Tag Archive for மத்வர்

Vyasaraja Mutt Controversy

மத்வ மடங்களில் ஒன்றான சோசலே வியாசராஜ மடம் (Sosale Vyasaraja Mutt), கடந்த சில ஆண்டுகளாக வாரிசுரிமைப் போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது அடுத்த பீடாதிபதி யார் என்பது குறித்த சிக்கல்.

2010 வாக்கில் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012-ல் கர்நாடக அரசு மடத்தின் சொத்துக்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிர்வகிக்க ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. 2017 ஜூன் மாதத்தில் ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் தனது பதவியை விட்டு விலகினார்.

மடத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மடத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும் ஒரு சட்டப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி,  ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர்  (பூர்வாசிரமப் பெயர்: டி. பிரகல்லாதாச்சார்) உடனடியாகப் புதிய பீடாதிபதியாக வேண்டும், அதே வேளையில் ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தர் (பூர்வாஸ்ரம பெயர்: புஷ்கராச்சார்) என்பவரை மடத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ இளைய பீடாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.

ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தருடன் சேர்ந்து புதிய பீடாதிபதி வித்யாஸ்ரீஷ தீர்த்தர் சில நாட்களுக்கு மடத்தின் மூல விக்கிரகங்களைத் தொட்டு இணைந்தே பூஜைகளைச் செய்தார். பீடாதிபதிகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த மூல விக்ரகங்களைத் தொட உரிமையில்லை. மத்வத்தில் மூல விக்ரகங்கள் மிக முக்கியமானவை. ஆனால், சில நாட்களிலேயே எந்தவொரு காரணமும் கூறாமல், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரை மடத்தை விட்டு வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தரப்பு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. (இதுகுறித்துப் பல குமுறல்கள் ரீல்ஸ்களாகவும் யூ டியூபிலும் கிடைக்கின்றன.)

தற்போது பிரச்சினை என்னவென்றால், ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தனது பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரனான பிரணவ் (பெயர் சரியா எனத் தெரியவில்லை) என்பவரை அடுத்த மடாதிபதியாகக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பதுதான். தனது பேரனை மூல விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்ய அனுமதித்தது அடுத்த பிரச்சினை.

பொதுவாக பேரனை அடுத்த பீடாதிபதியாக மத்வ மடங்களில் நியமிப்பதில்லை என்றாலும், கடந்த காலங்களில் இப்படி நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரைத்தான் அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமான சட்டப்பூர்வ ஒப்பந்தம் இருக்கும்போது, அதை மீறித் தன் பேரனைக் கொண்டுவர தற்போதைய பீடாதிபதி முயல்வது பிரச்சினையாகியுள்ளது.

நான் ஏதோ ஒரு ரீல்ஸைப் பார்க்கப் போக, கடந்த இரண்டு மூன்று நாள்களாக இந்தப் பிரச்சினையை ஒட்டிய ரீல்கள் வந்து குவிகின்றன. என்னடா பிரச்சினை என்று தோண்டித் துருவிப் பார்த்ததில், சாட் ஜிபிடி, ஜெமினை உதவியுடனும், சில யூ டியூப் சர்ச்சைகளைக் கேட்டும் சிலரிடம் பேசியும் நான் புரிந்துகொண்டவை இவை.

தற்போதைய பிரச்சினைக்குரிய ஸ்ரீவித்யாஸ்ரீஷ தீர்த்தர் பெரிய அறிவாளி. ஸ்காலர். பல இடங்களிலும் வியாசராஜ மடத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி விரிவாக்கியவர். இதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இவரது பிரச்சினைக்குரிய செயல்பாட்டை, நிர்வாகப் பிரச்சினைகளை, குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அடுத்த பீடாதிபதி பதவியைத் தர முயல்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

Share

Madhva Mutts and We

மத்வ மடங்களுக்கும் யதார்த்த மாத்வர்களுக்குமான உறவு பற்றி நான் முன்பே சொல்லி இருக்கிறேன். உண்மையில் எனக்கு மடம் என்பது முதலில் அறிமுகமானது, ஸ்ரீ ராகவேந்திர ஆராதனைக்கு உணவு உண்ணப் போகும்போதுதான். அதை தீர்த்தப் பிரசாதம் என்றழைப்பார்கள் என்பதே அதிலிருந்து 30 வருடங்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் ஆராதனைக்குப் போனதுதான் முதல்முறை. அங்கே உண்டுவிட்டு, அழகரடியில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு அந்த வெயிலில் நடந்துவரவேண்டும். பஸ் வசதியும் கிடையாது, பஸ்ஸுக்கும் வசதி கிடையாது. அதனாலேயே மடத்தில் சென்று சாப்பிடுவது குறித்து அச்சம் வரும். சிலசமயம் யார் வீட்டிலாவது தங்கிவிட்டு மாலை போல நடந்து வருவோம். ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பரமேஸ்வரி தியேட்ட்டரில் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்குப் போனது நினைவிருக்கிறது. (நான் 2ம் முறையாகப் பார்த்தேன்!) என் நினைவு தெரிந்து என் அப்பா அம்மா அக்கா அண்ணனுடன் பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. (இது ஒன்றுதானோ என்னவோ!)

ஸ்ரீ ராகவேந்திரர் என்பவர் குரு, குருவும் தெய்வம் மத்வ சித்தாந்ததின்படி ஒன்றல்ல என்பதே பின்னர்தான் புரிந்தது. இன்றுவரை பெரும்பாலான மாத்வ இளைஞர்கள் இந்த வேறுபாட்டைக் கூட அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே — அன்றைய எங்களைப் போல. நீத்தார்களைக் கடவுளாகவே கும்பிடுவதும் இதனுள் அடக்கம். (எது தவறு எது சரி என்று நான் பேசவில்லை. அது அவரவர்கள் நிலைப்பாடு.)

பின்பு மடம் என்பது முகத்திலறைந்தாற்போல் அறிமுகமானது, இந்த மடம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது என்றளவுக்கு வாழ்க்கைக்குள் நுழைந்தது, எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் ஒவ்வொருவராக வைகுண்டப் பிராப்தி அடைந்தபோது. தாத்தாவின் மறைவுக்கான சாங்கியங்களை வீட்டிலேயே செய்தோம். பின்னர் வீட்டில் முடியவில்லை. மடங்களே கதி என்றானது.

இவற்றுக்குப் பின்னர்தான் மடங்களில் இருக்கும் வேறுபாடுகள், நாம் எந்த மடம் என்பதெல்லாம் அறிமுகமானது. இவை நடந்தது எங்கள் தலைமுறைகளின் திருமணங்களின் போதும், மூத்தோர்கள் வீட்டு பூஜைகளின் போது எங்களை வழி நடத்தியபோதும்.

மாயப் பெரு நதி நாவல் எழுதியபோது இந்த மடங்கள் குறித்த வேறு வகைப் புரிதல் ஏற்பட்டது. சுவாசம் வெளியிட்ட மத்வாசாரியார் புத்தகத்தை எடிட் செய்தபோது, முதல் பதிப்பில் இருந்த சில போதாமைகளை, தவறுகளை மத்வ சித்தாந்தத்தில் கரை கண்டவர்கள் சொன்னபோதும் அடுத்த வகைப் புரிதல் ஏற்பட்டது.

இதன் அடுத்த கட்டம், இப்போதைய ரீல்கள். நான் பெரும்பாலும் மலையாளம் மற்றும் கன்னட ரீல்களைத்தான் பார்க்கிறேன். மலையாளம் 50%, கன்னடம் 30%, தமிழ் 20% என வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மத்வ மடங்களைச் சேர்ந்த பல ரீல்கள் வரத் தொடங்கியதில் இன்னும் கொஞ்சம் புரிதல் ஏற்பட்டது. எந்த அளவுக்கு என்றால், எங்கள் மடமான வியாசராஜ மடத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நேற்றுத்தான் தெரிந்துகொண்டேன் — இந்த ரீல்ஸ்களின் மூலமாக! ஏழு வருடங்களாக இருக்கும் இந்தப் பிரச்சினை பற்றி நேற்று முன்தினம் வரை எனக்கு ஆ ஆ கூடத் தெரியாது.

மேலே சொன்ன அத்தனைக்கும் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பதே உண்மை என்பதால்தான். எனக்குத் தெரிந்து எங்கள் முன்னோர்களில் யாரும் கர்நாடகா பக்கம் கூடச் சென்றதில்லை. தாத்தாவின் அப்பாவுக்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி! இப்படி ஒரு சமூகம், அதாவது தமிழ்நாட்டிலேயே தலைமுறை தலைமுறையாக இருந்துகொண்டு, ஆனால் வீட்டில் கன்னடம் பேசும், கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் சராசரித் தமிழர்களைப் போல/விட நன்றாகத் தமிழ் பேசும் ஒரு சமூகம் இருந்துகொண்டிருக்கிறது. (தெலுங்கிலும் கூட இதே கதை.) இதனால்தான் கர்நாடகாவில் நடப்பது பற்றியெல்லாம் இங்கே தெரிந்துகொள்வதே இல்லை. அவசியமும் இல்லை.

ரீல்ஸ் அதை உடைக்கிறது. ஒப்பீட்டளவில் சென்னை மாத்வர்கள் கூடுதலாக மடம் மற்றும் மத்வ சித்தாந்தம் சார்ந்தவற்றில் ஆழமான பிடிப்புடனும் அறிவுடனும் இருக்கிறார்கள். சென்னையைத் தாண்டிவிட்டால் மற்றவர்கள் அந்த அந்த ஊர்த் தமிழர்களைப் போலத்தான்!

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் — அடுத்த பதிவுக்காக.

தேவையற்ற வம்புகளைக் குறைக்கவும், பதில் சொல்லும் பொறுமையும் ஞானமும் இல்லை என்பதாலும், முக்கியமான மத – அரசியல் பதிவுகளில் கமெண்ட் செய்யும் ஆப்ஷன் இருக்காது.

Share