Tag Archive for அஜித்

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

மங்காத்தா

மங்காத்தா விமர்சனம் – தமிழோவியத்தில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

Share