J Baby Tamil Movie

ஜெ பேபி – 1990களில் இருந்தே ஊர்வசியின் நடிப்பைப் பார்த்துப் பயந்து போய், அவரது படம் என்றாலே கையெடுத்துக் கும்பிட்டு ஒதுங்கி நின்றவன் நான். அதிலும் ஒருவித லூஸு கதாபத்திரமாகவே நடித்து நடித்து அவரது எந்த ஒரு கதாபாத்திரமும் லூஸுதானோ என்று நினைக்க வைத்துவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஊர்வசி இத்தனை தத்ரூபமாக நடிப்பார் என்று நினைக்கவே இல்லை.

படத்தைத் தனியாளாகத் தாங்கிப் பிடிக்கிறார் ஊர்வசி. இத்தனை வருடத் திரைப்படங்களில் காண்பிக்காத உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார். இப்படி குறைந்தது பத்துக் காட்சிளாவது சொல்ல முடியும். கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தின் முதல்பாதியிலேயே பேபியின் கதாபாத்திரம் இத்தகையது என்று காட்டி இருந்தால் ஒரு தொடர்ச்சியும் பரிதாபமும் இருந்திருக்கும். ஏனோ அதை விட்டுவிட்டார்கள். மூத்த மகனாக வரும் நடிகரின் நடிப்பும், கல்கத்தாவில் உதவி செய்யும் நடிகரின் நடிப்பும் அபாரம். யதார்த்தம். அட்டகத்தி தினேஷும் நன்றாக நடித்திருக்கிறார். படத்துக்காகத் தொப்பை போட்டிருந்தால் கூடுதல் பாராட்டுகள்.

சில காட்சிகள் மிகப் பிரமாதமாக இருப்பதும் சில காட்சிகள் இழுவையாக இருப்பதும் பலவீனம். சென்னைத் தமிழ் பெரிய பலம். ஒரே ஒரு காட்சியில் தெரசா தன் கைகளை நீட்டி அபயம் காட்டிக்கொண்டிருக்க, அடுத்த சில காட்சிகளில் ‘கடவுளே இல்லை’ என்பது போல தன் கையில் இருக்கும் கயிறுகளை ஹீரோ கழற்றி எறிகிறார். ‘நீலம்’ திரைப்படமென்றால் இது போல ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை வைத்திருக்கிறார்கள் போல.

குடும்பத் திரைப்படங்கள் வராத காலங்களில், நிஜமான நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்து, விசுத்தனமான கதையை இத்தனை தரமாக எடுத்து அசத்தி இருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் ‘பெண்மணி அவள் கண்மணி’யை நினைவுபடுத்தின. கட்டாயம் பார்க்கலாம்.

Share

Comments Closed