ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.
கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.
திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.
கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.
சையாரா (H) – நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு ஹிந்தித் திரைப்படம். அதுவும் துபாயில்.
90களின் ஹிந்தித் திரைப்படம் போன்ற ஒரு கதையை, இன்றைய தேதிக்கு மார்டனாக எடுத்திருக்கிறார்கள். கேன்சர், மூளைக் காய்ச்சல் போன்றவற்றையெல்லாம் காட்டிச் சாவடித்தது போல் இந்த நோயை வைத்துக்கொண்டு இன்னும் என்ன பாடுபடுத்த போகிறார்களோ! என்றாலும் இந்தத் திரைப்படம் பார்க்கும்படியாகவே இருக்கிறது.
தன்மாத்ர திரைப்படம் தந்த அளவு மன அழுத்தத்தையும் பயத்தையும் இந்தப் படம் தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார்
மிக அழகான ஒரு கதாநாயகன். முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அதைவிட அழகான கதாநாயகி. இளமை துள்ளும் கேமரா. அட்டகாசமான இசை எனப் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தமிழின் மூன்றாம் பிறை (ஹிந்தியில் சத்மா) திரைப்படத்தின் எதிர்த் திரைக்கதை என்று இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையைச் சொல்லலாம். அதிலும் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையை ஹீரோ சொல்லும்பொழுது கமலஹாசனை நினைவுகூராமல் இருக்கவே முடியாது.
படத்தின் பலம் என்ன? ஐ லவ் யூ மகேஷ் என்று கதாநாயகி கதாநாயகனைப் பார்த்துச் சொல்லும்பொழுது ஒரு திடுக்கிடல் அனைவருக்குள்ளும் வருகிறது. அதைக் கொண்டு வந்ததில்தான் இந்தப் படத்தின் வெற்றியும் இயக்குநரின் சாமர்த்தியமும் இருக்கின்றன. முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று, படத்தில் வில்லன் அடிதடி ரத்தம் துப்பாக்கி என எதுவும் இல்லை. படம் இயல்பாக ஒரே நேர்கோட்டில் செல்கிறது.
பொறுமையாக நகரக்கூடிய, இளமைத் துள்ளலான படத்தை பார்க்க விரும்புபவர்கள், முக்கியமாக அழகான ஹீரோவுக்காகவும், சிம்ரனையும் ஆலியாவையும் அனஸ்வரா ராஜனையும் கலந்த, அடுத்த பத்தாண்டு ஹிந்தித் திரை உலகை ஆளப்போகும் திறமையான ஒரு கதாநாயகியையும் பார்க்க விரும்பினால் இந்தத் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள்.
மாரீசன் – மோசம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. அருமை என்று கொண்டாடவும் முடியாது. இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் படம் முழுவதும் வரும்போது ஏற்படக்கூடிய ஒரு அலுப்பு இந்த படத்தில் பெரிய அளவுக்கு ஏற்படாததற்குக் காரணம், இதில் வந்திருக்கும் இரண்டு நடிகர்கள் ராட்சசர்கள். அந்த இரண்டு நடிகர்களைப் பிடிக்கும் என்றால் இந்தப் படம் நீங்கள் தவற விடக்கூடாதது.
வடிவேலு தன் எல்லை மிகாமல் தெளிவாக ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே பிரமாதப்படுத்தி இருக்கிறார். இதற்கு முந்தைய மாமன்னன் திரைப்படத்தில் வந்ததைவிட இதில் இன்னும் விரிவான பாத்திரம். நன்றாகச் செய்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அவர் அழும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
ஃபகத் ஃபாஸில் பற்றித் தனியே சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு நொடியும் முகபாவத்தில் அசரடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாகிறது. இடைவேளை வரை கவிதை என்றால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் கவிதை கொஞ்சம் தொலைந்து போனாலும் கூட, இறுதிவரை பார்க்க முடிகிறது.
படத்தின் லாஜிக் ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டால் பெரிய பட்டியலே போடலாம். அதிலும் போலீசின் பங்கு இத்தனை கேவலமாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தானோ என்னவோ கோவை சரளாவை போலீஸாகப் போட்டு சிரிப்பு போலீஸ் என்று சிம்பாலிக்காகக் கட்டியிருக்கிறார்கள் போல. கோவை சரளாவுக்கு நடிக்கவே வரவில்லை.
நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம் பாடல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இரண்டு நடிகர்களும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.
ஃபகத் ஃபாசிலுக்காகவும் வடிவேலுக்காகவும் பொறுமை இருந்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
பின்குறிப்பு: படத்தின் மையக்கதை இதுதான் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் படத்துக்குப் போயிருக்கவே மாட்டேன். இது ஒரு ரோடு ஸ்டோரி, அதிலும் ஃபகத்தும் வடிவேலும் நடித்திருக்கிறார்கள் என்பதற்காகவே போனேன். பொதுவாக எனக்கு இதுபோன்ற கதை தரும் படபடப்பு சொல்லி மாளாதது. கதை தெரியாததால் மாட்டிக் கொண்டு விட்டேன்.
1987. சேரன்மகாதேவியில் தீ பற்றிக் கொண்டது. தீ என்றால் அடங்கும் தீ அல்ல இது. சினிமா தீ.
நடுத்தெருவுக்கு அம்பிகா வந்துருக்காளாம் என்ற செய்தியை முழுதாகக் கேட்பதற்குள், அம்பிகா என்றால் யார் என்றே தெரியாத டிரசர் பாண்டிக் குளுவான்களெல்லாம் மூச்சிரைக்க நடுத்தெருவுக்கு ஓடினோம். ஊர்ல பெரிய நாட்டாமை நாமதான், நமக்கே தெரியாம அம்பிகா வந்துருக்காளா என்று ஆசையாகப் பார்த்தால், வழக்கமாக வாசல் தெளித்துக் கோலம் போடும், இன்றோ நாளையோ பாட்டிகள்தான் கண்ணில் பட்டார்கள்.
நடுத்தெருவுல இல்லையாம், காந்தி பார்க் பக்கத்துலயாம். ஓடு காந்தி பார்க்கிற்கு. அங்கே எப்போதும் சுற்றித் திரியும், சேர்மாதேவிக்கே உரிய மொத்தமான நான்கைந்து காக்காய்கள் கூட அன்று அங்கே இல்லை.
அப்போது எங்களுடன் சுற்றித் திரிந்த வில்லேஜ் விஞ்ஞானி ஒருத்தன் சொன்னான், ‘எப்பவும் பரபரப்பா இருக்க நம்ம ஊரு இப்படி ஆள் அரவமே இல்லாம கெடக்குன்னா, எங்கயோ நிச்சயமா ஷூட்டிங் நடக்குல.’ ஊரைச் சல்லடை போட்டுத் தேட முடிவு செய்தோம். ஆனால் எங்கே ஷூட்டிங் நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தினம் தினம் ஏதாவது செய்தி மட்டும் வரும். அங்கிட்டு ஷூட்டிங்காம், இங்கிட்டு ஷூட்டிங்காம், பிரபு வந்துருக்கான், சிவகுமார் வந்துருக்கான், அம்பிகா வந்துருக்கா, நானே என் கண்ணால பாத்தேன் என்று யாராவது சொல்வார்கள். ஆனால் எங்கள் கண்ணில் எதுவும் படவே இல்லை.
கல்லுப்பட்டியில் படித்துக்கொண்டிருந்த நான், லீவிற்கு சேர்மாதேவி வந்திருந்தபோது நடந்தது இது. சரி, நமக்கு ஷூட்டிங் பார்க்க கொடுப்பினை இல்லை என்ற முடிவுக்கு வந்த போது, அவசர அவசரமாக வீட்டுக்குள் வந்த அம்மா சொன்னாள், ‘போலிஸ் லயன்ல ஷூட்டிங் நடக்காம்!’ அடுத்த நொடி நான் பஞ்சாய்ப் பறந்தேன். என்னுடன் பல நண்பர்களும் வந்தார்கள்.
போலிஸ் லயன் என்றுதான் நினைக்கிறேன். கீழ முதல் தெருவுக்குக் கடைக்கோடியில் இருக்கும் ஓர் இடம் என்ற நினைவு. கூட்டமானால் கூட்டம். சிலர் அங்கு காவலுக்கு நின்று கொண்டு, யாரையும் மேற்கொண்டு வராமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காமாட்சி கோவில் பக்கமாய்ச் சுற்றி வந்து பின்பக்கமாக உள்ளே நுழைந்து ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம்.
அங்கே பார்த்தால், கூட்டத்தில் என் பாட்டி! அப்போதே என் பாட்டிக்கு 70 வயதிருக்கும். நான் வருவதற்குள் வந்துவிட்டிருக்கிறார். அதுவும் சிமிண்ட் நடைபாதையில் பல பாட்டிகளுடன் அமர்ந்திருக்கிறார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.
பிரபுவும் அம்பிகாவும் வெளியே வருவார்கள், பார்த்துவிடலாம் என்று காத்திருந்தோம். நேரம் ஆனதுதான் மிச்சம். அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லை. கேமராமேன், டைரக்டர், லைட் பாய் என்று யார் யாரெல்லாமோ அங்கும் இங்கும் பரபரப்பாக நடக்கிறார்களே தவிர, ஒரு நடிகரும் வெளியே வரவில்லை.
நாங்கள் சோர்ந்து போன நேரத்தில், கூட்டத்தில் ஒரே கூச்சல், ஆரவாரம். பிரபு வெளியே வந்தார். ஏல, பிரபுல என்று சொல்லவும், அனைவரும் ஆச்சரியமாக பிரபுவைப் பார்த்தோம். கல்யாணக் கோலத்தில் இருந்தார். ஒருத்தன் கேட்டான், தனியாவால வந்துருப்பான், இல்ல கூட சிவாஜி வந்துருப்பானா என்று. வில்லேஜ் விஞ்ஞானி அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை.
பிரபு அனைவரையும் பார்த்துக் கையசைக்கவும், ஒரே கைதட்டல். பிரபு ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்தபடி, இரண்டு கைகளால் தனக்குள்ளே குத்திக் கொண்டபடி, சிரித்தபடி இருந்தார். அதைப் பார்த்த என் பாட்டி சத்தமாக, ‘நீ நடக்கறது உன் அப்பா நடக்கற மாதிரி இருக்குப்பா’ என்றார். பிரபு ஆஹான் ஆஹான் என்று கட்டைக்குரலில் பதில் சொல்லிச் சிரித்தார். வீட்டுக்குள்ள அமுக்குளி மாதிரி இருக்கிற பாட்டி தெருவுல என்னா போடு போடுது என்று சந்தோஷமாக இருந்தது.
ஒரு வழியாக மாலை 3 மணி வாக்கில் ஷூட்டிங் ஆரம்பித்தது.
ஆனால் அம்பிகா வரவில்லை. பிரபுவுடன் வேறொரு பெண் வந்தார். தூரத்தில் இருந்து எங்களுக்கு அது அம்பிகா இல்லை என்று எங்கள் யாருக்கும் உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை. எங்கள் பரிதவிப்பைப் பார்த்த ஒருவர் சொன்னார், இது அம்பிகா இல்லடே, ராது, அறிமுகமாம். வில்லேஜ் விஞ்ஞானி கேட்டான், அறிமுகமா புதுமுகமா என்று. ரெண்டும் ஒன்னுதாம்ல என்றார் அவர். அதற்கும் அவன் என்னவோ சொல்ல, ஷூட்டிங் வேகத்தில் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை.
காட்சியின் படி, ஒரு மாட்டுவண்டியில் ராதுவும் பிரபுவும் வந்திறங்க வேண்டும். அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்து வரவேண்டும். ஒரு பெண் ஆரத்தி எடுப்பார்.
ராதுவும் பிரபுவும் மாட்டு வண்டியில் இருந்து இறங்குவதை மட்டும் பத்து முறை எடுத்திருப்பார்கள். இருவரும் நடந்து வரும் காட்சியை 30 முறை எடுத்தார்கள். என்ன எழவுடா இது, நடந்து வீட்டுக்குள்ள வர்றதுக்கு எதுக்கு இத்தனை எடுக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது. இதில் ஒருவர் விடாமல் கோழியை தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருக்க, இன்னொருவர் புகை போட்டுக் கொண்டிருந்தார்.
அவுட்டோரில் அன்று மொத்தமாக நடந்த ஷூட்டிங்கே அவ்வளவுதான். இதற்கே மாலை ஆகிவிட்டது. கூட்டம் கலைந்தது.
ஒருவழியாக ஷூட்டிங் பார்த்துவிட்டேன் என்ற சந்தோஷம் எனக்கு. படம் ஒருவர் வாழும் ஆலயம். அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் ராமர் கோவிலில் ஷூட்டிங்காம், சிவகுமார், அம்பிகா வந்திருக்கிறார்களாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் போகவில்லை.
அந்தப் படம் 1988ல் வெளியானது. ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் முதல் பாடலாக மலையோரம் மயிலே போட்டார்கள். பாடல் அள்ளிக்கொண்டது. அதில் வரும் நதியெல்லாம் சேர்மாதேவியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டேதான் பார்த்தேன். படம் வெளியாகி சில நாள்கள் கழித்துத்தான் படம் பார்த்தேன். படம் முழுக்க, எப்படா சேர்மாதேவி வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தக் காட்சியும் வந்தது.
இந்தக் காட்சியை நான் ஷூட்டிங்கின் போதே பார்த்திருக்கிறேன் என்று மதுரை நண்பர்களிடம் சொல்லிப் பீற்றிக்கொண்டதில் நான்கைந்து நாள் கெத்தாக இருந்தேன்.
படத்தில் வரும் இடமெல்லாம் சேர்மாதேவிதான் என்று நானே கற்பனை செய்துகொண்டேன். அடுத்த தடவை சேர்மாதேவி போனபோது, அதில் பல இடங்கள் அம்பாசமுத்திரம் பக்கம் என்று சொல்லவும் புஸ்ஸென்றாகிவிட்டது. சேர்மாதேவியில் தற்கொலை முடிவெடுக்கும் ராது எந்த ரயிலின் முன் பாய்கிறார் என்றபோது, அது கல்லிடைக்குறிச்சி என்றார்கள். நடந்தேவா அவ்வளவு தூரம் போனார்? தலை சுற்றிப் போனது. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் படத்தில் கடல் வந்ததும் நினைவுக்கு வந்தது. அடக் கண்றாவியே என்று தோன்றிவிட்டது.
அடுத்த இரண்டு மாதத்துக்கு எந்தப் படம் பார்த்தாலும், இதை எப்படி எடுத்துருப்பாங்க என்றே யோசிக்கத் தோன்றியது. படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் போனது. இனி ஷூட்டிங்கே பார்க்கக் கூடாது என்று தோன்றிவிட்டது.
இப்போதும் ஒருவர் வாழும் ஆலயத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, படச் சட்டத்துக்குள் வராத, ஜஸ்ட் சில அடிகள் தள்ளி சிமிண்ட் தரையில் அமர்ந்திருக்கும் பாட்டியை மனம் தேடும். பாட்டி பிரபுவை சிவாஜி மாதிரியே நடக்கறப்பா என்றது காதில் ஒலிக்கும்.
பின்குறிப்பு: அந்தப் படத்தில் வந்த ராதுதான், நிழல்கள் படத்தில் நடித்தவர் என்பது, எனக்குப் படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் படம் நிழல்கள் சரியாகப் போகவில்லை என்பதால் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் போல. அறிமுகமா புதுமுகமா என்று கேட்ட வில்லேஜ் விஞ்ஞானி நினைவுக்கு வந்தான்.
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (M) – ஒருமுறை பார்க்கலாம். ஆகா ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல தருணங்கள் உள்ளன. முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி இரு அத்தியாயங்களும் அருமை. அதிலும் முதல் 5 நிமிடங்கள் வாவ். நடுவில் இரண்டு அத்தியாயங்கள் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயல்கின்றன. அதில் தப்பித்துக் கொள்வது நம் சாமர்த்தியம்.
தொடர் முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆறு எபிசோட் எப்படியாவது வந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் போல. அதிகாரிகள் மாறினாலும் அதே விஷயத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பேசுகிறார்கள். போதும்டா சாமி நீங்க பேசுனது என்று நினைக்கும் போதுதான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். இதில் போதாக்குறைக்கும் மனைவி கதாபாத்திரங்களின் எரிச்சல் வேறு.
கதையில் ஓர் ஆச்சரியம் கொலை எதற்காக என்பது. அதில் ஒரு மைனஸ் இதற்காகத்தான் இருக்கும் என்பதை முதல் காட்சியிலேயே யூகிக்க முடிவது. இன்னொரு மைனஸ், என்னதான் நியாயம் என்றாலும் அதற்காக இத்தனை கொடூரமான கொலையா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதை எல்லாம் தாண்டி இந்தத் தொடரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, திரைக்கதை எழுதிய விதம். கடைசி வரை எதற்காக கொன்றான் என்று ஒரு சாதாரண பார்வையாளன் யோசித்தாலும் பரவாயில்லை, அது பூடகமாகவே இருக்கட்டும் என்று, பொதுவான கிரைம் த்ரில்லர்களில் வருவது போல கொலைகாரன் அவன் வாயிலேயே வெளிப்படையாகச் சொல்லாதது. அதெல்லாம் கதைக்குள்ளே இருக்கிறது. காட்சிகள் மூலமாக முன்பின் இணைத்து, இதற்குத்தான் கொன்றான் என்பதை நீயே புரிந்து கொள் என்று விட்டிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், 5 மணி நேரமாக காரில் ரோட்டில் படகில் வீட்டில் என்று சதா பேசிக் கொண்டே இருப்பவர்கள், இதை மட்டும் ஏன் வெளிப்படையாக சொல்லாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. யூட்யூபில் சேட்டன்கள் இதைப் புளி போட்டு விளக்கிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இல்லாமல் திறமையான நடிகர்களை வைத்து இயக்கி இருப்பது இன்னொரு நல்ல விஷயம். முதல் இரண்டு எபிசோடுகளில் ஐந்து நிமிடங்களே வந்தாலும் இந்திரன்ஸ் காட்டும் முகபாவம், அதைவிட குறைவான நிமிடங்களே வந்தாலும் ஹரிஸ்ரீ அசோகனின் மேக்கப்பும் குறைவான மிரட்டலான நடிப்பும் இந்தத் தொடரில் முக்கியம் எனலாம்.
இன்னும் வெப் சீரியஸ் விஷயத்தில் மலையாளிகளுக்குப் பிடி கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைச் சரியாகப் பிடிக்கும் போது, வெப்சீரிஸில் பல மாயங்கள் மலையாளிகளால்தான் நிகழப் போகிறது.
சில மலையாளப் படங்களை சுமார் என்று சொல்லிவிட்டு ஆனாலும் புறக்கணிக்க முடியாததாக இருக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே அந்த வகையில் வருகின்றன. ஆஹா ஓஹோ என்று கொண்டாடவும் முடியவில்லை. சுத்தக் குப்பை என்று தள்ளவும் முடியவில்லை. அதில் ஒன்று வடக்கன்.(ஹிந்தி வடக்கன் என்ற பொருளில் அல்ல.)
பேய்த் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். நமக்கு அதிகம் அறிமுகமானது காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள்தான். ஆனால் மலையாளத்தில் வேறு வகையும் வருகின்றன. குமாரி, பூதகாலம், பிரமயுகம் போன்ற சைக்காலஜிக்கல் ஹாரர். இதில் இந்த மூன்றுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. அந்த மூன்று திரைப்படங்களிலும் எனக்குச் சில குறைகள் இருந்தாலும் கூட, அவை முக்கியமான திரைப்படங்கள் என்பதில் மாற்றமில்லை.
இந்தத் திரைப்படம் அந்த அளவுக்குப் போகவில்லை என்பது பெரிய குறை. முதல் முக்கால் மணி நேரம் சாகடித்து விட்டார்கள். ஏன் இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும் என்று விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்ல கதை விறுவிறுப்பாகிறது. சைக்கலாஜிக்கல் தில்லர் வகைக்குள் போகிறது. ஃபிளாஷ்பேக் கட்சிகளில் ஜாதிய வேறுபாடு, தெய்யம் ஆட்டம், அதன் பின்னால் இருக்கும் காமம் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால் அதை எடுத்த விதம் பார்க்க வைக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வழக்கமான பேய்ப் படங்கள் போல அல்லாமல் ஒரு சீரியஸான பேய்ப் படமாக எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கதாநாயகியின் நடிப்பு, ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் கூட, மிரள வைக்கிறது. இன்னொரு குறை என்று பார்த்தால் கதாநாயகனாக கிஷோரை நடிக்க வைத்தது.
பொறுமையாக, கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
Eleven (T) – இந்தப் படம் மிக நல்ல படம் என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றால் தமிழ்ப் படங்களைப் பார்த்து பார்த்து தமிழர்கள் எத்தனை காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் என்பது புரியும். படத்தின் முதல் ஒரு மணி நேரம் தாங்க முடியாத அறுவை. பின்பு போனால் போகிறது என்று மெல்ல வேகம் எடுக்கத் தொடங்குகிறது. அப்போதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அடுத்தடுத்து என்ன வரும் என்று வசனத்திலிருந்து கதை முதல் அத்தனையையும் சொல்லிக் கொண்டே வர, அனைத்தும் அப்படியே திரையில் வந்தன.
கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். படம் பார்க்கிறவனை எல்லாம் பைத்தியக்காரன் என்று இயக்குநர் நினைத்தால்தான் அப்படி ட்விஸ்ட் வைக்கத் தோன்றும். அந்த டிவிஸ்ட்டுக்கு அடுத்து இன்னொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் ஓகே. ஆனால் இதைப் போன்ற படங்கள் எல்லாம் எரிச்சலைத் தருகின்றன.
சின்ன வயதில் சிறுவர்கள் தெரியாமல் செய்ததற்கு இத்தனை கொடூரமான தண்டனை. இத்தனைக்கும் அவர்கள் பெரிய அளவில் எதையும் செய்துவிடவில்லை. கல்லூரி என்று காண்பித்திருந்தால் கூட ஓகே. பள்ளியில் பசங்களுக்கு என்ன தெரியும்? அதற்காக 11 பேரை ஒரு சைகோ கொல்கிறான். அவன் மேல் அத்தனை பரிவு வரும்படி திரைக்கதை. அந்த டீச்சர் சரியான பைத்தியக்கார டீச்சராக இருக்க வேண்டும். முதலில் அந்த டீச்சரை உள்ளே தள்ள வேண்டும. என்ன ஆனாலும் பெஞ்சமினுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்கிறார். 10 பேர் இறந்தது அந்தப் பெண்ணுக்குத் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பெஞ்சமின் உயிர் போய் விடக் கூடாது என்பதில் அத்தனை அக்கறை.
படத்தில் வில்லன் பெயரை பெஞ்சமின் என்றதும் ஆஹா கிறித்துவப் பெயர் வைத்திருக்கிறார்களே, அதுவும் பிரபு சாலமன் தயாரிப்பிலா என்று ஆச்சரியப்பட்டேன். பெஞ்சமின் கொலை செய்வது சரிதான் என்று கடைசி வரை பார்வையாளரை நம்ப வைக்கும்படியான திரைக்கதை எழுதி, அவனைத் தியாகியாக்கி… நல்லா உழைக்கறீங்கப்பா.
நடித்து விடக்கூடாது என்பதில் ஹீரோ மிகக் கவனமாக இருந்திருக்கிறார். ஹீரோயின் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அடுத்தடுத்த படங்களில் துணை நடிகையாக நடிக்கப் போவது நல்லது. ஹீரோ மெல்ல நடந்து வருகிறார் அவர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து போவதற்குள் இரண்டு முறை பார்வர்ட் செய்து படம் பார்த்தால் சீக்கிரம் படத்தை பார்த்து முடித்து விடலாம். இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
வித்தியாசமான கதைக் களம். ஆனால் கதையே இல்லை. முழுக்க முழுக்க இளமைக் கொண்டாட்டம். இளைஞர்கள் கூட்டம். எத்தனை எத்தனை இளைஞர்கள்! கலக்குகிறார்கள். படத்தில் முதியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். படத்தின் முதல் ஒரு மணி நேரம் பட்டாசு. நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கின்றன. அதிலும் ஆலப்புழா ஜிம்கானா குத்துச் சண்டை வளையத்துக்குள் இறங்கத் தயாராகும்போது பாடும் பாடல் – அப்படி ஒரு சிரிப்பு வந்தது எனக்கு. ஆனால், படம் பாக்ஸிங் களத்துக்குள் வந்ததும் அதே வைப் தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் சலிப்பாகிறது. அதன் பின்னர் படம் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறது. நஸ்லேன் காஃபூர் நடிப்புக்காகவும், படத்தின் கேமரா மற்றும் எடிட்டிங்கிறாகவும் நிச்சயம் பாருங்கள்.