மூத்த அகதி – வாசு முருகவேலின் பகடியே இந்த நாவலுக்கு மிகப்பெரிய பலம். கதைக்காக விவரிப்புகள் இருக்கும் நாவல்களைப் போலல்லாமல், விவரிப்புகளையே முக்கியமாகக் கொண்டு நகரும் நாவல் வகை இது. ஒவ்வொரு சின்னசின்ன விஷயங்களையும் நிறுத்தி, நிதானமாகவும் பொறுமையாகவும் விவரிக்கிறார். இதில் கதை பின்னுக்குத் தள்ளப்பட்டு, காட்சியே முன்னுக்கு வருகிறது. இது பலமா, பலவீனமா என்பது அவரவரைப் பொறுத்தது.

எனக்கு நாவலில் பொருந்திக்கொள்ள முடியாமல் தோன்றிய விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், மிக மிகச் சிறிய அத்தியாயங்களாக நகரும் நாவல்கள் எனக்கு எப்போதுமே பிரச்சினையைத் தருவன. இந்த நாவலில் அதனாலேயே ஒரு நீண்ட தொடர்ச்சி இல்லாமல், அனைத்துமே அங்கங்கே தோன்றி மறையும் மினி சிறுகதைகளைப் போலத் தோன்றிவிட்டன. பல சிறிய நிகழ்வுகளின் தொகுப்பின் மூலம் உருவாகும் பெரும் சித்திரம். இதனால் நீண்ட நாவலை வாசித்த உணர்வு வரவே இல்லை. அப்பாவின் மரணம் தொடர்பான அத்தியாயங்கள் மட்டுமே, ஒரு நாவலின் நீண்ட பகுதியை வாசித்த நிறைவைத் தந்தன.
இந்த நாவலை ஓர் அனுபவமாகக் கொள்ள முடியுமே ஒழிய, ஒரு கதையாகக் கொள்ள முடியாது. நாவலுக்குக் கதை என்பது அவசியம் இல்லை என்பதும் உண்மைதான்.
அகதிகளின் வாழ்க்கையைச் சொல்லும் இந்த நாவல், எந்தவிதப் பூச்சும் இன்றி மிக நேரடியாகவும் எதார்த்தமாகவும் வாழ்க்கையைச் சொல்வது மிகப் பெரிய பலம். வேண்டுமென்றே அகதிகள் படும் பாட்டைச் சித்தரிக்கிறேன் என்று அழுது வடியாமல் அதை நுட்பமான பகடியை முன்னிறுத்திச் சொன்னது பெரிய விஷயம். ஆனால் இதுவே இன்னொரு எண்ணத்தையும் தந்துவிட்டது. இங்கே ஈழ அகதிகள் மற்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போன்ற வாழ்க்கையைத்தானே வாழ்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துவிட்டது.
நிச்சயம் வாசிக்கத் தக்க நல்ல அடர்த்தியான நாவல்தான்.


