கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.
Tag Archive for மலையாளம்
சிபிஐ 4
CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.
பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.
Some movies
உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.
ப்ரைமில் கிடைக்கிறது.
அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்தவிதம் அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.
குருவாயூர் அம்பல நடையில்
குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.
தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல் என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை. ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.
ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
Avesham Malayalam Movie
ஆவேஷம் (M) – ஃபகத்தின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நம்ப முடியாத கதை. நம்பினால் சில அருமையான காட்சிகளும் அனுபவமும் இருக்கின்றன. அது முழுமையானதாக இருக்கிறதா என்றால் இல்லை. மலையாளப் படங்களின் பிரத்யேகத் தன்மையில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு தமிழ்ப் படம் போல நகர்கிறது இப்படம். தனுஷின் பல படங்கள் இப்படிப்பட்ட வகையறாக்கள்தான். எனவே நமக்கு எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை.
மலையாளிகள் நல்ல வசூல் தரும் படங்களை எடுப்பதிலும் மெல்ல மெல்ல மேலேறி வருகிறார்கள். குருப் படத்தில் ஆரம்பித்து இப்போது வரை பல படங்களில் நல்ல வசூல். இத்தனைக்கும் குருப் சுமாரான திரைப்படமே.
இந்தப் படமும் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் அதாவது ஃபகத் ஃபாசில் வரும் வரையிலான திரைப்படம் அசல் மலையாளத் திரைப்படம். அந்த மூன்று இளைஞர்களின் நடிப்பும் முகமும் மறக்க முடியாதவை. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியதாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது மிகப்பெரிய பலவீனம். ஃபகத் பல இடங்களில் ஓவராக நடித்தாலும் அது இந்த கேரக்டருக்குப் பொருந்தித்தான் போகிறது.
இத் திரைப்படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை குடி குடி குடிதான். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரே ஒரு காட்சியில் அந்த மூன்று இளைஞர்களும் குடியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இத்தனை குடி அவசியமா என்று எரிச்சல் வரும்போது தமிழ்ப் படங்களின் லட்சணம் முகத்திலறைகிறது.
விடுவித்துக் கொள்ளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதைகளின் முடிவு எப்போதுமே மிக எரிச்சல் தருவதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும் என்றால், கேங்ஸ்டர் படத்தை இன்னொரு கோணத்தில் காண்பித்ததற்காக ஒரு முறை பார்க்கலாம்.
Premalu Malayalam Movie
ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின் அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.
ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
Attam (M)
ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம்.
முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது.
மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும், ஒரு பெண்ணுலகைச் சமைப்பதில் பெரும்பாலான ஆண்கள் எத்தனை சுயநலவாதிகள், எப்படி ஆண்கள் எப்போதும் ஆண்கள் என்பதையும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வசனத்திலும் இத்தனை இயல்பாக இத்தனை பலமாகச் சொல்லும் வேறொரு படம் இல்லை என்றே சொல்லலாம்.
பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைச் சுற்றி ஆண்கள் என்ன என்ன கதைகளை எல்லாம் புனையக் கூடும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம். பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் வரும் பிரசாரத் தொனி துளி கூட இல்லை என்பதே இப்படத்தின் ஆதார பலம்.
இப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த நாடகத்தில் நடித்த அத்தனை ஆண் நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நாடகத்தின் கதாநாயகி’ என்று. படத்துக்கும் அது பொருந்தும். அத்தனை ஆண் நடிகர்களும் அட்டகாசமாக நடிக்க, அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் கதாநாயகி. இந்த வருட சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த திரைகதை எனப் பல விருதுகளையும் வெல்லப் போகும் படமாக இது அமைந்தால் வியப்பதிற்கில்லை.
முதல் அரை மணி நேரத்தைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்னால் திரைக்கதையில் பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது. டோண்ட் மிஸ் இட் வகையறா படம்.
மலையாளிகள் எங்கோ உச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
2022ல் வெளியான Three of us -ஹிந்தித் திரைப்படத்தின் கதாநாயகி, 2023ல் வெளியான டோபி – கன்னடத் திரைப்படத்தின் கதாநாயகி சைத்ரா, 2024ல் ஸரின் ஷிஹாப் என வரிசைகட்டி கதாநாயகிகள் கலக்குகிறார்கள். இந்தப் படம் 2023லேயே பதியப்பட்டிருந்தால், சிறந்த நடிகை விருதைப் பெறுவதில் சைத்ராவுக்கும் ஸரினுக்கும் பெரும் போட்டி இருக்கும்.
மலையாளத்தின் முக்கியமான திரைப்படமான ‘யவனிகா’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் இந்தப் படம் இன்னும் உயரப் போய்விட்டது.
அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.
ஃபேலிமி (M)
Falimy (M) – பார்க்கலாம். சில இடங்களில் மனம் விட்டுச் சிரிக்கலாம். அந்த இடங்களுக்காகப் பல மொக்கைக் காட்சிகளைச் சகித்துக் கொள்ள வேண்டும். காசிக்குச் செல்லும் கதைக்குள் கல்யாணத்தை நுழைத்து மீண்டும் காசிக்கு டிராக் மாற்றுகிறார்கள். காசியில் அப்பாவும் பையனும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் வசனம் அருமை. இரண்டு பெருசுகள் ஜன்னல்வழியாகப் பேசும் ஃப்ரேம் மனதைப் பிசைகிறது. மனதளவில் பிரிந்து கிடக்கும் குடும்பத்தை காசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கிறது. காசிக்குச் சாலையில் செல்லும் காட்சிகளிலும் இறுதிக் காட்சியிலும் குபீர் சிரிப்பு உத்தரவாதம். அதற்காக முழுப் படத்தையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்றால், கஷ்டம்தான். அதுவும் தமிழ் டப்பிங் அல்லது சப் டைட்டிலை மட்டுமே நம்பிப் பார்க்கப் போகிறவர்கள் திண்டாட்டம்தான். மலையாளம் தெரிந்தவர்கள் முயன்று பார்க்கலாம்.


