Archive for திரை

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share

போர் தொழில்

போர் தொழில் – நேற்றுதான் பார்த்தேன். சரத்குமாருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் அனைத்து காஸ்டிங்குகளுமே தவறானவை. இல்லையென்றால் படம் இன்னும் நன்றாகப் பேசப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். நல்லவேளை இவற்றை எல்லாம் எழுதவில்லை.

இன்று சகோதரர் சரத்குமார் பாஜகவில் இணைந்திருக்கிறார். நல்ல நடிகர். நேற்று கூட போர் தொழில் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எனவே see more…

Share

aa dhinagalu – Kannada movie

ஆ தினகளு (K) – 2006ல் வந்த கன்னடப் படம். இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி டிவிட்டரில் சீனு என்கிற நண்பர் பரிந்துரைத்திருந்தார் என்பதால் பார்த்தேன்.

சில படங்களைவிட அவற்றின் நிஜப் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும். ஹிந்தியில் வெளியான ருஸ்டம் போல. ஆ தினகளு படமும் அப்படியே.

கேங் வார் திரைப்படம். பெங்களூரில் இரண்டு ரௌடிகளுக்கு இடையேயான, அவர்களுக்கும் போலிஸுக்கும் இடையேயான சண்டையும் கொலைகளுமே படம். அக்னி ஸ்ரீதர் கன்னடத்தில் எழுதிய தாதாகிரிய தினகளு என்கிற புத்தகத்தின் அடிப்படையிலான திரைப்படம்.

அக்னி ஸ்ரீதர் ஒரு ரௌடியாக இருந்தவர். இரண்டு கேங்கில் ஒரு கேங் தலைவரைக் கொல்கிறார். அதுவும் திட்டம் போட்டு, அவரை தன் இடத்துக்கு வரவழைத்து, தன் மேல் நம்பிக்கை வர வைத்து, சரியான நேரத்தில் போட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் எதிரி கேங் இவரைத் தீர்த்துக் கட்ட நினைக்க, அவர்களிடம் தெளிவாகச் சொல்கிறார், நான் கொல்லப் போவதே உன் எதிரியைத்தான் என்று. எதிரி கேங் தலைவர் அக்னி ஸ்ரீதருக்கு உதவி செய்யத் தயாராகிறார். கொலை நடந்து முடிகிறது. அதுவும் மிக எளிதாக. அக்னி ஸ்ரீதரும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஜெயிலுக்குப் போகிறார்கள்.

தண்டனை முடிந்து வெளியே வரும் அக்னி ஸ்ரீதர் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் புத்தகமாக எழுதுகிறார். எழுத்தாளராகிறார். ஆங்கிலத்தில் My days in the underworld – Rise in the Bangalore mafia என்று மொழிபெயர்ப்பாகிறது. பின்னர் ஆ தினகளு திரைப்படமாகிறது. கிரிஷ் கர்நாட் கதையில் உதவுகிறார். சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.

ஆ தினகளு படம் 2006ல் வந்தது என்றாலும் இன்றும் முழுமையாகப் பார்க்கமுடிகிறது. ஆரம்பக் காட்சிகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ளவேண்டும். நடிக்கவே வராத ஹீரோ, காதல், பெரிய பிஸினஸ்மேன் என்றெல்லாம் பதினைந்து நிமிடங்கள் அலைபாயும் கதை பின்னர் அக்னி ஸ்ரீதரின் கதைக்குள் வரவும் சூடுபிடிக்கிறது. படத்துக்காகப் பல இடங்களில் உண்மை நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள்.

இந்நாளில் நாம் மறந்துபோய்விட்ட நடிகர்கள், மொத்தமாக ஓய்வுபெற்றுவிட்ட நடிகர்கள், மரணமடைந்துவிட்ட நடிகர்களைப் படத்தில் இளமையாகப் பார்க்கும்போது ஏனோ ஆச்சரியமாக இருக்கிறது.

இரண்டு ரௌடி கேங்குகளும் வரும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன. புத்தகத்தில் இல்லாத, நெஞ்சை வருடும் க்ளிஷே காட்சிகளும் உண்டு. ஆனாலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

படம் பார்த்து முடித்ததும் அக்னி ஸ்ரீதர் பற்றித் தேடி தெரிந்து கொண்டு, அவரது யூ டியூப் சேனலில் ஆ தினகளு என்று கிடைக்கும் சில வீடியோக்களைப் பார்த்து, (இந்த வீடியோக்கள் படத்தில் இல்லாத பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன), பின்னர் அவரது ஆங்கிலப் புத்தகத்தைத் தரவிறக்கி, இத்திரைப்படம் தொடர்பான பக்கங்களை மட்டும் மேலோட்டமாகப் படித்ததில் ஒரு முழுமையான அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்துக்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். அந்தக் கால பெங்களூருவில் எப்படி ரௌடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இரண்டு சிறிய பாடல்கள் – கிறங்கடிக்கின்றன. அதிலும் ஆ தினகளு பாடல் (எங்கோ ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலை நினைவூட்டுகிறது எனக்கு!) மறக்கவே முடியாத ஒன்று. பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். இன்னொரு பாடல் ‘சிஹி காலி’ ராஜா கன்னடத்தில் பாடியது.

ஆ தினகளு படம் ஸீ5ல் சுமாரான தரத்தில், சப்டைட்டில் இல்லாமல் கிடைக்கிறது.

Share

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M)

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M) – தேடினால் கண்டடைவீர்கள். எனவே ஹீரோ படம் முழுக்கத் தேடுகிறார். சரியாகக் கண்டடைகிறார்.

Spoilers ahead.

தரமான படம். எடுத்த விதம், வசனம், நடிப்பு என எல்லாமே அருமை. ஆனால் என்ன பிரச்சினை என்றால், இரண்டு கதைகளாகி விட்டன. இடைவேளை வரை ஒரு கதை. பிறகு இன்னொரு கதை. இப்படிப்பட்ட இரண்டு கதைகள் கொண்ட திரைப்படங்கள் எனக்குப் பிடிக்காது. ஒரு திரைப்படம் என்பது ஒற்றை விஷயத்தை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். முன்பே இவ்விஷயம் தெரிந்திருந்தால் இப்படத்தையே பார்த்திருக்க மாட்டேன்.

படத்தின் முதல் பாதியில் வரும் கதை பிரமாதம். பாதிரியாரைச் சுற்றி நடக்கும் கதை. இரண்டாம் பாதியில் உயர்சாதி ஹிந்து. இரண்டாம் பாதியில் ஹீரோ கொலையை உட்கார்ந்த இடத்திலேயே பேசி பேசி கண்டுபிடித்து விடுகிறார். ஆனாலும் யார் கொலையாளி என்பதைக் கடைசி வரை யூகிக்க விடாமல் வைத்திருந்தார்கள். நான் இரண்டு பேரை சந்தேகத்தில் வைத்து இருந்தேன். அதில் ஒருவரைக் காட்டவும் சந்தோஷமானேன். ஆனால் அதற்குப் பிறகும் ஒரு திருப்பம் கொடுத்து விட்டார்கள். இரண்டு கதைகளிலும் கொலையாளியை திடுக்கெனக் காண்பித்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.

நல்ல படம்தான். ஒருமுறை பார்க்கலாம்.

பின்னணி இசை இத்தனை மிரட்டலாக இருக்கிறதே, நிச்சயம் விருது கிடைக்கும் என்று நினைத்தபடியே பார்த்தேன். கடைசியில் பின்னணி இசை சந்தோஷ நாராயணன் என்று பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தன.

Share

ஜிகர்தண்டா xx

ஜிகர்தண்டா xx – கார்த்திக் சுப்புராஜ் திறமையான இயக்குநர் என்று மீண்டும் பறைசாற்றும் ஒரு திரைப்படம். மிகக்கடினமான திரைக்கதை. ஒற்றைப் பரிமாணத்தில் செல்லாமல், மூன்று பிரிவுகளாகச் செல்லும் திரைக்கதை. அதிலும் கார்த்திக் சுப்புராஜின் சிக்னேச்சர் ஆகிவிட்ட திடீர்த் திருப்பம் வேறு. ஒரு படமாக மிக திறமையான திரைப்படமே.

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இருந்த எளிமையே அதன் வெற்றிக்குக் காரணம். ஓர் இயக்குநர் வளர வளர எங்கோ தன் எளிமையை, நேரடியாகக் கதை சொல்லும் தன்மையை இழந்துவிடுகிறார். இப்படிக் கடினமான கதை சொல்லல் முறையே திறமையானது என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. இதுவே ஜிகர்தண்டா xxக்கு நேர்ந்திருக்கிறது.

இடைவேளை வரை படம் மிக விறுவிறுப்பாகச் சென்றது. அதிலும் இடைவேளை ப்ளாக் எல்லாம் கச்சிதம். அதன் பிறகு திரைப்படம் ஒரு கருத்தைச் சொல்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறது. அதுவரை ஒரு வாழ்வியலையும் அதற்கு இணையான கற்பனையையும் சொல்லிக்கொண்டிருந்த படம் அங்கேயே தேங்கிப் போகிறது. சினிமா என்னும் கலையை உயர்த்திச் சொல்லவேண்டிய இன்னொரு ஜிகினாவுக்குள் செல்லும்போது படம் முழுமையாகத் தொலைந்து போகிறது.

காட்டுவாசிகள் அத்தனை பேரையும் நல்லவர்களாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், ஆளும் தரப்பு அத்தனை பேரையும் கெட்டவர்களாகக் காட்டவேண்டிய அவசரம் எனப் பல இன்றைய தேவைகளுக்குள் கார்த்திக் சுப்புராஜ் சிக்காமல் இருந்திருந்தால் இந்தப் படம் வேறு ஒரு தளத்துக்குப் போயிருந்திருக்கும்.

நம் ஊரில் ஆதிவாசிகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1975ல் ஓர் அரசு தமிழ்நாட்டில் இப்படி ஒட்டுமொத்த இனத்தை அழிக்க முயன்றது என்பது கொஞ்சம் மிதமிஞ்சிய கற்பனை. அதிலும் டெல்லியில் இருப்பவர்கள் இங்கே இடத்தை ஆக்கிரமிக்க நினைத்தார்கள் என்ற காரணம் எல்லாம் எஸ்கேப்பிசம்.

நிஜ வாழ்க்கையில் இருந்து பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு எதிர் குணங்களை இட்டு நிரப்பி, யார் சாயலும் வராமல் பார்த்துக்கொண்டதில் இருக்கும் கவனத்தையும், கவனத்துடன் அதில் உருவாக்கிய ஆர்வத்தையும், இறுதிக்கட்ட காட்சிகளின் நீளத்தில் இப்படி வீணடித்திருக்கவேண்டாம். படத்தை முடிக்கவே கார்த்திக் சுப்புராஜுக்கு மனம் வரவில்லை. இன்னும் என்ன டிவிஸ்ட் வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவார் போல.

மதுரை வட்டார வழக்கு ஓட்டவே இல்லை. இதில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். காட்டுவாசிகளின் பேச்சு வழக்கு பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அதில் பிரச்சினையில்லை.

கார்த்திக் சுப்புராஜ் சந்தேகமே இன்றி முக்கியமான இயக்குநர். தேவையற்ற அரசியலில் சிக்கி திசை தெரியாமல் திரிவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இறுதிக் காட்சியில் போலிஸ் பட்டாளம் காட்டுவாசிகளைச் சுட்டுக் கொல்லும்போது போலிஸ் நீண்ட குங்குமம் வைத்திருக்கிறார். இந்த அற்பத்தனத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் ஓர் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார், ஆனால் அவருக்கு எந்த அடையாளத்தையும் தந்து சிக்கலில் சிக்கிக் கொள்ளாத புத்திசாலித்தனம் மட்டும் இருக்கிறது. நல்ல தமிழ்ப்படங்கள் இப்படிப்பட்ட திசை திருப்பல்களில்தான் காணாமல் போகின்றன.

Share

ஃபர்ஹானா

ஃபர்ஹானா – நீண்ட நாள்கள் கழித்து தமிழில் ஒரு மெச்சூர்டான திரைப்படத்தைப் பார்த்தேன். அதிலும் முதல் பாதி மிகப் பிரமாதம். இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவைதான் என்றாலும், படம் எடுக்கப்பட்ட விதம், எடிட்டிங், கதையைச் சொன்ன விதம் எல்லாமே அருமை. கடைசி வரை பரபரப்பைத் தக்க வைக்கிறார்கள். இத்தனை இறை நம்பிக்கை உள்ள ஒரு பெண் எப்படி உடனே இப்படி ஒரு சாட்டிற்கு ஒத்துக் கொள்கிறாள் என்பதைக் கொஞ்சம் தாண்டி விட்டால், முழுப் படமும் மிக தரமான படமே.

தமிழில் இஸ்லாமியர்களின் கஷ்டப்பட்ட வாழ்க்கையை இத்தனை நெருக்கமாகக் காட்டிய திரைப்படங்கள் ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். இஸ்லாமியப் படம் என்று சொல்லிக்கொண்டு, பிற மதங்களைச் சீண்டி எதையாவது எடுத்து வைக்கும் கூட்டத்திற்கு மத்தியில் இப்படி ஓர் இஸ்லாமியப் திரைப்படம் வந்திருப்பது மகிழ்ச்சி.

இஸ்லாம் என்றில்லை, எந்த ஒரு மதத்திலும் பிற்போக்கான பழைய நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்கும் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். இதில் அந்த பெண்ணின் அப்பா அப்படிப்பட்டவராகவே வருகிறார். இஸ்லாமியப் பெண் என்பதை மறந்துவிட்டு எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தக் கதையை பொருத்திப் பார்த்தால் அச்சு அசலாகப் பொருந்திப் போகும். நல்ல படம். அவசியம் பாருங்கள். Sonylivல் கிடைக்கிறது.

Share

சில திரைப்படங்கள்

ஒரு தெக்கன் தல்லு கேசு (M) – மிடில. மகேஷிண்ட பிரதிகாரம் போல இன்னொரு ஈகோ மோதல் திரைப்படம். அந்தப் படமே எனக்கு ஒட்டவில்லை. இது இன்னும் மோசம். அதிலாவது ஃபகத் இருந்தார். இதில் பிஜு மேனன். ஈகோவில் ஒருத்தனை வெட்டும் அளவுக்கு ஒன்றும் நடந்திருக்கவில்லை. நம்பு என்றால் நம்பவேண்டும் என்பதுதான் மலையாள ஈகோ மோதல் திரைப்படங்களின் பாணி போல. பதிலுக்கு நகைச்சுவையகப் பழி வாங்குவாராம். அடேய்களா!

பிஜு மேனன் என்னதான் நன்றாக நடித்தாலும் என்னவோ ஒட்டாது எப்போதும். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ பார்த்து முடித்தேன்.

2018 (M) – கேரளாவில் 2018ல் வரலாறு காணாத மழை, வெள்ளம். இதனால் 450க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே 2018.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு இல்லாத மழை கேரளாவைப் புரட்டிப் போடுகிறது. கேரள மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள். அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்கு 2015 வெள்ளம் தந்த அனுபவங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டியில் வந்திருந்த இருந்த கதைகளில் பெரும்பாலானவை 2015 வெள்ளத்தை ஒட்டியவையே. எந்த அளவுக்கு சென்னை வெள்ளம் சென்னை மக்களை புரட்டிப் போட்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதேதான் 2018 திரைப்படமும். கேரளாவைப் பொறுத்தவரை பார்த்தவர்கள் நிச்சயம் கதறி இருப்பார்கள். படத்தின் கலெக்ஷனும் அதை உறுதி செய்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களுக்கு உரிய அதே கதைதான். ஒவ்வொரு குடும்பமாகக் காண்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்படி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மக்களும் தானே ஹீரோவாகி எப்படி அனைவரையும் மீட்கிறார்கள் என்பதைப் பரபரப்பாகக் காட்டுகிறார்கள். சென்னையில் நடந்தது போலவே அங்கேயும் கர்ப்பிணிப் பெண் ராணுவத்தால் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சியும் உண்டு. ஒரே ஒரு இளம் ஜோடி மட்டும் வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாகப் பிரிய நேர்கிறது, டைட்டானிக் போல.

கேரளாவில் குண்டு வைக்கப் போகும் தமிழன் ஒருவன் மனம் திருந்தும் தனி டிராக்கும் உண்டு. இப்படிப் பல டிராக்குகள் தனித்தனியே அலைவதுதான் படத்தின் பெரிய பலவீனம்.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சம், வெள்ளம் வெள்ளம் என்று பயமுறுத்தாமல் படத்தின் போக்கிலேயே வெள்ளத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே போனதுதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், பல நல்ல நடிகர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

டைட்டானிக் போலவே அந்த ஜோடியின் உண்மையான அன்பை இன்னும் ஆழமாகக் கொண்டு போயிருந்தால் படம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கும். இப்போது இது கேரளாவுக்கான ஒரு படமாகவே இருக்கிறது.

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

புருஷ பிரேதம் (M) – யாரோ ஒருவர் எப்போதோ இது மிக நல்ல படம் என்று சொல்லிவிட, இத்தனை நாள்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் அந்த சனி எனக்குப் பிடித்தது.

சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களில் மிக மோசமானது இதுவே. இந்தப் படத்தை யார் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என இப்போது நினைவுக்கு வரவில்லை. இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை 5 மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வு. கொஞ்சம் கூட கதையோ சுவாரஸ்யமோ இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொள்வதாகவும் மிகுந்த மாடர்னாகப் படம் எடுத்ததாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். யதார்த்தத்துடன் ஒரு போலீஸ் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களையும் காண்பிப்பதாக மனதில் உருவகித்துக் கொண்டு உருவான வினோத வஸ்துவிடம் நான் மாட்டிக்கொண்டு விட்டேன்.

ஸப்த ஸாகரதாச்சே யெல்லோ – ஸைட் பி (K) – காவியம் போன்ற ஒரு படத்துக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகமா என்று பலர் புலம்பியிருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தது. தனக்குக் கிடைக்காத காதலி இன்னொருவனை மணந்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்தாலும், அவள் கனவுகண்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட நிறைவேற வேண்டும் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் ஹீரோ கதாபாத்திரம். அதே சமயம் அதைப் பரிபூரணமாகச் செய்யவும் முடியாமல் அவனைக் கொல்லும் வரை செல்லும் சைக்கோத்தனம். இந்த இரண்டுக்கும் இடையே ரக்‌ஷித் செட்டி – க்ளிஷேவாகத் தெரிந்தாலும் சொல்கிறேன் – வாழ்ந்திருக்கிறார்.

காதலியை மையமாக வைத்து முன்னகர வேண்டிய திரைப்படத்தில் அழகிய விபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. பாலியல் தொழிலாளியாக வரும் நடிகை நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். இதனால் ஹீரோவும் கதாநாயகியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்னும் பரபரப்பே நமக்குள் எழாமல் போகிறது. அப்படி ஒரு பரபரப்பை இந்தப் படம் கோரவில்லை என்பதால் பெரிய இழப்பில்லை.

ஒற்றைக் காது கேட்காமல் வரும் வில்லன் நடிகர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் தன் முக அசைவுகளாலேயே அனாயசமாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை உணர்வுரீதியாக ரசித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். முதலிரண்டு பாகங்களும் சேர்ந்த ஒற்றை நாவல் என்ற புரிதலுடன் பார்த்தால் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பிரைமில் கிடைக்கிறது.

18+ படம்.

ஒரு கட்டுரையாளர் சொன்னார் என்பதற்காக, நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, எறும்பு திரைப்படத்தை 45 நிமிடங்கள் பார்த்தேன். அதுவே பல்லைக் கடித்துக் கொண்டுதான் பார்த்தேன். அதற்கு மேல் பொறுமை இல்லை. இந்தத் திரைப்படத்தை மலையாள நல்ல திரைப்படங்களுடன் ஒப்பிடுவது எல்லாம் கலைக்கும் மலையாளத் திரைப்படங்களுக்கும் செய்யும் துரோகம். இன்னும் மனதில் நிறைய கொட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை, முயற்சிகள் என்ற அளவிலாவது நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகிறேன்.

அதே சமயம் எல்லா மலையாளத் திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் அல்ல. அவற்றிலும் பல போலிகள் உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களை இங்கே பலர் ஏற்றிப் பிடிக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அது தனி.

கைவா (K) – பொழுது போகாத நேரமொன்றில் இந்தக் கன்னடப் படத்தைப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்? 1980களின் பெங்களூரைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்காக. யார் சொன்னது? படத்தை எடுத்தவர்களே! இங்கேதான் நான் ஏமாந்துவிட்டேன். அந்தக் கால பெங்களூரில் 0.1% கூட காட்டவில்லை.

படத்தின் மேக்கிங் நன்றாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களைப் போன்ற கலர் டோனைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் கதை? அரதப்பழசான கதை. இரண்டு கேங்குகளுக்கு இடையே உள்ள பகைமையில் அப்பாவிப் பெண், அதிலும் வாய் பேச முடியாத பெண் சீரழிக்கப்பட, அவர்களைக் கொடூரமாகப் பழி வாங்குகிறான் ஹீரோ. இதில் ஹீரோ ஹிந்து, ஹீரோயின் முஸ்லிம். ஆனால் இதெல்லாம் சினிமாவில் ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது.

1983ல் ராஜ்குமார் நடித்த பக்த பிரகலாதா ரிலீஸாகிறது. அதில் புனித் ராஜ்குமார் பிரகலாதன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு. பெங்களூரில் கபாலி தியேட்டரிலும் அப்படம் ரிலீசாகிறது. அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் ராஜ்குமார் தன் கதையுடன் வெகுண்டெழுந்து, ‘இங்கே இருக்கிறானா உன் ஹரி?’ என்று கோபம் கொண்டு ஒவ்வொரு தூணாக உடைக்க, கடைசி தூணை உடைக்கும்போது, அருகே இருந்த கங்காராம் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தியேட்டர் மேல் விழுந்ததில் 123 பேர் மரணமடைகிறார்கள்.

படம் திரையிடப்பட்டதும், கட்டடம் தியேட்டர் மேல் இடிந்து விழுந்து படம் பார்த்தவர்கள் இறந்ததும் உண்மை. ராஜ்குமார் அடித்தபோது இடிந்தது என்பது ஒரு மித். இதைத் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சோகத்தை படத்தில் ஊறுகாய் போலத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தைத் தவிர படத்தில் எதுவுமில்லை.

மஞ்ஞுமெள் பாய்ஸ் (M) – ஒரு முறை பார்க்கலாம். இதுமாதிரியான சர்வைவல் வகைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைப்பதில் எப்போதுமே சவால் இருக்கும். பரதனின் மாலூட்டியில் இருந்து இதைப் பார்க்கலாம். கதைக்குள் வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிடுவார்கள். அப்படிக் கதைக்குள் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாது. Trapped (H), Helen (M) எல்லாம் இப்படித்தான்.

இந்தப் படத்தில் நண்பர்கள் அனைவரும் கொடைக்கானலுக்குச் செல்லும் வரை படம் படு இயல்பு. நண்பர்களின் ஆரவாரத்தைத் திரையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார்கள். கொடைக்கானலை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. ஒரு நண்பன் குழிக்குள் விழும் காட்சி பதைபதைப்பு. அதன்பின்பு படம் அப்படியே நிற்கிறது. மேக்கிங், நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நண்பனை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்று இன்ச் இன்ச்சாகக் காட்டுகிறார்கள். கயிறு இழுக்கும் போட்டி வரும்போதே, இது பின்னால் உதவும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சி புல்லரிப்பாகத்தான் இருந்தது.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கண்மணி அன்போடு என்ற பாடல் வரும் இடம். தொடக்கத்தில் அத்தனை பெரிய திரையில் அந்த இசையைக் கேட்டதும் மனம் திருநெல்வேலியையும் ரத்னா தியேட்டரையும் பதினைந்து வயது நண்பர்களையும் தேடத் தொடங்கியது. ஏங்க ஏங்க அழுகை வந்தது என்கிற வரி வரும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. இப்படியான ஒன்றிரண்டு காட்சிகளைத் தாண்டி, பெரிதாக படத்தில் ஒன்றும் இல்லை.

***

2004ல் கல்யாணம் முடிந்து தேனிலவுக்குக் கொடைக்கானல் போனோம். குணா குகையைத் தூரத்தில் இருந்து பார்த்தோம். உள்ளே இறங்கிப் போய்ப் பார்க்கலாம் என்று மனைவி சொன்னாள். மஞ்ஞுமெள் பாய்ஸ் படத்தில் இப்போது காண்பிக்கப்படுவது போல கேட் இருந்த நினைவில்லை. இறங்கிக் கொஞ்சம் தூரம் நடந்து போய்ப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். அதிலிருந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள், குணா குகையைப் பார்த்திருக்கலாமே என்று. மஞ்சும்மெள் பாய்ஸ் பார்த்தவுடன், ‘எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம் பாத்தியா?’ என்று சொல்ல நினைத்தேன். ‘குழிலயே விழுந்திருக்கலாம்’ என ஒரு பதில் சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தரக் கூடாது என்பதற்காகவே அதைச் சொல்லவில்லை.

கேப்டன் மில்லர் – ஏன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம் என்று நொந்து கொள்கிறேன். ஏன் இந்தத் திரைப்படத்தை எடுக்கிறோம் என்று யாருக்கும் தெளிவில்லை. இது சுதந்திரப் போராட்டத் திரைப்படமா அல்லது தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமையை மீட்கும் திரைப்படமா அல்லது காந்திய – தீவிரவாதப் போக்கினரிடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும் படமா என்று எதிலும் ஒரு தெளிவில்லை.

இன்றைய கால மனநிலையை அன்றைய கால சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் வைத்து எதையோ ஒட்டிச் செயற்கையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எடுத்த விதம் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். அந்தக் கால பீரியடைத் திரையில் கொண்டு வரத் தெரியாமல் ஒதுக்குப்புறமாகவே பெரும்பாலான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கோவிலில் கூடவா செயற்கைத்தனம்? வசனங்களிலும் அப்படியே. மூடிட்டு இரு என்று கடந்த பத்து வருடங்களாக நாம் பேசுவதெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே திரைப்படத்தில் வசனமாக வருகிறது.

நடிப்பு – ஐயையோ. அத்தனை பேரும் ஓவர் ஆக்டிங். தனுசு இந்தக் கால ஹீரோ போல் ஸ்லோமோஷனில் நடந்து வந்து சுட்டுக் கொல்கிறார்‌. ஆங்கிலேயர்கள் வசம் இருக்கும் ஒட்டுமொத்தத் துப்பாக்கிகளை விடவும், கையெறிக் குண்டுகளை விடவும் புதைகுண்டுகளை விடவும் தனுஷிடம் கூடுதலாக இருக்கிறது. எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள் எதுவும் தெரியாது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதப் பாதை என்பது இத்தனை கேவலமாக இல்லை. அது கூடுதல் அர்ப்பணிப்புடன், கடவுள் நம்பிக்கையுடன், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. இவர்கள் எடுக்க நினைத்தது நக்சலைப் பற்றிய திரைப்படம். எடுத்தது சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஒரு திரைப்படம்.

இந்தக் கொடுமையை எப்படித்தான் தியேட்டரில் பார்த்தார்களோ.

நேரு (M) – தொடர்ச்சியாக வளவளவென்று மலையாளம் பேசும் ஒரு திரைப்படம். மலையாள வசனங்கள் இத்தனை பேசப்பட்டாலும் பிடிக்கும் என்பவர்களுக்கான படம்.

எப்படியாவது த்ருஷ்யம் போல ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே போன்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம். அதே ஜித்து ஜோசப். அதே மோகன்லால்.

மையம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். நோ மீன்ஸ் நோ என்பது போல இதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் படத்துடன் ஒன்ற முடியும்‌. ஏனோ என்னால் முடியவில்லை.

When rape is inevitable என்றொரு பழமொழி உண்டு. யதார்த்தத்தில் அது கொடூரமானது. விக்டிம்களுக்குத்தான் அது புரியும். இந்தப் படம் அங்கே சறுக்குகிறது.

எம்.கே.மணியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது, அக்கதைக்கும் இப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட.

Share

The Kerala Story

கேரளா ஸ்டோரி (M) – பார்த்திருக்கக் கூடாது. ஒரு திரைப்படமாக இதில் நிறைய சமரசங்களும், தொழில்நுட்ப ரீதியாகப் போதாமைகளும், நம்ப முடியாத கணங்களும் உள்ளன. ஆனால் இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல என்பதுதான் பதற்றத்தைத் தருகிறது. பிரசாரத் திரைப்படம்தான். முழுக்க கற்பனை அல்ல என்பதுதான் இப்படத்தை முக்கியத்துவம் பெற வைக்கிறது. (பின்குறிப்பு: இது வயது வந்தவர்களுக்கான திரைப்படம். Zee5ல் கிடைக்கிறது.)

Share