Archive for ஹரன் பிரசன்னா

ஒரு செல்ஃபிகாரனின் குறிப்புகள் – சிறுகதை

என் சிறுகதை ‘ஒரு செல்பிகாரனின் குறிப்புகள்’ இன்று (02-03-2018) வெளியாகி இருக்கும் குங்குமம் இதழில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் வாசித்துவிட்டு, நன்றாக உள்ளது என்றோ மிக நன்றாக உள்ளது என்றோ கருத்துகளைத் தாராளமாகச் சொல்லலாம்.

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றி. 

Share

அப்பா

அப்பா

அப்பாவின் 11வது ஆண்டு நினைவு நாள் (திதி) இன்று. கிருஷ்ண பக்ஷம் பால்குண மாதம் பிரதமை திதி. அப்பாவின் மரணம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். நிறைய நாளாகவே முடியாமல்தான் இருந்தார். சென்னையில் என்னுடன் இருந்தவர் வம்படியாக திருநெல்வேலிக்கு என் அண்ணா வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரை நெல்லைக்கு ட்ரைனில் அழைத்துக் கொண்டு சென்றபோதே ரொம்பவும் பலகீனமாகவே இருந்தார். முகமே களையின்றித்தான் இருந்தது. அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் வைகுண்ட பிராப்தி அடைந்தார். அப்பாவின் மரணம் எனக்குப் பெரிய வேதனையைத் தரும் விஷயமாக இருந்தது. இன்னொரு பக்கம் விடுதலையாகவும் இருந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு அளவுக்கு மீறிப் பணம் செலவழித்திருந்தோம். இனியும் தாங்கமுடியுமா என்ற கேள்வி வந்தது. படுத்த படுக்கையாகிவிட்டால் யார் எப்படி கவனித்துக்கொள்வது என்று யோசனை செய்யத் தொடங்கி இருந்தோம். எத்தனை நாள் இப்படி சமாளிக்கமுடியும் என்று யோசிக்கத் துவங்கிய இரண்டாம் நாளில் அப்பா இறைவனடி சேர்ந்துவிட்டார் யாருக்கும் எக்குழப்பத்தையும் வைக்காமல்.

அப்பா ரொம்ப குழந்தை மனம் கொண்டவர். அப்பாவி. யாரும் அவரை ஒரு நொடியில் ஏமாற்றிவிடலாம். அசட்டுக் கோபம் கொள்பவர். கோபம் கொண்டு எதாவது சொல்லிவிட்டு, திட்டு வாங்கியவர் வருத்தப்படுவதைவிட நூறு மடங்கு அதிகம் வருத்தப்படுபவர். அம்மாவின் சொல்லை மீறி எதையும் செய்யத் தெரியாதவர். தாத்தா முன் நின்று பேசவே அப்பாவுக்கு 60 வயது தேவைப்பட்டது. குடும்பத்தில் உள்ள எல்லோர் மீதும் பாசமாக இருப்பவர். அப்பாவுக்கு ஊர் உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்கள் மட்டுமே.

கடைசி காலத்தில் என்னுடன் இருந்த நேரத்தில் நான் அவருடன் ஓவராக விளையாடிக்கொண்டிருப்பேன். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்தார். குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம். அண்ணாவின் இரண்டாவது மகனுக்கு அரவிந்த் வாசன் என்று பெயர். அதில் உள்ள வாசன், என் அப்பாவின் நினைவாக அவனுக்கு வைக்கப்பட்டது. இதனால் அரவிந்த் மேல் கொஞ்சம் அதிகப் பாசம்.

என் சின்ன வயதில் அப்பாவுக்குத் தெரியாமல் அப்பா சேமித்து வைத்திருந்த டப்பாவில் இருந்து காசை எடுத்துக்கொண்டு போய் கல்லூர்ப் பிள்ளை கடையில் சாப்பிடுவேன். அந்த ரோஸ் நிற டப்பாவில் ஐந்து ரூபாய் காயின்களாகப் போட்டு வைத்திருப்பார். அந்த டப்பாவைத் தூக்கக்கூட முடியாது. அதிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் பூரி வடை என சாப்பிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்துவிடுவேன். கடையின் முதலாளி என்னிடம், ‘இது மாதிரி நிறைய காயின் வெச்சிருக்கியா’ என்று கேட்டபோது சுதாரித்துக்கொண்டு, பத்து ரூபாயைத் திருடி அதைப் பணமாக மாற்றி மீண்டும் அக்கடைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருநாள் தற்செயலாக அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ காயின் எடுக்கறன்னு எனக்குத் தெரியாதா என்ன’ என்றார். எனக்கு பக்கென்றிருந்தது. அத்தனை ஏமாளி இல்லை போல என்பதைவிட, ரொம்ப விவரமானவர் என்ற எண்ணமும், அவன் எடுத்துக்கட்டும் என்ற எண்ணமும் இருப்பது அதிகம் நெகிழச் செய்தது. இது தெரியவும் இனி பணமே எடுக்கக்கூடாது – என்று சினிமா ரேஞ்சில் எல்லாம் யோசிக்காமல் பதினைந்து ரூபாயாக எடுக்க ஆரம்பித்தேன் – குற்ற உணர்வில்லாமல். (என் அக்கா ஒரு தடவை ஐந்து ரூபாயை மட்டும் திருடி மாட்டிக்கொண்டு செமயாக அடி வாங்கினார், அவர் திருடத் தேர்ந்தெடுத்ததும் சரியாக என் அப்பாவைத்தான். இதை இங்கே சொல்வது எப்போதுமே அப்பா திருடப்படுபவராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே.)

அடிக்கடி என்னிடம் சொல்வார், ‘நீ சின்ன வயசுல நடு ராத்திரில அழுவ, அந்த நேரத்துல கடைக்குப் போய் நிப்பிள் வாங்கிட்டு வருவேன், இப்ப இதையெல்லாம் ஒனக்கு சொல்ல வேண்டி இருக்கு’ என்பார். ஏன் முதல்லயே நிப்பிளை தயாரா வெச்சிக்கலை, ஒரு குழந்தை அழும்னு உனக்கு தெரிய வேண்டாமா என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். 🙂 ஆனாலும் என் நினைவில் அப்பா நிப்பிள் வாங்க இரவில் கடைக்குச் செல்வது ஒரு காட்சி போலவே பதிந்துவிட்டது. என் வீட்டில் அத்தனை பேரும் இதைச் சொல்வார்கள்.

அப்பா அவரது சின்ன வயசில் ரொம்ப நோஞ்சானாக இருந்தார் என்பார்கள். பால கண்டம் என்று என்னவோ சொன்னார்களாம். அதனால் அப்பாவை (அப்போது அவர் குழந்தை) படுக்க வைத்து அவரைச் சுற்றி ஏகப்பட்ட உணவு சமைத்து வைத்து எல்லாம் ஒனக்குத்தான் என்று சொல்லி ஒரு சடங்கு செய்ததாகச் சொல்வார்கள். அப்பா கடைசி காலம் வரையில் அதிகம் எதிர்ப்பு சக்தி இல்லாதவராகவே இருந்தார் என்பதே என் மனப்பதிவு.

அப்பாவுக்கு எதை எப்போது எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது. சரியான வார்த்தைகளைச் சொல்லவும் தெரியாது. ஒருதடவை வளைகாப்பு வீட்டுக்குப் போய்விட்டு காப்பரிசியுடன் வந்தவர், வீட்டுக்கு வந்ததும் வளைகாப்பு வீட்டில் வாய்க்கரிசி கொடுத்தாங்க என்று சொல்லி வீட்டில் வாங்கிக் கட்டிக்கொண்டார். அனந்த விரதப் பண்டிகைக்குக் கயிறு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியைப் பற்றி என் தாத்தாவுக்கு இப்படி கடிதம் எழுதினார், “குடும்பத்துடன் அனைவரும் கயிறு மாட்டிக்கொண்டோம்’ என்று. பக்கத்து வீட்டு மாமி என்னவோ பேசவந்தவர், ‘பொழுதே போகலை வீட்டில்’ என்று சொன்னதற்கு என் அப்பா, ‘அப்ப குதிங்கோ’ என்றார். அந்த மாமிக்கு எப்படி ரீயாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. ஒரு தடவை என் அண்ணியிடம், ‘தலை வலிக்குது, கடுகை தேச்சிப் போடு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அண்ணி எத்தனை தடவை சொல்லியும், இதை உரைச்சி போட முடியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். கொஞ்சம் நேரம் கழித்துத்தான் பிடிபட்டது அவர் சுக்கை நினைத்துக்கொண்டு கடுகைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது. (கன்னடத்தில் சார்சிவ என்றால் கடுகு, சுண்ட்டி என்றால் சுக்கு.) இப்படி பல நிகழ்ச்சிகள். இன்றும் வீட்டில் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

அப்பாவுடன் பழகியவர்கள் அப்பாவை எப்படி மதித்தார்கள் என்பது குறித்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் இதை மீறி அப்பாவுடன் அன்பாகவே இருந்தார்கள். அப்பாவை எப்போதும் மட்டம் தட்டும் ஒரு கூட்டம் ஒன்றும் உண்டு. ஆனாலும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். ஏனென்றால் அப்பாவுக்கு மற்றவரை மட்டம் தட்டத் தெரியாது. அன்பாக இருக்க மட்டுமே தெரியும். மற்றவர்கள் சொல்வதை நம்ப மட்டுமே தெரியும். ஏன் ஒருத்தன் பொய் சொல்லவேண்டும் என்று மட்டுமே யோசிக்கத் தெரியும். எல்லாம் இழந்து நின்ற போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரிந்துகொள்ளத் தெரியும். அதையும் விளக்கிச் சொல்ல அம்மா வேண்டும். இன்னும் நினைவிருக்கிறது, அப்பா நான்கு பேருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அப்பாவைத் தவிர மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. எப்போதோ எடுத்த போட்டோ. அதில் அப்பா ஒரு ஓரத்தில் கீழே விழுந்துவிடும் வாக்கில் பாதி தொடையில் உட்கார்ந்திருப்பார். அப்போது அந்த சின்ன வயதிலேயே நான் யோசித்திருக்கிறேன், ஏன் அப்பாவுக்கு நல்ல இடம் கொடுத்து அவர்கள் புகைப்படம் எடுக்கவில்லை என. ஆனால் அந்த நான்குபேரில் அப்பாதான் அதிகம் சிரித்துக்கொண்டிருப்பார். அப்பா இப்படியே உருவானவர். இதனால் அவர் இழந்தது கொஞ்சம் பணமாக இருக்கலாம். ஆனால் அன்பில் அவர் வென்றார். இன்று என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அப்பாவின் மீது பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது. இதுதான் அப்பாவின் சொத்து.

கடைசியாக ஒரே ஒரு வார்த்தை, இத்தனை தூரம் நான் அப்பா அப்பா என்று சொன்னது, என் அப்பா, வளர்ப்பு அப்பா, சொந்தத்தில் பெரியப்பா. இந்த தியாகத்தை எந்நாளும் வார்த்தைகளில் விளக்கமுடியாது. ஒவ்வொரு விஷுவின் போதும் (வேப்பம்பூ பச்சடி சாப்பிடச் சொல்லி உயிரை எடுப்பார்) ஆடிப் பூரத்தின் போதும் (அன்றுதான் பிறந்த நாள்) அப்பாவின் நினைவு தானாக வரும். மறக்கமுடியாத மனிதர் என்பதில் எந்தப் பொருளும் இல்லை, மறக்கக்கூடாத மனிதர் என்பதே சரியானது.

Share

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

அனைவருக்கும் ஒரு தன்னிலை விளக்கம். இதை எழுதுவதன் ஒரே நோக்கம், இன்றைய நிலையில் கிண்டிலில் வரும் இபுத்தகங்களின் விற்பனை எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சொல்ல மட்டுமே. மற்றபடி எந்த வித வம்பு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை, அது அச்சுப் புத்தகமாக இருந்தாலும் இபுத்தகமாக இருந்தாலும், தானே வெளியிட்டுக்கொள்ளும் அவரது உரிமையை ஆர்வத்தை அவருக்குக் கிடைக்கும் அதிக லாபத்தை (ஒருவேளை கிடைத்தால்) நான் அதை நிச்சயம் மதிக்கிறேன். அதற்காக மகிழ்கிறேன்.

இன்னொரு விளக்கம் – இக்கட்டுரையின் நோக்கம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தானே ஒழிய, அவர்களது உரிமையிலோ ஆர்வத்திலோ தலையிட அல்ல. முழுமையான ஒரு புரிதல் ஒருவேளை எழுத்தாளர்களை விரைந்து கூடச் செயல்படச் சொல்லலாம்.

கடைசி விளக்கம் – ஒரு வாசகராக ஐ லவ் கிண்டில். இ புத்தகங்களே படிக்க இலகுவானவை. என் கருத்தில் மாற்றமில்லை. இக்கட்டுரை மின் புத்தக வாசகர்களுக்கானது அல்ல. விற்பனையாளர்களுக்கானது.

இனி…

நான் ஒரு சாதாரண எழுத்தாளன். உண்மையில் எழுத்தாளன் கூட அல்ல. எழுதுபவன். இதுதான் சரி. எழுத்தாளன் என்பது ஒரு நினைப்பு. அதுவே ஒரு மனிதனை எழுத்தாளனாக்குகிறது. எனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை. ஆகவே நான் எழுத்தாளனாக முடியாது. எழுதித் தொலைப்பால் புத்தகம் போட்டிருக்கிறேன். அச்சுப் புத்தகமும் மின்னூலும். கிண்டிலிலும் கிடைக்கிறது. எப்போதாவது திடீரென ஒன்றிரண்டு விற்கும்.

இன்னொரு உதாரணம் வேண்டும். நம் நண்பர் கிருஷ்ண பிரபுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். (மன்னிச்சூ கிபி.) இலக்கியவாதியின் ஆழமும் சுஜாதாவின் பிரபலமும் உள்ளவர் எனக் கொள்ளுங்கள். இவரது புத்தகம் வெளியாவது அச்சிலும் மின்னூலிலும் முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இனி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

என் புத்தகம் வெளியிட ஒரு பதிப்பகம் தேவையில்லை. ஏனென்றால் என் புத்தகம் விற்பதே சொற்பமாகத்தான். உண்மையில் ஒரு பதிப்பகம் அதிலும் பிரபலமான பதிப்பகம் என் நூலை வெளியிடுமானால் நிச்சயம் கூடுதலாக விற்கும். 200% அதிக விற்பனை நடக்கலாம். இந்த சதவீதக் கணக்கு நம்மைக் குழப்பக் கூடியது. நானாக அச்சிடும் என் புத்தகம் 10 விற்கும் என்றால் ஒரு பதிப்பகம் அச்சிடும்போது அது 30 விற்கும். 200% அதிக விற்பனை! எனவே ஒரு பதிப்பகம் என் புத்தகத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் ஒன்றுதான். இதே கதைதான் இ புத்தகத்துக்கும். அதனால் ஒரு பதிப்பகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நானே 50 புத்தகங்கள் அச்சடித்து நானே கிண்டிலில் விற்றுக்கொள்ளலாம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் எனக்கு லாபமும் இல்லை என்பதும் இன்னும் கொஞ்சம் யோசித்தால் முதலீட்டுப் பணம் வகையில் சின்ன நஷ்டமும், என் நேரத்தை நான் செலவழித்த வகையில் அதிகம் நஷ்டமும் கூட இருக்கலாம் என்பது புரியும். அனுபவத்தில் சொல்கிறேன். இதில் முக்கியமான விஷயம், நான் தினம் தினம் எழுதிக் குவிப்பவன் அல்ல. என் எழுத்து எப்போது வரும் என்று என் வாசகர்கள் காத்திருக்கவில்லை. நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தேடிச் சென்று வாங்குபவர்கள் கிடையாது. எனவே எல்லா வேலையையும் விட்டுவிட்டு இதையே என்னால் முழுமையாகச் செய்யமுடியும். செய்தாலும் ஒரு மாதத்துக்கு எனக்கு அதிக பட்சம் 200 ரூ வரலாம். ஆம், இரு நூறு ரூபாய்தான். இதையே என்னைவிடப் பெரிய எழுத்தாளர், என்னைவிட அதிகம் மார்க்கெட்டிங்கில் உழைப்பவர் என்றால் மாதம் 400 ரூ வரலாம். ஆனால் இதே வேலையாக இருக்கவேண்டும். விடாமல் என் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதெல்லாம் இல்லையென்றால் அந்த 200 ரூபாயும் வராது. ஒரு மாதம் போராடி 3000 ரூ ராயல்டி பெற்றுக் காட்டினால் அடுத்த மாதமும் அதே பணம் வரும் என்பது நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்ன, சத்தியமாக வராது!

இப்போது கிருஷ்ண பிரபுக்கு வருவோம். அவர் சூப்பர் ஸ்டார். தினமும் எழுதிக் குவிப்பவர். ஆழமாக விரிவாக. அவர் ஒரு விஷயத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள பலர் காத்திருக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்று அவரை விடாமல் பின்தொடர்கிறது. என்று வைத்துக்கொள்வோம். ஒரு புத்தகம் வெளியானால் அச்சுப் புத்தகமென்றால் 1000 பிரதிகள் உடனே உறுதியாக விற்கும். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த மூலையில் யார் அவரது புத்தகத்தை ஆர்வமாக வாங்குவார்கள் என்று நமக்குத் தெரியாது. எப்படி வாங்குவார்கள் என்பதும் தெரியாது. தேடி வந்து வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், கிருஷ்ண பிரபுவின் பெயர் கண்ணில் பட்டதும் அப்புத்தகத்தை வாங்கும் கூட்டம் இன்னொரு பக்கம். அதாவது அவர்கள் கண்ணில் பட்டால் அவரது புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இங்கேதான் ஒரு பதிப்பகம் உங்களுக்குத் தேவையாகிறது. உங்களால் செய்யமுடியாததைப் பதிப்பகம் செய்யும். உங்கள் புத்தகத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு போய்ச் சேர்க்கும். நீங்கள் தினம் தினம் எழுதவேண்டிய தேவை இருப்பதால் எந்தப் புத்தகத்தை எங்கே லே அவுட் செய்வது, எங்கே அச்சிடுவது, எங்கே விற்பது, எப்படிப் பணம் வாங்குவது, பணம் திரும்ப வருமா, எங்கே ஸ்டாக் வைப்பது, எப்படி ரீ ப்ரிண்ட் செல்வது, யாரை வைத்து ப்ரூஃப் கரெக்ஷன் போடுவது என்றெல்லாம் அல்லாட வேண்டியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எதோ ஒரு நிலையில் நீங்களே அறியாத வண்ணம் உங்களது எழுத்தைப் பாதிக்கும். இதை நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நிச்சயம் சொல்கிறேன், இது உங்கள் எழுத்தைப் பாதித்தே தீரும். எனவே இச்சிடுக்குகளில் இருந்து நீங்கள் ஒதுங்கியே நிற்பது நல்லது. ஒரு பதிப்பகம் ராயல்டி தரவில்லை என்றால் மட்டுமே நீங்கள் அடுத்து என்ன என்று யோசிக்கவேண்டும். இல்லையென்றால் அப்பதிப்பகத்துடனேயே அல்லது சில பதிப்பகங்களுடனேயே நீங்கள் இருப்பதுதான் உங்களது நட்சத்திர அந்தஸ்துக்கு நல்லது.

இ புத்தகத்தை மட்டும் எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்வதும் இதே விஷயத்தைப் பொருத்ததுதான். நீங்கள் எழுதித் தள்ளும்போது அதை இ புத்தகமாக்குவது என்பது இன்னொரு வேலை. அதற்கும் ப்ரூஃப் ரீடிங் வேண்டும். அதை இ புத்தகமாக மாற்றவேண்டும். அல்லது வேர்ட் ஃபைலில் சரியாக லே அவுட் செய்யவேண்டும். அதற்கு ஒரு ஆள் வேண்டும். நீங்களே செய்தால் உங்கள் எழுத்து பாதிக்கப்படும். நீங்கள் 100 புத்தகம் எழுதி அதைப் பதிப்பகம் எடிட் செய்திருக்கும். அந்த எடிட் செய்த ஃபைலும் நீங்கள் தந்திருந்த திருத்தங்களும் வேர்ட் ஃபைலில் இருக்காது. உங்களுக்கு மறந்திருக்கலாம். அல்லது நீங்கள் கையில் எழுதி அதைப் பதிப்பகம் தட்டச்சிட்டிருக்கும். இப்படி ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றைய நிலையில் அமேஸான் என்பது உங்களுக்கு எந்த விதப் பணத்தையும் கொட்டிக் கொடுக்கப் போவதில்லை. என்னைப் போன்ற துக்கடா எழுத்தாளர்களுக்கு மாதம் 500 ரூ வந்தால் ஆஹோ ஒஹோ என்போம். ஆனால் நம் கிருஷ்ண பிரபு போன்ற நட்சத்திரர்களுக்கு மாதம் 1000 ரூ என்பது ஒன்றுமே அல்ல. ஏனென்றால் இன்றைய நிலையில் விற்பனை அவ்வளவுதான் நடக்கிறது. ஒரு பதிப்பகம் 100 புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், இ புத்தக விற்பனை மட்டும் அதிக பட்சம் மாதம் 20,000 ரூபாய்க்கு நடக்கலாம். (குத்து மதிப்பாக.) அதில் 15000 ரூ ஏதேனும் 10 புத்தகங்களில் நடந்த விற்பனை மூலம் கிடைத்திருக்கும். மீதி 5000 ரூ விற்பனை என்பது 90 புத்தகங்களில் நடந்திருக்கும். அந்த 90 புத்தகங்களில் ஒரு புத்தகம் நீங்கள் எழுதியதாக இருந்தால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று யோசியுங்கள். அச்சுப் புத்தகத்தைக் கைவிட்டுவிட்டு இந்த தொன்னூறுக்குள் ஒன்றாவதன் பலன் என்று சிந்தியுங்கள்.

என்னதான் நட்சத்திர எழுத்தாளராக இருந்தாலும், அவரது அனைத்துப் புத்தகங்களும் ஒரே போல் விற்காது. அதுவும் தமிழில் – சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தக விற்பனை பற்றி எழுதுவதையெல்லாம் படித்திருந்தாலே விளங்கும் நாம் வாசிப்பிலும் புத்தகம் வாங்குவதிலும் என்ன நிலையில் இருக்கிறோம் என. எனவே அவரது 80% புத்தகங்கள் குறைவான விற்பனையையே ஈட்டித் தரும். 80-20 விதி கொஞ்சம் அங்குமிங்கும் ஊசலிட்டாலும் பொருந்தி வருவதைப் பார்க்கலாம். இந்நிலையில் இ புத்தகம் தரும் விற்பனை என்பது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது.

அப்படியானால் ஏன் ஒரு பதிப்பகம் இ புத்தகத்தை விற்பதையும் தானே செய்ய நினைக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள் ஒரு புத்தகத்தின் எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். அச்சுப் புத்தகத்துக்கு முதலீடு செய்கிறார்கள். கரெக்ஷன் போட்டு இறுதி வடிவத்தைத் தயாராக வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இ புத்தகம் செய்வது எளிது. அதற்கென ஒரு குழு இருக்கும். இ புத்தக விற்பனை மூலம் வரும் சிறிய தொகை ஒருவேளை பதிப்பகத்துக்கு உதவலாம். இதைத் தாண்டி வேறு காரணங்கள் இல்லை. என் கணிப்பில் ஒரு பதிப்பகம் இ புத்தகம் வேண்டாம் என்று சொல்வது எழுத்தாளர்களுக்கான தொல்லையே அன்றி வேறில்லை.

இப்போது என்னைப் போன்ற சிறு எழுத்தாளர்கள், இ புத்தக விற்பனையில் நிறையப் பணம் கிடைக்கும் என்று நம்பி, அச்சுப் புத்தகம் பதிப்பிட்டு ராயல்டி தரும் பதிப்பகத்தையும் விட்டுவிட்டு வந்தால், அது அவருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அதிலும் தீவிர இலக்கியவாதிகள் செய்யக்கூடாத தவறு இது. அச்சுப் புத்தக ராயல்டியும் குறைவாகத்தானே வருகிறது எனலாம். குறைந்த பட்சம் அச்சுப் புத்தகங்கள் உங்கள் வாசகர்கள் கண்ணிலாவது படும். இ புத்தகங்கள் இன்றைய நிலையில் யாரிடம் சென்று சேர்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இதுதான் நிலவரம்.

நாளை இ புத்தகங்கள் பெரிய அளவில் வளரலாம். அப்போதும் அது அச்சுப் புத்தகத்தை இல்லாமல் ஆக்காது. இப்போது உலக அளவில் இ புத்தகங்கள் பெரிய அளவில் அச்சுப் புத்தகங்களைத் தகர்த்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இ புத்தகங்கள் அச்சுப் புத்தகங்களைத் தாண்டி வளர்ந்தாலும், அச்சுப் புத்தகமே வேண்டாம் என்னும் பதிப்பாளர் மட்டுமே இ புத்தகத்தைத் தானே பதிப்பித்துக் கொள்ள முடிவெடுப்பது நல்லது. இல்லையென்றால் பதிப்பாளருடனே இருப்பதுதான் புத்திசாலித்தனமானது.

எந்நிலையிலும் அச்சுப் புத்தகங்கள் அவசியம் என்பதை மனத்தில் வையுங்கள். அச்சுப் புத்தகத்தையும் நாமே அச்சிட்டு விற்கலாம் என்பது மிகத் தீவிரமான ஒரு முடிவு. அதை ஜஸ்ட் லைக் தட் எடுக்காதீர்கள். ஒரு பதிப்பகம் நடத்தி புத்தக விற்பனை செய்து அதிகம் முதலீடு செய்து புத்தகத்தை அச்சில் வைத்திருந்து அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளிலும் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது சுலபமான காரியமல்ல.

இ புத்தகங்களில் 35% ராயல்டி, 70% ராயல்டி என்பதெல்லாம் ஒரு கணக்குதான். இவையெல்லாம் லட்சக்கணக்கில் விற்பனையாகும் புத்தகங்களுக்கு மட்டுமே ஒரு வேறுபாட்டைத் தரும். இதிலும் 35% ராயல்டி என்றால் இ புத்தகம் கிடைக்கும் நாடுகள் மற்றும் 70% ராயல்டி என்றால் புத்தகம் கிடைக்கும் நாடுகள் என்ற வேறுபாடுகளெல்லாம் உள்ளன என்று நினைக்கிறேன்.

சரியாக அமேஸான் ராயல்டி தந்துவிடும் என்பது உண்மைதான். இதுதான் வலுவான வசீகரமான காரணம். தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை மட்டும் ஓர் எழுத்தாளன் யோசித்தால், இதில் உள்ள வசீகரத்தைக் கண்டு ஏமாறமாட்டார். அச்சுப் புத்தகமும் இ புத்தகமும் பதிப்பகம் விற்று, அதற்கான பணத்தையும் பதிப்பகம் தருமானால் – கொஞ்சம் முன்ன பின்ன என்றாலும்!- அதில் வரும் ஒட்டுமொத்தப் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அதிலும் ஒரு ஸ்டார் எழுத்தாளர் செய்யக்கூடாத தவறு – பதிப்பகம் ஆரம்பிப்பதும் இ புத்தகத்தைத் தானே போடுவதும்.

ஒட்டுமொத்தமாக இப்படி வரையறுக்கிறேன்.

* எழுத்தாளர்கள் வேலை எழுதுவது. முதன்மையானதும் கடைசியானதும் இதுதான். அடுத்த வேலை, ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதைக் கண்காணிப்பது.

* எப்படி விற்றாலும் உங்கள் புத்தகம் 100 தான் விற்கும் என்றால், நீங்களே பதிப்பகம் தொடங்கி நடத்தி விற்றுக் கொள்ளலாம்.

* நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று நீங்கள் நம்பினால் பதிப்பகம் நடத்தும் தவறை மறந்தும் செய்யாதீர்கள். அதே சமயம் ஒரு பதிப்பகத்திலிருந்து ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே உங்கள் புத்தகம் தொடர்ந்து அச்சில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

* பதிப்பகம் ஒழுங்காகப் பணம் தரவில்லை என்பதால் பதிப்பகம் ஆரம்பிப்பதாக இருந்தால் சரிதான். ஆனால் அது அத்தனை சுலபமானதில்லை என்பதையும், வேறொரு பதிப்பகம் நிச்சயம் ஒழுங்காகப் பணம் தரும் என்று வாய்ப்பு இருந்தால் அதை அணுகுவதே மேலானது என்பதையும் எப்போதும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

* இ புத்தக விறபனையை நீங்களே செய்து கொள்வது – உங்கள் புத்தகம் எப்படியும் 100 தான் விற்கும் என்றால் நல்லதுதான். ஆனால் உங்கள் புத்தகம் அச்சுப் புத்தகத்தில் 1000 பிரதிகள் விற்கும் வாய்ப்பு இருக்குமானால், அந்தப் பதிப்பகமே இ புத்தக உரிமையையும் கேட்குமானால் அவர்களிடமே இபுத்தக உரிமையையும் தருவதுதான் நல்லது. ஏனென்றால் இன்றைய நிலையில் அச்சுப்புத்தகத்தின் ரீச்சே முக்கியமானது.

* அச்சுப் புத்தகம் 100தான் விற்கும் என்றாலும் இன்னொரு பதிப்பகம் அதைப் பதிப்பிக்குமானால் அது இன்னமும் நல்லதுதான். அதே பதிப்பகம் இ புத்தகத்தையும் வெளியிட விரும்பினால் அப்பதிப்பகத்திடமே இ புத்தக உரிமையையும் தந்துவிடுவது நல்லது. ராயல்டி வருவதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். ராயல்டி வராத பட்சத்தில் நீங்கள் உங்கள் சொந்த முயற்சிக்குப் போவது சரியானது.

* உங்கள் புத்தகத்தை எந்தப் பதிப்பகமும் அச்சிடவில்லை என்றால், இ புத்தக மற்றும் அச்சுப் புத்தகத்தை நீங்கள் செய்துகொள்வதைப் புரிந்துகொள்ளலாம்.

* ஒரு பெரிய பதிப்பகம் இ புத்தக உரிமையைக் கோருவதில் எந்தப் பிழையும் இல்லை. அப்பதிப்பகத்தின் அச்சுப் புத்தக ரீச் உங்களுக்குத் தேவை என்றால் இதற்குச் சம்மதிக்கவும். இல்லையென்றால் விலகிவிடவும். கிருஷ்ண பிரபு மற்றும் நான் உதாரணம் இங்கே பொருந்தலாம். என்னைப் போன்ற எழுத்தாளர் விலகலாம். நஷ்டமில்லை. ஆனால் நட்சத்திர எழுத்தாளர் விலகக்கூடாது. நஷ்டம் அதிகம் உண்டாகும்.

* அமேஸானில் இன்றைய நிலையில் நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிய அளவில் பணம் வராது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நட்சத்திர எழுத்தாளர்களுக்கும்கூட அச்சுப் புத்தகத்தில் இருந்து வரும் பணத்துக்கும் அமேஸான் பணத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கலாம் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

* நாளை இந்நிலைமை மாறும் என்பது நிச்சயமான உண்மை. ஆனால் – நாளை என்றால் எப்போது என்பதிலும் மாறும் என்றால் எந்த அளவு என்பதிலும் வரையறுக்கமுடியாத நிலை உள்ளது. என் கணிப்பில் அடுத்த பத்து வருடத்தில் அச்சுப் புத்தக விற்பனையில் பாதியை மட்டுமே இ புத்தகம் எட்டி இருக்கும். அச்சுப் புத்தகத்தின் ஒட்டுமொத்த விற்பனைச் சரிவு இன்னொரு பக்கம் இருக்கும். இ புத்தக விற்பனையின் அதிகரிப்பு இன்னொரு பக்கம் இருக்கும். இருந்தாலும் பத்து வருடம் கழித்தும் அச்சுப் புத்தக விற்பனையில் பாதி அளவே இ புத்தக விற்பனை இருக்கும். வேறேதேனும் டெக்னிகல் புரட்சி நடக்காத வரையில் இதுவே நடக்க அதிக வாய்ப்புள்ளது. கிண்டில் கருவி இலவசம், இணையம் இலவசம் என்ற நிலையெல்லாம் வந்தால் கொஞ்சம் மாற்றம் இருக்கும். இ புத்தக விற்பனையும் அச்சுப் புத்தக விற்பனையும் ஒரே அளவில் இருக்கலாம். அதுவும் பத்து வருடங்களுக்குப் பிறகுதான்.

நாளை நம் புத்தகங்கள் இ புத்தகமாக இருப்பது முக்கியமானது. அதற்காக ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை இ புத்தகமாக வெளியிடவேண்டியதும் அவசியமானது. அதை ஒரு பதிப்பகம் செய்யாதபோது மட்டும் செய்தால் போதும்.

நாளையை நம்பி இன்றை விட்டுவிடாதீர்கள்.

சில பின்குறிப்புகள்:

01. நான் கிழக்கு பதிப்பகத்தில் இருக்கிறேன். இப்பதிவு என் தனிப்பட்ட பதிவு. கிழக்கு பதிப்பகத்துக்கும் இப்பதிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

02. நான் எந்த எழுத்தாளரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. எழுத்தாளர்களின் புத்தகம் கிடைப்பது மட்டுமே வாசகனாக என் ஆசை. அதைத் தாண்டி வாசகனாக எனக்கு எத் தேவையும் இல்லை.

03. யார் கருத்தையும் தகர்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை. என் கருத்து முழுக்கத் தவறென்று நீங்கள் சொன்னாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை ஒரு பதிவு என்று படித்து, அதில் ஏதேனும் யோசித்து, உங்கள் முடிவுப்படி நடந்தால், நல்லது. அதுதான் நோக்கமும் கூட. நன்றி. சுபம்.

04. எனக்குத் தமிழ் படிக்க வராது என்பதால், இதில் வரும் பின்னூட்டங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும் வருத்தம்தான் என்னை வாட்டுகிறது.

Share

கேளாய் த்ரௌபதாய்

கேளாய் த்ரௌபதாய் என்ற ஆவணப் படம் – சஷிகாந்த் அனந்தசாரி இயக்கியது. இன்று எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடைபெறுவதாக அறிந்தேன். அதன் போஸ்டர் கவனத்தைக் கவரவும் இன்று செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதன் ட்ரைலரை இணையத்தில் பார்த்தபோது அது கூடுதல் ஆர்வம் தருவதாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்கு நானும் மருதனும் சரியாக மியூசியம் தியேட்டரில் இருந்தோம்.

அப்போதுதான் அங்கே ப்ரொஜக்டரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாகத் தெரிந்தது. இயக்குநர் கொண்டு வந்திருந்த பென் ட்ரைவில் எதோ பிரச்சினையோ என்னவோ. அவர் வைத்திருந்த கேசட்டும் ஓடவில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ லேப் டாப்பில் இருந்த வீடியோவை ப்ரொஜக்டரில் இணைத்து, கொஞ்சம் போராடி, ஒருவழியாக படத்தைச் சரியாகத் திரையில் தெரிய வைத்தார்கள்.

அடுத்து ஆடியோ! என்ன செய்தாலும் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. மொபைலில் இருக்கும் ‘உண்மை சொன்னால் நேசிப்பாயா’ பாடலை ஸ்பீக்கரில் இணைத்தால் மிகத் துல்லியமாகப் பாடுகிறது. ஆனால் டாக்குமெண்ட்ரியின் ஆடியோவை சரியாக அது ஒலிபரப்பவில்லை. லேப்டாப்பில் எதோ பிரச்சினை என நினைக்கிறேன். இப்படியே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. இயக்குநர் நொந்துபோய்விட்டார். என்னங்க இது ஒழுங்கா செக் பண்ணி கொண்டு வரமாட்டீங்களா என்று மியூசியத்தின் பொறுப்பாளர்களை அவருக்கே கேட்காத குரலில் கேட்டுக்கொண்டிருந்தார். எதோ ஒரு கேபிள் இல்லாததுதான் பிரச்சினை என்று ஒரு பொறுப்பாளர் கண்டுபிடித்தார்.

அதற்குள் இந்த வெளியீட்டைப் பார்க்க வந்திருந்த ஒருவர் சத்தம் போட ஆரம்பித்தார். நாட்டுப்புறக் கலைக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கேட்டார். இயக்குநர், இது எதிர்பாராத பிரச்சினை என்று விளக்கினாலும், அதெல்லாம் மத்த எல்லாமே ஒழுங்கா நடக்குது, மலையாளம் ஹிந்தி பெங்காலி எல்லாம் பிரச்சினை இல்லை, எங்களுக்கு மட்டும் பிரச்சினையா என்றார். தான் (நாட்டுப்புறக் கலை நிகழ்த்தும்) அந்த கம்யூனிட்டியில் இருந்து வருவதாகவும் இது இந்திய அரசின் பிரச்சினை என்றும் சொன்னார். பொறுப்பற்ற தனம் என்றெல்லாம் சொன்னார். மீண்டும் எல்லாவற்றுக்கும் இந்திய அரசே காரணம் என்றார். ஆடியோவுடன் போராடிக்கொண்டிருந்த இளைஞர் பொறுமையாக, இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை, இது ஒரு டெக்னிகல் பிரச்சினை என்றார். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தக் கோபக்காரப் போராளி.

அத்துடன் நிறுத்தி இருக்கலாம். உண்மையில் அங்கே இருந்த அனைவருக்குமே இந்த ஆடியோ பிரச்சினை எரிச்சல் தருவாதகவே இருந்தது. ஒரு கூத்து தொடர்பான ஆவணப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தையே சிதைத்துவிட்டது. மருதன் பேயறைந்தது போலவே உட்கார்ந்து இருந்தார். அந்நேரத்தில் அந்தப் போராளி, “சரி இதெல்லாம் போதும். யாரு டைரக்டர்? அவரை பேசச் சொல்லுங்க கேப்போம். லைட்ஸ் ஆன், மைக் ஆன்” என்று சொல்லவும், இயக்குநர் தானே அந்த டைரக்டர் என்று சொன்னார். உடனே போராளி, “ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம கலாசாரம் எப்படி இருந்தது தெரியுமா தெரியாதா? நீங்க எடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் இதுலயே தெரியுதே… அப்ப நாம ஆடி பாடி பறவித் திரிந்தோம். அதெல்லாம் இருக்கா?” என்றெல்லாம் சொல்லத் துவங்கினார். உடனே நான், “என்னங்க இது, அவர் பேச்சைக் கேக்காமலயே இப்படி பேசுறது சரியா?” என்று குரல் கொடுத்தேன். அதுதான் இவங்க பிரிபரேஷன்லயே தெரியுதே என்று சொல்லிவிட்டார்.

ஒருவழியாக லேப்டாப்பை மாற்றி திரையிடலைத் துவங்கினார்கள். இயக்குநர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார். ஆனாலும் ஆடியோ தெளிவாக இல்லை. கூத்துக் கலைஞர்கள் பாடும்போது பின்னால் ரயில் ஓடும் சத்தம், ஃபேன் ஓடும் சத்தம், ஏரோப்ளேன் ஓடும் சத்தம் என என்னவெல்லாமோ கேட்டது. இந்தியப் பாரம்பரியத்தைக் காட்டி மருதனை நைஸாக ஹிந்துத்துவம் பக்கம் லவட்டிக்கொண்டு வரலாம் என்று பார்த்தால், ஆடியோ தந்த எரிச்சல் நான் மருதனுடன் கம்யூனிஸம் பக்கம் போய்விடுவேன் என்ற அச்சம் முளைத்த நேரத்தில் மருதனும் நானும் வெளியேறினோம்.

பாவம் இயக்குநர். இந்த அநியாயத்தை மியூசியத்துக்காரர்கள் செய்திருக்கக்கூடாது. இது போன்ற திரையிடலுக்கு அதன் ஆடியோ ரொம்ப முக்கியம். இணையத்தில் ஹெட்ஃபோனில் கேட்டபோது கூத்துக் கலைஞர்களின் குரலில் ஈர்க்கப்பட்டே நான் இத்திரையிடலுக்குச் சென்றேன். அவசியமானதே சரியாக இல்லை என்றால் அதைத் தொடர்ந்து பார்த்து என்ன செய்வது என்று எண்ணித்தான் பார்க்காமல் வந்தேன்.

ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து போராடி விளம்பரம் செய்து எல்லாரும் வந்து உட்கார்ந்திருக்கும்போது இது போன்ற பிரச்சினைகள் தரும் மன அழுத்தம் சொல்லமுடியாதது. எனக்கு இதில் சில அனுபவங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனாலும் அங்கே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒலி இரைச்சலாக இருந்ததால் வெளியேறிவிட்டேன். மீண்டும் திரையிட்டால் பார்க்கவேண்டும்.

Share

சென்னையில் நீர்ப்பற்றாக்குறை – தயாராவோம்

போர் வந்துவிட்டது. போரில் நீர் வற்றிவிட்டது.

சட்டையை ஒரு நாள் மட்டுமே அணிவேன் என்று ஜம்பம் காட்டாதீர்கள். அழுக்காகாத பட்சத்தில், குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்பட்சத்தில் ஒரு சட்டையை இரண்டு நாள் உபயோகிக்கலாம். அதற்காக உள்ளாடைகளையும் அப்படிச் செய்யலாம் என்று முடிவெடுக்காதீர்கள். கந்தையானாலும் கசக்கிக் கட்டு – இவற்றுக்கு மட்டும். (அபிராம் கருத்து: உள்ளாடை யாருக்கும் தெரியவா போது? என் பதில்: அப்ப நீ போட்டா என்ன போடாட்டா என்ன?)

தெருவுக்குத் தெரு மாநகராட்சி வைத்திருக்கும் கருப்புத் தொட்டிகளில் நீர் கிடைக்கும். முன்பெல்லாம் எப்போதுவேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம். நீர்ப் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க ரேஷன் முறையில்தான் நீர் கிடைக்கும். கிடைக்கும் நீரைப் பிடித்து சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடி நீருக்காக ஆர்.ஓ வைத்திருந்தால், நீர்ப் பற்றாக்குறைச் சமயங்களில் அதைத் தவிர்த்து கேன் தண்ணீர் குடிக்க வாங்கலாம். கேன் தண்ணீரின் சுத்தம் மேல் அவநம்பிக்கை உண்டாகுமென்றால், ஆர் ஓ வெளித்தள்ளும் உப்பு நீரை வீணாக்காமல் கழிப்பறை உபயோகங்களுக்கு அல்லது துவைக்கப் பயன்படுத்தலாம். (இதை எப்போதுமே செய்யலாம், நாங்கள் செய்கிறோம்.)

மாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்கினால் பணம் குறைவு. ஆனால் அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன. முதலில் நீங்கள் மாநகராட்சியில் பதிவு செய்திருக்கவேண்டும். பின்புதான் நீர் கிடைக்கும். போனில் அழைத்துப் பதிவு செய்வதற்குள் கிட்டத்தட்ட உயிர் போய்விடும். காலை 7 மணிக்கு அழைக்கவேண்டும். லைனே கிடைக்காது. கிடைத்தால் நீங்கள் எத்தனையாவது ஆள் என்பதைப் பொருத்தே நீர் சீக்கிரமோ தாமதமாகவோ கிடைக்கும். இல்லைன்னா சங்குதான். இப்போதெல்லாம் பதிவு செய்தால் சீக்கிரம் நீர் கிடைக்கலாம். இன்னும் வெயில் ஏற ஏற நிலத்தடி நீர் குறைய குறைய பதிவு செய்தும் நீர் கிடைக்க நான்கைந்து நாள் கூட ஆகலாம். பத்து பதினைந்து நாள்கள் ஆனதும் கூட உண்டு.

மாநகராட்சி வண்டி மூலம் நீர் வாங்க இணையம் மூலம் பதிவு செய்வது எளிது. இதுவும் சில சமயம் காலை வாரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதிக நேரம் குளித்தால் அழுக்கு நன்றாகப் போகும் என்பது ஒரு மாயை. 🙂 அதிக நேரம் குளிக்கப் பிடிக்கும் என்பது உண்மையாக இருக்கலாம். இருக்கும் ஒரு வாளி நீரை ஒரு நாள் முழுக்கக் குளிப்பது உங்கள் திறமை. ஆனால் குளிக்க ஒரு வாளி நீர்தான். (இடைக்குறிப்பு: இப்படி சென்னைல வாழணுமா என்று திருநெல்வேலி நாகர்கோவில்காரர்கள் ஓவர் சீன் போடாதீர்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறோம். ஏனென்றால், நாளை உங்களுக்கும் இதே கதிதான்.)

வெயில் காலங்களில் காலை மாலை இரண்டு வேளை குளிப்பேன் என்பதையெல்லாம் திருச்சி திருநெல்வேலியிலேயே கட்டி வைத்துவிட்டு சென்னை வண்டி ஏறுங்கள். சென்னையில் வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு ஒருவேளை குளிப்பதே பெரிய சாதனை என்பதறிக. (ஒருவேளை குளிப்பது தனக்காக இல்லையென்றாலும் பிறருக்காகவாவது அவசியம் என்றறிக.)

டம்ளர் குளியல் என்பதை சென்னைட்ஸ் புதியதாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல டெக்னிக் இது. அடுத்து ஸ்பூன் குளியலைக் கண்டுபிடிக்கவேண்டும். அரசுக்கும் ஊடகங்களுக்கும் சம்ஸ்கிருதப் பாடல் பாடுவதா, நடிகைக்கு என்னாச்சு என்பது போன்ற பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதால் இதை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்.

நன்றாக இல்லையென்றாலும் சுமாராகக் குளித்துவிட்டு நன்றாக செண்ட் அல்லது டியோடரெண்ட் போட்டுக்கொள்ளவும். எப்போதுமே இப்பழக்கம் நல்லது என்றாலும் இப்போது இது தேவை. செண்ட் கொஞ்சம் வீணானாலும் பரவாயில்லை, ஏனென்றால் அது எளிதில் கிடைக்கும். நீர் அப்படி அல்ல.

ஃப்ளாட்டில் தங்கி இருந்தால் பக்கத்து வீடு எதிர் வீடு கீழ் வீடு எனப் பெரிய சண்டை நடக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் சண்டைக்குத் தயாராக இருக்கவும். காலை சண்டை போட்டுவிட்டு ஒன்றாக ஒரு டீ சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை மீண்டும் சண்டைக்குத் தயாராக இருக்கவும்.

நமக்கே நீரில்லை இதுல மாட்டுக்கு வேறயா என்று தெருவில் வரும் மாடுகளுக்கு, நாய்களுக்கு நீர் வைக்காமல் விட்டுவிடாதீர்கள். கஷ்டத்தோடு கஷ்டம், அவற்றுக்கும் நீர் வைக்கவும்.

திருச்சி திருநெல்வேலியில் இருந்து மாமா மச்சான் அத்தான் அத்திம்பேரெல்லாம் குடும்ப சகிதம் சென்னையில் வந்து ஒரு மாதம் டேரா போடுவது கருட புராணத்தின்படி தண்டனைக்குரியது. சோறு போடலாம் நீர் தரமுடியாது. குளிக்க துவைக்க கழுவ என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நீர் தேவை என்பதைக் கண்டுபிடித்து ஆள்களால் பெருக்கிப் பார்த்தால் சென்னைட்ஸ் பாவம் என்று உங்களுக்கே புரியும். உங்கள் சொந்தத்தையும் பாசத்தையும் நவம்பர் டிசம்பர் ஜனவரியில் சென்னையில் வளர்த்தால் போதும். அப்போது புயலிலோ வெள்ளத்திலோ ஒன்றாக மிதக்கலாம், வாருங்கள்.

லோ வால்ட் பிரச்சினையில் ஏஸி ஓடாதது, சுட்டெரிக்கும் வெயிலில் எரிச்சல் வருவது, இரவில் கொதிக்கும் காற்றில் தள்ளிப் படுப்பது பற்றியெல்லாம் மே மற்றும் ஜூன் மாதங்களில் எழுதுவேன். காத்திருக்கவும்.

ரஜினி அறிவிக்கும் போர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். சென்னைக்கான போர் வந்தேவிட்டது. நாம்தான் நம் போரைச் சமாளித்தாகவேண்டும்.

பின்குறிப்பு: சென்னையில் வாழப் போகும் ஜோடிகளுக்கு மே மாதம் கல்யாணம் வைக்காதீர்கள். பாவம்.

Share

A day at IITM

நேற்று ஐ ஐ டி மெட்ராஸில் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 6வது வருடமாக நடக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நோக்கம் ஐ ஐ டி எப்படி இருக்கும், அங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கேயே சென்று அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிப்பது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில்.

ஐஐடியைச் சுற்றிக் காண்பித்தார்கள். தேர்ந்தெடுத்த சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். ஒட்டுமொத்த நிகழ்வையும் மாணவர்களே ஒருங்கிணைத்தார்கள் என்பதுதான் பெரிய விஷயம். டீன் மிக முக்கியமான விஷயங்களைத் தொகுத்துப் பேசினார். ஐஐடி சென்னை எப்படி மற்ற ஐ ஐ டிக்களை விட முன்னணியில் இருக்கிறது என்பதையும், ஆசியாவில் 51வது இடத்தில் இருக்கிறது என்பதையும், மற்ற 50 முன்னணி ஐ ஐ டிக்களிடம் இருந்து சென்னை எப்படி ஏன் பின் தங்குகிறது என்பதை ஆராய்ந்து அதை நீக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் சொன்னார்.

ஐ ஐ டியில் முதல் வருடம் படிக்கும் மாணவன், ஐ ஐ டியில் இருந்து இந்த வருடம் டிகிரியுடன் வெளியேறும் மாணவன், ஐ ஐ டியில் படித்து முடித்து புதிய தொழில் தொடங்கி சி இ ஓவாக இருக்கும் மாணவன் என்று மூன்று பேர் பேசினார்கள். ஐ ஐ டியில் நடக்கும் சாரங் மற்றும் சாரல் விழா பற்றிய சிறிய அறிமுக வீடியோவைக் காட்டினார்கள்.

பின்னர் கேள்வி பதில்.

கேள்வி பதில் நிகழ்வு படு லைவாக இருந்தது. ஐ ஐ டியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மறக்காமல் சொன்னது, இப்போது உங்கள் குழந்தைகளை ஐ ஐ டி ஐஐடி என்று படுத்தாதீர்கள் என்பதைத்தான். சிபிஎஸ்இயில் படித்த பிள்ளைகள்தான் அதிகம் வெல்ல முடியுமாமே என்ற கேள்விக்கு பதில் சொன்ன பெண் சட்டென்று தான் ஒரு ஸ்டேட் போர்ட் மாணவி என்றார். கைத்தட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. சிபிஎஸ் இ மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், ஐஐடிக்குத் தனியே கோச்சிங் செய்தால் போதும் என்றார்கள் ஐஐடி மாணவர்கள். அதிலும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கோச்சிங் எடுத்துக்கொண்டால் போதும் என்றார்கள். எல்லாவிதமான கோச்சிங் செண்டர்களும் ஒரே போன்றவைதான் என்றும் பாடங்களை ஒழுங்காகப் படித்து ஐஐடி கோச்சிங் மெட்டீரியலை ஒழுங்காகப் போட்டுப் பார்த்தாலே போதும் என்றும் சொன்னார்கள். இரண்டு வருடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒழுங்காகப் படித்தால் ஐ ஐடியில் இடம் கிடைக்கும் என்றும் அப்படி இடம் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையே மாறும் என்றும் எனவே அந்த இரண்டு வருடம் அப்படிப் படிப்பது வொர்த் என்றும் சொன்னார் ஒரு மாணவி.

பல பெற்றோர்களின் கண்களில் தெரிந்த கனவு, எப்படியாவது தன் பிள்ளைகளை ஐஐடியில் சேர்த்துவிடவேண்டும் என்பதுதான். அதிலும் அங்கிருக்கும் சின்ன சின்ன மாணவர்கள் எல்லாம் மிக விவரமாகவும் தெளிவாகவும் பேசுவதைக் கேட்ட பெற்றோர்களுக்கு இந்தக் கனவு ஆயிரம் மடங்கு கூடியிருக்கும் என்றே நினைக்கிறேன். ஐஐடியன் என்று அவர்கள் பெருமிதத்தோடு முதல் வருடத்திலேயே சொல்லப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அலுமினி மற்றும் சூழல் அவர்களை ஐஐடியன் என்னும் சொல்லுக்குத் தகுதி உடையவர்களாகத் தயார்ப்படுத்திவிடுகிறது.

சிபிஎஸ் இ முறையில் படிப்பது நிச்சயம் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்குப் பெரிய அளவில் உதவலாம் என்றே நினைக்கிறேன்.

முக்கியமான விஷயம், ஐஐடியில் ஒருநாள் நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவில்லை. ஜனகனமன மற்றும் ஓம் கணபதி சரஸ்வதி என எந்தப் பாடலும் பாடப்படவில்லை. 🙂 நான் தான் வாயில் வந்த எதோ ஒரு பாடலை முனகிக்கொண்டிருந்தேன் என்பதைத் தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

பின்குறிப்பு: அங்கேயும் ஒருவர் வந்து பத்ரியின் பதிவைத் தொடர்ந்து படிப்பதாகவும் அதைப் பார்த்துத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்ததாகவும் சொன்னார். 🙂

Share

Mom – Hindi

மாம் (ஹிந்தி)

இத்தனை‌ திறமையான நடிகை ஸ்ரீ தேவி‌ இத்தனை‌ சீக்கிரம் இறந்திருக்கவேண்டாம். அடிப்படையில் தமிழ் நடிகையாக இருந்தும் அலட்டலில்லாமல் அதே சமயம் அட்டகாசமாகவும் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதி வேற லெவல். இரண்டாம் பாதி மக்களின் மனசாட்சி. நியூட்டன், ஹைவே போன்ற படங்களை இப்படிப் புரிந்துகொள்வது சரியெனத் தோன்றுகிறது. எல்லாம் கைவிடும் நேரத்தில் கற்பிதங்களே வழித்துணை. கிட்டத்தட்ட கடவுள்.

இசை ரஹ்மான். பின்னணி இசை இவருடன் இன்னொருவரும். அந்தப் பெண் காரில் கடத்தப்படும் காட்சியின் பின்னணி இசையும் படமாக்கலும் மிரட்டல்.

நவாசுதின் சித்திக், அக்‌ஷய் கன்னா எல்லாருமே கச்சிதம்.

பார்க்கவேண்டிய திரைப்படம். ஒரு பழிவாங்கும் படத்தை சிறப்பான மேக்கிங்கில் கலக்கி இருக்கிறார்கள். தமிழ்ப் படங்கள் இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி. புலி போன்ற கொடுமைகள் அவருக்கு நிகழ்ந்தாலும், இங்கிலீஷ் விங்கிலீஷும் மாம் படமும் மிக முக்கியமானவை. அவர் திறமைக்குச் சான்று. என்றென்றும். ஓம் சாந்தி.

Share

கமல் அரசியல்

கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் – பூ அல்ல விதை – இந்த விளையாட்டெல்லாம் மலையேறி ஆண்டுகள் பலவாகிவிட்டன. கருணாநிதி இதையெல்லாம் மாஸ்டர் செய்து, அவருக்கே போரடித்து, அது மக்களுக்கும் போரடிக்கிறது என்று உணர்ந்து, கட்டுப்படுத்திக்கொண்ட வார்த்தை விளையாட்டை, கமல் தொடங்கி இருக்கிறார். இது போன்ற அறுவைகள் தரும் எரிச்சலெல்லாம் சொல்லி முடியாது.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பார்த்ததுபோல, பேசிப் பேசியே டெபாசிட் இழக்கப் போகிறவர்களின் காலத்தில் இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும், கருணாநிதியின் அரசியல் ஓய்வுக்குப் பிறகும், சோபை இழந்த தொலைக்காட்சி ஊடகங்கள், ரஜினி மற்றும் கமல் வருகையை ஒட்டி, சிக்கினாய்ங்கடா என்று ஓவர் கூச்சல் போடுகின்றன. தினம் தினம் கமல் மற்றும் ரஜினி சொல்லும் விஷயத்தை ஒட்டி வெட்டி விவாதங்கள். இதில் நான் பார்த்தது என்னவென்றால், கமல் பற்றிய விவாதமெல்லாம் தூர்தர்ஷனில் வரும் அஞ்சலி இசை நிகழ்ச்சிகள் போலவும் ரஜினி பற்றிய விவாதம் தீப்பொறி பறப்பது போலவும் தோன்றுகிறது இது என் தோற்ற மயக்கம்தான் 🙂 இத்தனைக்கும் அத்தனை ஊடகங்களும் கிட்டத்தட்ட கமலுக்கு ஆதரவாகவும் ரஜினிக்கு எதிராகவுமே இருக்கின்றன. ரஜினிக்கு இது பெரிய மாரல் சப்போர்ட். இப்படியே இருந்தால் ரஜினிக்கு ரொம்ப நல்லது. 🙂

கலாம் பெயரைச் சொல்லி இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ரஜினியும் கமலும் நம்பினால் அதைவிட ஏமாளித்தனம் வேறெதுவும் இல்லை. அப்துல் கலாமை எல்லாருக்கும் பிடிக்கும். பொதுவாக. அவரே அரசியலில் நின்றிருந்தால் டெபாசிட் போயிருக்கும். எனவே யாரை எதற்காகப் பிடிக்கிறது என்பதறிந்து அரசியல் செய்யவும். ஆத்மார்த்தமாக அப்துல் கலாமின் புகழ்பாடுவதெல்லாம் வேறு. அது அவரவர் தேர்வு. அரசியலில் அவரை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தால், அரசியலின் அரிச்சுவடியே இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசியல் பேய் இன்னும் உங்களை செவுளோடு சேர்த்து அறையவில்லை என்று அர்த்தம். சீக்கிரம் அடிக்கும்.

Share