அதிமுகவுக்கு இந்த முறை இருக்கப் போகும் பிளஸ் பாய்ண்ட்டுகள்:
- திமுகவின் மேல் இருக்கும் எதிர்மனோபாவம்.
- திடீரென்று பேய் பிடித்தது போல் எடப்பாடி செய்யும் நல்ல பிரசாரம்
- அண்ணாமலை ஒதுங்கி இருப்பாரோ என்று நினைத்த நேரத்தில் மிகச் சிறப்பாக அண்ணாமலையும் செய்யும் பிரசாரம்
- இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாகத்தான் பிரசாரம் செய்யும். ஆனால் இந்த முறை ஒரே மேடையில் தோன்றி அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்வது.
- விஜய் கட்சி திமுகவிடமிருந்து பெரிய அளவில் ஓட்டுகளைப் பிரிக்கும்.
- கிறிஸ்தவர்கள் ஓட்டு நிச்சயம் திமுகவுக்குப் பெரிய அளவில் குறையும். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு ஓட்டு போட நினைக்கும் கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்பதால், கிறிஸ்தவர்களின் ஓட்டு பிரிவது அதிமுகவுக்கு குறைவான பாதிப்பையே உண்டாக்கும்.
நியாயமாக இதனால் அதிமுக பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது?
- மெய்ன் மைனஸ் பாயிண்ட், இத்தனை செய்து எடப்பாடியையா முதலமைச்சர் ஆக்கப் போகிறோம் என்ற கேள்வி.
- என்னதான் விஜய் கட்சி திமுகவின் வாக்குகளை அதிகமாகப் பிரித்தாலும், திமுகவுக்கு எதிராக ஒன்று திரண்டு வந்திருக்க வேண்டிய அதிமுகவின் ஓட்டு நிச்சயம் பிரிந்து விஜய்க்குப் போகும். இது அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவைத் தரப் போகிறது.
- கடந்த எட்டு ஆண்டுகளில் அதிமுக பெரிய அளவில் வளரவில்லை என்பதும், அதிமுகவின் வாக்குச் சதவீதம் தேய்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் உண்மையானால், அதிமுகவின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று.
(விஜய் பொதுவாகப் பிரிக்கப் போகும் பெண்கள் ஓட்டு, இளைஞர்கள் ஓட்டு என்பதெல்லாம் அனைத்துக் கட்சியையும் – முன்னே பின்னே இருந்தாலும் – ஒரே விதமாகப் பாதிக்கும் என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.)
இப்படி எதுவும் நடக்காமல் இருக்க, திமுக தோற்க, என் யூகம் பொடிபட அந்தக் கடவுள் அருளட்டும்.
இன்றுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை என்ன?
யாருக்கு வாக்களிக்கக் கூடாது?
தமிழ்நாடு முழுக்க போதையைப் பரப்பி இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய ஒரு கட்சிக்கு, நம் மகள்கள், சகோதரிகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றி வீட்டுக்குத் திரும்புவார்களா என்ற பயத்தை ஒவ்வொரு பெற்றோருக்கும் உருவாக்கிய கட்சிக்கு, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு கட்சிக்கு, ஜாதியும் மதமும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் அதன் அடிப்படையில் பிரித்துச் சூழ்ச்சி செய்யும் ஒரு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். இது நம் அடிப்படைக் கடமை.
எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
எந்தக் கட்சிக்கு வாக்களித்தால், மேலே சொன்ன ஒரு கட்சி ஆட்சிக்கு வராதோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம். பெரிய அளவில் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை ஆதரியுங்கள். என்டிஏவை ஆதரிக்க வேண்டியது நம் அடிப்படைக் கடமை.
நோட்டா, பாஜகவுக்காக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருப்பது, அதிமுகவுக்கு வாக்களிக்காமல் இருப்பது – இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் திமுகவை வெற்றி பெற வைக்கும். அந்தத் தவற்றைச் செய்து விடாதீர்கள்.
–
இந்த முறை தேர்தல் சார்ந்த பதிவுகளை மிகக் குறைவாகவே எழுதினேன். அதற்கு, தனிப்பட்ட வகையில் பாஜக தனித்து நிற்காதது ஒரு காரணம். ஆனால் வாக்களிக்கும் போது அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
இத்துடன் தேர்தல் செய்திகள் முடிவடைகின்றன.











