Archive for ஹரன் பிரசன்னா

சிலுக்குவார்பட்டி சிங்கம்

விஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவறாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.

இப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.

எப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா? அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

Share

கிரேஸி மோகன் – அஞ்சலி

கிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.

ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.

மூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.

எனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.

நடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.

தேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.

தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

Share

போட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்

டிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.

அந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.

ஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான்? ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான்? தற்செயலா? படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள்? கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன? சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள்? சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை? ஆண்களா இல்லை? ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.

நவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான்? ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான்? எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.

லஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.

இன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

மெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.

Share

கேசரி – ஹிந்தித் திரைப்படம்

கேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.

ஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.

சிறுவர்கள் பார்க்கவேண்டிய படம்.

Share

காவிக் கொடியும் அம்பேத்கரும்

பாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை! பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂

படம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.

கட்டுரை: அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை, ஸ்வராஜ்யா இதழில். https://swarajyamag.com/politics/guha-is-wrong-rss-never-had-any-shade-of-doubt-in-hoisting-the-tricolour

Share

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம்

சாவர்க்கரின் My Transportation for life புத்தகம், எஸ்.ஜி. சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. இப்புத்தகம் வெளியாகும்போது இந்நூலைப் பற்றிய விரிவான என் கருத்தைப் பதிகிறேன்.


இந்த நூல் சாவர்க்கரை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் தவறவே விடக்கூடாத நூல் இது. இந்திய விடுதலைக்காகப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை சாவர்க்கரின் மூலம் இந்நூலில் பெறலாம். சாவக்கரின் அப்பழுக்கற்ற தேச பக்தியையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்புத்தகத்தில் காணலாம். முஸ்லிம்களுக்கான தாஜா அரசியலுக்கு எதிராக ஹிந்துத்துவ அரசியலை சிறையிலேயே முன்னெடுக்கும் சாவர்க்கர், தொடர்ச்சியாக ஹிந்துக் கைதிகளுக்காகச் சிறையில் போராடுகிறார். இவை முழுக்க மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றால் சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சலுகைகள் ஹிந்து என்றால் மறுக்கப்படுவதை அடியோடு தீவிரமாக எதிர்க்கும் சாவர்க்கர், இந்த முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் பதான் முஸ்லிம்களுக்கு இடையேயான வேறுபாட்டையும் பதிவு செய்கிறார். தான் போராடுவது நியாயத்துக்காக மட்டுமே அன்றி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அல்ல என்று உறுதியாகப் பேசுகிறார். அநியாயம் மற்றும் அக்கிரமங்களுக்கு அடிபணிந்து ஹிந்துக்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்று சொல்லும் சாவர்க்கர், புரட்சியுடன் கூடிய போராட்டமே நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். சிறையில் அஹிம்சை எடுபடாமல், இவர் செய்யும் புரட்சிகளே நன்மையைக் கொண்டு வருகின்றன. காந்திஜியின் அஹிம்சை பற்றிய சாவர்க்கரின் கிண்டல்களையும் எதிர்ப்பையும் இந்நூலில் காணலாம்.


தீவிரமான தேசப்பற்று, எப்போதும் எதிலும் தன்னலத்தை முன்னிறுத்தாத தலைமைத்துவம், விடாமுயற்சி, தொடர் போராட்டம் என எல்லா வகைகளிலும் சாவர்க்கர் சந்தேகமே இன்றி வீர சாவர்க்கர்தான்.

இந்நூலை நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

Share

என் டி ஆர்: மகா நாயகடு

ஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.

தெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

இந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.

ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.

ஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர  ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.

Share

Sui Dhaga

சூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அநியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.

நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.

நான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அதை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.

ராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.

இனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)

Share