நெருங்கி வரும் இடியோசை நாவலின் ஒலி வடிவம். முழுமையாகக் கேட்பது எப்படி?
ஆராலிட்டி ஆப் அல்லது கூகிள் ஆடியோ ப்ளே புக் அல்லது ஸ்பாட்டிஃபை அல்லது ஸ்டோரி டெல்லில் கேட்கலாம்.
நெருங்கி வரும் இடியோசை நாவலின் ஒலி வடிவம். முழுமையாகக் கேட்பது எப்படி?
ஆராலிட்டி ஆப் அல்லது கூகிள் ஆடியோ ப்ளே புக் அல்லது ஸ்பாட்டிஃபை அல்லது ஸ்டோரி டெல்லில் கேட்கலாம்.
நீஸெவின் வேர்க்கனி – மயிலை ஜி சின்னப்பன் எழுதிய சிறிய நாவல். தீவிரமான மொழி. எனக்கானதல்ல. ஒவ்வொரு பத்தியும் படித்து முடித்த போது என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தனித்தனியே யோசிக்க வேண்டி இருந்தது. கோணங்கியின் எழுத்தளவுக்கு வெறுமை கொண்டதல்ல என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். தீவிரமான வாசனுக்கானது என்றாலும் கூட, ஒட்டுமொத்த படைப்பைப் படித்து முடிக்கும் போது என்ன புரிந்து கொண்டோம் என்பதில் ஒரு சவால் இருக்கும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது? எல்லோரும் எழுதிச்செல்லும் களம் என்றில்லாமல் புதிய களம் புதிய நிலம் என்பதெல்லாம் வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது முழுமையாகப் புரிந்தது என்றும் சொல்வதற்கில்லை. மொத்தமாகப் புரியவில்லை என்று நிராகரிக்கவும் இயலவில்லை. சிறிய நாவல் என்பதும் இரண்டு பக்கத்துக்கு உள்ளான சிறிய சிறிய அத்தியாயங்கள் என்பதும் மிகப் பெரிய மன நிறைவைத் தந்தன!
கிஷ்கிந்தா காண்டம் (M) – அட்டகாசமான திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லக்கூடிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி விட்டார்கள். படம் எடுத்த விதமும் காட்டின் சூழலும் என்ன நடந்தது என்பதை நாம் கணித்து விடவே கூடாது என்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் அசாத்தியமான திறமையும் அட்டகாசம். ஆசிஃப் அலியின் நடிப்பு பிரமாதமோ பிரமாதம். மற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். மலையாளத்தில் மட்டும் பார்க்கவும். தமிழில் பார்த்தால் நிச்சயம் பல்லிளித்து விடும்.
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.
ஆங்காரம் நாவல் கிண்டிலில் வாசித்தேன். ஏக்நாத் எழுதியது. கதை பல இடங்களில் அலை பாய்வதைக் குறைத்திருக்கலாம். நெல்லை வழக்கும் களமும் ப்ளஸ். வாய்மொழிக் கதைகளுக்குப் பின்னே நாவலுடன் ஒரு தொடர்பு இருப்பது முக்கியம். இல்லையென்றால் அவை வெற்றுக் கதைகளாகவே எஞ்சும் அபாயம் உள்ளது. நாவல் முழுக்க வெளிப்படும் மண் சார்ந்த அனுபவத்துக்காக வாசிக்கலாம்.
யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.
தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.
இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.
அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.
அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.
எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.
போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.
இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.
முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.
படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.
லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.
ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.
வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.
மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.
சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம். நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.