பெத்தலகேம் குடும்ப யூனிட் (M) – வெகு சில திரைப்படங்களில் மட்டுமே காதலிக்கும் நாயகனும் நாயகியும் சேர வேண்டும் என்று நமக்குத் தோன்றும். அப்படி எனக்கு இதற்கு முன்பு சில படங்களில் தோன்றியதுண்டு. ஒன்று, காதலுக்கு மரியாதை. ஏனோ ஷாலினியின் முகத்தைப் பார்க்கும்போதே அவர் காதல் வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் அத்தனை பேருக்கும் அது தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். என்னுடன் அப்போது வேலை பார்த்த என் வயதுடைய நண்பர்கள் அனைவரும், கல்யாணம் செஞ்சா ஷாலினியை மாதிரி ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் செய்யணும் என்று உறுதியோடு இருந்தார்கள். (நான் அல்ல!)
அதேபோல், இன்னொரு திரைப்படம் ‘கோதி பன்னா சாதாரண மைக்கட்டு’ என்ற கன்னடத் திரைப்படம். (தமிழில் 60 வயது மாநிறம் – இதை நான் பார்க்கவில்லை) படத்தின் மூலக்கதை காதலுடன் தொடர்புடையதல்ல. ஆனால், அந்தப் படத்தில் ரக்ஷித் ஷெட்டியும் அவர் காதலிக்கும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று மனதாரத் தோன்றிவிட்டது.
அதேபோல், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு மலையாளத் திரைப்படம் ‘ஒழிமுறி’. படத்தின் மூலக்கதை வேறு என்றாலும், அந்தப் படத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.
இப்போது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ அந்த எண்ணத்தை வலுவாக விதைத்தது. அத்தனை அழகாக, ரசித்து ரசித்துப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அப்பட்டமான எளிமைதான் பிரம்மாண்டத்தின் உச்சம் என்பதை வலுவாக நிரூபித்திருக்கிறார்கள் மலையாளிகள். ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமும் கேரளமும் இந்தப் படத்தைக் கொண்டாடியதில் ஆச்சரியமே இல்லை.
சிறிய சிறிய காட்சிகள் கூடக் கண்ணை விலக விடாமல் சுவாரஸ்யமாக இருந்தன. படத்தின் தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்தக் காட்சியையும் விட்டுவிடவே தோன்றவில்லை. ஃபீல் குட், மீண்டும் ஃபீல் குட், பிறகும் ஃபீல் குட் என்று பார்த்து பார்த்து அமைத்திருக்கிறார்கள். லேசாகச் சோகமான காட்சி வந்துவிட்டால்கூட, அடுத்த காட்சியிலேயே அனைவரையும் புன்னகைக்க வைக்க வேண்டும் என்ற முடிவுடன் படத்துக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். கோவா காட்சிகள் அதில் உச்சம்.
கிளைமாக்ஸ் காதலுக்கு மரியாதையை நினைவூட்டியது. அதேபோன்ற மிக எளிமையான கிளைமாக்ஸ்.
மமிதா பைஜு அசத்துகிறார். அவர் முகம் வாடினால் நமக்கும் மனது வாடி போய் விடுகிறது அவர் சந்தோஷமாக இருந்தால் அப்படியே வைப் அள்ளிக் கொள்கிறது. நிவின் பாலியின் அலட்டல் இல்லாத யதார்த்தமான நடிப்பும் அவரது முக பாவமும் படத்தை எங்கேயோ கொண்டு போய் விட்டன. எத்தனை எத்தனை இளைஞர்கள் நடிக்கிறார்கள்! அத்தனை பேரும், ஒவ்வொரு கதாபாத்திரமும் அசத்தி விட்டார்கள். படம் முழுக்க இளமை கொப்பளிக்கிறது.
வழக்கம்போலப் படம் முழுக்க முழுக்கக் கிறிஸ்தவ மயம். கிறிஸ்தவப் பையன்கள் இந்துப் பெண்ணைக் காதலிக்கிறார்கள். ஆனால், கேரளத்தில் என்ன வேண்டுமானாலும் எடுப்பார்கள் என்பதால் தமிழைப் போலப் பயப்பட வேண்டியதில்லை. அதே சமயம் கேரளத் திரையுலகம் முழுமையாகக் கிறிஸ்தவமயமாகிவிட்டது என்பதை மறுக்கவும் முடியாது.
அதேபோல் குடிப்பதை நார்மல் செய்து அதுவும் போதாமல் குடிக்காவிட்டால் தவறு என்ற அளவுக்குத் திரைப்படங்கள் வர ஆரம்பித்தது விட்டன. இந்த படமும் அதில் ஒன்று. ஒரே ஒரு ஆறுதல் ஹீரோ காதலுக்காகக் குடியை நிறுத்துவது மட்டும்தான். ஆனால் பெண்கள் குடிப்பது தவறே இல்லை என்பது போன்ற காட்சிகள் அனைத்துப் படங்களிலும் வரத் தொடங்கிவிட்டன, இந்த படத்திலும்.


