Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியல் காலகட்டம்.

இந்த மூன்று காலகட்டங்களிலும் சாவர்க்கரின் பங்களிப்பை ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வருவது பெரிய சவால். சாவர்க்கரைப் பற்றி மட்டும் திரைப்படம் எடுத்துவிடமுடியாது என்பது இதில் இன்னொரு பிரச்சினை. சாவர்க்கரால் நிகழ்ந்தவை, சாவர்க்கரால் தூண்டப்பட்டவர்கள் செய்த புரட்சிகள் என எல்லாவற்றையும் காண்பித்தாக வேண்டும். இப்படிக் கம்பி மேல் நடக்கும் வித்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தை சாபேகர் சகோதரர்களின் வீரச் செயல்களில் ஆரம்பித்தது நல்ல திரைக்கதை. சாபேகர் சகோதரர்களின் தியாகத்தையும் சாவர்க்கர் சகோதரர்களின் தியாகத்தையும் நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரசின் ஒடுக்குமுறைகளில் சிக்குவது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அதிலும் சாபேகர் சகோதரர்கள் மூவரும் ஒரே வாரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதெல்லாம் எப்பேற்பட்ட பலிதானம்!

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாகக் கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான். 2001ல் ஹிந்தியில் வந்த சாவர்க்கர் திரைப்படத்தைச் சில மணித்துளிகள் பார்த்தேன். வெறும் வசனங்களால் ஆன படம் அது. ஆனால் இத்திரைப்படம் காட்சிகளாலும், தீவிரமான ஆழமான சுருக்கமான வசனங்களாலும் ஆனது.

சாவர்க்கரின் குடும்பத்தின் தியாகத்தை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் வைத்தது சிறப்பு. கணேஷ் சாவர்க்கர் தன் தம்பி விநாயக் (வீர) சாவர்க்கரிடம், என்னை ஒரு முறை தழுவிக்கொண்டு விடை கொடுக்க மாட்டாயா என்று கேட்கும் தொடக்க காட்சியில் உணர்ச்சிவசப்பட்டேன். அண்ணன் தம்பிகளின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை, சொற்பமான காட்சிகளில் கடைசி வரை சிறப்பாகக் காண்பிக்கிறார் இயக்குநர்.

இண்டியா ஹவுஸ் என்ற பெயர் தரும் கிளர்ச்சியை, இந்திய சுதந்திரத்தின் ஆயுதப் போராட்டத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள். சாவர்க்கர் இண்டியா ஹவுஸில் ஷ்யாமாஜியுடன் சந்திக்கும் காட்சியெல்லாம் அபாரம். அங்கே ஆயுதமேந்திப் போராட மண்டையம் ஆச்சார்யா, மதன்லால் திங்ரா என்ற பெரும்படையே இருக்க, அனைவரும் ஒன்று கூடி அங்கேயே பெரும் போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள். ஆங்கில அரசின் மண்ணிலேயே முதல் அரசியல் கொலை நிகழ்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டைக் கைப்பற்றுகிறார் சாவர்க்கர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் குதிராம் போஸ் குண்டு வீசுகிறார். வரலாற்றின் நெடுக நடந்த இந்த நிகழ்வுகளை எப்படித் திரைக்கதையாக்கினார்கள் என்பது ஆச்சரியம்தான். தொடக்க காட்சி முதல் சார்வக்கர் அந்தமான் செல்லும் இடைவேளை வர துளிகூட தொய்வில்லை. இத்தனை ஆவேசமான திரைக்கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இத்திரைப்படம் வெறும் நேம் டிராப்பிங் அனுபவமாக உறையக் கூடும். ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படும் காட்சி இரண்டு நொடிகளே வருகின்றன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் வரலாறு உள்ளது. தூக்கில் தொங்கவிடப்படுபவர்களின் வயது சராசரியாக இருபது. மீசை வளரும் முன்னே ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சாகிறார்கள். இக்காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மேடை நாடகப் பாணியில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

அந்தமானில் சாவர்க்கர் படும் வேதனைகள் இடைவேளைக்குப் பிறகான ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகின்றன. அங்கே சாவர்க்கர் அடையும் மனரீதியான நெருக்கடிகள் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதிலும் ரெஜினால்ட் கிரடாக்கும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் காட்சி அபாரம். ஆனாலும், அந்த நெருக்கடியிலும் சாவர்க்கர் அங்கே இருந்தபடியே சிறைக்குள் ஆற்றிய பெரும் சாதனைகள் சரியாகக் காட்டப்படவில்லை. சிறிய சிறிய காட்சிகளாக அவை நகர்ந்து போகின்றன. இதை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அதேபோல் அந்தமானில் நடந்த கர்வாப்ஸியின் அவசியத்தையும் இன்னும் சிறப்பாகப் படமாக்கி இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அந்தமானில் பட்ட கஷ்டங்களை மட்டும் காட்டவேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஒருநோக்கில் அதிலும் தவறில்லை என்றே சொல்லவேண்டும்.

படத்தின் அடுத்த நகர்வு, காந்திஜி கொலை காலகட்டம். இப்போது சாவர்க்கரின் வீடு, ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களின் உறைவிடம் போல ஆகிறது. கோட்ஸே உட்பட. காந்தி கொல்லப்படுகிறார். சாவர்க்கர் கைதாகிறார். இவையெல்லாம் டாக்குமென்ட்ரி போலச் செல்கிறது. மேடை நாடகப் பாணி என்றாலும், இதையும் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராகவும் நடிகராகவும் ரந்தீப் ஹூடா செய்திருப்பது மாபெரும் சாதனை. சாவர்க்கரைப் பற்றிய சிறப்பான திரைப்படம் இது. ரந்தீப் ஹூடா சாவர்க்கராகவே மாறி இருக்கிறார். சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை இப்படி ஒரு திரைக்கதையாக மாற்றியதற்காக இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே போல் சாவர்க்கரின் 1857 புத்தகம் எப்படி ஆயுதப் போராட்டக்காரர்களின் கீதையாக மாறியது என்பதைக் காட்சிரீதியாக அட்டகாசமாகப் படமாக்கி இருப்பதையும் பாராட்டவேண்டும்.

இந்தத் திரைப்படத்தின் போதாமைகள் என்ன? இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய சில செய்திகள் அவசர அவசரமாகக் கடந்து போவது. சில நிகழ்வுகள் முன்னும் பின்னும் இருப்பது. சாவர்க்கர் போன்ற ஒரு தலைவரின் படத்தில் இதைத் தவிர்க்க முடியாது.

இப்படத்தின் பெரிய சறுக்கல் எது? காந்தியும் நேருவும் கோகலேவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம். காந்தியை ஒரு கோமாளி போலவும், ஹிந்துக்களை வஞ்சித்தவர் போலவும் காண்பிக்கிறார்கள். இது அரசியல்ரீதியாகவும் நிஜத்திலும் தவறு. இண்டியா ஹவுஸிலும், பின்னர் சாவர்க்கரின் வீட்டிலும், காந்தியும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் வசனங்களில் சாவர்க்கர் பேசுவது, காந்தியின் மீது வன்மத்தைக் கொட்டுவது போல் இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து நிஜத்தில் சாவர்க்கர் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்தில் மகாத்மா காந்திஜி என அவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரைப்படத்தில் கோகலே கோமாளி போல் சிரிப்பது அனாவசியம். நேருவும் அப்படியே. காந்தியைத் தவிர மற்றவர்களைப் பற்றிய காட்சிகள் எல்லாம் ஓரிரு நொடிகளே வருகின்றன என்றாலும் தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவுக்கான சுதந்திரம் பற்றி காந்தியின் அஹிம்சைப் போராட்டப் போராளிகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு ஆயுதப் போராளிகள் சொல்லப்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. இந்த இரண்டு வழிகளும் சேர்ந்தே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதுவும் உண்மை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் காந்தியைப் போன்ற ஒருவரே மக்கள் தலைவராக இருக்கமுடியும் என்பதும் உண்மை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் பெயர்கள் கூட நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டதெல்லாம் அரசியல். அந்தப் பெருங்குறையை இத்திரைப்படம் ஓரளவுக்குக் குறைக்கிறது.

Share

Comments Closed