ராமதாஸ் அன்புமணி மோதல்.
யார் கைக்குச் செல்லும் பாமக?
விவாதம்.
Eleven (T) – இந்தப் படம் மிக நல்ல படம் என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றால் தமிழ்ப் படங்களைப் பார்த்து பார்த்து தமிழர்கள் எத்தனை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் என்பது புரியும். படத்தின் முதல் ஒரு மணி நேரம் தாங்க முடியாத அறுவை. பின்பு போனால் போகிறது என்று மெல்ல வேகம் எடுக்கத் தொடங்குகிறது. அப்போதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அடுத்தடுத்து என்ன வரும் என்று வசனத்திலிருந்து கதை முதல் அத்தனையையும் சொல்லிக் கொண்டே வர, அனைத்தும் அப்படியே திரையில் வந்தன.
கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். படம் பார்க்கிறவனை எல்லாம் பைத்தியக்காரன் என்று இயக்குநர் நினைத்தால்தான் அப்படி ட்விஸ்ட் வைக்கத் தோன்றும். அந்த டிவிஸ்ட்டுக்கு அடுத்து இன்னொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் ஓகே. ஆனால் இதைப் போன்ற படங்கள் எல்லாம் எரிச்சலைத் தருகின்றன.
சின்ன வயதில் சிறுவர்கள் தெரியாமல் செய்ததற்கு இத்தனை கொடூரமான தண்டனை. இத்தனைக்கும் அவர்கள் பெரிய அளவில் எதையும் செய்துவிடவில்லை. கல்லூரி என்று காண்பித்திருந்தால் கூட ஓகே. பள்ளியில் பசங்களுக்கு என்ன தெரியும்? அதற்காக 11 பேரை ஒரு சைகோ கொல்கிறான். அவன் மேல் அத்தனை பரிவு வரும்படி திரைக்கதை. அந்த டீச்சர் சரியான பைத்தியக்கார டீச்சராக இருக்க வேண்டும். முதலில் அந்த டீச்சரை உள்ளே தள்ள வேண்டும. என்ன ஆனாலும் பெஞ்சமினுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்கிறார். 10 பேர் இறந்தது அந்தப் பெண்ணுக்குத் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெஞ்சமின் உயிர் போய் விடக் கூடாது என்பதில் அத்தனை அக்கறை.
படத்தில் வில்லன் பெயரை பெஞ்சமின் என்றதும் ஆஹா கிறித்துவப் பெயர் வைத்திருக்கிறார்களே, அதுவும் பிரபு சாலமன் தயாரிப்பிலா என்று ஆச்சரியப்பட்டேன். பெஞ்சமின் கொலை செய்வது சரிதான் என்று கடைசி வரை பார்வையாளரை நம்ப வைக்கும்படியான திரைக்கதை எழுதி, அவனைத் தியாகியாக்கி… நல்லா உழைக்கறீங்கப்பா.
நடித்து விடக்கூடாது என்பதில் ஹீரோ மிகக் கவனமாக இருந்திருக்கிறார். ஹீரோயின் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்தடுத்த படங்களில் துணை நடிகையாக நடிக்கப் போவது நல்லது. ஹீரோ மெல்ல நடந்து வருகிறார் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போவதற்குள் இரண்டு முறை பார்வர்ட் செய்து படம் பார்த்தால் சீக்கிரம் படத்தை பார்த்து முடித்து விடலாம். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
ஆலப்புழா ஜிம்கானா (M) – சுமார். ஆனா…
வித்தியாசமான கதைக் களம். ஆனால் கதையே இல்லை. முழுக்க முழுக்க இளமைக் கொண்டாட்டம். இளைஞர்கள் கூட்டம். எத்தனை எத்தனை இளைஞர்கள்! கலக்குகிறார்கள். படத்தில் முதியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். படத்தின் முதல் ஒரு மணி நேரம் பட்டாசு. நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கின்றன. அதிலும் ஆலப்புழா ஜிம்கானா குத்துச் சண்டை வளையத்துக்குள் இறங்கத் தயாராகும்போது பாடும் பாடல் – அப்படி ஒரு சிரிப்பு வந்தது எனக்கு. ஆனால், படம் பாக்ஸிங் களத்துக்குள் வந்ததும் அதே வைப் தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் சலிப்பாகிறது. அதன் பின்னர் படம் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறது. நஸ்லேன் காஃபூர் நடிப்புக்காகவும், படத்தின் கேமரா மற்றும் எடிட்டிங்கிறாகவும் நிச்சயம் பாருங்கள்.
படக்களம் (M) – சுமார். ஆனால்…
படம் பார்க்க நினைச்சது ஒரு குத்தமாய்யா! மண்டையை இப்படிக் குழப்பி விட்டீங்களே. இவனுக்குள்ள யாருன்னு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே படம் பார்த்தேன். கதை பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். அந்தத் திறமையைத் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.
தமிழில் மரகத நாணயம் திரைப்படத்தில் இப்படி ஒரு பிளாட் உண்டு. அதற்காகவே அந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த யோசனையை இந்தப் படத்தில் இன்னும் ஆழமாக விரிவாகக் கையாண்டு இருக்கிறார்கள். பல காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன. ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டத்தில் போதும்டா உங்க விளையாட்டு என்று தோன்றாமல் இல்லை
இப்படி ஒரு கதையை யோசித்ததற்காகவே இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள். குறிப்பாக, குழந்தைகளுடன் பாருங்கள். தமிழில் இந்தக் கதை வந்திருந்தால் ஆபாசமாக ஒரு காட்சியாக வைத்திருப்பார்கள். அப்படி ஆபாசமான காட்சி வைப்பதற்கும் ஏற்ற பிளாட்தான் இந்தத் திரைப்படம். ஆனாலும் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. மிஸ் செய்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். அல்லது அப்படி ஒரு காட்சி தேவை இல்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். மூளை கழன்று போகும் அனுபவம் பிடிப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென்று ஓர் எண்ணம். அம்மாவை நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்பாவை நாம் நினைத்துக் கொள்கிறோமா என்று. அந்த நினைப்பே எனக்குள் பெரிய சங்கடத்தையும் ஒரு விதிர்விதிர்ப்பையும் தோற்றுவித்து விட்டது.
அம்மாவுக்கு இணையாக அப்பாவும் என்றும் போற்றத் தக்கவர். மறக்க முடியாதவர். மறக்கக் கூடாதவர். அன்பே உருவானவர். எளிமையானவர். ஒப்புக்காகப் பாசம் வைக்காமல், பகட்டுக்காகப் பாசம் பாசம் என்று பேசித் திரியாமல் அனைவரது மேலும் உண்மையான பாசம் வைத்தவர். தான் தாழ்வுற்றிருந்த போதும் தனது நிலையில் உயர்ந்திருந்த போதும் யாருக்கும் எந்தக் காலத்திலும் தீங்கு நினைக்காதவர். எதிராளிகளுக்குத் தன்னைப் போலவே கள்ளம் கபடம் தெரியாது என்று ஏமாந்தவர். அந்த ஏமாற்றத்திலும் அவரே வென்று நின்றவர். சூது வாது தெரியாத குழந்தை போன்றவர். ஐந்து நிமிடத்துக்கு மேல் கோபத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாதவர். யார் மீதாவது கோபம் கொண்டுவிட்டால் தன் மேல் தவறே இல்லாத போதும் தான் கொண்ட கோபத்துக்காகக் குற்றவுணர்ச்சி கொள்ளும் ஓர் அதிசயப் பிறவி.
ஆம் என் அப்பா உண்மையிலேயே அதிசயமானவர்தான்.
அவரது குடும்பப் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதாம்! இதில் இரு கேள்விகள் எழுகின்றன. மற்ற குடும்பத்துப் பெண்கள் வந்தால் பரவாயில்லை என்ற தொனி வருகிறதே, அதற்கு என்ன பொருள்? அதே குடும்பத்து ஆண்களுக்கு வர உரிமை இருக்கிறது என்றால், அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு அதே உரிமை இல்லையா? இதையெல்லாம் பெண்ணியவாதிகள் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய் விடுவார்கள்.
அப்புறம் ராமதாஸ் சத்தியம் செய்தது என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள், வாரிசு அரசியல் வராது என்றுதானே? எப்போது குடும்பத்துப் பெண்கள் வர மாட்டார்கள் என்று சொன்னார்? இது என்ன புதுக் கதை?
அப்படியே ஒருவேளை குடும்பத்துப் பெண்கள் வர மாட்டார்கள் என்றுதான் சத்தியம் செய்து இருந்தாலும் சௌமியாவுக்குத் தேர்தலில் நிற்க இடம் தந்தது ஏன்? அப்போதே சத்தியத்தை மீறி விட்டாரே… ஒரே சத்தியத்தை ஒருமுறை மீறிய பிறகு எத்தனை முறை மீறினால் என்ன?
ஒருவேளை மருமகள் வேறொரு குடும்பம் என்று லாஜிக்காக நினைக்கிறாரா?
இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. அரசியலுக்கு வர மாட்டோம் என்று குடும்பத்துப் பெண்கள்தானே சத்தியம் செய்ய வேண்டும்? இவர் சத்தியம் செய்தால் அதை ஏன் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்? உதாரணமாக, ‘என் அக்கா நாளை முதல் உருளைக்கிழங்கு சாப்பிட மாட்டார்’ என்று நான் சத்தியம் செய்தால் என் அக்கா என்னைச் சும்மா விடுவாரா?
🙂
Thrayam (M) – மாநகரம் திரைப்படம் போன்ற உத்தி கொண்ட ஒரு கதை. ஒரே இரவில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் வகையிலான திரைக்கதை. மோசம் என்று சொல்ல முடியாது. கடைசி வரை பார்க்க வைக்கிறார்கள். அதேபோன்று அற்புதம் என்றும் சொல்லிவிட முடியவில்லை. ஒரே காட்சிகள் அளவுக்கு மீறி மீண்டும் மீண்டும் வருவது எரிச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. முடிவு என்று ஒன்று இல்லாமல் என்ன நடந்ததோ அதன் விளக்கத்துடன் போதுமென்று முடித்து விட்டார்கள். யூகிக்கக் கூடிய சின்ன கதையை முன் பின்னாக மாற்றி நமக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எப்படியோ பார்க்க வைக்கிறார்கள். த்ரயம் என்றால் மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள். மென் இன் மிஸ்டிரஸ்ட், மென் இன் மெஸ், மென் ஆஃப் மொமென்ட்ஸ் என்பதை த்ரயம் என்கிறார்கள் போல. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ப்ரைமில் கிடைக்கிறது.