நித்யானந்தா

நித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.

  1. நித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.
  2. நித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
  3. நித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)
  4. தனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.
  5. மற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.
  6. என்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.
  7. நித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.
  8. அவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.
  9. கடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.

வேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.

இள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.

ஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.

காவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க வைத்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.

Share

Comments Closed