Archive for திரை

Some movies

வாழ II (M)

முதல் பாகத்தைப் போல அத்தனை யதார்த்தமாக இல்லை என்றாலும், இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது வியப்பே இல்லை. முதல் அரை மணி நேரம் என்னடா கொடுமை என்று பாடாய்ப்படுத்தி விட்டார்கள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் படம் பட்டாசு. குறிப்பாக, பள்ளியில் யார் யார் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்ற காட்சியில் தொடங்கிப் பின்னர் போலீஸ் வருவது, அடிதடி அனைத்தும் சிறப்பு. அதிலேயே கமிங் ஆஃப் ஏஜ் காதலையும் சொன்னதெல்லாம் அருமை. அதே போல் சுன்னத் போர்ஷன் க்யூட் நகைச்சுவைக் கவிதை. அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சிதறிப் போய்விட, படம் கொஞ்சம் மெலோ டிராமா ஆகிறது. அதன் பின்னர் நெஞ்சை நக்கும் திரைப்படமாகிறது. 4 நண்பர்களும் அப்பாக்களும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். தமிழில் இதுபோன்ற அனுபவம் கிடைக்காது என்பதற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டும்.

பிகு: சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு நடிகர் பழைய ரவீந்திரன் மாதிரி இருக்கிறாரே என்று பார்த்தால்.. ஆம் பழைய நடிகர் ரவீந்திரனேதான்.

காதல் ரீசெட் ரிபீட்

தமிழ்நாட்டு போலிஸுக்கும் ஸ்காட்லாந்து போலிஸுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறு நாம் அறிந்ததே. ஸ்காட்லாந்து போலிஸைவிட தமிழ்நாடு போலிஸ் பெட்டர் என்ற கருத்தை அடித்து நொறுக்கவே ஏ எல் விஜய் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் காதல் ரீசெட் ரிபீட். ஸ்காட்லாந்து போலிஸ்காரர்கள் வெறும் கிறுக்கர்கள் என்று நிரூபித்திருக்கிறார். படமும் கிறுக்குத்தனமாகவே இருக்கிறது.

என்னடா மிலிட்டிரி நீ இந்தப் பக்கம் என்பது போல் முக்கியமான கேரக்டரில் அர்ஜூன் அசோகன். ஐயோ பாவம்.

ஜோக் சொல்லிட்டல்ல, நாளைக்கு சிரிக்கிறேன் என்பது போலக் காட்சிகள். இதை திடீரென்று நகைச்சுவைப் படமாக மாற்றிவிடலாம் என்று யாரோ இயக்குநரை நம்ப வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே யாரும் யோசிக்காத புதுமையான கதை என்று இயக்குநரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! கொடுமைடா சாமி.

எம். பாஸ்கர் கொடூரம். பேசியே கொல்கிறார்.

இசை பற்றிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டால் பிச்சிக்கும் என்று நினைத்தால், படத்தையே பிய்த்து எறிந்துவிட்டார் ஹாரிஸ். சந்தத்தில் பாடாத கவிதை பாடலை அடியொட்டி ஒரு காப்பி பாடல் வேறு. இளையராஜா பாடலைக் கேட்டால் தாலாட்டு மாதிரி தூக்கம் வரும் என்றெல்லாம் என்ன என்னவோ படத்தில் வருகிறது.

கதாநாயகி தமன்னாவின் நகல் – அவரை விட அழகாக இருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.

மைக் (M)

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நல்ல மேக்கிங்குடன் இருந்தன. நாவலில் மட்டுமே பரிச்சயப்பட்ட, ஆனால் திரைப்படத்தில் இப்படி ஒரு கதையா என்று ஆச்சரியப்பட வைக்க வைக்கும் ஒரு கதை. ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைக்கும் கதை. பிரச்சினை என்ன என்றால் அந்த கதைக்குரிய பாயிஷ் கேரக்டரை மிகவும் அழகான ஒரு ஹீரோயினிடம் கொடுத்தது தான். அனஸ்வரா ராஜன். அவரை பாயிஷ் கதாபாத்திரமாக நினைக்கவே முடியவில்லை. ஆனால் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது என்பதால் பார்க்க முடிகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழமற்ற தன்மை காரணமாகப் படம் சொதப்பிவிட்டது. இறுதிக்காட்சியில் ஒரே நொடியில் பாயிஷ் கேரக்டர் பெண்தன்மைக்கு மாறுவது, ஒரே காட்சியில் மாறினாலும் கூட நம்பும்படியாக இருக்கிறது. அப்படித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அத்தனை நேரம் என்னடா திரைக்கதை என்று யோசித்த நாம் அந்த ஒரு நொடியில் திரைக்கதையுடன் ஒன்றித்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹீரோவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். 2022ல் வந்த படம் இது.

The Rise of Ashoka (K)

கன்னடத் திரைப்படம். கதையாக சற்று குழப்பம் நிறைந்த கதை. கோவிலில் செலுத்தும் முடி காணிக்கைக்குப் பின்னால் இத்தனை பெரிய பண லாபி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவே படத்தின் ஆதாரத்தைக் கொஞ்சம் சிதைக்கிறது. நாவிதர் குடும்பத்தில் இருந்து எப்படியாவது படித்து மேலே வர நினைக்கும் ஒருவன், மீண்டும் அந்த தொழிலுக்குள்ளேயே சென்று தன் சமூக மக்களுக்காகப் போராடுவதை கமர்சியல் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மோசமான மேக்கிங் இன்னொரு பலவீனம். இந்தப் படத்தை இயக்கும் போது இயக்குநர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட, வேறொரு இயக்குநர் இயக்கித் திரைப்படத்தை முடித்திருக்கிறார். மறைந்து போன இயக்குநரின் அஞ்சலிக்காக இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர்களை இத்தனை கேவலமாக காட்டி இருக்கத் தேவையில்லை. படுமோசம்.

Share

Kara Tamil Movie

கர – என்ன கண்றாவியா படம் எடுத்து வைக்கிறீங்க! பார்க்க முடியல. 1980ல் வந்திருந்தால் கூட காமெடியாகத்தான் இருந்திருக்கும். கே.எஸ்.ரவிக்குமாருக்கு யாரோ நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அவரது நடிப்பைப் பார்க்கவே எரிச்சலாக வருகிறது. மேக்கப் நன்றாக இருந்தாலும் கூட அவரது நடிப்பைப்‌ பார்க்க முடியவில்லை.

தனுஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை எதையோ சாப்பிடக்கூடாத ஒன்றைச் சாப்பிட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

பல காட்சிகள் இன்னுமாயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என நினைக்க வைத்தது. போலீசை முதுகிலிருந்து கீழே தூக்கிப் போட்டு அடிக்கும் காட்சியில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். டிராக்டரிலேயே பேங்க் மேனேஜர் இடித்து உயிரிழப்பதெல்லாம் பெரும் கொடுமை. அதில் கருப்புசாமி துணை வேறு. ஹீரோ கருப்பு சாமியை திருடுவதற்கு மட்டுமே கும்பிடுகிறான். குடும்பம் குட்டி நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதே இல்லை. அதைவிட கொடுமை, பணம் கட்ட ஒருவர் பேங்குக்கு வரும்போது அவரிடம் திருடாமல் அதை பேங்க்கிலேயே போட்டுவிட்டு பிறகு பேங்கில் இருந்து திருடுவதெல்லாம் அடேய்களா…

முதலில் ஆரம்பக் கட்சியிலே திருடனாகக் காட்டிவிட்டு, நான் என் பணத்தைத் திருடுகிறேன் என்று சொல்வதெல்லாம் பெரும் கொடுமை.

படம் பேங்கைப் பற்றிய படம் என்று புரியவே ஒரு மணி நேரம் ஆனது. இதில் இன்னொரு கொடுமை, இது 1990களில் நடக்க நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே முக்கால் மணி நேரம் எனக்கு ஆகிவிட்டது. இந்த லட்சணத்தில் திரைப்படம் எடுத்தால் எவன் பார்ப்பான்?

அதைவிட மன்னிக்கமுடியாத கொடுமை, அப்பாவின் பிணத்தை அனாதைப் பிணமாக ஆஸ்பத்திரியில் வைத்து விட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் பணத்தைத் திருடப் போராடுவதெல்லாம் என்ன விதமான லாஜிக்? அதை விட நாலு கொள்ளிக்கட்டையை வாங்கிக் கொள்ளி வைத்து எரித்துத் தொலைத்திருக்கலாம்.

அதிலும் ஆக சிறந்த காமெடி சீன், அந்த மருமகள் வீட்டில் காலை வைக்கிறாள், மாமனார் மண்டையைப் போட்டு விட்டார். பட டிஸ்கஷனில் ஒருத்தன்கூடவாய்யா சொல்லிருக்க மாட்டீர்கள், இப்படி எல்லாமா கதை யோசிப்பது என்று?

இந்த ‘கொடுமை’ இயக்குநரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பக்கமே இனி திரும்பக் கூடாது.

Share

Athiradi Malayalam Movie

அதிரடி (M) – இளமைச் சரவெடி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தொடக்கக் காட்சியிலேயே மிரள வைக்கிறார்கள். அடுத்த நொடி படம் வேறு மூடில் பயணிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை கல்லூரிதான். முழுக்க முழுக்க இளைஞர்களின் கல்லூரி விளையாட்டு. கதை ஒன்றுமே இல்லை. திரைக்கதையிலும் நடிகர்களின் நடிப்பிலும் எடிட்டிங்கிலும் பின்னணி இசையிலும் பரத்தி விட்டார்கள். இடையில் ஒரு பத்து நிமிடமும் கடைசிச் சண்டையில் ஒரு ஐந்து நிமிடமும் கொஞ்சம் தொய்வாகப் போனாலும் ஒட்டுமொத்தமாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விட்டது. தீவிரமான மலையாளத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் செட் ஆகாது. மாறாக நம்ம ஊர் டிராகன் போன்ற திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பல காட்சிகள் அருமை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ஒட்டி அந்த ப்ரொபசர் பேசப் போகும்போது நல்ல உத்தி என்று நினைக்கும் போதே அடுத்த நொடி அதைவிட அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தியது பக்கா சரவெடி தான். வினீத் அவராகவே வருகிறார். எத்தனை காட்சிகளில் அவரை மட்டம் தட்டி வசனம் எழுதி இருக்கிறார்கள்! அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

பாசில் ஜோசப் கலக்கி இருக்கிறார்.

25 வயது மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைப்பவர்களுக்கு மட்டுமான படம்.

Share

Bha Bha Ba

Bha Bha Ba (M) – நேரம் கெட்ட நேரம் என்றால் இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்கத் தோன்றும். திலீப்பும் மோகன்லாலும் நடித்திருக்கிறார்களே என்று இந்தக் கொடுமையைப் பார்த்தேன். இதுவரை பார்த்த அனைத்துக் கொடுமையான மலையாள, தமிழ்த் திரைப்படங்களுக்கு சிகரம் இத் திரைப்படம். பைத்தியக்காரத்தனமான திரைப்படம். பார்த்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். இப்படிப்பட்ட ஒரு மோசமான கதையை நம்பி, அதைவிட மோசமான திரைக்கதையை எழுதி, அதைவிட மோசமாக இயக்க முடியும் என்று நிரூபித்த இயக்குநர்களை எத்தனை பாராட்டிலும் தகும். விளக்கமாத்துக்குப் பட்டு குஞ்சம் என்பது போல் இந்த கன்றாவிக்கு இரண்டு இயக்குநர்கள் வேறு. பயம் பக்தி பகுமானம்தான் ப ப பவாம்.பார்வையற்றவருக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததைப் போல.

Share

Oru Durooha Saahacharyathil

ஒரு துரூஹ ஸாஹசர்யத்தில் (M) – உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன். அதாவது சந்தேகத்திற்கு இடமான / மர்மமான சந்தர்ப்பத்தில் என்ற அர்த்தம் போல. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்த படத்தையும் பார்த்தேன். படமாகப் பொறுமையைச் சோதித்து விட்டார்கள். தூக்கம் வராமல் பார்ப்பது மிகக் கடினம். ஒரு கதையாக என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பது கடைசி வரை புரியாது. படம் புரியாது என்று சொல்லவில்லை. படம் நன்றாகப் புரியும். ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாது. இதில் மாவோயிஸ்ட் ஜல்லி வேறு. நிச்சயம் பார்க்க வேண்டுமா என்றால் தேவையில்லை. ஆனால்.. குஞ்சாகோ போபன் மற்றும் திலீஷ் போத்தன் இருவரின் நடிப்புக்காகப் பார்க்க வேண்டும். அவர்களது யதார்த்த மேக்கப்பிற்காகப் பார்க்க வேண்டும். அசுரத்தனமான பர்பாமன்ஸ்.

பிகு: பைத்தியங்கள்தான் கமல் படம் பார்ப்பார்கள் என்ற உள்குத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை!

Share

Valadhu Vasathe Kallan

வலதுவசத்தெ கள்ளன் (M) – ஜீத்து ஜோசப்பின் வழக்கம்போன்ற திரில்லர்‌ முதல் இரண்டு மணி நேரம் யார் என்ன எதற்கு எப்படி என்பதை நிஜமாகவே யோசிக்க வைக்க விடாமல் மிரட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல பையன் வரவும் அவனாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது தேவையற்ற க்ரிஞ்சாகிவிட்டது. கடைசி அரை மணி நேரம் (கதைக்குத் தேவையான ஆனால் நமக்கு) தேவையற்ற கதை. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கலக்கிவிட்டார். இவருக்காகவும், திரைக்கதைக்காகவும், அதைவிட முக்கியமாக வலதுவசத்தெ கள்ளன் என்ற பெயர் வைத்ததற்காகவும் சுமாரான இப்படத்தை ஒருமுறை பார்த்து வைக்கலாம்.

Share

Dhurandhar Hindi Movie

துரந்தர் (H) – சந்தேகமே இன்றிச் சிறப்பான பரபரப்பான படம். தொடக்கம் முதல் இறுதி வரை அங்குமிங்கும் விலகாத ஒற்றை நோக்கிலான திரைக்கதையும் பரபரப்பான சம்பவங்களும், படம் பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க விடாமல் இருத்தி விடுகின்றன. இதுதான் இந்தப் படத்து வெற்றி ரகசியம். இப்படம் இந்தியா முழுக்க வசூலை வாரிக் குவித்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்ல நடிகர்களின் சிறப்பான நடிப்பு, தரமான இயக்கம், அசத்தலான ஒளிப்பதிவு எனப் படத்திற்கு தேவையான அனைத்து வெற்றிச் சூத்திரங்களும் இந்தப் படத்தில் ஒருங்கிணைந்திருக்கின்றன.

படம் முடிந்த பிறகு சில விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். இந்தப் படம் பிரசாரப் படமா என்றால், ஒருவகையில் பிரசாரப் படம்தான். ஆனால் தரமான, சரியான வரலாற்றுத் தரவுகளுடன் கச்சிதமாகக் கலக்கப்பட்ட கற்பனையுடன் கூடிய படம். தமிழில் எடுக்கப்படும் அற்பத்தனமான பிரசாரப் படங்களை விதந்தோதும் போலி முற்போக்காளர்கள் ஏன் இந்தப் படத்திற்கு மட்டும் அத்தனை குதித்தார்கள் என்பது படத்தைப் பார்த்தாலே எளிதில் விளங்கும்.

இந்தப் படத்தில் சில வெளிப்படையான பிரசாரக் காட்சிகள் இருந்தன. உத்தரப் பிரதேசத்தின் ஊழல் ஆதாரங்களை எல்லாம் சேர்த்து வையுங்கள், யாராவது ஒருவன் நல்லவன் வருவான் என்ற வசனங்களும், புதிய இந்தியா என்ற வசனங்களும் அப்படிப்பட்டவைதான். ஒட்டுமொத்தத் திரைப்படத்தில் இவை அதிகபட்சம் 30 நொடிகள் கூட வருவதில்லை. அதற்கே இந்தப் போலி முற்போக்காளர்கள் கொதிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் படங்களில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒற்றைப் படைத்தன்மையுடன் வெறுப்புப் பிரசாரம் கலந்து எந்தவிதத் தர்மமும் இன்றி, எந்தவித வரலாற்றுப் பின்புலமும் இன்றி அடித்து ஆடும்போது அதைச் சிலாகிக்கிறார்கள்

தமிழில் வெளிவரும் மாற்றுப் பிரசாரப் படங்கள் அதாவது வலதுசாரி பிரசாரப் படங்கள் என்று சொல்லப்படும் படங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவற்றைப் பற்றி நான் எழுதுவதுமில்லை. அவற்றைப் பார்ப்பதும் இல்லை. நானே அந்தப் படங்களை ஏற்கவில்லை. அந்தப் படங்களை இந்தப் போலி முற்போக்காளர்கள் குறை சொல்லும்போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துரந்தர் போன்ற படங்களைக் குறை சொல்வது அவர்களது பதற்றத்தைத்தான் காட்டுகிறது.

ஆயிரம் வன்முறைகள் தடுக்கப்பட்டாலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவிட்டால் அது அந்த அரசாங்கத்திற்குக் கெட்ட பெயரைத்தான் கொண்டு வரும். மோடி ஆட்சியிலும் அதேதான். புல்வாமா, பஹல்காம் தாக்குதல் தொடங்கி எல்லாவற்றிலும் அப்படித்தான். ஆனால் அதற்குப் பின்னர் மோடி அரசு என்ன செய்தது என்பது முக்கியமானது.

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 10/20 வருடங்களுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து ஒருவனை எல்லை தாண்டி அனுப்புவது ஒரு ராஜதந்திரம். இதை அஜித் தோவல் போன்ற அதிகாரிகள் மட்டும் முடிவெடுத்துச் செய்திருக்கவே முடியாது. நிச்சயம் பிரதமரின் ஆலோசனையும் அறிவுறுத்தலும் ஒப்புதலும் இருந்தே தீர வேண்டும்.

உண்மையில் இந்தத் திரைப்படம் தேசபக்தி என்பதைப் பின்னணியில் மட்டும் வைத்துக் கொண்ட திரைப்படம் மட்டுமே. அந்த தேசபக்தியைத் தாண்டிய ஒரு கேங் வார் திரைப்படமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. வலுவான காரணமாக தேசபக்தி. பாகிஸ்தானில் கேங் வார் நடக்கிறது, அது அரசியல் உருப்பெற்று, ஆயுதக் கடத்தல் தொடங்கி பிறநாடுகளின் மீதான தாக்குதல் வரை எப்படி நீள்கிறது, இந்த அரசியல்/ஆயுதப் போட்டியில் எப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்து கொள்கிறார்கள், யார் மேலே வருகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்தத் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தின் கதை இந்தியாவுக்கோ, ஏன் தமிழுக்கு கூட புதியதல்ல. கமலின் குருதிப்புனல் திரைப்படமும் விஸ்வரூபம் திரைப்படமும் இந்த வகைக் கதைதான். களங்கள் மட்டுமே வேறு. விஸ்வரூபம் திரைப்படம் நிஜமாகச் சொல்லப்போனால் துரந்தர் திரைப்படத்தின் ஆக்கத்தை விட, இயக்கத்தை விட ஒரு படி மேலானது. விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினை அதில் வந்த தேவையற்ற பல காட்சிகள். சிக்கன் சாப்பிட்டியா மாமி போன்ற தேவையற்ற வசனங்கள் தந்த எரிச்சலும், ஒரு நளினமான நடனக்காரன் ஒருவன் பெரிய வீரனாக உருமாற்றம் கொள்ளும் புல்லரிப்புக் காட்சிகளும் படத்தின் தீவிரப் போக்கைச் சிதறடித்து விட்டன. அந்தக் காட்சிகளை எல்லாம் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகளை மட்டும் தனியே பார்த்தால் துரத்துரை விடப் பல மடங்கு உயர்ந்த தரத்தில், விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. துரந்தர் படத்திலும் சில தேவையற்ற காட்சிகள் உண்டு. ஆனால் எப்படியோ அதைப் படத்துடன் கச்சிதமாக இணைத்துவிட்டார்கள். துரந்தர் கதையும் விஸ்வரூபம் கதையும், குருதிப் புனல் இறுதிக் காட்சியும் துரந்தரின் இறுதிக்காட்சியும் ஒன்றுதான்.

துரந்தர் திரைப்படத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒரு காட்சி என்னவென்றால், இந்திய ரகசிய உளவாளியாகச் சென்றவன் தந்த ஆயுதங்கள்தான் மும்பையில் 26/11ல் கொல்லப் பயன்படுத்தப்பட்டது என்னும் கற்பனை. நுணுக்கமான திரைக்கதை. ஒரு ரகசிய உளவாளியின் பின்னால் இருக்கும் நியாய உணர்வு அங்கேயே அடிபட்டு, அந்தக் கணத்திலிருந்து அந்தக் கதாபாத்திரம் நுணுக்கமான தத்துவார்த்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விடும். மிகச் சிறப்பாக அதை எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அவன் செய்யும் ஒவ்வொரு அராஜகமும் நியாயப்படுத்தப்படும் வகையிலான திரைக்கதை அட்டகாசமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்தத் திரைப்படத்தில் அரசியல் பின்னணியிலான கேங்வார் தொடர்பான காட்சிகள் மட்டுமே வந்திருக்கின்றன. போலி முற்போக்காளர்களை இன்னும் பதறச் செய்யப் போகும் புதிய இந்தியா தொடர்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில்தான் வரவிருக்கின்றன என நினைக்கிறேன். முதல் பாகம் இத்தனை வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் பாகம் இந்த அளவுக்குப் பேசப்படுமா என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. விஸ்வரூபம் பாகம் 2 ஒரு கொடுங்கனவு என்பதும் நினைவுக்கு வருகிறது. துரந்தர் 2 என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.

Share

Saturday vibes

#சனி_வைப்ஸ்

நேற்றிரவு 12 மணி முதல் 1 மணி வரை நல்ல ஒலித்தரத்தில் ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டேன். எப்படியோ சுற்றிமுற்றி வழக்கம் போல ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது மற்றும் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து  யேசுசுதாசின் பாடல்களுக்கு வந்து சேர்த்தேன்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல் வரிகள் என்ன ஓர் இசைவு. வார்த்தைத் தேர்வுகளும் இடறாத சந்தமும் அர்த்தமற்ற வார்த்தைகளை அள்ளித் தெளிக்காத அவசரமின்மையும் (வாலி  என நினைக்கிறேன்) அற்புதம்.  இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் அனுபவித்து இருந்தால்தான் புரியும்

பின்னர் ஒலித்தது சொர்க்கம் மதுவிலே. உண்மையில் சொர்க்கம்தான். இசை, எஸ்பிபி குரல், வரிகள் என ஒன்றுக்கொன்று போட்டி போடும் பாடல். வரிகளில் கண்ணதாசனின் ஆட்டம் இப்போது எழுதியது போல் இருக்கிறது. இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Share