சிசிடிவி கேமராக்களின் தொல்லை

சிசிடிவி கேமராக்களினால் இன்று மிகப்பெரிய நன்மை வந்துள்ளது. பல வழக்குகளை விரைந்து முடிக்க இவை உதவி உள்ளன. ஆனால் எனக்கு வேறு மாதிரியான பிரச்சினை. என்னைப் போன்றே பலர் கோடிக்கணக்கில் இருப்பார்கள் என்பது உறுதி. எதிர்பாராத நேரத்தில் யாரோ எப்படியோ செத்துப்போன அல்லது கொலை செய்யப்படும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் வீடியோக்களைப் பார்க்க நேர்ந்து விடுகிறது. இதனால் ஏற்படும் பதற்றம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் வாட்ஸப் வந்தபிறகு இந்த மாதிரி வீடியோக்கள் கொட்டுகின்றன.

பொதுவாகவே எனக்கு நல்ல வீடியோக்கள் உள்ளிட்ட எந்த வீடியோவையும் முழுவதுமாகப் பார்க்க பெரிய எரிச்சலாக இருக்கும். படிப்பதுதான் எளிதானது. ஆனால் இது வீடியோக்களின் காலம். எனவே பல முக்கியமான தகவல்களைத் தவற விடக்கூடாது என்பதற்காக வீடியோக்களைப் பார்த்தே ஆகவேண்டிய தேவை உள்ளது. அதற்கிடையில் இதுபோன்ற கொடூரமான வீடியோக்கள் தரும் எரிச்சலைச் சொல்லி முடியாது.

இருபது வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. எதோ செய்தி என்று பார்த்தால், ஒரு கோவில் குளத்தில் ஒரு மனநிலை சரியில்லாத நபர் தன்னைக் காப்பாற்ற வந்தவரை நீரோடு முக்கிக் கொல்லும் வீடியோ! அந்த வீடியோ தந்த அச்சம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதேபோல் ஒரு யானை தன் பாகனை விரட்டி விரட்டிக் கொல்லும் வீடியோவையும் சன் டிவி ஒளிபரப்பியது. அதிலிருந்தே இது போன்ற வீடியோக்கள் மீது பெரிய அச்சம் எனக்கு.

சமீப காலமாக சிசிடிவியில் பதிவாகும் அனைத்துக் கொலைகளையும் தற்கொலைகளையும் உடனே எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அது வாட்ஸப்பில் வருகிறது. ஃபேஸ்புக்கில் பரப்பப்படுகிறது. இவற்றிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. காலையில் எழுந்ததும் சாதாரணமாக செய்திகளைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிகளில் பார்த்தால் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களைத் தொடர்ச்சியாக ஒளிபரப்புவார்கள். எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் இதுதான் வேலை என்றாலும், பாலிமர் நியூஸ் இதைச் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யும். இன்று காலைகூட அப்படி ஒரு செய்தி. (இது பாலிமரில் அல்ல!) பேருந்தின் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு இளைஞர்! நல்லவேளை, அவர் உயிர்தப்பிவிட்டார். சில வீடியோக்களில் மனிதன் மண்ணால் பிசைந்த பொம்மை போல நசுங்கிப் போவதையெல்லாம் காண்பிப்பார்கள்.

இன்னும் சில வீடியோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானவையாக இருக்கும். சில நொடிகளுக்குள் அது ஓடி முடிந்துவிடும். எனக்குத்தான் பல மணி நேரம் பதற்றம் நிற்காது. எத்தனை முறை சொன்னாலும் யாராவது ஒருவர் இப்படியான வீடியோக்களைப் பார்த்துவிட்டு சரியாக நமக்கு அனுப்பித் தொலைவார்கள். இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றே தெரியவில்லை.

இப்போதெல்லாம் எதாவது வீடியோ வந்தால், உடனே அதை அப்படியே ஃபார்வேட் செய்து கடைசி சில நொடிகளைப் பார்ப்பேன். ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் மட்டுமே, முழுவதுமாக முதலில் இருந்து பார்ப்பேன். இத்தனை தவிர்த்தும், நான் சமீபத்தில் பார்க்க வைக்கப்பட்ட இதைப் போன்ற வீடியோக்கள் ஐந்தாவது இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படி இந்த வீடியோக்களை எல்லாரும் சாதாரணமாகப் பார்த்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள் என்றே தெரியவில்லை.

Share

நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை

நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.

எப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.

இந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

நம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.

  • தங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.
  • எதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ்! (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)
  • மிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.
  • எது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.
  • இந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.
  • ஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.
  • லஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.
  • தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.
  • நிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.
  • ஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது!) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.
  • ரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.
  • நம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.

மேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.

கேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.

நான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.

இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

பின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை வலம் இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

OTT தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தணிக்கை

அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதாவது அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சானல்களில் திரைப்படங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்டிருந்ததை நான் பார்வேர்ட் செய்ததை ஒட்டிய பதிவு அது.

சிவசேனா கேட்டதற்காக அல்ல, நான் முன்பிருந்தே இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கை வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். நான் கேட்டதன் காரணம் மத ரீதியானது என்பது முதற் காரணம் அல்ல. முதன்மையான காரணங்கள், அந்தத் திரைப்படங்களில் வரும் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளும்தான். அதேசமயம் மதரீதியான விஷயங்களுக்கும் தணிக்கை இருப்பதற்கு நான் எதிர்ப்பும் அல்ல. அதுவும் கிறிஸ்தவ மாஃபியா கைகளில் சிக்கி இருக்கும் இது போன்ற தளங்களுக்கு இத்தகைய தணிக்கை இல்லாமல் இருப்பதுவே ஆபத்தானது.

உண்மையில் இன்றைய திரைப்படங்கள் தணிக்கைக்குப் பின்தான் வருகின்றன. ஆனால் அங்கே எந்த வகையிலும் இந்து மதம் பாதுகாக்கப்படவில்லை. இது ஒரு மிக வெளிப்படையான உண்மை. எனவே இது போன்ற சானல்களுக்குத் தணிக்கை என்று வந்துவிட்டால் அது பாசிசம் என்றாகி விடும் என்ற கருத்து அடிப்படையற்றது.

இன்று ஹிந்து மதத்திற்காக நான் பேசுவதாக நீங்கள் வைத்துக்கொண்டாலும் கூட (அது உண்மையே), நாளை அது எந்த ஒரு மதத்திற்கும் உதவத்தான் போகிறது. இது கூடத் தெரியாமல் நான் அதைச் சொல்லவில்லை. எங்கோ மற்ற மதங்களின் மதத் தலைவர் ஒருவரின் படம் எடுக்கப்பட்டதற்கு இங்கு சென்னையும் தமிழ்நாடும் அப்படிக் கொந்தளித்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தணிக்கை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்களுக்கான தணிக்கை என்று ஒன்று இருக்கும்பொழுது இதுபோன்ற தளங்களுக்கான படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தணிக்கை என்பதே ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்ற மிக முற்போக்கான சமூகத்தில் நாம் வாழவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. அதை நம்புபவர்கள் இந்த விவாதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அரவிந்தன் கண்ணையன் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவரது பதிவில் கிழக்கு பதிப்பகம் என்று குறிப்பிட்டு, அந்தப் பதிப்பகத்தைக் குறிப்பிடக் காரணம், நாளை கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் தணிக்கை வேண்டுமா என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதற்கு இரண்டு பதில் சொல்ல வேண்டும். முதலாவது, புத்தகங்களும் திரைப்படங்களும் ஒன்றல்ல. அந்த இரண்டையும் ஒன்றாகவே கருதி, தணிக்கை இரண்டுக்கும் வேண்டும் என்று சொல்லும் அசட்டுத் துணிச்சல் எனக்கில்லை. உண்மையில் அரவிந்தன் கண்ணையனுக்கும் முடிந்து இருக்க முடியாது. ஆனால் ஹிந்து மதத்தை ஆதரிப்பவரை பாசிஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்ற அவரது பதற்றமே இதற்குக் காரணம். இரண்டாவதாக கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி இதுபோன்ற தளங்களுக்கு தணிக்கை என்பதற்கு முற்றிலும் எதிரானவர். ஆனால் இது ஒரு பொருட்டாக அரவிந்தன் கண்ணையனுக்குத் தெரியவில்லை. அதில் வேலை செய்யும் எனது கருத்தை வைத்துக்கொண்டு வேகவேகமாகக் கருத்தைச் சொல்வது அவருக்கு முதன்மை ஆகிறது. அதற்கும் காரணம் இந்து மதம்தான்.

ஹிந்து மதம் என்று வரும்பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது என்பது ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. பொதுவாக இதை அடிப்படையாக வைத்து எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது முற்போக்காளர்கள் என்ற பெயரில் உலாவரும் கம்யூனிஸ்டுகள்தான். இன்று அது ஒரு பொதுவான போக்காகவே மாறிவிட்டிருக்கிறது. இந்து மதத்தை வம்படியாகத் திரைப்படங்கள் தாக்கும்போது இவர்கள் யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள். மாறாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தணிக்கை வேண்டும் என இப்படி ஒரு அறிக்கை விடும்போது என்று வரும் பொழுது மிகச்சரியாக ஓடி வருவார்கள்.

அந்த எனது பதிவில் ஒரு கமெண்ட்டில் நானே தெளிவாகச் சொல்லி இருந்தேன், சிவசேனா என்பது புனிதம் அல்ல என்று. அதுவெல்லாம் இவர்களுக்கு முக்கியமே அல்ல. இவர்களது நோக்கம் இந்து மதத்தை ஆதரிக்கும் ஒருவரை பாசிஸ்ட் என்று அழைப்பதும் அவர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை இழுத்து அதற்குத் தணிக்கை வேண்டும் என்று கேட்பதும்தான். அது எந்த அளவுக்கு என்றால் திரைப்படங்களும் புத்தகங்களும் ஒன்று என்ற அளவிற்கு.

உண்மையில் இன்று புத்தகங்களுக்குத் தணிக்கை இல்லை என்பதனால் நீங்கள் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது. புத்தகம் வெளிவந்த மறுதினமே தடைசெய்யப்படும் அத்தனை சாத்தியங்களும் உள்ளது. மேலும் புத்தகம் வாசிப்பாளர்கள் மிகமிகக் குறைந்துவிட்ட தருணத்தில் இன்று புத்தகங்களையும் திரைப்படங்களையும் ஒன்றாக வைக்கமுடியாது. அதிலும் வீட்டுக்குள்ளே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வரும் இது போன்ற சேனல்களில் வரும் திரைப்படங்களை, சீரியல்களை ஒப்பிடவே முடியாது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் தைரியத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

அதே பதிவில் ஒரு அறிவுக்கொழுந்து என்னைப் பற்றி, 21 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று கூறியவர்தானே இவர் என்று கேட்டிருக்கிறார். நான் சொன்னது, உண்மைதான். ஆனால் அது யாருக்குச் சொன்னது என்பது முதலாவது விஷயம். கல்யாணத்தைக் காரணம் காட்டி, மதமாற்றத்தைக் காரணம் காட்டி, பெண்களுக்குப் பாலிய விவாகம் வேண்டும் என்று கூறுபவர்களிடம், தயவுசெய்து 21 வயது வரையிலாவது பொறுத்திருங்கள் என்ற தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. தன் மகள் மதம் மாற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ள இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் 25 வயது 30 வயது வரையில் கூடக் காத்திருந்து அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்ளட்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் தன் மகள் மதம் மாறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர், பால்ய விவாகம் என்ற கருத்தை நோக்கிச் செல்வது அபத்தமானது, அநியாயமானது, அராஜகமானது; அது கூடாது என்ற நோக்கில் குறைந்தபட்சம் 21 வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 18. நான் 21 வயதில்தான் திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்குக் கூட அல்ல, பெண்களுக்கு மட்டுமே, அதுவும் தவிர்க்கமுடியாத பட்சத்தில். ஆனால் அந்த அறிவுக்கொழுந்துக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒருவேளை தானும் தன் மகளும் எதிர்காலத்தில் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்பவர்களுக்கும், தானே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லது செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று தோன்றலாம். அவர்களுக்கானது அல்ல இது.

இந்து மதத்தினரும், எந்த ஒரு மற்ற மதத்தினரும் கல்யாண ஆசை காட்டி சூறையாடப்பட்டு விடக்கூடாது என்பதற்கான பதில்தான் நான் எழுதி இருந்தது. ஆனால் இந்த அறிவுக்கொழுந்து அதையெல்லாம் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை. படித்தாலும் புரிந்திருக்குமா என்பது இரண்டாவது விஷயம். அல்லது எந்த ஒன்றையும் ஒரே வரியில் சொல்வது இன்றைய சமூக ஊடக ஜாதியைச் சேர்ந்த ஒரு விஷயம் ஆகிவிட்டதால் அவருக்கும் அந்த வியாதி தாக்கி இருக்கலாம். எனவே அந்த அறிவுக்கொழுந்துக்கு இனியும் பதில் சொல்வது தேவையற்றது.

ஆனால் அதில் நான் நம்பும் சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள். அந்தப் பதிவை நான் எழுதியபோது இதற்கு ஒரு பதில் சொல்ல நினைத்தேன். இன்று அதே நண்பர்கள் மீண்டும் அதையே செய்யும்பொழுது இதைத் தெளிவாக்குவது என் கடமையாகிறது.

அவர்களை விடுங்கள். மீண்டும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய மகனோ மகளோ கல்யாணம் என்ற ஒன்றைக் காட்டி மதம் மாறக் கூடாது என்று நினைத்தால் அதுவும் அதை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். மதம் என்பதை திருமணத்தின் போது திடீரென ஒன்றாக நுழைத்தால் இதுதான் நிகழும். நீங்களே சரியாக இருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஒருவேளை வராது. அப்படியும் மீறி இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் மகள் கல்யாணம் என்ற ஒன்றைக் கட்டி மதம் மாற்றப்படக் கூடிய அபாயம் இருந்தால், உண்மையில் 21 வயதில் திருமணம் செய்விப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பால்ய விவாகத்தை ஆதரிக்கும் கட்டத்துக்குள் போய்விடாதீர்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நிலைப்பாடு. இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் நேரு அல்ல பிரச்சினை நேருவியர்களே என்று. அந்த நேருவியர்கள் வெற்று காங்கிரஸ்காரர்களாக மாறிவிடும் அபாயமான சூழல் இன்று சூழ்ந்திருக்கிறது என்பதை உணருகிறேன்.

Share

மகாமுனி – திரைப்பார்வை

‘மௌன குரு’ எடுத்த இயக்குநரின் படம் என்பதாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மௌன குரு எதிர்பார்ப்பே இல்லாமல் வந்த நல்ல படம். மகாமுனிக்கு இதுவே ஒரு பெரிய அழுத்தத்தைத் தந்திருக்கும். ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் (என்று நினைக்கிறேன்) என்பது கத்தி மேல் நடப்பது.மிகக் கவனமாக இதைச் செய்ய நினைத்திருக்கிறார் சாந்தகுமார். பட சுவரொட்டிகளிலெல்லாம் உலகத் தரத்தில் ஒரு திரைப்படம் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். எனக்கு கமலின் சூரசம்ஹாரம் நினைவுக்கு வந்தது! நல்லவேளை, இது அந்த அளவுக்கு இல்லை.

இரன்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள். அரசியல் கொலைகளில் அடியாழம் வரை தொட்டிருக்கிறார். ஆணவக் கொலையில் கொஞ்சம் மட்டுமே பேசி இருக்கிறார். எனவே அரசியல் தொடர்பான காட்சிகள் முதலில் சவசவ எனத் தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் வேகம் பிடிக்கின்றன. முனி தொடர்பான காட்சிகள் அப்படியே ஏதோ போகின்றன.

எத்தனை பெரிய இயக்குநரும் ஏன் இந்த இரட்டை வேடக் கதைகளில் விழுந்துவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசியில் அத்தனையும் இந்த ஆள்மாறாட்டத்துக்கா என்றாகும்போது சே என்றாகிவிடுகிறது. இதை முதலிலேயே காண்பித்துவிடுகிறார்கள். சஸ்பென்ஸ் என்றெல்லாம் வைத்து காதில் பூ சுற்றவில்லை. ஆனால் எப்படியும் இப்படித்தான் ஆகப்போகிறது என்னும்போது, இத்தனை நாள் எத்தனையோ தடவை தமிழ்த் திரையுலகம் சப்பிப் போட்ட மாங்கொட்டையை மீண்டுமா என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆர்யா நன்றாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியாக வரும் நடிகையும் நன்றாக நடிக்கிறார். இளவரசு வழக்கம்போல நல்ல நடிப்பு. மற்றவர்கள் யாருமே ஒட்டவில்லை. மௌன குருவில் இருந்த ஒரு கச்சிதம் இதில் இல்லை என்பதே பெரிய குறை. படம் ஆணவக் கொலை அரசியல் கொலை என்றெல்லாம் சுற்றினாலும் யாரையும் எந்த மதத்தினரையும் புண்படுத்தவேன்டும் என்ற எண்ணமெல்லாம் சாந்தகுமாருக்கு இல்லை என்பது ஆசுவாசம். மலினமான கேலிகள், வம்பிழுத்தல் என எதுவும் இல்லை. முதல் காட்சியில் வழுக்கைத் தலையுடன் கருப்புக் கண்ணாடி போட்டிக்கொன்டு மஞ்சள் துண்டுடன் ஒருவர் தமிழ்ச் செய்யுளில் ஆரம்பிக்கவும் ஆகா என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் இல்லை.

வசனங்களைக் குறைத்து, நடிகர்களின் நடிப்பைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி ஒரே ஒரு கதையை மட்டும் ஆழமாகப் பேசி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கவேண்டிய படம் இப்போது எங்கேயோ தேங்கி நிற்கிறது. மற்றபடி உலகத் திரைப்படம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

பின்குறிப்பு: நடிகை ரோஹிணி நடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு வசனம் மட்டுமே. சாந்தகுமாரின் இந்த முன்னெச்சரிக்கையைப் பாராட்டவேன்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ் வலைத்தளம்

Share

மிர்ஸாப்பூர் – அமேஸான் ப்ரைம் தொடர் – எபிசோட் 1

‘வெள்ளை ராஜா’ என்றொரு தொடர் தமிழில் அமேஸான் ப்ரைம் தயாரிப்பில் வந்தது. அதைப் பார்த்தபோதே எழுதினேன், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் சென்ஸார் வைப்பது நல்லது என்று. இப்போது மிர்ஸாப்பூர் பார்த்தேன். வெள்ளை ராஜா எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே அல்ல!

அதீத வன்முறை, அதாவது பதற்றத்துடன் கண்ணை மூட வைக்கும் வன்முறை, அதீதமான உறவுக் காட்சிகள், மிக ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் எனக் கலங்கடித்துவிட்டார்கள். இது ‘வெள்ளை ராஜா’அளவுக்கு மோசமில்லை. ஆஹா ஓஹோவுமில்லை. ஆனால் எப்படியோ ஒன்றச் செய்துவிடுகிறார்கள்.

மிர்ஸாப்பூர் – சாதாரண கதை. திரை உலகம் கடித்துச் சவைத்துத் துப்பிவிட்ட கேங்ஸ்டர் கதை. அதே கதையை எவ்விதத் திருப்பமும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள், ஆனால் பொறுமையாக. 2 மணி நேரத்தில் பாட்டு சண்டை என்றெல்லாம் வைத்து, ஹீரோவைப் புனிதமாக்கி என்பதான எவ்விதச் சிக்கலும் இல்லை என்பதால் கதையை மட்டுமே மையமாகக் கொண்டு நகர்த்துகிறார்கள். அட்டகாசமான ஒளிப்பதிவு, இசை எனக் கலங்கடிக்கிறார்கள்.

அதீதமான வன்முறைக் காட்சிகள். கிட்டத்தட்ட ஐந்து காட்சிகளிலாவது நான் கண்களை மூடிக்கொண்டிருப்பேன். அதிலும் இறுதி எபிசோடின் சில காட்சிகள் – உவ்வேக். மறந்தும் குழந்தைகளுடன் பார்த்துவிடாதீர்கள்.

பங்கஜ் திரிபாதியின் நடிப்பு – உலக லெவல். அதேபோல் ஒவ்வொரு நடிகருமே மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆச்சரியப்படுத்துகிறார்கள். கதையில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்றாலும், நடிகர்களின் நடிப்புக்காகவும் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பதற்றத்துக்காகவும் பார்க்கலாம், எப்போது யாரைக் கொல்வார்கள், யார் யாரை தேவையே இல்லாமல் கலவி கொள்வார்கள் என்ற அச்சத்துடன்!

தமிழில் சப்டைட்டில் கிடைக்கிறது. பல இடங்களில் அட்டகாசமாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள். முக்கியமாக, ஆவோ பேட்டா என்பதையெல்லாம் கர்ம சிரத்தையாக வா மகனே என்றெல்லாம் எழுதிக் கொல்லாமல், வாப்பா என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது அடிப்படையான விஷயம்தானே, இதை ஏன் பாராட்டவேண்டும் என்றால், மற்ற மொழிபெயர்ப்புகளின் தரம் இந்த அளவில்தான் அமேஸான் ப்ரைமில் இருக்கிறது! இதில் கபூதர் என்ற வார்த்தையை புறா என்று நேரடியாக மொழிபெயர்க்காமல், கதைக்கு ஏற்றவாறு குருவி என்று மொழிபெயர்த்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. சில எபிசோடுகளில் கடுமையாகச் சொதப்பியும் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘உண்ணதானே குபத்ராங்க என் ஃப்ரண்ட் கல்யாணம் ஒளுங்கா எந்திர்சு வா’ என்பதெல்லாம் அராஜகம். எழுத்துகள் கணக்குக்காக புள்ளி கமா இல்லாமல் மொழிபெயர்ப்பதெல்லாம் அநியாயம், அக்கிரமம்.

தமிழ் சப்டைட்டிலுடம் பார்ப்பவர்கள் கவனத்துக்கு – உங்களை அதிரச் செய்யும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அப்படியே தமிழ் சப்டைட்டிலில் வரும். எனவே கவனம். தனியாக இருந்து பாருங்கள். 🙂

இத்தனை வன்முறை, ஆபாசம் எல்லாம் வீட்டுக்குள் வருவது சரியா தவறா என்று யோசிக்கவே அயர்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இதைத் தவிர்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சைல்ட் லாக் போட்டு பூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இது உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்குமா, பையன்கள் பார்க்காமல் இருப்பார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. நம் மன திருப்திக்காக செய்துகொள்ளவேண்டியதுதான் போல. தமிழில் ‘வெள்ளை ராஜா’வை இதே போல் அப்படியே எடுக்க முனைந்திருக்கிறார்கள் போல. ஆனாலும் தமிழில் ஹிந்தி அளவுக்குப் போக முடியவில்லை. இனி போவார்கள் என நினைக்கிறேன்.

Share

நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்

இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.

ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!

————————————-+———————-+—————

திமுக விட்ட ராக்கெட்

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.

பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?

விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை

இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.

————————————–+———————+—————-

இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.

ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂

#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?

என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.

ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.

இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.

இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.

அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂

பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂

Share

66வது தேசிய திரைப்பட விருதுகள்

66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும்.
  • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும் கூட.
  • மலையாளத்தில் நல்ல படம் – சூடானி ஃப்ரம் நைஜீரியா. நல்ல தேர்வு.
  • தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்ஷாலி – பத்மாவத் படத்துக்காக. சரியான தேர்வு.
  • தேசிய அளவில் சிறந்த பின்னணி இசை – யூரி படத்துக்காக. நல்ல தேர்வு. எதிர்பார்த்ததுதான்.
  • தேசிய அளவில் சிறந்த ஒலிப்பதிவு – யூரி படத்துக்காக. எதிர்பார்த்ததுதான்.
  • தேசிய அளவில் சிறந்த சமூகப் படம் – பேட் மேன். நல்ல தேர்வு.

தமிழுக்கு அதிகம் விருதுகள் தரப்படவில்லை என்றும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள். விருது கொடுத்தால் திருப்பித் தரவேண்டியது, மத்திய அரசைத் திட்டவேண்டியது, அப்புறம் விருது தரவில்லை என்று புகார் வாசிக்கவேண்டியது! விருதுக்கு எத்தனை படங்கள் இங்கே இருந்து அனுப்பப்பட்டன என்ற பட்டியலைப் பார்த்தால்தான் இன்னும் கொஞ்சம் புரியும். கிடைக்குமா என்று பார்க்கிறேன். (திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தால் இப்பட்டியல் கிடைக்க வழி செய்யுங்கள்.)

சிறந்த அறிமுக இயக்குநராக மாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். நால் என்றொரு மராத்தி படத்தின் இயக்குநர் தேர்வாகி இருக்கிறார். படத்தைப் பார்த்தால்தான் தெரியும் ஏன் இது தேர்வாகி இருக்கிறது என்று.

மற்றபடி தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தமிழில் மிக முழுமையான முயற்சிகள் கைகூடவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு படம் வரும்போதும் அந்தப் படத்தின் குறைகளைப் பட்டியலிட்டுவிட்டு, போதாமையையெல்லாம் சொல்லிவிட்டு, விருதுகள் கிடைக்கவில்லை என்னும்போது தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம்.

மற்றபடி இந்தத் தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது. ஆனால் காங்கிரஸ் ஆளும் வரை லாபி இருந்தால் ஓகே, ஆனால் பாஜக ஆளும்போது லாபி கூடாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால், பாஜக அரசிலும் இந்த லாபியில் இருப்பது காங்கிரஸ் + முற்போக்காளர்கள் மட்டுமே. பாஜக காரர்களுக்கு இன்னும் ஒரு திரைபடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. நேற்றுதான் ஹெச்.ராஜா ஒரு ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் இது குறித்துப் போட்டிருந்தார். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. லாபியில் கொஞ்சம் இந்திய தேசிய சினிமாக்களும் இந்தியத்தையும் ஹிந்து மதத்தையும் நிந்திக்காத சினிமாக்களும் சிறிது காலமாவது வெல்லட்டும்.

Share

Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share