Tag Archive for கன்னடம்

Some movies

வாழ II (M)

முதல் பாகத்தைப் போல அத்தனை யதார்த்தமாக இல்லை என்றாலும், இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது வியப்பே இல்லை. முதல் அரை மணி நேரம் என்னடா கொடுமை என்று பாடாய்ப்படுத்தி விட்டார்கள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் படம் பட்டாசு. குறிப்பாக, பள்ளியில் யார் யார் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்ற காட்சியில் தொடங்கிப் பின்னர் போலீஸ் வருவது, அடிதடி அனைத்தும் சிறப்பு. அதிலேயே கமிங் ஆஃப் ஏஜ் காதலையும் சொன்னதெல்லாம் அருமை. அதே போல் சுன்னத் போர்ஷன் க்யூட் நகைச்சுவைக் கவிதை. அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சிதறிப் போய்விட, படம் கொஞ்சம் மெலோ டிராமா ஆகிறது. அதன் பின்னர் நெஞ்சை நக்கும் திரைப்படமாகிறது. 4 நண்பர்களும் அப்பாக்களும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். தமிழில் இதுபோன்ற அனுபவம் கிடைக்காது என்பதற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டும்.

பிகு: சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு நடிகர் பழைய ரவீந்திரன் மாதிரி இருக்கிறாரே என்று பார்த்தால்.. ஆம் பழைய நடிகர் ரவீந்திரனேதான்.

காதல் ரீசெட் ரிபீட்

தமிழ்நாட்டு போலிஸுக்கும் ஸ்காட்லாந்து போலிஸுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறு நாம் அறிந்ததே. ஸ்காட்லாந்து போலிஸைவிட தமிழ்நாடு போலிஸ் பெட்டர் என்ற கருத்தை அடித்து நொறுக்கவே ஏ எல் விஜய் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் காதல் ரீசெட் ரிபீட். ஸ்காட்லாந்து போலிஸ்காரர்கள் வெறும் கிறுக்கர்கள் என்று நிரூபித்திருக்கிறார். படமும் கிறுக்குத்தனமாகவே இருக்கிறது.

என்னடா மிலிட்டிரி நீ இந்தப் பக்கம் என்பது போல் முக்கியமான கேரக்டரில் அர்ஜூன் அசோகன். ஐயோ பாவம்.

ஜோக் சொல்லிட்டல்ல, நாளைக்கு சிரிக்கிறேன் என்பது போலக் காட்சிகள். இதை திடீரென்று நகைச்சுவைப் படமாக மாற்றிவிடலாம் என்று யாரோ இயக்குநரை நம்ப வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே யாரும் யோசிக்காத புதுமையான கதை என்று இயக்குநரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! கொடுமைடா சாமி.

எம். பாஸ்கர் கொடூரம். பேசியே கொல்கிறார்.

இசை பற்றிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டால் பிச்சிக்கும் என்று நினைத்தால், படத்தையே பிய்த்து எறிந்துவிட்டார் ஹாரிஸ். சந்தத்தில் பாடாத கவிதை பாடலை அடியொட்டி ஒரு காப்பி பாடல் வேறு. இளையராஜா பாடலைக் கேட்டால் தாலாட்டு மாதிரி தூக்கம் வரும் என்றெல்லாம் என்ன என்னவோ படத்தில் வருகிறது.

கதாநாயகி தமன்னாவின் நகல் – அவரை விட அழகாக இருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.

மைக் (M)

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நல்ல மேக்கிங்குடன் இருந்தன. நாவலில் மட்டுமே பரிச்சயப்பட்ட, ஆனால் திரைப்படத்தில் இப்படி ஒரு கதையா என்று ஆச்சரியப்பட வைக்க வைக்கும் ஒரு கதை. ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைக்கும் கதை. பிரச்சினை என்ன என்றால் அந்த கதைக்குரிய பாயிஷ் கேரக்டரை மிகவும் அழகான ஒரு ஹீரோயினிடம் கொடுத்தது தான். அனஸ்வரா ராஜன். அவரை பாயிஷ் கதாபாத்திரமாக நினைக்கவே முடியவில்லை. ஆனால் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது என்பதால் பார்க்க முடிகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழமற்ற தன்மை காரணமாகப் படம் சொதப்பிவிட்டது. இறுதிக்காட்சியில் ஒரே நொடியில் பாயிஷ் கேரக்டர் பெண்தன்மைக்கு மாறுவது, ஒரே காட்சியில் மாறினாலும் கூட நம்பும்படியாக இருக்கிறது. அப்படித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அத்தனை நேரம் என்னடா திரைக்கதை என்று யோசித்த நாம் அந்த ஒரு நொடியில் திரைக்கதையுடன் ஒன்றித்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹீரோவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். 2022ல் வந்த படம் இது.

The Rise of Ashoka (K)

கன்னடத் திரைப்படம். கதையாக சற்று குழப்பம் நிறைந்த கதை. கோவிலில் செலுத்தும் முடி காணிக்கைக்குப் பின்னால் இத்தனை பெரிய பண லாபி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவே படத்தின் ஆதாரத்தைக் கொஞ்சம் சிதைக்கிறது. நாவிதர் குடும்பத்தில் இருந்து எப்படியாவது படித்து மேலே வர நினைக்கும் ஒருவன், மீண்டும் அந்த தொழிலுக்குள்ளேயே சென்று தன் சமூக மக்களுக்காகப் போராடுவதை கமர்சியல் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மோசமான மேக்கிங் இன்னொரு பலவீனம். இந்தப் படத்தை இயக்கும் போது இயக்குநர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட, வேறொரு இயக்குநர் இயக்கித் திரைப்படத்தை முடித்திருக்கிறார். மறைந்து போன இயக்குநரின் அஞ்சலிக்காக இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர்களை இத்தனை கேவலமாக காட்டி இருக்கத் தேவையில்லை. படுமோசம்.

Share

45 Kannada Movie

45 என்றொரு கன்னடப் படம். ரீல்ஸில் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்த்துவிட்டு சிவராஜ் குமாரின் ஃபிரஷான நடிப்பை முழுவதுமாகப் பார்ப்போம் என்று நினைத்து அந்தப் படத்தைப் பார்த்தேன். ரீல்ஸில் எத்தனை நேக்காக என்னை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த படத்திலேயே எது இரண்டு காட்சியோ அதை மட்டும் ரீல்ஸில் சுத்த விட்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்த பின்னர்தான் எனக்கு உரைத்தது.

கருட புராணத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஸ்பாய்லரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்தில் என்னவெல்லாமோ வருகிறது. என்ன பிரச்சினை என்றால் படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இதுதான் கதை என்று நான் தீர்மானித்தேன். ஆனால் படம் போக போக அந்தக் கதை இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியில் கிளைமாக்ளில் பார்த்தால் நான் நினைத்ததுதான் கதை. ஒரு ட்விஸ்ட்டுடன். 

கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் கொடுக்கிறார்கள் பாருங்கள், உலகத்திலேயே இப்படி ஒரு கற்பனையை எவனும் செய்ததில்லை.

ரத்த குளிகா பாதாள குளிகா என்று பல குளிகா காந்தாராவில் எட்டிப் பார்ப்பது போல சிவராஜ் குமார் ஒவ்வொரு பெயராக அழைக்க அத்தனை தெய்வங்களும் சிவராஜ்குமாராகவே வருகிறார்கள்‌ கிராஃபிக்ஸில் கலக்குகிறோம் என்று கண்கொண்டு பார்க்க முடியாதபடி என்னவெல்லாமோ செய்து வைத்திருக்கிறார்கள். 

உபேந்திராவை விறைப்பாக நடிக்க வைக்கிறேன் என்று நம்மைச் சாவடித்து விட்டார்கள். உபேந்திரா, ராஜ் பி செட்டி, சிவராஜ்குமார் என்று பல பெரிய கைகள் இருந்தும் படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், கதையும் பாழாய்ப் போன திரைக்கதையும்தான் காரணம்.

 கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

Share

Kanthara The Legend – Chapter 1

காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1‌ – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.

இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!

கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.

உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.

மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.

கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.

தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.

ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.

தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Timmana Mottegalu Review

திம்மன மொட்டகளு (K) – நவீன திரைப்பட உலகில், ஓ டி டி வந்த பிறகு, திரைப்பட வர்த்தகம் முற்றிலும் மாறிப்போன பிறகு, மொத்தமாக அழிந்து கொண்டிருக்கும் ஒரு வகை, அவார்ட் வகைத் திரைப்படங்கள். இந்த விருது வகைத் திரைப்படங்கள் எடுப்பதற்கு என்று பலர் இருந்தார்கள். இன்று அவர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கிறார்கள். 

மெல்ல நகரும் படத்தை மலையாளத்தில் அவ்வப்போது பார்க்க முடிகிறது என்றாலும், தமிழில் சமீபத்தில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் எப்போது வந்தது என்பது எனக்கு நினைவுக்கு வரவில்லை. பாலு மகேந்திரா, ஜெயபாரதி போன்றவர்கள் எல்லாம் இந்த வகையில் எடுப்பார்கள். மணிகண்டனின் கடைசி‌ விவசாயி கொஞ்சம் இந்த வகை.

இப்படி ஒரு திரைப்படம் திம்மன மொட்டகளு. வனவாசி திம்மன் பணத் தேவைக்காக, கருநாகக் கூட்டையும் அதன் முட்டைகளையும் ஓர் ஆய்வாளருக்குக் காட்டிக் கொடுப்பதுதான் கதை. 

இயற்கையும் மனிதர்களும் இயற்கைச் சுழற்சியும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்றும், அதை நாம் கெடுக்கக் கூடாது என்றும் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். சாவடிக்கிறார்கள்.

முதலில் வரும் ஒரு பிராமணர் வனவாசிகளை இரக்கமின்றி வேலை வாங்குவது போல் காட்டினாலும், அவரை வைத்து ஏன் இயற்கை மற்றும் இயற்கைச் சுழற்சி முக்கியம் என்பதைச் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதற்காக அறிவியலுக்குப் புறம்பான படமாகவும் சொல்லிவிட முடியாது. 

வனவாசிகளின் நல்ல மனசை சொல்கிறேன் என்று என்னவோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கிறார்கள்.

ரொம்ப சுமார் வகையிலான திரைப்படம். படத்தில் பேசப்படும் கன்னடத்துக்காகப் பார்க்கலாம். வனவாசிகளின் வாழ்க்கையில் கடவுளும் விலங்குத் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கையும் பயமும் எந்த அளவுக்கு உறைந்திருக்கின்றன என்பதை எந்தவித திருகுத்தனமும் இல்லாமல் காட்டியதற்காகப் பாராட்டி வைக்கலாம்.

Share

Agnyathavasi Kannada Movie

அக்ஞாதவாசி (K) – தொடக்கத்தில் படம் எங்கெங்கோ அலைபாய்ந்தாலும், பலப் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், சீரியஸ் திரைப்படமா அல்லது டார்க் காமெடி வகையா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ஒரு கட்டத்தில் படம் சுதாரித்துக் கொள்கிறது. படத்தை முழுமையாக, கொஞ்சம் கூட ஓடவிடாமல் பார்க்க வைப்பவை – படத்தின் மேக்கிங் (கேவலமான கிராஃபிக்ஸ் நீங்கலாக), கேமரா, பின்னணி இசை, கதை நிகழும் கிராமம், நடிகர்களின் நடிப்பு, முக்கியமாக ரங்காயன ரகு, சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு, இன்னும் குறிப்பாக கதாநாயகி பாவனா கௌடாவின் அநாயசமான நடிப்பு. ஒரு கொலை, அதற்கான தேடல்தான் கதை என்றாலும், படம் நிகழ்வது இரண்டு தளங்களில் என்பதுவும், நேர்க்கோடற்ற கதை சொல்லலும் படத்தைச் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆஹா ஓஹோ திரைப்படமல்ல. ஆனால் நிச்சயம் பாருங்கள். தொடக்கக் காட்சிகளைப் பார்த்துச் சலிப்பில் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

Share

Mithya Kannada Movie

மித்யா (K) – எமோஷனலான படம். விருதுத் திரைப்படங்களுக்கே உரிய கேமரா. கேமராவே பாதி உணர்ச்சிகளைக் கொண்டு வந்துவிடுகிறது. நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அதிலும் அந்தச் சிறுவனும், கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டேவும் கலக்கிவிட்டார்கள். அதிலும் அந்தக் குழந்தை – நோ சான்ஸ்.

கேமராவுக்கு இணையாக அந்தக் கன்னட வட்டார வழக்கு இன்னொரு அழகு.

மெல்ல நகரும் திரைப்படம். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்ச்சிமயம். கடைசி இரண்டு நொடி பதற வைத்துவிட்டார்கள். பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றிவிட்டது. ஆனால் அற்புதமாக முடித்துவிட்டார்கள்.

ஒரு திரைப்படம் மானுடத்தைக் கையேந்தவேண்டும் என்றால், இந்தப் படம் அப்படி ஓர் அனுபவம். அதிலும் குறிப்பாக அந்தக் கதாநாயகச் சிறுவனின் சித்தி மற்றும் சித்தப்பா குடும்பக் காட்சிகள் அருமை.

ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Five Movies

கிருஷ்ணம் ப்ரணய சகி (K) – கணேஷின் திரைப்படம் ஃபீல் குட் முவீயாக இருக்குமே என்று பார்க்க நினைத்தது ஒரு குத்தமாய்யா? சிதைச்சி விட்டுட்டாய்ங்க. கட்டுன பொண்டாட்டியையே காதலிக்கிற கதையை ஃபீல் குட்டா காமிக்க நினைச்சி, நான்லீனியர் கதையை அதுல செருகி, அப்படியே நம்ம தலைலையும் அதை செருகி.. மிடில.

ஒரு ஜாதி ஜாதகம் (M) – வினீத் ஸ்ரீனிவாசன் நடித்தும் படம் அறுவை. ஆங்காங்கே ஒவ்வொரு சமயம் சிரிக்கிறோம் என்றாலும் மொத்தத்தில் சிரிப்பே வரவில்லை. ஒரு ஆணுக்கு இத்தனை சிரமமா என்றெல்லாம் தோன்றினாலும், கதை நாயகனை இத்தனை அடி அடிக்கும் ஒரு படமா என்று தோன்றினாலும், பலவீனமான கதையும் அதைவிட பலவீனமான திரைக்கதையும் சாவடித்துவிட்டன.

பணி (M) – ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் திரைப்படம். முதல் பாதி மிக விறுவிறுப்பு. அட்டகாசமான திரைக்கதை. அத்தனையையும் இரண்டாம் பாதியில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெறும் பழிவாங்கும் கதை என்று போய்விட்டது. அதில் சுவாரசியமும் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை. முதல் பகுதி அத்தனை புத்திசாலித்தனமாக இருக்க இரண்டாம் பகுதி பைத்தியக்காரத்தனமாகிவிட்டது. ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். சோனி‌ லைவில் கிடைக்கிறது.

I am Kathalan (M) – பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. டெக்னிகல் கிரைம் த்ரில்லர் வகையறா என்றாலும் படத்தில் ஒரு ஃபீல் குட் தன்மையும் இருந்தது. இளமையான படம். இதில் இருக்கும் தவறுகளை டெக்னிகல் ஆள்கள் கண்டுபிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். ஆஹா ஓஹோ படமில்லை என்றாலும் ஈகோ கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் எளிமையான படம். ப்ரைமில் கிடைக்கிறது.

Ponman (m) – எப்படித்தான் இப்படி ஒரு கதையை கண்டுபிடித்தார்களோ. ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய படமாக்கி இருக்கிறார்கள்! ஓரளவுக்குப் பார்க்கும்படியாகவே வந்துள்ளது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்று தோன்றினாலும் கூட, படத்தின் விறுவிறுப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தொண்டி முதலும் திருகாக்‌ஷியும், மகேஷிண்டெ பிரதிகாரம் போன்ற, இருவருக்கிடையேயான ஈகோவை நினைவூட்டும் ஒரு கதை என்றாலும், இந்தக் கதை வேறு களம். உயிரே போனாலும் வெல்ல நினைக்கும் ஒரு பிடிவாதம். கேரளத்தின் நிலம், மக்கள் என அனைத்தையும் அத்தனை அசலாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சமூக ஊடங்களில் ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட அளவுக்கு எனக்கு இதில் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும், நிச்சயம் மோசமான படம் அல்ல.

Share