இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்
1987. சேரன்மகாதேவியில் தீ பற்றிக் கொண்டது. தீ என்றால் அடங்கும் தீ அல்ல இது. சினிமா தீ.
நடுத்தெருவுக்கு அம்பிகா வந்துருக்காளாம் என்ற செய்தியை முழுதாகக் கேட்பதற்குள், அம்பிகா என்றால் யார் என்றே தெரியாத டிரசர் பாண்டிக் குளுவான்களெல்லாம் மூச்சிரைக்க நடுத்தெருவுக்கு ஓடினோம். ஊர்ல பெரிய நாட்டாமை நாமதான், நமக்கே தெரியாம அம்பிகா வந்துருக்காளா என்று ஆசையாகப் பார்த்தால், வழக்கமாக வாசல் தெளித்துக் கோலம் போடும், இன்றோ நாளையோ பாட்டிகள்தான் கண்ணில் பட்டார்கள்.
நடுத்தெருவுல இல்லையாம், காந்தி பார்க் பக்கத்துலயாம். ஓடு காந்தி பார்க்கிற்கு. அங்கே எப்போதும் சுற்றித் திரியும், சேர்மாதேவிக்கே உரிய மொத்தமான நான்கைந்து காக்காய்கள் கூட அன்று அங்கே இல்லை.
அப்போது எங்களுடன் சுற்றித் திரிந்த வில்லேஜ் விஞ்ஞானி ஒருத்தன் சொன்னான், ‘எப்பவும் பரபரப்பா இருக்க நம்ம ஊரு இப்படி ஆள் அரவமே இல்லாம கெடக்குன்னா, எங்கயோ நிச்சயமா ஷூட்டிங் நடக்குல.’ ஊரைச் சல்லடை போட்டுத் தேட முடிவு செய்தோம். ஆனால் எங்கே ஷூட்டிங் நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தினம் தினம் ஏதாவது செய்தி மட்டும் வரும். அங்கிட்டு ஷூட்டிங்காம், இங்கிட்டு ஷூட்டிங்காம், பிரபு வந்துருக்கான், சிவகுமார் வந்துருக்கான், அம்பிகா வந்துருக்கா, நானே என் கண்ணால பாத்தேன் என்று யாராவது சொல்வார்கள். ஆனால் எங்கள் கண்ணில் எதுவும் படவே இல்லை.
கல்லுப்பட்டியில் படித்துக்கொண்டிருந்த நான், லீவிற்கு சேர்மாதேவி வந்திருந்தபோது நடந்தது இது. சரி, நமக்கு ஷூட்டிங் பார்க்க கொடுப்பினை இல்லை என்ற முடிவுக்கு வந்த போது, அவசர அவசரமாக வீட்டுக்குள் வந்த அம்மா சொன்னாள், ‘போலிஸ் லயன்ல ஷூட்டிங் நடக்காம்!’ அடுத்த நொடி நான் பஞ்சாய்ப் பறந்தேன். என்னுடன் பல நண்பர்களும் வந்தார்கள்.
போலிஸ் லயன் என்றுதான் நினைக்கிறேன். கீழ முதல் தெருவுக்குக் கடைக்கோடியில் இருக்கும் ஓர் இடம் என்ற நினைவு. கூட்டமானால் கூட்டம். சிலர் அங்கு காவலுக்கு நின்று கொண்டு, யாரையும் மேற்கொண்டு வராமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காமாட்சி கோவில் பக்கமாய்ச் சுற்றி வந்து பின்பக்கமாக உள்ளே நுழைந்து ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம்.
அங்கே பார்த்தால், கூட்டத்தில் என் பாட்டி! அப்போதே என் பாட்டிக்கு 70 வயதிருக்கும். நான் வருவதற்குள் வந்துவிட்டிருக்கிறார். அதுவும் சிமிண்ட் நடைபாதையில் பல பாட்டிகளுடன் அமர்ந்திருக்கிறார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.
பிரபுவும் அம்பிகாவும் வெளியே வருவார்கள், பார்த்துவிடலாம் என்று காத்திருந்தோம். நேரம் ஆனதுதான் மிச்சம். அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லை. கேமராமேன், டைரக்டர், லைட் பாய் என்று யார் யாரெல்லாமோ அங்கும் இங்கும் பரபரப்பாக நடக்கிறார்களே தவிர, ஒரு நடிகரும் வெளியே வரவில்லை.

நாங்கள் சோர்ந்து போன நேரத்தில், கூட்டத்தில் ஒரே கூச்சல், ஆரவாரம். பிரபு வெளியே வந்தார். ஏல, பிரபுல என்று சொல்லவும், அனைவரும் ஆச்சரியமாக பிரபுவைப் பார்த்தோம். கல்யாணக் கோலத்தில் இருந்தார். ஒருத்தன் கேட்டான், தனியாவால வந்துருப்பான், இல்ல கூட சிவாஜி வந்துருப்பானா என்று. வில்லேஜ் விஞ்ஞானி அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை.
பிரபு அனைவரையும் பார்த்துக் கையசைக்கவும், ஒரே கைதட்டல். பிரபு ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்தபடி, இரண்டு கைகளால் தனக்குள்ளே குத்திக் கொண்டபடி, சிரித்தபடி இருந்தார். அதைப் பார்த்த என் பாட்டி சத்தமாக, ‘நீ நடக்கறது உன் அப்பா நடக்கற மாதிரி இருக்குப்பா’ என்றார். பிரபு ஆஹான் ஆஹான் என்று கட்டைக்குரலில் பதில் சொல்லிச் சிரித்தார். வீட்டுக்குள்ள அமுக்குளி மாதிரி இருக்கிற பாட்டி தெருவுல என்னா போடு போடுது என்று சந்தோஷமாக இருந்தது.
ஒரு வழியாக மாலை 3 மணி வாக்கில் ஷூட்டிங் ஆரம்பித்தது.
ஆனால் அம்பிகா வரவில்லை. பிரபுவுடன் வேறொரு பெண் வந்தார். தூரத்தில் இருந்து எங்களுக்கு அது அம்பிகா இல்லை என்று எங்கள் யாருக்கும் உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை. எங்கள் பரிதவிப்பைப் பார்த்த ஒருவர் சொன்னார், இது அம்பிகா இல்லடே, ராது, அறிமுகமாம். வில்லேஜ் விஞ்ஞானி கேட்டான், அறிமுகமா புதுமுகமா என்று. ரெண்டும் ஒன்னுதாம்ல என்றார் அவர். அதற்கும் அவன் என்னவோ சொல்ல, ஷூட்டிங் வேகத்தில் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை.
காட்சியின் படி, ஒரு மாட்டுவண்டியில் ராதுவும் பிரபுவும் வந்திறங்க வேண்டும். அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்து வரவேண்டும். ஒரு பெண் ஆரத்தி எடுப்பார்.
ராதுவும் பிரபுவும் மாட்டு வண்டியில் இருந்து இறங்குவதை மட்டும் பத்து முறை எடுத்திருப்பார்கள். இருவரும் நடந்து வரும் காட்சியை 30 முறை எடுத்தார்கள். என்ன எழவுடா இது, நடந்து வீட்டுக்குள்ள வர்றதுக்கு எதுக்கு இத்தனை எடுக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது. இதில் ஒருவர் விடாமல் கோழியை தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருக்க, இன்னொருவர் புகை போட்டுக் கொண்டிருந்தார்.
அவுட்டோரில் அன்று மொத்தமாக நடந்த ஷூட்டிங்கே அவ்வளவுதான். இதற்கே மாலை ஆகிவிட்டது. கூட்டம் கலைந்தது.
ஒருவழியாக ஷூட்டிங் பார்த்துவிட்டேன் என்ற சந்தோஷம் எனக்கு. படம் ஒருவர் வாழும் ஆலயம். அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் ராமர் கோவிலில் ஷூட்டிங்காம், சிவகுமார், அம்பிகா வந்திருக்கிறார்களாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் போகவில்லை.
அந்தப் படம் 1988ல் வெளியானது. ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் முதல் பாடலாக மலையோரம் மயிலே போட்டார்கள். பாடல் அள்ளிக்கொண்டது. அதில் வரும் நதியெல்லாம் சேர்மாதேவியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டேதான் பார்த்தேன். படம் வெளியாகி சில நாள்கள் கழித்துத்தான் படம் பார்த்தேன். படம் முழுக்க, எப்படா சேர்மாதேவி வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தக் காட்சியும் வந்தது.
இந்தக் காட்சியை நான் ஷூட்டிங்கின் போதே பார்த்திருக்கிறேன் என்று மதுரை நண்பர்களிடம் சொல்லிப் பீற்றிக்கொண்டதில் நான்கைந்து நாள் கெத்தாக இருந்தேன்.
படத்தில் வரும் இடமெல்லாம் சேர்மாதேவிதான் என்று நானே கற்பனை செய்துகொண்டேன். அடுத்த தடவை சேர்மாதேவி போனபோது, அதில் பல இடங்கள் அம்பாசமுத்திரம் பக்கம் என்று சொல்லவும் புஸ்ஸென்றாகிவிட்டது. சேர்மாதேவியில் தற்கொலை முடிவெடுக்கும் ராது எந்த ரயிலின் முன் பாய்கிறார் என்றபோது, அது கல்லிடைக்குறிச்சி என்றார்கள். நடந்தேவா அவ்வளவு தூரம் போனார்? தலை சுற்றிப் போனது. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் படத்தில் கடல் வந்ததும் நினைவுக்கு வந்தது. அடக் கண்றாவியே என்று தோன்றிவிட்டது.
அடுத்த இரண்டு மாதத்துக்கு எந்தப் படம் பார்த்தாலும், இதை எப்படி எடுத்துருப்பாங்க என்றே யோசிக்கத் தோன்றியது. படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் போனது. இனி ஷூட்டிங்கே பார்க்கக் கூடாது என்று தோன்றிவிட்டது.
இப்போதும் ஒருவர் வாழும் ஆலயத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, படச் சட்டத்துக்குள் வராத, ஜஸ்ட் சில அடிகள் தள்ளி சிமிண்ட் தரையில் அமர்ந்திருக்கும் பாட்டியை மனம் தேடும். பாட்டி பிரபுவை சிவாஜி மாதிரியே நடக்கறப்பா என்றது காதில் ஒலிக்கும்.
பின்குறிப்பு: அந்தப் படத்தில் வந்த ராதுதான், நிழல்கள் படத்தில் நடித்தவர் என்பது, எனக்குப் படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் படம் நிழல்கள் சரியாகப் போகவில்லை என்பதால் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் போல. அறிமுகமா புதுமுகமா என்று கேட்ட வில்லேஜ் விஞ்ஞானி நினைவுக்கு வந்தான்.