அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share

Comments Closed