12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால் இதில் கலக்கிவிட்டார்கள்.
ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.
பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.
ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.
தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.