மொத ராத்திரி – நல்ல முயற்சிதான்; நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஓவர் ஹைப்ட்.
படத்தின் முதல் பாதி படுவேகம் மற்றும் சுவாரஸ்யம். அங்கங்கே புன்னகை, ஆச்சரியம் என கலந்தடித்து அசத்தி விட்டார்கள். தமிழில் இப்படி ஒரு திரைப்படமா என்று தோன்றியது. கிட்டத்தட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட அதே அனுபவம்.
ஆனால், இரண்டாம் பாதி ஒரே இடத்தில் நின்று, மிக நீண்ட கிளைமாக்ஸாகிப் பொறுமையைச் சோதித்து விட்டது. அதுவும் இறுதிக் காட்சிகள் எல்லாம் இப்படித்தான் நடக்கப் போகிறது என்று தெரிந்த பின்பு பார்ப்பது பெரும் அவஸ்தையாகிவிட்டது.
படத்தில் பெண்கள் வரும் காட்சிகள் அனைத்துமே மிகச் சிறப்பு. உண்மையில், படத்திற்கு மகுடம் அவைதான்.
இதற்கு நேர்மாறாக, ஆண்கள் வரும் காட்சிகள் ஒரேபோல் இருந்து, நம்பகத்தன்மை இல்லாமல் பெரிய தொய்வை ஏற்படுத்திவிட்டன.
ஜாதி ரீதியான காட்சிகள் இந்தப் படத்தில் தேவையே இல்லாமல் திணிக்கப்பட்ட உணர்வு. அப்படி எதுவும் சமூகத்தில் நடக்கவில்லை என்று சொல்லவில்லை, நிச்சயம் நடக்கிறது, ஆனால் இந்தப் படத்துக்கு அது கொஞ்சம் அந்நியமாகத் தான் இருந்தது.
படத்தின் கதாநாயகன் ஜாதியால் பாதிக்கப்படுகிறான் என்றாலும், அதற்காகப் படத்துடன் தொடர்பே இல்லாமல் இன்னொரு ஜோடியை வைத்து வேண்டுமென்றே ஜாதிக் காட்சிகளைத் திணித்ததைத் தவிர்த்திருக்கலாம்.
ரிஷிகாந்தின் நடிப்பு மிக அருமை. கதாநாயகி – ஒரே அழுவாச்சி!
பல வசனங்கள் சுத்தமாகப் புரியவில்லை. திருநெல்வேலிக்காரர்கள் வேகமாகப் பேசுவார்கள்தான். அதற்காக இப்படிப் புரியாமலேயே பேசுவார்கள் என்பதில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போய் சப்டைட்டில் வைத்துப் பார்த்தேன். ச்சே!
இயக்குநர் நானும் உங்களில் ஒருவன்தான் என்று ஜாதி எதிர்ப்பு இயக்குநர்களுக்குக் கோடு காட்டி இருக்கிறார் என நினைக்கிறேன். இவரது அடுத்தடுத்த படைப்புகள் இதே பாதையில்தான் இருக்கும் என்பது உறுதி.


