3rd Language in CBSE schools

சமச்சீர்க் கல்வியைப் பின்பற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பெரும்பாலான பள்ளிகளில் ஹிந்தி மூன்றாம் மொழிப் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் ஹிந்தி கிடையாது.

பொதுவாக சிபிஎஸ்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி. ஒன்பதாம் வகுப்பு முதல் ஹிந்தி கிடையாது.

அரசுப் பள்ளிகளில் எந்த ஒரு வகுப்புக்கும் இந்தி கிடையாது.

நேற்று இந்த நிலை இப்படியே இருந்தது. இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

இப்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் ஹிந்தி கட்டாயம் என்று சொல்லியதன் மூலம், மேலே உள்ள எந்த ஒரு நிலையும் மாறிவிடவில்லை. பத்தாம் வகுப்பில் மூன்றாம் மொழிப் பாடத்திற்குப் பொதுத்தேர்வு கிடையாது என்றும் சிபிஎஸ்சி சொல்லிவிட்டது.

ஆனால் என்னமோ மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது போல குதித்து ஊரை ஏமாற்றுவதில் நம் ஊடகங்களைப் போல கேடுகெட்ட ஊடகங்களை இந்தியாவில் எங்கேயும் பார்க்க முடியாது.

உண்மையில் கடந்த திமுக அரசு, சமச்சீர்க் கல்வியைப் பின்பற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஹிந்தியைச் சொல்லித் தரக் கூடாது என்று கட்டாயமாக ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று வீணாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மத்திய அரசு ஒருபடி மேலே போய், ஹிந்திக்குப் பதிலாக எந்த ஓர் இந்திய மொழியையும் கற்றுக் கொடுக்கலாம் என்ற சலுகையையும் அறிவித்துவிட்டது. இதனால் பெரிய பயனில்லை, இந்திதான் பயிற்றுவிக்கப்படும் என்றாலும், குறைந்தபட்சம் இதையாவது மத்திய அரசு செய்தது.

ஆனால் இன்று என்னமோ சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை நுழைத்துவிட்டதாகக் கூச்சல் போட ஆரம்பித்திருக்கிறார்கள். உடனே சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளைத் தமிழர்கள் வெளியே எடுத்து, இந்தி கற்றுத் தராத அரசுப் பள்ளிகளில் போட வேண்டியதுதானே?

தரம் சிபிஎஸ்சி அளவுக்கு வேண்டும், ஆனால் சிபிஎஸ்சி சொல்லும் எந்த ஒன்றையும் ஏற்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?

எப்படி மாநில அரசு தங்கள் கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கிறதோ அதேபோல் மத்திய அரசும் அதன் கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கத்தான் செய்யும்.

ஒரே வழி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக நீக்கிவிட்டு, அதன் தரத்தையும் சிபிஎஸ்இ போல உயர்த்தி விட்டு, தமிழ்ப் பிள்ளைகளை அங்கே சேர்ப்பதுதான். அவை எந்த அரசும் செய்யாது. ஏனென்றால் அதற்கு வக்கு கிடையாது.

பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மெல்ல சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிக் கொண்டிருக்க, இதையும் செய்தால் ஒட்டுமொத்தமாக அனைவரும் சிபிஎஸ்சி முறைக்கு மாறி விடுவார்கள்.

இன்று பலர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்ப் பிள்ளைகளைச் சேர்ப்பது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான். சிபிஎஸ்சி பள்ளியைவிட கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும்தான். தரம் என்று பார்த்தால் அனைவரும் விரும்புவது சிபிஎஸ்இ பள்ளிகளை மட்டுமே. இதுவே வெளிப்படையான உண்மை.

இந்த லட்சணத்தில் நம் அரசுகள் வாய் கிழியப் பேசுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்.

Share

Comments Closed