Archive for திரை

Aravindan Neelakandan

முழு நேரமாகக் கட்சிக்காகக் குரல் கொடுத்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காத்திருந்து ஏமாறுகிறார்கள் என்று ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்து.

இது முற்றிலும் அநியாயமான கருத்து. உள்நோக்கம் கொண்டது.

அரவிந்த நீலகண்டன் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவாக எழுத ஆரம்பித்தது திண்ணையின் தொடக்கக் காலத்திலேயே, அதாவது அப்போதெல்லாம் பாஜக இத்தனை வலுவாக ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரம், ஆர்எஸ்எஸ் பெயரைச் சொன்னாலே அடி விழும் ஒரு காலம், அந்தக் காலத்திலேயே, குறிப்பாக அதற்கும் முன்பாகவே ஆதரித்தார்.

அரவிந்தன் ஆர் எஸ் எஸ் & பாஜகவை ஆதரித்தது அவருடைய சித்தாந்தத்தின்படிதானே ஒழிய எதையும் எதிர்பார்த்து அல்ல.

இன்று பாஜக வலுவாக இந்தியா முழுக்கக் கால் பரப்பி இருக்கும் நிலையிலும் அவர் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பெரிய சமரசம் அல்ல, சிறிய சமரசங்களை அதாவது கருத்து ரீதியாகச் சில சமரசங்களை அவர் செய்திருந்தாலே போதும், பல்வேறு விஷயங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். பல்வேறு எழுத்தாளர்கள் அவரைக் கொண்டாடி இருப்பார்கள். அந்தச் சமரசங்கள் தவறும் அல்ல. எல்லோரும் எல்லாக் கட்சியின் ஆதரவாளர்களும் எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் செய்வதுதான்.

நானே அவரிடம் அதைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதவர் அரவிந்தன். இப்படியான ஒருவரை, ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதனால் பாஜகவை ஆதரித்து அதனால் ஏமாந்தார் என்பதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம்.

இதை ஜெயமோகன் சொல்லி இருக்கக் கூடாது. பத்மஸ்ரீ அவருக்குத் தரக் கோரிக்கை வைக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே தனக்குத் தெரியாது என்று ஜெயமோகன் சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

அதேபோல் முன்பு ஒரு நண்பர் – இன்று அவர் நட்புப்பட்டியலில் இல்லை – அவர் தெளிவாகச் சொன்னார். என்னிடம் சொன்னார். நீங்கள்தான் அரவிந்த நீலகண்டனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்கி தர மேலிடத்தில் பேச வேண்டும் என்று. எனக்கு மேலிடத்தில் யாரையும் தெரியாது என்பது தனிக்கதை.

ஆனால் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. பத்மஸ்ரீக்கு பரிந்துரைக்கும் அறிவிப்பு வந்தது. நான் அரவிந்தனிடம் எத்தனையோ பேசினேன். பத்மஸ்ரீக்கு அப்ளை செய்வோம், கிடைக்க விட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அரவிந்தன் ஒரேயடியாகவே மறுத்து விட்டார்.

என்னைக் கட்டுப்படுத்த உங்களால் முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பத்மஸ்ரீ தர வேண்டும் என்று பரிந்துரை அனுப்பலாம், நீங்கள் ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி நான் பரிந்துரை செய்தால் என் நட்பில் இருந்து விலகுவேன் என்று கடுமையாகக் கூறினார்.

ஏதேனும் எதிர்பார்ப்பவர் இப்படிச் செயல்பட மாட்டார் அல்லது தன் நண்பனை விட்டு அப்ளை செய்துவிட்டு அந்த பிரச்சினை பெரிதாகும் போது நான் அப்படிக் கேட்கவில்லை என்றாவது சொல்லாமல் இருப்பார். இந்த இரண்டையுமே அரவிந்தன் செய்யவில்லை.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நிச்சயம் அரவிந்தன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தால் இத்தனை வெளிப்படையாக, கொள்கைக்காக எதிர்க்க மாட்டார்.

இப்போதும் இத்தனை சமரசமற்ற தன்மையும் எதிர்ப்பும் அரவிந்தனுக்குத் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் வழக்கம் போல் அவர் அதைக் கேட்கப் போவதில்லை.

.

Share

Hridayapoorvam Malayalam

ஹ்ருதயபூர்வம் (M) – ஃபீல் குட் மூவியாக எடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சீனையும் ஃபீல் குட்டாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். இதில் மோகன்லால் ஃபீல் குட் முகத்தை படம் முழுக்க வைத்திருக்கிறார். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரே பாவத்தைப் படம் முழுக்க எப்படிப் பார்ப்பது? காட்சிகள் மெல்ல நகர்கின்றன. ஒரே போன்ற காட்சிகள், வளவள வசனம். போதாக்குறைக்கு மகளாக வரும் பெண்ணை மோகன்லால் காதலிக்க முயல்வது போன்ற காட்சிகள் எல்லாம் படு அபத்தம். செயற்கைத்தனம். எரிச்சல் தரும் ஒவ்வாமை. கதையே இல்லாமல் ஒரு வழியாகப் படத்தை முடித்து வைத்தார்கள். ஆங்காங்கே சில காமெடிக் காட்சிகள் லேசாகப் புன்னகைக்க வைக்கின்றன என்றாலும், இந்தக் கண்றாவி எப்படி 100 கோடி சம்பாதித்தது என்று தெரியவில்லை.

படத்தில் கொஞ்சமாவது ஃபீல் குட்டாக இருந்த காட்சிகள் என்றால், தொடக்கத்தில் மோகன்லால் கடையில் வரும் காட்சிகளும், ஒழிச்சோடிப் போன மோகன்லாலின் மணப் பெண் போனில் அட்டகாசமாக நடித்துப் பேசும் காட்சிகளும்தான்.

Share

Sumathi Valavu

Sumathi Valavu (M) – நான் அபுதாபி‌ போயிருந்தபோது (இன்னுமா இந்த ரீல் அந்து போகலை?) சையாரா திரைப்படத்திற்குப் போயிருந்தோம். அப்போதுதான் சுமதி வளவு என்ற மலையாளத் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்ததைக் கவனித்தேன். ஆஹா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தத்துடன் சையாரா பார்த்து விட்டு வந்தேன்.

அன்று மட்டும் சுமதியைப் பார்த்திருந்தால் அன்றே என்னை பேக் செய்து விமானத்தில் வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ஜெயக்குமார். ஏனென்றால் அந்தக் கொடுமையான சுமதி வளவு படத்தை இன்றுதான் பார்த்தேன்.

பேய்ப் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் மொத்தத்தில் ஒரு படமாகவே இல்லாமல் கொடூரமாக இருக்கிறது. திடீரென்று இயக்குநருக்கு யாரோ இது பேய்ப் படம் என்று நினைவூட்ட, அதைச் சில காட்சிகள் காண்பிக்கிறார். பின்னர் காதல் படம் என்று யாரோ சொல்ல அதைச் சில காட்சிகள் காண்பிக்க, இரண்டுமே எந்த ஆழமும் இல்லாமல், ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல், என்னை கதற வைத்து விட்டார்.

யாரும் அந்தப் பக்கம் போகாதீர்கள்.

Share

Kanthara The Legend – Chapter 1

காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1‌ – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.

இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!

கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.

உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.

மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.

கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.

தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.

ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.

தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.

Share

Mura Malayalam Movie

Mura (M)

பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.

ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.

Spoilers ahead.

பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Trending Tamil Movie

Trending – மிரட்டலான தமிழ்ப்படம். தவறவிடக்கூடாத வகையறா. குறைந்த செலவில், பெரும்பாலும் ஒரே வீட்டில், மொத்தமே 5 நடிகர்களுக்குள் தொடக்க நொடி முதல் இறுதி வரை பரபரப்பு. எமோஷனல் சைகலாஜிகல் திரில்லர். உண்மையில் எப்படி வகைப்படுத்துவது என்பது கடினம். சில இடங்கள் குரூரமான உளவியல். இப்படி எல்லாம் நடக்குமா என்கிற நம்பகத்தன்மை அற்ற ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் விளையாடி விட்டார்கள். தமிழில் இது போன்று வந்ததில்லை. ஏதேனும் வெளிநாட்டுத் திரைப்படத்தின் நகலோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உணர்ச்சி ரீதியாக ஆடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எது உண்மை எது விளையாட்டு என்கிற சந்தேகமும், அதுக்காக இவ்வளவா என்கிற கேள்வி தரும் எரிச்சலும் இப்படத்திற்கான வெற்றிச் சான்றுகள். ஏனென்றால் நாமே இந்த விளையாட்டின் லைக் மற்றும் வ்யூஸ் பலியாடுகள்தான். இந்தப் படம் இந்த இயக்கங்களின் உண்மையான கதை என்றால் இந்த இயக்குநர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

சில லாஜிக் பிழைகள் இருக்கின்றன. நாயகி குழந்தை உண்டாவது போல் காட்டுவது, ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஹீரோவே சொல்லிவிட்டு, கருவுற்றதற்காகக் கோபப்படுவது போன்றவை.

டார்க் விளையாட்டு ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து.

Share

Lokah Chapter 1 Chandra Review

லோகா சாப்டர் 1‌ சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ‌, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.

இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால்‌ வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.

இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்‌ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.

வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.

அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.

இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும்‌ எத்தனை‌ சாப்டர்களோ! செத்தோம்.

வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.

Share