சின்ன சின்ன ஆசை (M) – எப்படி இப்படி ஒரு செயற்கைத்தனமான கண்றாவியை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முழுக்க காசி வருகிறது என்பதற்காகப் பார்த்தேன். காசியே பிடிக்காமல் போய்விடும் போலிருக்கிறது. ஒரு காட்சி கூட உருப்படியாகவோ ஒட்டுதலாகவோ இல்லை. ஏன் இந்தக் கருத்தைப் பார்த்தோம் என்று நான் நொந்து கொண்டே படம் முழுக்கவும் பார்த்து முடித்தேன். இரண்டு கிழடுக்களுக்கும் நடிக்க வரவில்லை. படம்தான் அழுது கொண்டே இழுத்துக் கொண்டே போகிறது என்றால், அந்த இசையமைப்பாளர் அதைவிட இழுவையான பாடல்களைப் போட்டுச் சாவடித்து விட்டார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ஒரு டயலாக், என் மாமியாருக்கு என்னைப் பிடிக்காது என்று… அதன் ஃப்ரெஷ்நெஸ்ஸைக் கேட்டு ஆஹா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்… அது ஹிட் காக்ரோச் விளம்பரம். இந்த கொடுமையில் தான் படம் இருந்தது. இதில், ஏதோ மலையாளியை வைத்தே தமிழ் வசனங்களையும் எழுதி இருப்பார்கள் போல. அது ஐயையோ ரகம்.
தயவு செய்து சொல்கிறேன், அந்தப் பக்கமே ஒதுங்கி விடாதீர்கள். சமீபத்தில் பார்த்த மிக செயற்கைத் தனமான திரைப்படம் என்றால் இந்தக் கண்றாவி தான். இந்தப் பாவத்தைப் பார்த்ததற்காகவே மீண்டும் ஒருமுறை காசிக்குச் செல்லத்தான் வேண்டும்.


