Tag Archive for மலையாளம்

Thudakkam

துடக்கம் (M) – பெயரைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருக்க வேண்டும். பாதிப் படம் பார்க்கும் வரை அது மோகன்லாலின் மகள் திரைப்படம் என எனக்கு உறைக்கவில்லை. மோகன்லாலின் திரைப்படம் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோ இத்தனை தாமதமாக வருவது இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று நானாகவே மனதிற்குள் நினைத்துக் கொண்டு, இதோ மோகன்லால் வந்து விடுவார், இதோ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வந்துவிடும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

Spoiler ahead.

படத்தில் கதாநாயகி காணாமல் போய் பத்திரமாக வீட்டுக்கு வந்து விட, என்ன எழவுடா இது திரைக்கதை என்று எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தால், யூ அவேக் என்று யாரோ ஹை டெசிபிலில் காதில் கத்த, எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் அதிர்ச்சியில் கண் முழித்துப் பார்த்தால், ஹாஃப் ஒயிட்டில் மோகன்லால் ஏதோ எந்திரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். அடடா மோகன்லால் வந்துவிட்டார் என்று பார்த்தால் அடுத்த 20 நிமிடத்தில் படம் முடிந்து விட்டது‌ என்ன கொடுமை பண்ணி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். விஸ்மயா மோகன்லாலின் முதல் திரைப்படம் என்பதற்காக துடக்கம் என்று வைத்திருக்கிறார்கள் போல‌ அதற்காக இப்படித் தற்காப்புக் கலையெல்லாம் சொல்லித் தருவேன் என்பதெல்லாம் ஒரு கதையா? அதுவும் மோகனாலும் விஸ்மயாவும்! விளங்குமா? ஜெய ஜெய ஹோவில் மனைவியைக் கணவன் மிதிக்கவும், அதை இந்தியாவே கொண்டாடவும், அப்படிக் கொண்டாடுவார்கள் என நினைத்து விட்டார்கள். மிடில.

தூக்கம் வரவில்லை என்றால் பலமாகச் சிபாரிசு செய்கிறேன். பாதிக்குப் பிறகு தூக்கம் உறுதி.

Share

Unmadham

உன்மதம் (M) – இன்னும் எத்தனை போலீஸ் திரைப்படங்களை மலையாளிகள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனையோ படங்கள் வந்துவிட்ட போதும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்றைச் செய்து விடுகிறார்கள். இந்த படத்தில் ஹாரரையும் இன்வெஸ்டிகேட்டிங் த்ரில்லரையும் சரியான விதத்தில் இணைத்திருப்பது அட்டகாசமாக வந்திருக்கிறது. முதல் ஒன்றரை மணி நேரம் படம் அமர்க்களமாகவே இருக்கிறது. பின்னர் கொஞ்சம் தொய்வாகி,கடைசியில் பத்து நிமிடத்தில் போதும்டா சாமி என்ற நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இத்தனை பெரிய வீழ்ச்சியைத் தவிர்த்திருக்க வேண்டும். அதே சமயம் பார்க்கவே முடியாத அளவுக்கு படுதிராபையாகவும் போகவில்லை என்பது ஒரு சிறிய ஆறுதல்.

Share

Anomie Malayalam Movie

Anomie (M) – ஒரு நண்பர் பரிந்துரைத்த மலையாளத் திரைப்படம். தரமான திரைப்படம். மேக்கிங் மற்றும் நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. மலையாள வழக்கம் போல மிக மெதுவாக நகரும் திரில்லர் வகைத் திரைப்படம். கொஞ்சம் மெடிக்கலையும் கொஞ்சம் தத்துவத்தையும் தொட்டு என்னவெல்லாமோ காண்பிக்கிறார்கள். அதுவுமே நன்றாகத்தான் இருக்கிறது. மரணத்துக்குப் பின்னான வாழ்வு குறித்த பல விதமான கற்பனைகளை இத்தனை விஷுவலாகக் காண்பிக்க ஏன் முயன்றார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அதை ஓரளவுக்கு நம்புபடியாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை பரபரப்பையும் தக்க வைத்திருக்கிறார்கள். ஆஹா ஓஹோ என்று புகழும்படியான திரைப்படமல்ல என்றாலும் நிச்சயம் தரமான திரைப்படமே.

Share

Haal Malayalam Movie

Haal (M) – ஹால் என்ற மலையாள வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சூஃபி மலையாள வார்த்தையாக இருக்குமோ என்னமோ. அது ஒரு நிலை என்பதாக இருக்கலாம். நாம் இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஏனென்றால் படம் மண்ணு மாதிரி இருக்கிறது.

ஒரே ஒரு நல்ல சீனை ரீல்ஸில் பார்த்துவிட்டு அடடா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று முழுமையாகப் பார்த்துத் தொலைத்தேன்‌ விக்கிபீடியாவில் லவ் ஜிகாத் என்றெல்லாம் போட்டிருக்க சம்பவம் பண்ணி இருக்காங்க மல்லூஸ் என்று நினைத்துப் பார்த்தால்… அந்தப் பெண் கிறித்துவப் பெண், பையன் முஸ்லிம் பையன் என்றதுமே ஒரு தமிழ்நாட்டுப் பார்வையாளனாக எனக்கு முற்றிலுமாக ஆர்வம் வடிந்துவிட்டது. ஒருவேளை கேரளாவில் கிறிஸ்தவப் பரவல் அதிகமாக இருப்பதால் கிறித்துவக் குடும்பங்கள் பதற்றத்துடன் பார்த்திருக்குமோ என்னவோ.

முஸ்லிம்‌ பையனும் கிறித்துவப் பெண்ணும் காதலிக்க, இதில் முஸ்லிம் குடும்பம் அவளை மதம் மாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்ல, அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள, மதமாற்றம் செய்யப்படும் நேரத்தில் அந்தப் பெண் என்னால் மதம் மாற முடியாது, கிறித்துவப் பெண்ணாகவே இருப்பேன் என்று சொல்லிவிட, இது பெரிய பிரச்சனையாகி, லவ் ஜிகாத், ஐ எஸ் என்றெல்லாம் போக, கடைசி அரை மணி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் காமெடிப் படம் போல என்னத்தையோ மாற்றிப் படத்தைக் கொன்று என்னையும் கொன்று விட்டார்கள்.

சேன் நிகமுக்காகப் பார்த்தது தவறாகிப் போனது.

Share

Some movies

வாழ II (M)

முதல் பாகத்தைப் போல அத்தனை யதார்த்தமாக இல்லை என்றாலும், இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது வியப்பே இல்லை. முதல் அரை மணி நேரம் என்னடா கொடுமை என்று பாடாய்ப்படுத்தி விட்டார்கள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் படம் பட்டாசு. குறிப்பாக, பள்ளியில் யார் யார் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்ற காட்சியில் தொடங்கிப் பின்னர் போலீஸ் வருவது, அடிதடி அனைத்தும் சிறப்பு. அதிலேயே கமிங் ஆஃப் ஏஜ் காதலையும் சொன்னதெல்லாம் அருமை. அதே போல் சுன்னத் போர்ஷன் க்யூட் நகைச்சுவைக் கவிதை. அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சிதறிப் போய்விட, படம் கொஞ்சம் மெலோ டிராமா ஆகிறது. அதன் பின்னர் நெஞ்சை நக்கும் திரைப்படமாகிறது. 4 நண்பர்களும் அப்பாக்களும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். தமிழில் இதுபோன்ற அனுபவம் கிடைக்காது என்பதற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டும்.

பிகு: சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு நடிகர் பழைய ரவீந்திரன் மாதிரி இருக்கிறாரே என்று பார்த்தால்.. ஆம் பழைய நடிகர் ரவீந்திரனேதான்.

—

காதல் ரீசெட் ரிபீட்

தமிழ்நாட்டு போலிஸுக்கும் ஸ்காட்லாந்து போலிஸுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறு நாம் அறிந்ததே. ஸ்காட்லாந்து போலிஸைவிட தமிழ்நாடு போலிஸ் பெட்டர் என்ற கருத்தை அடித்து நொறுக்கவே ஏ எல் விஜய் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் காதல் ரீசெட் ரிபீட். ஸ்காட்லாந்து போலிஸ்காரர்கள் வெறும் கிறுக்கர்கள் என்று நிரூபித்திருக்கிறார். படமும் கிறுக்குத்தனமாகவே இருக்கிறது.

என்னடா மிலிட்டிரி நீ இந்தப் பக்கம் என்பது போல் முக்கியமான கேரக்டரில் அர்ஜூன் அசோகன். ஐயோ பாவம்.

ஜோக் சொல்லிட்டல்ல, நாளைக்கு சிரிக்கிறேன் என்பது போலக் காட்சிகள். இதை திடீரென்று நகைச்சுவைப் படமாக மாற்றிவிடலாம் என்று யாரோ இயக்குநரை நம்ப வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே யாரும் யோசிக்காத புதுமையான கதை என்று இயக்குநரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! கொடுமைடா சாமி.

எம். பாஸ்கர் கொடூரம். பேசியே கொல்கிறார்.

இசை பற்றிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டால் பிச்சிக்கும் என்று நினைத்தால், படத்தையே பிய்த்து எறிந்துவிட்டார் ஹாரிஸ். சந்தத்தில் பாடாத கவிதை பாடலை அடியொட்டி ஒரு காப்பி பாடல் வேறு. இளையராஜா பாடலைக் கேட்டால் தாலாட்டு மாதிரி தூக்கம் வரும் என்றெல்லாம் என்ன என்னவோ படத்தில் வருகிறது.

கதாநாயகி தமன்னாவின் நகல் – அவரை விட அழகாக இருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.

—

மைக் (M)

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நல்ல மேக்கிங்குடன் இருந்தன. நாவலில் மட்டுமே பரிச்சயப்பட்ட, ஆனால் திரைப்படத்தில் இப்படி ஒரு கதையா என்று ஆச்சரியப்பட வைக்க வைக்கும் ஒரு கதை. ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைக்கும் கதை. பிரச்சினை என்ன என்றால் அந்த கதைக்குரிய பாயிஷ் கேரக்டரை மிகவும் அழகான ஒரு ஹீரோயினிடம் கொடுத்தது தான். அனஸ்வரா ராஜன். அவரை பாயிஷ் கதாபாத்திரமாக நினைக்கவே முடியவில்லை. ஆனால் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது என்பதால் பார்க்க முடிகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழமற்ற தன்மை காரணமாகப் படம் சொதப்பிவிட்டது. இறுதிக்காட்சியில் ஒரே நொடியில் பாயிஷ் கேரக்டர் பெண்தன்மைக்கு மாறுவது, ஒரே காட்சியில் மாறினாலும் கூட நம்பும்படியாக இருக்கிறது. அப்படித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அத்தனை நேரம் என்னடா திரைக்கதை என்று யோசித்த நாம் அந்த ஒரு நொடியில் திரைக்கதையுடன் ஒன்றித்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹீரோவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். 2022ல் வந்த படம் இது.

—

The Rise of Ashoka (K)

கன்னடத் திரைப்படம். கதையாக சற்று குழப்பம் நிறைந்த கதை. கோவிலில் செலுத்தும் முடி காணிக்கைக்குப் பின்னால் இத்தனை பெரிய பண லாபி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவே படத்தின் ஆதாரத்தைக் கொஞ்சம் சிதைக்கிறது. நாவிதர் குடும்பத்தில் இருந்து எப்படியாவது படித்து மேலே வர நினைக்கும் ஒருவன், மீண்டும் அந்த தொழிலுக்குள்ளேயே சென்று தன் சமூக மக்களுக்காகப் போராடுவதை கமர்சியல் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மோசமான மேக்கிங் இன்னொரு பலவீனம். இந்தப் படத்தை இயக்கும் போது இயக்குநர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட, வேறொரு இயக்குநர் இயக்கித் திரைப்படத்தை முடித்திருக்கிறார். மறைந்து போன இயக்குநரின் அஞ்சலிக்காக இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர்களை இத்தனை கேவலமாக காட்டி இருக்கத் தேவையில்லை. படுமோசம்.

Share

Athiradi Malayalam Movie

அதிரடி (M) – இளமைச் சரவெடி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தொடக்கக் காட்சியிலேயே மிரள வைக்கிறார்கள். அடுத்த நொடி படம் வேறு மூடில் பயணிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை கல்லூரிதான். முழுக்க முழுக்க இளைஞர்களின் கல்லூரி விளையாட்டு. கதை ஒன்றுமே இல்லை. திரைக்கதையிலும் நடிகர்களின் நடிப்பிலும் எடிட்டிங்கிலும் பின்னணி இசையிலும் பரத்தி விட்டார்கள். இடையில் ஒரு பத்து நிமிடமும் கடைசிச் சண்டையில் ஒரு ஐந்து நிமிடமும் கொஞ்சம் தொய்வாகப் போனாலும் ஒட்டுமொத்தமாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விட்டது. தீவிரமான மலையாளத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் செட் ஆகாது. மாறாக நம்ம ஊர் டிராகன் போன்ற திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பல காட்சிகள் அருமை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ஒட்டி அந்த ப்ரொபசர் பேசப் போகும்போது நல்ல உத்தி என்று நினைக்கும் போதே அடுத்த நொடி அதைவிட அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தியது பக்கா சரவெடி தான். வினீத் அவராகவே வருகிறார். எத்தனை காட்சிகளில் அவரை மட்டம் தட்டி வசனம் எழுதி இருக்கிறார்கள்! அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

பாசில் ஜோசப் கலக்கி இருக்கிறார்.

25 வயது மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைப்பவர்களுக்கு மட்டுமான படம்.

Share

Bha Bha Ba

Bha Bha Ba (M) – நேரம் கெட்ட நேரம் என்றால் இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்கத் தோன்றும். திலீப்பும் மோகன்லாலும் நடித்திருக்கிறார்களே என்று இந்தக் கொடுமையைப் பார்த்தேன். இதுவரை பார்த்த அனைத்துக் கொடுமையான மலையாள, தமிழ்த் திரைப்படங்களுக்கு சிகரம் இத் திரைப்படம். பைத்தியக்காரத்தனமான திரைப்படம். பார்த்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். இப்படிப்பட்ட ஒரு மோசமான கதையை நம்பி, அதைவிட மோசமான திரைக்கதையை எழுதி, அதைவிட மோசமாக இயக்க முடியும் என்று நிரூபித்த இயக்குநர்களை எத்தனை பாராட்டிலும் தகும். விளக்கமாத்துக்குப் பட்டு குஞ்சம் என்பது போல் இந்த கன்றாவிக்கு இரண்டு இயக்குநர்கள் வேறு. பயம் பக்தி பகுமானம்தான் ப ப பவாம்.பார்வையற்றவருக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததைப் போல.

Share

Valadhu Vasathe Kallan

வலதுவசத்தெ கள்ளன் (M) – ஜீத்து ஜோசப்பின் வழக்கம்போன்ற திரில்லர்‌ முதல் இரண்டு மணி நேரம் யார் என்ன எதற்கு எப்படி என்பதை நிஜமாகவே யோசிக்க வைக்க விடாமல் மிரட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல பையன் வரவும் அவனாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது தேவையற்ற க்ரிஞ்சாகிவிட்டது. கடைசி அரை மணி நேரம் (கதைக்குத் தேவையான ஆனால் நமக்கு) தேவையற்ற கதை. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கலக்கிவிட்டார். இவருக்காகவும், திரைக்கதைக்காகவும், அதைவிட முக்கியமாக வலதுவசத்தெ கள்ளன் என்ற பெயர் வைத்ததற்காகவும் சுமாரான இப்படத்தை ஒருமுறை பார்த்து வைக்கலாம்.

Share