில் வரும் கடலலைகளின் சத்தமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

Share

விநோதக் கனவுகள்

சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில் அதுவும் மறந்து போகும்.

இனி இப்படி வரும் கனவுகளைப் பற்றிக் குறித்து வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. உண்மையாக வரும் கனவுகளை மட்டுமே குறிக்கப் போகிறேன். என் ஆசைகளை, கற்பனைகளை அல்ல! அடுத்த இருபது வருடங்களில் என்ன என்ன கனவுகள் வருகின்றன என்று பார்க்கலாம்.

நேற்று ஒரு கனவு. (இதை எழுதும்போது அதுவும் சட்டென மறந்துவிட்டது. பக்கென்று ஆகிவிட்டது. ஒருவழியாக அதைக் கண்டடைந்தேன்.) என் அம்மாவின் புத்தகம் ஒன்றை நான் பதிப்பித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்து ஒரு வார காலம் ஆகியும் அது என் கைக்கு வரவில்லை. என் அம்மாவுக்குக் கோபம். புத்தகம் வந்து ஒரு வாரம் ஆகியும் கூட அதை என் கண்ல கூட காமிக்க மாட்டியா என்கிறார். உடனே நான் எங்கள் சேல்ஸ் டீமுக்கு போன் செய்கிறேன். எங்கம்மா எழுதின புத்தகத்தைக் கொடுத்து விடுங்க என்கிறேன். இவ்வளவுதான் நினைவிருக்கிறது. இதிலிருக்கும் ஆச்சரியங்கள் என்ன? என் அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதவே திணறுவார். அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? அம்மா இறந்து 5 வருடங்கள் ஓடி ஏன் இப்படி ஒரு கனவு? அதைவிட ஆச்சரியம், புத்தகத்தின் பெயர் கொடுங்கோளூர் என்று ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தை கூட என் அம்மாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் கனவு கண்டது நாந்தானே!

முந்தாநாள் ஒரு கனவு. ஒரு ஊர். நடுவில் தங்கக் கோபுரம். எந்தத் தெருவில் சென்றாலும் அந்தக் கோபுரத்தைப் பார்க்கலாம். அப்போது அந்தத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. அசந்து போய் கேட்கிறேன். இளையராஜாவின் இசையில் உருவான பாடல். பாடியது புஷ்பவனம் குப்புசாமி. இந்தப் பாடலைப் பற்றி ஏன் யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்று எரிச்சலாகிறேன். இப்போதுதான் உங்களிடம் சொல்கிறேன்!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கனவு. மறைந்து போன ஒருவர் என் கனவில் வந்து சோகமாகவும் பின்பு அதிர்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்தார். இதை மறக்க நினைக்கிறேன் என்பதால் மேற்கொண்டு எழுதப் போவதில்லை.

என் அம்மாவின் மறைவை அடுத்த ஆறு மாதங்களில் தினம் தினம் அம்மாவின் கனவுதான். அதில் ஒரு கனவு வித்தியாசமானது. நானும் அம்மாவும் கல்லுப்பட்டியில் இருக்கிறோம். அங்கே ஊர்ச்சாத்திரை. நான் சின்ன பையனாக இருக்கிறேன். சாத்திரையில் திரை கட்டிப் படம் போடுகிறார்கள். நான் படம் பார்த்தே ஆகவேண்டும் என்கிறேன். கோவிலுக்குப் போகணும் என்கிறார் அம்மா. திடீரென்று அங்கே சாப்பாடு போடுகிறார்கள். நான் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரைக்கு முன்னால் படம் பார்க்க உட்கார, எழுத்து ஓடுகிறது. படம் பெயர் மூவர்! (இப்படி ஒரு படம் வந்ததாகக் கூட தெரியவில்லை!) ஒன்னு படம் பாரு, இல்லைன்னா சாப்பிடப் போ என்று யாரோ சொல்ல, என் அம்மா கோபமாகி, சின்ன பையன் படம் பாத்துக்கிட்டே சாப்பிட்டா என்ன என்று அவர்களைத் திட்டிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு கோபமாக நடக்கிறார். கட் செய்தால், நெல்லையப்பர் கோவிலின் வளாகத்தில் நடந்து வருகிறோம். நான் அதே சின்னப் பையன். ஆனால் அம்மா அவர் சாகும் தறுவாயில் இருந்த தோற்றம். வெளிறிய உள்பாவாடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றிக்கட்டி நடக்க முடியாமல் நடக்கிறார். படம் பாத்துட்டு வந்துருக்கலாம் என்கிறேன் நான். அம்மா முச்சு வாங்க நடந்து வந்து, பிரகாரத்தில் இருக்கும் படிகளில் இறங்கச் சிரமப்பட்டு அங்கே இருக்கும் கைப்பிடிச் சறுக்கில் சறுக்கியபடி வருகிறார். நான் அம்மா என்னாச்சு உனக்கு என்று அலறுகிறேன். இக்கனவு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

இனி இது போன்ற கனவுகள் அடிக்கடி வரலாம். என்னைத் தூங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Share