Prathama Drishtya Kuttakkar

ப்ரதம த்ருஷ்ய குற்றக்கார் (M) – தமிழில் வேலைக்காரன் மற்றும் பேர் சொல்லும் பிள்ளை – இரண்டுமே ஒரே கதை. இப்படிப் பல படங்கள் வந்ததுண்டு. அதே மாதிரி மலையாளத்தில் இது. த்ருஷ்யம் ஏற்கெனவே மூன்று பாகங்கள் வந்துவிட்ட நிலையில், அதன் முதல் பாகத்தை பார்வதியை வைத்து மீண்டும் எடுத்து இந்தப் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால், தமிழைப் போல் அல்லாமல், இந்தப் படமும் அசரடிக்கிறது என்பதுதான்.

அச்சு அசல் த்ரிஷ்யம். அதே போன்ற படமாக்கல். அதே போன்ற செண்டிமெண்ட். அதே போன்ற க்ளைமாக்ஸ். ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை திக்திக் மற்றும் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட். ஒவ்வொரு காட்சியும் நுணுக்கம். ஒவ்வொன்றுக்கும் முன் பின் தொடர்ச்சிகள். எனக்குத் தெரிந்து ப்ரதம த்ருஷ்ய குற்றக்காரும் மூன்று, நான்கு பாகங்கள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு படத்தில் இப்படியா அத்தனை நடிகர்களும் நன்றாக நடிப்பார்கள்? மலையாளத் திரையுலகம் தன் திறமை மிகுந்த நடிகர்களாலும், கதைக்காக உழைக்கும் திரைக்கதையாசியர்களாலும், சிறப்பாக இயக்க நினைக்கும் இயக்குநர்களாலும் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் பொறாமையாகவும் இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது.

Share

Comments Closed