தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு விசித்திரமான நோய் உண்டு. தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் ஆதரிப்பவர்களைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாது. அதுவே அதுவரை பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் திட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாஜகவை புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அவர்களை உடனே அரவணைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக இருக்கும் நோய்.
இந்திய அளவில் இன்னொரு நோய் உண்டு. பாஜகவின் நம்பிக்கை மிகுந்த தலைவராக இருக்கும்போது அவரைப் புறக்கணிப்பார்கள். அதுவே அவர் வெளியேறி தனிக் கட்சி கண்டு வெற்றி பெற்றால் மீண்டும் அவரைத் தலைவராகக் கூட்டிக் கொண்டு வருவார்கள். எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். கல்யாண் சிங் எடியூரப்பா போன்றவர்கள் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மூன்றாவது ஒரு வியாதியும் உண்டு. மற்ற கட்சியில் தலைவராக இருந்தவர்களையே தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராகவும் வர வைப்பார்கள். அவர்களும் தலைவராக இருந்து விட்டு மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவைத் திட்டுவார்கள். திருநாவுக்கரசு நினைவுக்கு வருகிறார்.
இது போன்ற பல வினோதங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டு பாஜகவால் சட்டென ஓர் உயரத்திற்குச் செல்ல முடியாமல் இருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பது இது எல்லாவற்றையும் தாண்டிய அதலபாதாளமான வீழ்ச்சி. மீட்புக்கு இடமில்லை. இதனால் அண்ணாமலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.