aa dhinagalu – Kannada movie

ஆ தினகளு (K) – 2006ல் வந்த கன்னடப் படம். இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி டிவிட்டரில் சீனு என்கிற நண்பர் பரிந்துரைத்திருந்தார் என்பதால் பார்த்தேன்.

சில படங்களைவிட அவற்றின் நிஜப் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும். ஹிந்தியில் வெளியான ருஸ்டம் போல. ஆ தினகளு படமும் அப்படியே.

கேங் வார் திரைப்படம். பெங்களூரில் இரண்டு ரௌடிகளுக்கு இடையேயான, அவர்களுக்கும் போலிஸுக்கும் இடையேயான சண்டையும் கொலைகளுமே படம். அக்னி ஸ்ரீதர் கன்னடத்தில் எழுதிய தாதாகிரிய தினகளு என்கிற புத்தகத்தின் அடிப்படையிலான திரைப்படம்.

அக்னி ஸ்ரீதர் ஒரு ரௌடியாக இருந்தவர். இரண்டு கேங்கில் ஒரு கேங் தலைவரைக் கொல்கிறார். அதுவும் திட்டம் போட்டு, அவரை தன் இடத்துக்கு வரவழைத்து, தன் மேல் நம்பிக்கை வர வைத்து, சரியான நேரத்தில் போட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் எதிரி கேங் இவரைத் தீர்த்துக் கட்ட நினைக்க, அவர்களிடம் தெளிவாகச் சொல்கிறார், நான் கொல்லப் போவதே உன் எதிரியைத்தான் என்று. எதிரி கேங் தலைவர் அக்னி ஸ்ரீதருக்கு உதவி செய்யத் தயாராகிறார். கொலை நடந்து முடிகிறது. அதுவும் மிக எளிதாக. அக்னி ஸ்ரீதரும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஜெயிலுக்குப் போகிறார்கள்.

தண்டனை முடிந்து வெளியே வரும் அக்னி ஸ்ரீதர் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் புத்தகமாக எழுதுகிறார். எழுத்தாளராகிறார். ஆங்கிலத்தில் My days in the underworld – Rise in the Bangalore mafia என்று மொழிபெயர்ப்பாகிறது. பின்னர் ஆ தினகளு திரைப்படமாகிறது. கிரிஷ் கர்நாட் கதையில் உதவுகிறார். சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.

ஆ தினகளு படம் 2006ல் வந்தது என்றாலும் இன்றும் முழுமையாகப் பார்க்கமுடிகிறது. ஆரம்பக் காட்சிகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ளவேண்டும். நடிக்கவே வராத ஹீரோ, காதல், பெரிய பிஸினஸ்மேன் என்றெல்லாம் பதினைந்து நிமிடங்கள் அலைபாயும் கதை பின்னர் அக்னி ஸ்ரீதரின் கதைக்குள் வரவும் சூடுபிடிக்கிறது. படத்துக்காகப் பல இடங்களில் உண்மை நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள்.

இந்நாளில் நாம் மறந்துபோய்விட்ட நடிகர்கள், மொத்தமாக ஓய்வுபெற்றுவிட்ட நடிகர்கள், மரணமடைந்துவிட்ட நடிகர்களைப் படத்தில் இளமையாகப் பார்க்கும்போது ஏனோ ஆச்சரியமாக இருக்கிறது.

இரண்டு ரௌடி கேங்குகளும் வரும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன. புத்தகத்தில் இல்லாத, நெஞ்சை வருடும் க்ளிஷே காட்சிகளும் உண்டு. ஆனாலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

படம் பார்த்து முடித்ததும் அக்னி ஸ்ரீதர் பற்றித் தேடி தெரிந்து கொண்டு, அவரது யூ டியூப் சேனலில் ஆ தினகளு என்று கிடைக்கும் சில வீடியோக்களைப் பார்த்து, (இந்த வீடியோக்கள் படத்தில் இல்லாத பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன), பின்னர் அவரது ஆங்கிலப் புத்தகத்தைத் தரவிறக்கி, இத்திரைப்படம் தொடர்பான பக்கங்களை மட்டும் மேலோட்டமாகப் படித்ததில் ஒரு முழுமையான அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்துக்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். அந்தக் கால பெங்களூருவில் எப்படி ரௌடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இரண்டு சிறிய பாடல்கள் – கிறங்கடிக்கின்றன. அதிலும் ஆ தினகளு பாடல் (எங்கோ ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலை நினைவூட்டுகிறது எனக்கு!) மறக்கவே முடியாத ஒன்று. பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். இன்னொரு பாடல் ‘சிஹி காலி’ ராஜா கன்னடத்தில் பாடியது.

ஆ தினகளு படம் ஸீ5ல் சுமாரான தரத்தில், சப்டைட்டில் இல்லாமல் கிடைக்கிறது.

Share

Comments Closed