Archive for ஆன்மிகம்

Vyasaraja Mutt Controversy

மத்வ மடங்களில் ஒன்றான சோசலே வியாசராஜ மடம் (Sosale Vyasaraja Mutt), கடந்த சில ஆண்டுகளாக வாரிசுரிமைப் போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது அடுத்த பீடாதிபதி யார் என்பது குறித்த சிக்கல்.

2010 வாக்கில் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012-ல் கர்நாடக அரசு மடத்தின் சொத்துக்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிர்வகிக்க ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. 2017 ஜூன் மாதத்தில் ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் தனது பதவியை விட்டு விலகினார்.

மடத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மடத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும் ஒரு சட்டப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி,  ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர்  (பூர்வாசிரமப் பெயர்: டி. பிரகல்லாதாச்சார்) உடனடியாகப் புதிய பீடாதிபதியாக வேண்டும், அதே வேளையில் ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தர் (பூர்வாஸ்ரம பெயர்: புஷ்கராச்சார்) என்பவரை மடத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ இளைய பீடாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.

ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தருடன் சேர்ந்து புதிய பீடாதிபதி வித்யாஸ்ரீஷ தீர்த்தர் சில நாட்களுக்கு மடத்தின் மூல விக்கிரகங்களைத் தொட்டு இணைந்தே பூஜைகளைச் செய்தார். பீடாதிபதிகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த மூல விக்ரகங்களைத் தொட உரிமையில்லை. மத்வத்தில் மூல விக்ரகங்கள் மிக முக்கியமானவை. ஆனால், சில நாட்களிலேயே எந்தவொரு காரணமும் கூறாமல், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரை மடத்தை விட்டு வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தரப்பு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. (இதுகுறித்துப் பல குமுறல்கள் ரீல்ஸ்களாகவும் யூ டியூபிலும் கிடைக்கின்றன.)

தற்போது பிரச்சினை என்னவென்றால், ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தனது பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரனான பிரணவ் (பெயர் சரியா எனத் தெரியவில்லை) என்பவரை அடுத்த மடாதிபதியாகக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பதுதான். தனது பேரனை மூல விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்ய அனுமதித்தது அடுத்த பிரச்சினை.

பொதுவாக பேரனை அடுத்த பீடாதிபதியாக மத்வ மடங்களில் நியமிப்பதில்லை என்றாலும், கடந்த காலங்களில் இப்படி நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரைத்தான் அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமான சட்டப்பூர்வ ஒப்பந்தம் இருக்கும்போது, அதை மீறித் தன் பேரனைக் கொண்டுவர தற்போதைய பீடாதிபதி முயல்வது பிரச்சினையாகியுள்ளது.

நான் ஏதோ ஒரு ரீல்ஸைப் பார்க்கப் போக, கடந்த இரண்டு மூன்று நாள்களாக இந்தப் பிரச்சினையை ஒட்டிய ரீல்கள் வந்து குவிகின்றன. என்னடா பிரச்சினை என்று தோண்டித் துருவிப் பார்த்ததில், சாட் ஜிபிடி, ஜெமினை உதவியுடனும், சில யூ டியூப் சர்ச்சைகளைக் கேட்டும் சிலரிடம் பேசியும் நான் புரிந்துகொண்டவை இவை.

தற்போதைய பிரச்சினைக்குரிய ஸ்ரீவித்யாஸ்ரீஷ தீர்த்தர் பெரிய அறிவாளி. ஸ்காலர். பல இடங்களிலும் வியாசராஜ மடத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி விரிவாக்கியவர். இதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இவரது பிரச்சினைக்குரிய செயல்பாட்டை, நிர்வாகப் பிரச்சினைகளை, குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அடுத்த பீடாதிபதி பதவியைத் தர முயல்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

Share

Madhva Mutts and We

மத்வ மடங்களுக்கும் யதார்த்த மாத்வர்களுக்குமான உறவு பற்றி நான் முன்பே சொல்லி இருக்கிறேன். உண்மையில் எனக்கு மடம் என்பது முதலில் அறிமுகமானது, ஸ்ரீ ராகவேந்திர ஆராதனைக்கு உணவு உண்ணப் போகும்போதுதான். அதை தீர்த்தப் பிரசாதம் என்றழைப்பார்கள் என்பதே அதிலிருந்து 30 வருடங்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் ஆராதனைக்குப் போனதுதான் முதல்முறை. அங்கே உண்டுவிட்டு, அழகரடியில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு அந்த வெயிலில் நடந்துவரவேண்டும். பஸ் வசதியும் கிடையாது, பஸ்ஸுக்கும் வசதி கிடையாது. அதனாலேயே மடத்தில் சென்று சாப்பிடுவது குறித்து அச்சம் வரும். சிலசமயம் யார் வீட்டிலாவது தங்கிவிட்டு மாலை போல நடந்து வருவோம். ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பரமேஸ்வரி தியேட்ட்டரில் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்குப் போனது நினைவிருக்கிறது. (நான் 2ம் முறையாகப் பார்த்தேன்!) என் நினைவு தெரிந்து என் அப்பா அம்மா அக்கா அண்ணனுடன் பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. (இது ஒன்றுதானோ என்னவோ!)

ஸ்ரீ ராகவேந்திரர் என்பவர் குரு, குருவும் தெய்வம் மத்வ சித்தாந்ததின்படி ஒன்றல்ல என்பதே பின்னர்தான் புரிந்தது. இன்றுவரை பெரும்பாலான மாத்வ இளைஞர்கள் இந்த வேறுபாட்டைக் கூட அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே — அன்றைய எங்களைப் போல. நீத்தார்களைக் கடவுளாகவே கும்பிடுவதும் இதனுள் அடக்கம். (எது தவறு எது சரி என்று நான் பேசவில்லை. அது அவரவர்கள் நிலைப்பாடு.)

பின்பு மடம் என்பது முகத்திலறைந்தாற்போல் அறிமுகமானது, இந்த மடம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது என்றளவுக்கு வாழ்க்கைக்குள் நுழைந்தது, எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் ஒவ்வொருவராக வைகுண்டப் பிராப்தி அடைந்தபோது. தாத்தாவின் மறைவுக்கான சாங்கியங்களை வீட்டிலேயே செய்தோம். பின்னர் வீட்டில் முடியவில்லை. மடங்களே கதி என்றானது.

இவற்றுக்குப் பின்னர்தான் மடங்களில் இருக்கும் வேறுபாடுகள், நாம் எந்த மடம் என்பதெல்லாம் அறிமுகமானது. இவை நடந்தது எங்கள் தலைமுறைகளின் திருமணங்களின் போதும், மூத்தோர்கள் வீட்டு பூஜைகளின் போது எங்களை வழி நடத்தியபோதும்.

மாயப் பெரு நதி நாவல் எழுதியபோது இந்த மடங்கள் குறித்த வேறு வகைப் புரிதல் ஏற்பட்டது. சுவாசம் வெளியிட்ட மத்வாசாரியார் புத்தகத்தை எடிட் செய்தபோது, முதல் பதிப்பில் இருந்த சில போதாமைகளை, தவறுகளை மத்வ சித்தாந்தத்தில் கரை கண்டவர்கள் சொன்னபோதும் அடுத்த வகைப் புரிதல் ஏற்பட்டது.

இதன் அடுத்த கட்டம், இப்போதைய ரீல்கள். நான் பெரும்பாலும் மலையாளம் மற்றும் கன்னட ரீல்களைத்தான் பார்க்கிறேன். மலையாளம் 50%, கன்னடம் 30%, தமிழ் 20% என வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மத்வ மடங்களைச் சேர்ந்த பல ரீல்கள் வரத் தொடங்கியதில் இன்னும் கொஞ்சம் புரிதல் ஏற்பட்டது. எந்த அளவுக்கு என்றால், எங்கள் மடமான வியாசராஜ மடத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நேற்றுத்தான் தெரிந்துகொண்டேன் — இந்த ரீல்ஸ்களின் மூலமாக! ஏழு வருடங்களாக இருக்கும் இந்தப் பிரச்சினை பற்றி நேற்று முன்தினம் வரை எனக்கு ஆ ஆ கூடத் தெரியாது.

மேலே சொன்ன அத்தனைக்கும் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பதே உண்மை என்பதால்தான். எனக்குத் தெரிந்து எங்கள் முன்னோர்களில் யாரும் கர்நாடகா பக்கம் கூடச் சென்றதில்லை. தாத்தாவின் அப்பாவுக்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி! இப்படி ஒரு சமூகம், அதாவது தமிழ்நாட்டிலேயே தலைமுறை தலைமுறையாக இருந்துகொண்டு, ஆனால் வீட்டில் கன்னடம் பேசும், கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் சராசரித் தமிழர்களைப் போல/விட நன்றாகத் தமிழ் பேசும் ஒரு சமூகம் இருந்துகொண்டிருக்கிறது. (தெலுங்கிலும் கூட இதே கதை.) இதனால்தான் கர்நாடகாவில் நடப்பது பற்றியெல்லாம் இங்கே தெரிந்துகொள்வதே இல்லை. அவசியமும் இல்லை.

ரீல்ஸ் அதை உடைக்கிறது. ஒப்பீட்டளவில் சென்னை மாத்வர்கள் கூடுதலாக மடம் மற்றும் மத்வ சித்தாந்தம் சார்ந்தவற்றில் ஆழமான பிடிப்புடனும் அறிவுடனும் இருக்கிறார்கள். சென்னையைத் தாண்டிவிட்டால் மற்றவர்கள் அந்த அந்த ஊர்த் தமிழர்களைப் போலத்தான்!

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் — அடுத்த பதிவுக்காக.

தேவையற்ற வம்புகளைக் குறைக்கவும், பதில் சொல்லும் பொறுமையும் ஞானமும் இல்லை என்பதாலும், முக்கியமான மத – அரசியல் பதிவுகளில் கமெண்ட் செய்யும் ஆப்ஷன் இருக்காது.

Share

Madurai Lord Murugan Conference

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகமா மதவாத அரசியலா?

கூட்டம் வருமா? மதுரை குலுங்குமா?

ராமரைக் கைவிட்டுவிட்டு முருகனுக்குத் தாவியது ஏன்?

மதச்சார்பின்மைக்கு பங்கமா?

பதில் அளிக்கிறார் நம்பி நாராயணன்.

Share

நித்யானந்தா

நித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.

  1. நித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.
  2. நித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
  3. நித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)
  4. தனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.
  5. மற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.
  6. என்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.
  7. நித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.
  8. அவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.
  9. கடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.

வேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.

இள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.

ஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.

காவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க வைத்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.

Share

அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்

நேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.

அனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.

பொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.

அப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)

என் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்!)

கடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்! 

முதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்

இரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’

கடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.

ஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா?

Share

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

Share

நாக சதுர்த்தி

இன்று நாக சதுர்த்தி.


தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். எங்கள் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களுள் ஒன்று.

இதற்கான ஐதீகக் கதை:

முன்பொரு காலத்தில் ஒருவனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவன் முதல் பெண்ணை நல்ல ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். இரண்டாவது பெண்ணை, கைகால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நடைபிணம் போலிருக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். அவனது சூழ்நிலை அப்படி இருந்தது. அப்படி நடைபிணம் போலிருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும் என்றும் குழந்தைச் செல்வங்கள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். பார்வதியும் பரமேஸ்வரனும் நேரில் தோன்றி, நாகரை வழிபடுமாறு அவளுக்கு அருளிச் சென்றார்கள். பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள். அப்படி வழிபடும்போது இருக்கவேண்டிய நோன்பு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. (அப்புத்தகம் என்னிடமில்லை. இக்கதை கூட வாய்வழியாகக் கேட்டு எழுதுவதே. தவறுகள் இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும். நன்றி.) பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னபடியே நாகபூஜையால் அப்பெண்ணின் கணவன் நலம்பெற்று அவ்விரு தம்பதியரும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.

எனவே நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

நாளை கருட பஞ்சமி.

Share

மஹரிஷி – அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org

மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Share