தொகுதி மறுவரையறை அறிவிப்பினால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் புதிய பின்னடைவு வர ஏதும் வாய்ப்பில்லை. மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு மாற்றி வாக்களிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. (விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த ஈழப் பிரச்சினை முக்கியமான அரசியல் பிரச்சினை. ஆனால் மக்கள் தமிழ்நாட்டுத் தேர்தலில் இதை மையமாக வைத்து வாக்களித்ததில்லை.)

இங்கே வாக்களிக்கும் அரசியல் காரணம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்பதே என் பார்வை. ஏதோ ஒரு பெரிய காரணம். 2ஜி ஊழல். 1996 ஊழல். இப்படியாகிவிட்டது.
ஆனால், இந்தப் பிரச்சினை திமுகவுக்கு வேறொரு வகையில் நிச்சயம் பிரசாரத்துக்கு உதவி இருக்கிறது.
பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு வரை திமுகவின் கை ஓங்கி இருந்ததாகவே நான் நினைத்தேன். (இப்போதும்.) ஆனால், திமுக பிரசாரத்தில் தொய்வாக இருப்பதாகவே எனக்குப் பட்டது. விஜய்க்கு வரும் பிரமாண்டமான கூட்டம் ஒரு பக்கம். எதிர்பாராமல் நன்றாகப் பேசிப் பிரசாரம் செய்யும் எடப்பாடி ஒரு பக்கம். அதிமுகவே (நானும்) எதிர்பாக்காத அளவுக்கு அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்யும் அண்ணாமலை. அதிலும் எந்த ஒரு பிரச்சினையையும் அதிரடியாக ஆழமாகப் பேசி அதை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அண்ணாமலையின் சாமர்த்தியம். இவற்றை விட முக்கியமாக, ஈகோ இல்லாமல் இந்தக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாகத் தோன்றிப் பிரசாரம் செய்வது – இவை எல்லாம் சேர்ந்து திமுக பக்கம் ஒரு மந்தத் தன்மை இருப்பதாக நினைக்க வைத்தது.
இன்னொரு வகையில், இந்தத் தேர்தலில் வெற்றி உறுதி என்று திமுக முடிவு கட்டியது போலவே நடந்து கொண்டது. இந்தச் சுணக்கத்தைப் போக்க இந்தத் தொகுதி மறுவரையறை அறிவிப்பு உதவி இருக்கிறது என்பதைத் தாண்டிப் பெரிய மாற்றத்தை இது கொண்டுவராது, அதாவது முன்பிருந்த மக்களின் முடிவு (அது யாருக்குச் சாதகமாக இருந்திருந்தாலும்) மாறாது என்பதே என் யூகம். பார்க்கலாம்.


