Tiruparangundram Karthigai Deepam

எவனோ ஒருத்தன் கேட்டிருந்தான்: “நல்ல நாளையெல்லாம் விட்டுவிட்டு, தேய்பிறையில், இப்படி கார்த்திகை இல்லாத நாளில் விளக்கேற்றுகிறீர்களே?” என்று. அவன் இதற்கு முன்பு எப்போதாவது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறானா என்றால், நிச்சயமாக வாய்ப்பில்லை. ஆனாலும், ஏதோ ஒரு வயிற்றெரிச்சல்தான் அவனை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுதான் நம் மரபு. என்று இந்தத் தீபம் ஏற்றப்படுகிறதோ, அன்றே கார்த்திகை என்று பக்தர்கள் ஒருமனதாக முடிவு செய்துகொள்ள அவர்களுக்கு ஒரு நொடி போதும். இப்போது ஊரெங்கும் நடந்துகொண்டிருக்கும் கொண்டாட்டங்களும், பக்திப் பரவசமும் அதை ஒவ்வொரு நொடியும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

உண்மையில், இந்த வரலாற்று நிகழ்வை உருவாக்கித் தந்ததற்காக நாம் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அதேபோல், அந்த அசைவ உணவை எடுத்துச் சென்று இந்தப் பிரச்சினைக்கு வித்திட்டவருக்கும்.

உண்மையில், இன்னொரு கலவரம் உருவாகிவிடும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்துதானோ என்னவோ, உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பைக் கொடுத்து அத்தனையையும் ஒரே நொடியில் நிறுத்திவிட்டது.

நிறைய முஸ்லிம்களுக்கு அங்கே தீபம் ஏற்றப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்துக்கள் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தீபம் ஏற்றக் கேட்டார்கள். இதில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை இருந்துவிடப் போகிறது?

இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கிக் குளிர்காய நினைத்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், போலி மதச்சார்பின்மைவாதிகள். விஜய்யும் அதே வழியில்தான் சென்றார். உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி, நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துச் செயல்பட்டதோ, அதேபோல விஜய்யும் குறைந்தபட்சம் நடந்திருக்கலாம். ஆனால், ஒரு வரலாற்று வாய்ப்பை விரும்பித் தவறவிட்டார். இத்தனைக்கும் பிறகும், நான் உங்களோடு நிற்கிறேன் என்பதுதான் அவர் இஸ்லாமியர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி. அது அவருடைய விருப்பம். நமக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

உண்மையில், ஸ்டாலின் அரசோ அல்லது விஜய் அரசோ அன்றே அங்கே தீபம் ஏற்றியிருந்தால், அது ஒரு சர்வசாதாரணமான நிகழ்வாகக் கடந்து போயிருக்கும். ஆனால், இன்று கார்த்திகை நாளில் ஏற்றப்படாத தீபம்கூட ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தின் அடையாளமாக மாறிவிட்டது.

வெறும் தாஜா அரசியலும், நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் செய்யத் துணியும் அரசியலும்தான் திராவிடக் கட்சிகளின் ஒரே குறிக்கோள். அதுதான் அவர்களை இன்றுவரை ஆட்சியிலும் வைத்திருக்கிறது. இப்போது விஜய்யும் அதே பைத்தியக்காரத்தனத்தைத் தொடர்கிறார். இதைச் செய்ததன் மூலம் அனைவருக்குமானவர் என்கிற பலரது குருட்டு நம்பிக்கையை தகர்த்திருக்கிறார்.

பொதுவாக, ஒவ்வொரு கார்த்திகை நாளும் நான் அண்ணாமலை மகாதீபத்தின் படத்தை எனது நிலைத் தகவலை இட்டு, கார்த்திகை தீப வாழ்த்துகள் என்று சொல்வது வழக்கம். இந்த முறை அதைச் செய்ய மனம் ஒப்பவில்லை. ஏதோ ஒரு ஏமாற்றம். மனம் முழுக்க ஒரு ரணம்.

நேற்று தீர்ப்பு வந்ததிலிருந்து, மனம் முற்றிலும் எதிர்த் திசையில் பயணித்து, கொண்டாட்ட நிலையாக இருந்தது. எப்போது தீபம் ஏற்றுவார்கள் என்ற பரபரப்பு இருந்துகொண்டே இருந்தது. அதைப் பற்றிய எந்த ஒரு செய்தியைப் பார்த்தாலும், மனம் என்னையும் அறியாமல் பொங்கியது.

இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டபோது… ஓம் முருகா.

அன்று சொல்லாததை இன்று சொல்கிறேன். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்து நான் அதிகம் யோசித்தது அந்த கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவைப் பற்றித்தான். அவர் முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன.

ஒன்று, எந்த அரசியல் அழுத்தத்திற்கும் மத அமைப்புகளின் அழுத்தத்திற்கும் அஞ்சாமல், உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் சிறந்த நீதிபதியாக இருப்பது. சேஷன் போன்ற நீதிபதிகள் இந்த வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.

//Advt
சேலம் புத்தகக் கண்காட்சி சுவாசம் ஸ்டால் எண் 4//

இரண்டாவது வாய்ப்பு, தீபத்தூணில் தைரியமாகத் தீபம் ஏற்றி, மத அமைப்புகளின் அழுத்தத்திற்கும் அரசியல் அழுத்தத்திற்கும் ஆளாவதைவிட, ஒரு மாதம் சிறைத் தண்டனை கிடைத்தால்கூடப் பரவாயில்லை; அதை ஏற்றுக்கொண்டு தப்பித்துவிடலாம் என்கிற மனப்பான்மை.

துரதிர்ஷ்டவசமாக, கலெக்டர் இரண்டாவது வாய்ப்பையே தேர்ந்தெடுத்தார். மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடக்காத ஒன்றை அவராகவோ அல்லது அவருக்குச் சொல்லித் தரப்பட்டதையோ சொன்னர். அவருக்கு இருந்த அழுத்தத்தைப் பார்க்கும்போது, அவர் ஏன் இப்படிச் செய்தார் என்பதை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. தனக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது என்பதையே அவர் இறுதிவரை யோசித்திருக்கிறார்.

அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால், நிச்சயம் அன்று முழுவதும் முருகனிடம் மன்னிப்பு கேட்டிருப்பார். மறுநாள் தீர்ப்பின்போது அவருக்குப் பக்கபலமாக நீதிபதிகள் வந்து நிற்க, அவரும் வந்து கலந்துகொண்டார். முருகனிடம் மன்னிப்பு கேட்பதைப் போலவே அது இருந்தது. எனவே, என்னைப் போன்ற இந்துக்கள் அவரை மன்னிக்கக்கூடும்.

அதே சமயம், அவர் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்து, உள்நோக்கத்துடன் இந்தத் தீபமேற்றுதலைத் தள்ளிப்போடவோ குலைக்கவோ முடிவெடுத்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வேண்டுமென்றே மதிக்காமல் இருந்திருந்தால், முருகன் நிச்சயம் அவரைப் பார்த்துக்கொள்வார்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிய, அவரது பணி ஓய்வு வரை நாம் காத்திருக்க வேண்டும். அவரது சுயசரிதையில், இதைப் பற்றிய ஒரு முக்கியமான அத்தியாயம் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிச்சயம் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

***

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட மலையாள ரீல்ஸ்களைப் பார்த்துவிட்டேன். உண்மையில், இன்னும் எனக்கு ஆச்சரியம் அடங்கவே இல்லை. வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட அதில் பாதி அளவுக்கான கன்னட வீடியோக்களையும் பார்த்துவிட்டேன். தெலுங்கு அதிகமாக நான் பார்ப்பதில்லை என்பதால், அதில் எத்தனை வந்தன என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்த தென்னக மக்களும் இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் போல. இந்தியா முழுக்கக்கூட இதே பேச்சாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

Share

Comments Closed