Archive for திரை

துப்பறிவாளன் – துப்பறிய நிறைய இருக்கிறது

துப்பறிவாளன் திரைப்படம் பார்த்தேன். (கொஞ்சம் மெல்லத்தான் வருவோம்…)

ஏன் இத்தனை கொலைகள்? வெறும் பணத்துக்காகவா? பணத்துக்காக ஒருவர் சாகலாம், ஒட்டுமொத்த கூட்டமும் ஒருவர் பின் ஒருவராகவா? இது என்ன லாஜிக்? ஒரு கொள்கைக்காக தன் உயிரை தீர்த்துக்கொள்வதில் ஒரு ஏற்பு உள்ளது. அதெப்படி வெறும் பணத்துக்காக எல்லாரும் சாவார்கள்? ஜப்பானிய முறைப்படி தன் வயிறை அறுத்து ஒருவர் சாவது வெறும் பணத்துக்காகவா? இதில் பெரிய அளவில் மிஷ்கின் சறுக்கிவிட்டார் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய கெடுதல் நடந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யும்போது, மாட்டிக்கொள்பவர்கள் இப்படிச் சாவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாமல் பணம் ஒன்றே குறிக்கோள் என்பதற்காகச் செயல்பட்டவர்கள், கூலிப்படையினர், இப்படி மாட்டிக்கொண்டதும் வரிசையாகத் தற்கொலை செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய பிசகு என்றுதான் இப்போதும் தோன்றுகிறது.

ஒருவேளை எனக்குத்தான் படம் புரியவில்லையோ என்னவோ. 

Share

அருவி – திரைப்படம்

சரவண கார்த்திகேயன், எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறீர்கள். இதே சந்தேகங்கள்தான் நான் படம் பார்த்த நாளிலும் இருந்தது. பலரிடம் தொலைபேசியிலும் சொன்னேன். இந்தப் பெண் பழிவாங்குவது என்பது அபத்தம். சம்மதத்துடன் நடந்த உடலுறவு இது. அதுவும் எய்ட்ஸ் வந்த பெண் உடலுறவுக்கு ஒத்துக்கொள்வது, அந்தப் பெண் பழிவாங்குவது போலத்தான் உள்ளது.

இதில் அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவும் விதமே சரியானதுதானா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

படத்தில் வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடர்பான காட்சிகளில் தரமில்லை. ஆனால் மக்கள் கைதட்டி ரசித்தார்கள் என்பது உண்மை.

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு மாவோயிஸ்ட்டா என்றெல்லாம் போலிஸ் துறையே கலங்கியது என்பதெல்லாம் சுத்தமாக நம்பவே முடியாதவை.

ஆனால் இத்தனையையும் மீறி இந்தப் படம் ஒரு பாதிப்பைச் செய்தது என்பதும் உண்மை. இரண்டு நாள் இந்தப் படம் பற்றிய நினைப்பாகவே இருந்தது. அதிலும் முதல் இருபது நிமிடங்கள் (நான் படம் பார்த்த அன்றே இதைக் குறிப்பிட்டு எழுதி இருந்தேன்) அழகோ அழகு.

நடிகையின் நடிப்பு மிக அனாயாசம்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை: படத்தில் ஏமாற்றுபவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வேண்டுமென்றே சித்திரிப்பது. ஒருவர் உபன்யாசம் செய்பவர். இன்னொருவர் உதவி செய்யும்போது பின்னணியின் அடிகளாரின் படம் பார்த்த நினைவு. டிவி ஷூட் தொடங்கும்போது பிள்ளையாரை வணங்குவதுபோன்ற ஒரு ஷூட். இதிலெல்லாம் எனக்குப் பிரச்சினை என்பது, இப்படி எடுக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் ஏமாற்றுபவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பது போன்ற ஒரு செய்தி வருவதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஏமாற்றுவது என்பது ஒரு பொதுவான செயல்! அப்படியானால் கடவுள் நம்பிக்கை தந்தது என்ன என்பது பெரிய அளவில் யோசிக்கவேண்டிய தத்துவார்த்தப் பிரச்சினை.

சிலர் இப்படம் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகச் சொன்னார்கள். நான் ஏற்கவில்லை. பல போலிஸ்காரர்களின் குரல்களும், நியாயம் பேசும் நபர்களின் குரல்களும் இப்படத்தில் பிராமண வழக்கிலேயே ஒலித்தன என்பது நினைவுக்கு வருகிறது.

இப்படம் நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு படம் என்பதே என் நிலைப்பாடு.

இந்த சின்ன வயதில் ஒரு இயக்குநர் இந்தப் படம் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டியது, நம்பிக்கையைத் தருவது.

Share

2017 தமிழ்த் திரைப்படங்கள் ஒரு ரீவைண்டிங்

2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)
சிறந்த திரைப்படம்: எதுவுமில்லை
சிறந்த நடிகர்: யாருமில்லை
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சாம் எஸ் (விக்ரம்வேதா)
சிறந்த இசையமைப்பாளர்: யாருமில்லை
சிறந்த குத்துப்பாட்டு: டசக்கு டசக்கு (விக்ரம் வேதா)
சிறந்த பாடல்: நீதானே நீதானே (மெர்ஸல், இசை: ஏ.ஆர்.ரஹ்மான்), (அடுத்ததாக, விவேகம் படத்தின் காதலாடா பாடல், இசை அநிருத்)
நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: மாநகரம், 8 தோட்டாக்கள், அருவி, தீரன், பா பாண்டி
சிறந்த வணிகத் திரைப்படம்: விக்ரம் வேதா
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: மீசைய முறுக்கு
எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: விவேகம், மெர்சல், டோரா, ரிச்சி.
படு மோசமான படம்: இந்திரஜித்
சிறந்த காமெடி நடிகர்: சூரி
சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி  வர்மன்  (காற்று வெளியிடை)
இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தொண்டிமுதலும் திருக்ஷாக்க்ஷியும் (மலையாளம்), நியூட்டன் (ஹிந்தி), உளுதுவரு கண்டெந்தெ (கன்னடம் 2015).

Share

சென்று வருக 2017

இந்த வருடம் படித்த புத்தகங்கள்

* தடைசெய்யப்பட்ட துக்ளக்

* முஸ்லிம் லீக் ஆர் எஸ் எஸ் சந்திப்பு

* ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

* நாயகிகள் நாயகர்கள் – சுரேஷ் பிரதீப்

* பிரேக்கப் குறுங்கதைகள் – அராத்து

* தற்கொலை குறுங்கதைகள் – அராத்து

* உடலென்னும் வெளி (இன்னும் வெளிவரவில்லை.)

* பால், பாலினம். (கோபி ஷங்கரின் நூல்)

* லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் (இன்னும் வெளிவரவில்லை)

* பூனைக்கதை (பா.ராகவனின் நாவல்)

* போகப் புத்தகம்

* இந்தியப் பயணம் (ஜெயமோகன்)

* ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

* பான்கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்

* உப்புக் கண்க்கு – வித்யா சுப்பிரமணியன் (இன்னும் படித்துமுடிக்கவில்லை!)

* ஆதி சைவர்கள் வரலாறு

* நேதாஜி மர்ம மரணம்

* My father Baliah (Not yet finished)

* சினிமா பற்றிய ஒரு புத்தகம் (இன்னும் வெளிவரவில்லை)

* நரசிம்ம ராவ் – ஜெ.ராம்கி மொழ்பெயர்ப்பில்

* மீன்கள் – தெளிவத்தை ஜோசப்

* குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

* ஜெஃப்னா பேக்கரி – வாசு முருகவேல் (இன்னும் முடிக்கவில்லை)

* போரின் மறுபக்கம் – பத்திநாதன்

* எம்டன் செல்வரத்தினம் – சென்னையர் கதைகள்

* கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

* ரோக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்

* சார்த்தா – எல். பைரப்பா

* அவன் காட்டை வென்றான்

* நான் ஏன் தலித்துமல்ல – தர்மராஜ்

* ஒருத்திக்கே சொந்தம் – ஜெயலலிதா

* திராவிட மாயை பாகம் 2 – சுப்பு

இன்னும் சில புத்தகங்களைப் பட்டியலிட விட்டுவிட்டேன். மறந்துவிட்டது.

உடனடியாகப் படிக்கவேண்டியவை:

* அஜ்வா – சரவணன் சந்திரன்

* பார்பி – சரவணன் சந்திரன்

* பச்சை நரம்பு – அன்னோஜன்

இதற்கிடையில் 12 வலம் இதழ்கள் கொண்டுவருவதில் என் பங்களிப்பும் உண்டு.

மீதி நேரங்களில் 100 திரைப்படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் உணவைக் குறைத்ததால் கிடைத்த நேரத்தில் சாத்தியமாகி இருக்கிறது என நினைக்கிறேன்.

இதற்கிடையில் கிழக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன் என்று லேசாகத் தோன்றவும் செய்கிறது. 🙂

பிப்ரவரி மாதம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகஸ்ட்டில் மரணமடைந்தார். பேரிழப்பு. இந்த ஐந்து மாதங்களில் அதிகம் படம் பார்க்கவில்லை, புத்தகங்கள் படிக்கவில்லை. இந்த நேரத்திலும் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருந்தால்… ஜாக்கிரதை.

Share

உலிதவரு கண்டந்த்தெ – Ulidavaru kandanthe

நேற்றைய தி ஹிந்துவில் வெளியாகி இருந்த நவின் பாலியின் பேட்டிக்குப் பின்னர்தான் அவர் நடித்து வெளிவரப்போகும் ரிச்சி திரைப்படம், உலிதவரு கண்டந்த்தெ (மற்றவர்களின் பார்வையில்) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. உடனே இப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டேன். டொரண்ட் சரணம். இந்த உலிதவரு கண்டந்த்தெ என்ற பெயர் மனதில் பதியவே மாட்டேன் என்கிறது. உச்சரிப்பும் இதுதான் சரியா எனத் தீர்மானமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் தமிழில் சோதிக்காமல் ரிச்சி என்று தெளிவாக வைத்துவிட்டார்கள்.

 

சில படங்களை ஏன் ஆர்வம் கொண்டு ரீமேக் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். சிலர் சில படங்களை ஏன் தயாரிக்கிறார்கள் என்பதும் புதிரே. லூஸியா அற்புதமான திரைப்படம். சமீபத்தில் வந்த இந்தியத் திரைப்படங்களில் இது முக்கியமானது என்பது என் பார்வை. அதைத் தமிழில் எடுக்க சித்தார்த் நினைத்தது எனக்குத் தந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. இப்படம் ஓடாது என்று நிச்சயம் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் தமிழில் எடுத்தார். தமிழிலும் எனக்குப் பிடித்திருந்தது. சிலர் தமிழில் நன்றாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதேபோல், நடிகை சௌந்தர்யா த்வீபா என்ற படத்தைத் தயாரித்ததும் எனக்கு ஆச்சரியமான ஒன்றே. இப்படிச் சில ஆச்சரியங்களைத் திரைப் பிரபலங்கள் தந்தவண்ணம் உள்ளார்கள்.

தமிழில் (மலையாளத்திலும் வருகிறது எனத் தெரிகிறது) உலிதவரு கண்டந்த்தெ ரிச்சியாக வருவது இன்னொரு ஆச்சரியம். இந்தப் படம் லூஸியா போல் வணிக ரீதியாக நிச்சயம் வெற்றியடைய முடியாது என்று சொல்லமுடியாது. கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஓரளவு நல்ல வசூலைச் செய்துள்ளது எனத் தெரிகிறது. படம் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்படியே தமிழில் எடுத்தால் இப்படம் பாராட்டப்படும் என்றாலும், வணிக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் கொஞ்சம் தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் நிச்சயம் விக்ரம் வேதா அளவுக்கு நல்ல பெயர் பெறுவதோடு நல்ல வசூலையும் செய்யலாம்.

ஆய்த எழுத்து, விருமாண்டி மாதிரியான உத்தி கொண்ட திரைப்படம். இந்த உத்தி இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையே அல்ல என்று இடதுகையில் தள்ளிவிட்டுப் போய்விடலாம். படம் பார்த்த முடிந்த பின்பும் இதில் கதையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் படத்தை எடுத்த விதம் அசத்தலாக உள்ளது. பொதுவாக கன்னடப் படங்களில் (நான் மிகக் குறைந்த படங்களையே பார்த்துள்ளேன்) இது விஷுவலாக கொஞ்சம் மேன்மை காட்டுகிறது. (இதிலும் சில காட்சிகள் டெக்னிகலாக கொஞ்சம் பின் தங்கி உள்ளன என்பதும் உண்மையே.) இதையெல்லாம் தமிழில் பக்காவாகச் செய்தால் இன்னும் மெருகு கூடலாம்.

கன்னடத்தில் உடுப்பியைக் களமாகக் கொண்டு ஜன்மாஷ்டமி தினம் நடக்கும் மாறுவேடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. நேற்றைய தி ஹிந்து பேட்டியில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பேசத்தான் 50 நாள்கள் ஆகியது என்றும் படம் எடுக்க 30 நாள்தான் ஆனது என்றும் நவின் பாலி சொன்னதை வைத்துப் பார்த்தால், குலசேகரன் பட்டணத்தில் நடக்கும் தசராவை எடுத்துக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது. டீஸரை வைத்து இதை முடிவு செய்யமுடியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்.

உலிதவரு கண்டந்தெ படத்தில் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி (இவரே இயக்குநரும் கூட என அறிந்தபோது ஆச்சரியம் இரண்டு மடங்காகிவிட்டது) அசரடித்துவிட்டார். உண்மையில் படம் பார்க்க ஆரம்பிக்கும் முன்பு, கன்னடத்தில் யார் நடித்திருந்தாலும் அதைவிடப் பல மடங்கு நிச்சயம் நவின் பாலி நன்றாக நடிப்பார் என நினைத்துக்கொண்டுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் படம் பார்த்தபின்பு, ரக்‌ஷித் ஷெட்டி அளவுக்கு நவின் பாலியால் நடிக்கமுடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. ரக்‌ஷித் ஷெட்டியின் நடையும் துள்ளலும் அலட்டலும் வசனம் பேசும் விதமும் அந்த பெல்ட்டை அணிந்துகொண்டிருக்கும் விதமும் – என்ன சொல்ல, அற்புதம். (இவரே கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு படத்தில் நடித்தவர். அந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் அப்பாவுடன் சேர்கிறாரோ இல்லையோ, அவரது காதலியுடன் சேரவேண்டும் என்ற நினைப்பைக் கொண்டு வந்தது அவரது நடிப்பு!) நவின் பாலியும் நிச்சயம் கலக்குவார் என்பது உறுதி. ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கு என்பதுதான் கொஞ்சம் நடுக்கத்தை வரவழைக்கிறது.

இந்தப் படத்தை ஏன் நவின் பாலி நடிக்க எடுத்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். ஏனென்றால் இப்படத்தில் மூன்று நடிகர்களுக்குச் சமமான வாய்ப்பு. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒரு தமிழ் நாயகன் என்றால் கூறு போட்டிருப்பார். இது நவின் பாலி என்பதால் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். கன்னடத்தில் நாயகியாக வரும் நடிகையைவிட தமிழில் வரப்போகும் ஸ்ரெத்தா அதிகம் நம்பிக்கை தருகிறார்.

உலிதவரு கண்டந்த்தெ மிக மெதுவாகவே நகர்கிறது. தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். எனவே படம் வந்தவுடனேயே பார்த்துவிடவேண்டும். நவின் பாலியின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். நேரம் படமும் தமிழ்ப்படம்தானே? இருமொழிப் படம் என்றுதான் நினைவு. இதுவும் இருமொழிப் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தால் மலையாளத்தில் நிச்சயம் ஒரு ப்ளாக் பஸ்டராக இருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்தான் என்ன நடக்கும் என்று சொல்லமுடியவில்லை. என் கணிப்பில் நல்ல பெயர் வாங்கி, அதிலுள்ள குறைகள் முன்னிறுத்தப்பட்டு படம் வசூலில் சுணங்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடக்காமல் இருக்கட்டும்.

Share

விழித்திரு

‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக மிக சுமாரானது என்றாலும் அதில் சில காட்சிகள் மாற்றுத் திரைப்படங்களின் வகைமையைச் சேர்ந்தவையாக இருந்தன. எழுத்தாளர்கள்களும் கலைஞர்களும் நடித்திருந்தார்கள். இயக்குநர் என்னவோ முயற்சி செய்யப் பார்த்திருக்கிறார் என்பது புலனாகும். ஆனால் படம் தோல்வி. ஒரு தடவை (எங்கே எப்போது என்று என்ன யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை, எதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்தான்) தியடோர் பாஸ்கரனிடம் இப்படத்தைப் பற்றி ஒரு வார்தை பேசியபோது, அவள் பெயர் தமிழரசி படத்தில் இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் படம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் சொன்னார். இயக்குநர் பெயரையும் அடுத்த சில தினங்களில் மறந்துவிட்டேன்.

இப்போது மீரா கதிரவன் ‘விழித்திரு’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் படம் தந்த தோல்வி, அவரை வெகுஜனத் திரைப்படத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது போல. 2014ல் எடுத்து முடிக்கப்பட்ட படம் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

நிகழ்கால தீவிர அரசியல் களத்தைத் திரைப் பின்னணியாகப் படம் எடுப்பது கொஞ்சம் சவாலானது. பிரச்சினைகள் நிறைந்தது. மணிரத்னம் தீவிரப் பிரச்சினைகளைப் பின்னணியாக வைத்துப் படம் எடுப்பார். ஆனால் படத்தின் பிரச்சினைகளைப் பற்றி ஆராயாமல் அதில் காதல் பிரச்சினைகளோ உணர்வு ரீதியான பிரச்சினைகளோ இருக்கும். ஒருவகையில் திரைப்பட இயக்குநர்களுக்கு இந்த சமூகமும் அரசியல் அதிகாரமும் தரும் சுதந்திரம் அதுதான். அதைமீறித் தங்கள் வாழ்க்கையையே பணையம் வைக்க இயக்குநர்களுக்கு தைரியம் வேண்டும். அப்படியே பணையம் வைத்தாலும் இந்த சமூகத்தில் சாதிக்கப்போவது என்ன, இந்த சமூகம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பது கேள்விகள்.

விழித்திரு திரைப்படம், ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். மணிரத்னத்தின் பின்னணிக்கே அதைக் கழுவி ஊற்றுவார்கள் விமர்சகர்கள். இதில் இயக்குநர் இந்த ஆணவக் கொலை பற்றிய விஷயத்தை, மணிரத்னம் அளவுக்குக் கூடப் பின்னணியாகக் கொள்ளவில்லை. ஒரு காரணமாக மட்டுமே கையாண்டிருக்கிறார். இதைப் பற்றிய அலசல்களோ விவரிப்போ எதுவுமே இல்லை. ஒரு பரபரப்புத் திரைப்படத்துக்கான பின்னணி மட்டுமே என்ற அளவில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இதை மிக சீரியஸான படம் என்று வகைப்படுத்த முடியாது.

அரசியல் கொலை என்ற பின்னணியை விட்டுவிட்டுப் பார்த்தாலும், படம் அட்டகாசமான த்ரில்லர் என்று சொல்லக்கூடிய வகையிலும் அடங்கவில்லை. ஒரே இரவில் நான்கு கதைகளைச் சொல்லும் வகைமைத் திரைப்படம். படம் எடுத்து முடிக்கப்பட்டு உடனே வெளியாகி இருந்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். இது போன்ற வகைமைகளில் பல படங்கள் வந்துவிட்டன. ‘மாநகரம்’ சட்டென நினைவுக்கு வரும் உதாரணம்.

‘ஆய்த எழுத்து’ திரைப்படம் மூன்று புள்ளிகளை இணைக்கும் ஒரு படம். ஆனால் அதன் பின்னணி மிக முக்கியமானது, அழுத்தமானது. அதில் வரும் மூன்றாவது புள்ளி, மற்ற இரண்டு புள்ளிகளுடன் மிகப் பின்னால்தான் இணையும். அதுவே நம்மை அதிகம் பாதிக்காத புள்ளி. அதேசமயம் சித்தார்த் தொடர்பான காட்சிகள், அக்காட்சிகளுக்கே உரிய நியாயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் எடுபடவில்லை. (தனிப்பட்ட அளவில் ‘ஆய்த எழுத்து’ எனக்கு மிகப் பிடித்த படம், மிக முக்கியமான படம்.) இது போன்ற திரைப்படங்களில் நான்கு வேறு வேறு சம்பவங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு குறுக்கீடு நல்ல சுவாரஸ்யத்தைத் தரலாம். இது யதார்த்தம் இல்லை என்பது சரிதான். ஆனாலும் இதுவே நம்மைக் கட்டிப் போடும் ஒன்று. அப்படி ஒன்று இப்படத்தில் இல்லை.

அதுபோக, நான்கு கதைகளுமே நம்பகத்தன்மை இன்றிச் செல்கின்றன. எனவே இவை அனைத்தும் முட்டி நிற்கும்போது நமக்கு எவ்விதப் பரபரப்பும் உண்டாவதில்லை. இது ஒரு பலவீனம். எப்படியே எல்லாவற்றையும் இழுத்துவந்து அதை ஒரு அரசியல் பின்னணியில் ஒட்டச் செய்வதாலோ, கதாபாத்திரத்தின் பெயர்களைத் தன் கொள்கைக்கேற்ப வைப்பதாலோ ஒரு படம் எதையும் மக்களுக்குச் சொல்லிவிடாது என்றே நினைக்கிறேன்.

டி.ராஜேந்திரரின் குத்துப்பாட்டு வைக்கப்படவேண்டிய அவலத்தை இயக்குநர் மீரா கதிரவன் வெளிப்படையாகச் சொன்னார். உண்மையில் இந்தக் குத்துப்பாட்டு படத்துக்கு மிகப்பெரிய தடையைத்தான் தருகிறது. இதை ஏன் விநியோகஸ்தர்கள் வேண்டும் என்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் டி.ராஜேந்திரர் ஆடுவது, நமக்குத் தரப்படும் இனிமாதான்.

2014ல் எடுக்கப்பட்டும் படம் இன்றுவரை ஃப்ரஷாக இருக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு தடவை பார்க்கலாம் என்ற ரீதியில் இருப்பது பொருளாதார ரீதியாகப் படத்துக்கு பலம் சேர்க்கலாம். இன்னும் சுதந்திரமான வாய்ப்பளிக்கப்பட்டால் மீரா கதிரவன் மிக நல்ல படங்களை எடுக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு அமையட்டும். அதற்கான அரசியல் சூழலும் மலரட்டும்.

Share

டாய்லட் (ஹிந்தி)

சவசவ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காது வலிக்கிறது. டாய்லட் இல்லாத வீடும் வேண்டாம், புருஷனும் வேண்டாம் என்று கோர்ட்டுக்குப் போகிறாள்  ஒரு பெண். அரசு அலறியடித்துக்கொண்டு டாய்லட் கட்டித் தருகிறது. டாய்லட் கட்டாததற்கு அரசு காரணமல்ல, மக்களே காரணம் என்று சில காட்சிகளும் அரசும் காரணம் என்று சில வசனங்களுமென எல்லாப் பக்கமும் கர்ச்சீஃப் போட்டு வைத்துவிட்டார்கள். தன் வீட்டில் டாய்லட் வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் ஒரு பண்டிட். (பிராமணர்களை இழிவுபடுத்துகிறதுன்னு கிளம்பிடாதீங்கய்யா…) கடைசியில் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்படி டாய்லட் போகிறார் என்பதே இறுதிக்காட்சி. 🙂
கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தன் வீட்டில் கழிப்பறையே வரக்கூடாது என்று சொல்லும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கப்ஸா. ஒரு ஊரே அறியாமையில் டாய்லட் இல்லாமல் இருக்கிறது என்பதெல்லாம் நம்பவே முடியாத சங்கதிகள்.

அனிதா நர்ரே என்பவரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படம் என்று இறுதியில் காண்பிக்கிறார்கள். இந்த நர்ரே என்பது பிராமணர்களைக் குறிக்கும் ஜாதியா? திரைப்படத்தில் பிராமணர்களின் ஜாதியாகக் காட்டி இருக்கிறார்கள் என்பதால் கேட்கிறேன். திரைக்கதையில் இப்படிக் காட்டினால்தான் படத்துக்கு ஒரு தர்க்கம் வரும் என்பதால் காட்டி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். இல்லையென்றால் ஏன் ஒருவர் தன் வீட்டுக்கு டாய்லெட் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

படம் நல்ல வசூல் என்கிறது கூகிள். தமிழில் வந்தால் ஊத்தியிருக்கும்.

Share

நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

மரத்தடி யாஹூ குழுமத்தில் (2002வாக்கில் இருக்கலாம்) ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது. ஒரு கவிதை அனைவரையும் திடுக்கிட வைத்தது. அனைவரையும் அக்கவிதையைப் பற்றிப் பேச வைத்தது. ஒரு கவிதையை யாரோ எழுதுவதற்கும், பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காட்டியது அக்கவிதை. கவித்துவம் என்ற தூய அளவுகோல் கூட உணர்ச்சிக் குவியலின் நேர்மையின் முன்பு தகர்ந்துபோகும் என்பதற்கு அக்கவிதை ஒரு உதாரணம். அக்கவிதையை எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யா ஒரே நாளில் மரத்தடி யாஹூ குழுமத்தில் பிரபலமானார்.

2005/06 வாக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் அனைவரையும் பேச வைத்தது. புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் புத்தகங்களுக்கு அருகில் விற்ற முதல் புத்தகம் அதுவாக இருக்கலாம் என நினைக்கிறேன். கிழக்கு பதிப்பகம் அப்போதுதான் தோன்றியிருந்த புதிய பதிப்பகம். அந்தப் புத்தகம், நான் (சரவணன்) வித்யா.

2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது விஜய் என்ற நடிகருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் விஜய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிந்ததாலேயே யார் இந்த விஜய் என்று பார்க்க ஆர்வம் வந்தது. படத்தின் பெயர், நானு அவனல்ல அவளு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொண்டுவந்தது. பின்னர்தான் தெரிந்தது, இப்படம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் நான் வித்யா புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று. இப்படத்தைப் பார்க்க நினைத்தேன்.

 

தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்துவிடலாம். கன்னடப் படங்களைப் பார்ப்பது கடினம். சிடியும் கிடைக்காது. (இன்று வரை ஒரு மொட்ட்யின கதா பார்க்கக் கிடைக்கவில்லை.) பெங்களூருவில் இருக்கும் ஒருவர் மூலம் நானு அவனல்லா அவளு கிடைக்குமா என முயன்றேன். கிடைக்கவில்லை அல்லது விலை அதிகம் என்று என்னவோ காரணங்கள்.

நேற்று தற்செயலாக யூ டியூப்பில் தேடினேன். இப்படம் சிக்கியது. உடனே பார்த்தேன். கொஞ்சம் மோசமான் ப்ரிண்ட் தான், ஆனாலும் வேறு வழியில்லை.

படத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், அட்டகாசம். கண்டிப்பாகப் பாருங்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருமே அற்புதம்தான். அதிலும் திருநங்கையாக வரும் விஜய் என்ற நடிகரின் நடிப்பு, வாய்ப்பே இல்லை. படத்தின் இயக்குநரின் தெளிவு, இப்படத்தை உணர்ச்சிகரக் குவியலாக மாற்றாமல் அப்படியே எடுத்ததுதான். மிகப் பொறுமையாக நிதானமாகச் செல்லும் திரைக்கதை. திருநங்கைகளின் உலகம் விரியும் காட்சிகள் எல்லாம் பொக்கிஷம். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இசையும் பாடலும் படத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது.

இது போன்ற மாற்றுத் திரைப்படங்களுக்கு தொடக்கம் முடிவு என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இப்படத்தின் முடிவு ஒரு மெல்லிய கீற்று தென்படுவதாகக் காட்டப்படுகிறது. மகிழ்ச்சி. யாரையும் குற்றம் சொல்லாமல் யாரையும் திட்டித் தீர்க்காமல் மிகப் பொறுமையாக சமூகத்தை எதிர்கொள்கிறது இத்திரைப்படம். மனிதர்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் அல்ல. அதேசமயம் இதே மனிதர்களே மிகக் கோரமாகவும் திகழ்கிறார்கள். இந்த முரணுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் திரைப்படம் இது. நிச்சயம் பாருங்கள்.

நடிகர் விஜய்க்கு விருது கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. சரியாக எப்படி விருது கொடுத்தார்கள் என்று வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை ஆண்களின் ஆபாச நகல்களாகவே காட்டுவார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு (பாம்பே, நான் கடவுள், அருவி) மெல்ல வளர்ந்து வருகிறது என்றாலும் முழுமையான திருநங்கைப் படம் என்று ஒன்று வரவில்லை என்றே நினைக்கிறேன். (அல்லது சந்தோஷ் சிவனின் படம் ஒன்று வந்திருக்கிறதா? நவரசா? இதை நான் இன்னும் பார்க்கவில்லை.) உண்மையில் இப்படம் தமிழில் வந்திருக்கவேண்டும். கன்னடத்தில் வந்தது ஆச்சரியம்.

படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், நடிகர் விஜய்யின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பாருங்கள். எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்று தெரியும். குடும்பத்துடன் பார்க்கலாம்.

யூ ட்யூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=bZSy3SNy1kA&t=213s

பின்குறிப்பு: லிவிங் ஸ்மைல் வித்யாவின் அரசியல் நிலைப்பாடு, கொள்கைத் தேர்வு எல்லாம் எனக்கும் தெரியும். எனவே அதை முன்வைத்து இப்பதிவை அணுகவேண்டாம்.

Share