நித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.
நித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.
நித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.
நித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)
தனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.
மற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.
என்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.
நித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.
அவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.
கடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.
வேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.
இள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.
ஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.
காவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க வைத்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.
இதை எழுதவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை.
என் நோட்டிஸ் போர்டில் நான் ஒட்டி வைத்திருக்கும் அவரது பெயர் பொறித்த உலோக பிளேட்டை
வெறித்துப் பார்க்கிறேன். எத்தனை எளிதாக நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள் என்ற கோபம்
எனக்குள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கருப்புநிற பிளேட்டில் வெண்ணிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும்
பெயர்: C B DWIVEDI. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்!
ஒவ்வொரு வருடமும் ‘கார்கில் ஹீரோக்கள்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளைப் பார்க்கிறேன்.
ஒன்றில்கூட இந்தப் பெயரை நான் பார்த்ததே இல்லை. நானும் பொறுமையாக 16 வருடங்கள் காத்திருந்தேன்.
ஜர்னலிசம் படிக்க நான் முடிவெடுத்ததற்கு என் அப்பாவே காரணம். இந்த உலகத்திலிருந்து
எதுவும் எதிர்பார்க்காமல் எதையேனும் வித்தியாசமாக செய்து சாதிக்க நான் நினைப்பதற்கும்
இவரே காரணம். எனவே இவரது கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.
அவர் வாழ்க்கை வீணாகிப் போன ஒன்றல்ல. உண்மையில் இன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கைக்கு நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.
ராணுவம் என்பதும் ஒரு வேலைதான். ஆனால், வேலையைக் காட்டிலும் அதில் நிறைய அதிகம்
உள்ளது. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருத்தனுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலையைக்
கொடுத்து அவனிடம் ‘நாளைக்கே நீ சாக நேர்ந்தாலும் நேரலாம்’ என்று சொல்வதைப் போன்றது
அது. அப்படிச் சொன்னால், பத்து லட்ச ரூபாயாக இருந்தாலும் ஒருத்தரும் வேலைக்கு வரமாட்டார்கள்.
நீங்கள் துப்பாக்கி ஏந்தும் பிரிவுக்குப் போகிறீர்களா அல்லது வேறு பிரிவுக்கா என்பதைத்
தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு ராணுவத்திலும் தரப்படும். அப்போது போர்முனையில் முன் வரிசையில்
நின்று, எதிரிகளின் குண்டுகளை நம் நாட்டு மக்களுக்காக நெஞ்சில் ஏந்திக்கொள்ளும் ஒன்றைத்
தேர்வு செய்ய நிறைய நெஞ்சுரம் வேண்டும். என் அப்பா அதைத்தான் செய்தார். அவர் பீரங்கிப்
படையில் சேர்ந்தார்.
இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் சேவை செய்தார். இன்று இத்தனை ஆண்டுகள் அனுபவம்
உள்ள ஒருவர் கர்னல் ஆகிவிடமுடியும். அவர் இன்று உயிருடன் இருந்தால் தற்போது எந்தப்
பதவியில் இருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். தூங்கக்கூட நேரம் இல்லாத போர் முனையில்
இருந்தாலும் கூட, தன் குடும்பத்துக்குக் கடிதம் எழுத மறக்காதவர் மேஜர் சி.பி. த்விவேதி.
போர் முனையிலும் தான் மிக நல்ல நிலையில் இருப்பதான பாவனையுடன் எழுதுவார். அவர் என்
அம்மாவுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படிச் சொல்கிறது:
அன்புள்ள பாவ்னா,
அன்பு முத்தங்கள்.
…டிவியில் காண்பிக்கப்படும் பல செய்திகள் உண்மைதான். ஆனால் பல செய்திகள் பொய்யானவையும்கூட.
எனவே அதை எல்லாவற்றையும் அப்படியே நம்பவேண்டாம். கடவுளை மட்டும் நம்பு…
அப்பா தன் உயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்வதற்கு இரண்டு நாள்கள் முன்பு
எழுதிய கடிதம் இது. அப்பா முழுக்க முழுக்க குடும்பத்தில் அதிகப் பிரியம் கொண்ட ஒருவர்.
என் அம்மாதான் வீட்டின் தலைவர். ஆனால் அவளை இப்படி ஆக்கியதும் என் அப்பாதான். ஸ்ரீ
நகரில் இருந்து அழைக்கும்போது கூட, ‘என் செல்லக் குட்டி எங்கே’ என்றுதான் கேட்பார்.
உடனே நாங்கள் அம்மாவை அழைப்போம். இதன் அர்த்தம், அவர் அன்பற்ற அப்பா என்பதல்ல. அவர்
தனது விடுமுறையை எங்கள் தேர்வுகளை ஒட்டியே திட்டமிடுவார். நாங்கள் அனைவரும் அவரை நம்பியே
இருந்தோம். அவர் இல்லாவிட்டால், என் சகோதரிக்கு தேர்வுகளுக்கு தயார் செய்யவே தெரியாது.
கார்கில் போர் முனையில் இருந்தாலும் அப்பா எப்படி அவரது கடிதங்களில் இத்தனை
இலகுவாக இருந்தார் என்பதை என்னால் இன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எங்களை
சேட்டிலைட் போனில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அவரை சுற்றி நிலவும் மிக மோசமான வானிலையைப் பற்றிச்
சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஒரு தன்னலமற்ற மனிதரை நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும்.
அப்படி ஒரு மனிதரைப் பார்த்தால், அன்றே நான் அவரைத் திருமணம் செய்துகொள்வேன்.
எல்லாப் பிரிவுகளும் ஒவ்வொரு போரின் போதும் போர் முனைக்குச் செல்லமாட்டார்கள்.
கார்கில் போரின் போது பீரங்கிப் படையும் காலாட்படையும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
துப்பாக்கி சுடும் வீரர்கள் பீரங்கிப் படையைச் சேர்ந்தவர்களே. மேஜர் சி.பி. த்விவேதி
பெருமை மிக்க ஒரு துப்பாக்கி சுடும் வீரர். பீரங்கியைப் போன்ற பெரிய அளவிலான துப்பாக்கி
ஒன்றின் முனையில் தைரியத்துடன் அமர்ந்து, பயமே இன்றி எதிரிகளை எதிர்கொண்டு, இரவில்
இருந்து விடியும் வரை அவர்கள் மீது குண்டுகளைப் பொழிபவர் அவர். ஆம், இப்படித்தான் கார்கில்
போர் நடந்தது. இரவுகளில் உலகமே நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்திய ராணுவம்
தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.
மே 1999 14ம் தேதி அதிகாலை. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. கார்கிலின்
325வது ரெஜிமெண்ட் ட்ராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது. கார்கில் பிரச்சினை எங்கள் எல்லாருக்குமே
அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்திய வரலாற்றில் அது யாரும் எதிர்பார்க்காத ஒரு போர்.
அப்போதுதான் கோடை விடுமுறையின்போது நானும் என் அம்மாவும் என் அக்காவும் அப்பாவைப் போய்
பார்த்துவிட்டு வந்தோம். நாங்கள் அவருடன் 12 மணி நேரம் மட்டுமே இருக்க முடிந்தது. அப்பா
அம்மாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘மிகக் குறைந்த நேரமே பார்க்க முடிந்தது என்றாலும் 12 மணி நேரம்தான் பார்க்க
முடிந்தது என்றாலும், உன்னைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் உங்களை
சந்திக்கிறேன்.’
கொடூரமான நிஜம் என்னவென்றால், அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவே இல்லை.
அதுதான் நாங்கள் கடைசியாகப் பார்க்கப்போவது என்று தெரிந்திருந்தால், அந்த பன்னிரண்டு
மணி நேரத்தை அரக்கபரக்க உணவு உண்பதில் செலவழித்திருக்காமல், வேறு வகைகளில் உருப்படியாகச்
செலவழித்திருப்போம். என் அப்பா உண்மையில் ஒரு ரொமேண்டிக்கான மனிதர். நல்ல நகைச்சுவை
உணர்வு கொண்டவர். சில சமயம் சமைப்பார். நன்றாகச் சமைப்பார். உண்மையான அப்பா. அதெல்லாவற்றையும்விட
உண்மையான வீரர். அவருடன் இருந்த ஜவான்கள் அவரை மிகவும் விரும்பியதற்குக் காரணம், போர்க்காலத்தின்
போது அவரே மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்பதற்காகவும்தான். அவர் 315வது ரெஜிமெண்ட்டில்
இருந்தவரை, இந்தப் பிரிவு இரண்டே இரண்டு பேரை மட்டுமே கார்கில் போரில் இழந்தது.
போர் முகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் பீரங்கிப் படைப் பிரிவு 315வது
ரெஜிமெண்ட்தான். அந்த நேரத்தில் அப்பா அந்தப் பிரிவின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில்
இருந்தார். ஆபரேஷன் விஜய் (கார்கில் போர்) உண்மையில் மிகவும் கடுமையான ஒரு போர். போதுமான
தகவல்களே கிடைக்காதது, போருக்குத் தயாராகாத ராணுவம் மற்றும் பொதுமக்கள் என்ற போர்வையில்
நம் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட கோழைகளின் திட்டமிட்ட நகர்வு – இவையெல்லாம்தான் காரணம்.
முதல்நாள் ரெஜிமெண்ட் ட்ராஸ் என்னும் இடத்தின் கீழ்மட்ட முகாமுக்கு வந்து சேர்ந்தது.
அப்போது அவர்கள் மீது குண்டுமழை பொழிந்தது. என் மாமா கர்னல் உபாத்யாய் என் அப்பாவின்
கடைசிக் காலங்களில் ஒவ்வொரு நொடியும் அவருடன் இருந்தவர். அவர் சொல்கிறார், எங்கே எதிரிகள்
அமர்ந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை என்று. அன்றிரவு என் அப்பாவிடம் அவர் இப்படிச்
சொன்னாராம்: ‘நாம் நிச்சயம் பெரிய அபாயத்தில் இருக்கிறோம்.’
எதிரிகள் எப்படிப் பரவி எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும்
கிடைக்கவில்லை. எந்த யோசனையும் இன்றி ராணுவம் போர் முனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு பக்கம்
டோலோலிங், மறு பக்கம் டைகர் ஹில்லும் 4875வது முனையும் இருக்க, ராணுவத்தினர் தீவிரமாகத்
திட்டமிட்டார்கள்.
அப்பாவின் பிரிவான 315வது ரெஜிமெண்ட்க்கு, 1 நாகா, 8 சீக், 17 ஜாட் மற்றும்
16 க்ரீனடயர்ஸ்களின் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டிய பொறுப்பு இருந்தது. இவர்கள்தான் டோலோலிங்,
5140வது முனை, ப்ளாக் டூத், டைகர் ஹில், 4875வது முனை (கன் ஹில்), மஹர் ரிஜ்ட் மற்றும்
முஷ்கோ பள்ளத்தாக்கில் உள்ள ட்ராஸ்-இல் இருக்கும் சண்டோ டாப் ஆகிய இடங்களை மீட்கப்
போனவர்கள். இரண்டாவது கமாண்டோ பொறுப்பில் இருந்த என் அப்பாதான், இந்த பீரங்கிப் படைப்
பிரிவுகள் வருவதற்கான எல்லா விவரங்களையும் சேகரிக்கவேண்டும். எல்லா நாளும் அதிகாலையில்
எழுந்து, நெடுஞ்சாலையைச் சுற்றி இருக்கும் காலி இடங்களை நோட்டமிடுவார். அப்போதுதான்,
வந்துகொண்டிருக்கும் பீரங்கிப் படைகளின் வண்டிகளை அங்கே நிறுத்தமுடியும். தேவையான வெடிகுண்டுகளைக்
கொண்டு வருவது, சுடுவதற்கான ஒருங்கிணைப்பு, போரைப் பற்றிய சர்வே போன்ற எல்லா திட்டமிடல்களுக்கும்
என் அப்பாதான் பொறுப்பு. மே 14 முதல் 31 வரையிலான காலகட்டம், இந்தப் பிரிவுக்கு மிகவும்
மோசமான காலகட்டம். ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, உடனே அடுத்த இடத்துக்கு
போக வேண்டி இருந்தது. அந்தச் சமயத்தில் இப்படி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.
மேப் முன்பு அமர்ந்துகொண்டு மறுநாள் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடும்
நேரம் மட்டுமே என் அப்பாவுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரம்! அப்படி இருந்தும் அப்பா தொடரந்து
கடிதம் எழுதினார். அதை மட்டும் அவர் மறக்கவே இல்லை.
காலாட்படைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தோளில் சுமந்துகொண்டிருந்த 315வது
ரெஜிமெண்ட்டுக்கு இரவு வேளைகளில் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஒன்று, சுடுவதை நிறுத்திவிட்டு,
மறுநாள் காலை வரை தங்கள் கூடாரங்களில் அல்லது பதுங்கு குழிகளில் காத்திருப்பது. அல்லது
தொடந்து சுட்டுக்கொண்டே இருந்து காலாட்படைகளைப் பாதுகாப்பது. என் அப்பா பெரும்பாலும்
இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். பீரங்கிப் படைகளுக்குப் பதுங்கு குழிகள் கூட அங்கே இல்லை.
அவர்கள் கூடாரங்களில்தான் தங்கி இருந்தார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு
சுடும்போது மறைந்துகொள்ள முடியாது. ஏனென்றால்
சுட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கியின் முனையில் உட்கார்ந்துகொண்டுதான் அவர்கள் எதிரிகளை
எதிர்கொண்டார்கள். எதிரிகளை நேருக்கு நேர் பார்த்துச் சுடுவார்கள். அங்கேதான் என் அப்பா
இருந்தார். துப்பாக்கி முனையின் உச்சியில். எந்த பயமும் இல்லாதவராக!
இந்திய விமானங்கள் கூட இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டன. இந்த சமயத்தில்தான் ஸ்க்வாட்ரன்
தலைவர் அஜய் அஹுஜா மே 27, 1999 அன்று கொல்லப்பட்டார். இது இந்தியப் படைக்கு மிகப்பெரிய
பின்னடைவாக அமைந்தது. அதற்காக செய்தாகவேண்டியதை செய்யாமல் இருக்க முடியாது.
இன்னும் நினைவிருக்கிறது, நானும் என் அக்காவும் ஊடி-யில் ஒரு ஆப்பரேஷனை என்
அப்பா கமாண்ட் செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எந்த வருடம் என நினைவில்லை.
எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்தார்.
ஒரு மலையின் உச்சியில் எங்களை உட்காரச் சொல்லி இருந்தார். அங்கிருந்து அவர் வேலை செய்வதை
நாங்கள் பார்க்கவேண்டும். அப்பா தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, ஒரு உண்மையான
வீரரைப் போலத் தன் சக வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தார்.
நாங்கள் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆணை பிறப்பித்துக்கொண்டே
அப்பா சும்மா நடந்துகொண்டிருக்கிறார்” என்று பேசிக்கொண்டோம்.
அவர் எப்பேற்பட்ட தலைவர் என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அன்று எங்களுக்கு இல்லை.
அன்று அவர் உயிருடன் திரும்பி வந்ததற்குக் காரணம், எதிரிகள் அன்று அமைதியை வலியுறுத்தும்
விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டியதால்தான். அப்பா என்றுமே வெற்றியாளராகவே இருந்தார்.
ஜூலை 2, 1999 மாலை. 315வது ரெஜிமெண்ட்டுக்கு இன்னொரு குழப்பம் வந்தது. சுடுவதைத்
தொடர்வதா அல்லது நிறுத்துவதா? ஆனால் சுடுவதை நிறுத்தினாலோ காலாட்படைகள் (18வது க்ரீனடயர்
மற்றும் 9 சிக் பிரிவுகள்) மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்பா மீண்டும்
சுடுவதைத் தொடரும் முடிவையே தேர்ந்தெடுத்தார். தன் கூடாரத்திலிருந்து வெளியே ஓடிய அப்பா,
தன் சக வீரர்களை ஊக்குவித்தபடி, சுடுவதைத் தொடரச் சொன்னார். இதை வெற்றிகரமாக முடித்து
மீள்வது என்பது எத்தனை கடினமானது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்
அந்தக் கடினமான முடிவை எடுக்கவேண்டி இருந்தது. ஒன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அல்லது
ஒட்டுமொத்த பிரிவையும் பாதுகாப்பது – இந்த இரண்டில் அவர் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொரு வீரனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் வெறி இது. நமக்கு இது புரியாது. அவர்
வெறியுடனேதான் இருந்தார்.
அப்பா துப்பாக்கிச் சுடுபவரின் இடத்தில் அமர்ந்து, எதிரிகளை நோக்கிச் சுட்டார்.
அப்போது அவருக்கு வலப்பக்கம் ஒரு குண்டு வந்து விழுந்து வெடித்தது. அவரது முழங்கைகளில்
காயம் ஏற்பட்டது. அதை அவர் உணர்ந்தார்தான். ஆனால், அவற்றில் சில, கைகளைத் துளைத்துக்கொண்டு
உடலுக்குள்ளேயும் போய்விட்டது என்பதை அவர் உணரவில்லை. போரின் வேகத்தில் ஒரு வீரன் தன்
வலியை உணர்வதில்லை என்பதுகூட ஒருவேளை காரணமாக இருந்திருக்கக்கூடும். அதனால் அவர் உடலுக்குள்
பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆனால் தனது கைகளில்தான் காயம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.
அந்த குண்டு காரணமாக, அப்பாவும் நான்கு மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களும் மரணம்
அடைந்தார்கள். கன் பொசிஷன் ஆஃபிஸரும் துருப்பின் தலைவரும் காயத்தோடு தப்பித்தார்கள்.
அப்பா அப்போது 2 ஐசி-யாகவே இருந்தார். பயங்கரமான போர் முகத்தில் தனியாளாகப்
பல ஆப்பரேஷன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30க்கு ரெஜிமெண்ட் 315ன் வேலை
நேரம் தொடங்கும். தங்கள் வண்டிகளில், ஹெட்லைட்டை அணைத்துவிட்டு மலைகளை அவர்கள் சுற்றி
வருவார்கள். அப்படிப்பட்ட அபாயத்தில்தான் அவர்கள் இருந்தார்கள். 315ன் ஹீரோக்கள் இந்தியாவுக்கு
வெற்றியைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு கௌரவப் பட்டங்களும் தரப்பட்டன. ஆனால் இந்திய
மக்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தரவில்லை. அந்த சமயத்தில் இந்திய மக்கள்
தங்கள் வீடுகளில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். கார்கிலில் ராணுவ வீரர்களே
அந்த நேரத்தில் தங்கள் வாழ்க்கையை பணையமாக வைத்துப் போரிட்டார்கள். அவர்கள் போரின்
முதுகெலும்பாக விளங்கினார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மீண்டும் நினைக்கப்படவே இல்லை.
டைகர் ஹில்தான் இந்தியப் படைக்கான இறுதிப் புள்ளி. அங்கே இந்திய மூவர்ணக் கொடி
உயரப் பறந்ததை என் அப்பா பார்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்திருந்தாலும்,
அந்த வெற்றியை உணர்ந்திருப்பார் என்பது மட்டும் உறுதி. இந்த வெற்றியில் மிகப் பெரிய
பங்கு அவருக்கு இருக்கிறது. எந்த ஊடகமும் அதை என் அப்பாவிடமிருந்து பறித்துவிடமுடியாது.
ஜூலை 2, 1999. அந்தச் செய்தி வந்தபோது எங்கள் உலகம் தகர்ந்து போனது. என் அப்பாவுக்கு
நாங்கள் குழந்தைகள் மட்டுமே. அம்மாவும் கூட அப்படித்தான். அப்போது அம்மாவுக்கு 34 வயதுதான்.
ஒவ்வொரு முறை நாங்கள் கீழே விழும்போதும் எதோ ஒரு வழியில் என் அப்பாவின் ஆன்மா எங்களைத்
தூக்கிவிட்டது. இன்றோடு 16 வருடம் ஆகிறது.
இந்த கார்கில் தின வெற்றியின்போது, இழந்து போன இந்த மக்களின் உணர்வை தூண்ட நானும்
என் அக்காவும் தொடர்ந்து போராடுகிறோம். இன்று இந்தியா உயிர்ப்புடன் இருக்க காரணமான
அந்த ஒவ்வொருவருக்கும் என் வீர வணக்கங்கள்.
அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதாவது அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சானல்களில் திரைப்படங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்டிருந்ததை நான் பார்வேர்ட் செய்ததை ஒட்டிய பதிவு அது.
சிவசேனா கேட்டதற்காக அல்ல, நான் முன்பிருந்தே இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கை வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். நான் கேட்டதன் காரணம் மத ரீதியானது என்பது முதற் காரணம் அல்ல. முதன்மையான காரணங்கள், அந்தத் திரைப்படங்களில் வரும் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளும்தான். அதேசமயம் மதரீதியான விஷயங்களுக்கும் தணிக்கை இருப்பதற்கு நான் எதிர்ப்பும் அல்ல. அதுவும் கிறிஸ்தவ மாஃபியா கைகளில் சிக்கி இருக்கும் இது போன்ற தளங்களுக்கு இத்தகைய தணிக்கை இல்லாமல் இருப்பதுவே ஆபத்தானது.
உண்மையில் இன்றைய திரைப்படங்கள் தணிக்கைக்குப் பின்தான் வருகின்றன. ஆனால் அங்கே எந்த வகையிலும் இந்து மதம் பாதுகாக்கப்படவில்லை. இது ஒரு மிக வெளிப்படையான உண்மை. எனவே இது போன்ற சானல்களுக்குத் தணிக்கை என்று வந்துவிட்டால் அது பாசிசம் என்றாகி விடும் என்ற கருத்து அடிப்படையற்றது.
இன்று ஹிந்து மதத்திற்காக நான் பேசுவதாக நீங்கள் வைத்துக்கொண்டாலும் கூட (அது உண்மையே), நாளை அது எந்த ஒரு மதத்திற்கும் உதவத்தான் போகிறது. இது கூடத் தெரியாமல் நான் அதைச் சொல்லவில்லை. எங்கோ மற்ற மதங்களின் மதத் தலைவர் ஒருவரின் படம் எடுக்கப்பட்டதற்கு இங்கு சென்னையும் தமிழ்நாடும் அப்படிக் கொந்தளித்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தணிக்கை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.
திரைப்படங்களுக்கான தணிக்கை என்று ஒன்று இருக்கும்பொழுது இதுபோன்ற தளங்களுக்கான படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தணிக்கை என்பதே ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்ற மிக முற்போக்கான சமூகத்தில் நாம் வாழவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. அதை நம்புபவர்கள் இந்த விவாதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அரவிந்தன் கண்ணையன் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
அவரது பதிவில் கிழக்கு பதிப்பகம் என்று குறிப்பிட்டு, அந்தப் பதிப்பகத்தைக் குறிப்பிடக் காரணம், நாளை கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் தணிக்கை வேண்டுமா என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதற்கு இரண்டு பதில் சொல்ல வேண்டும். முதலாவது, புத்தகங்களும் திரைப்படங்களும் ஒன்றல்ல. அந்த இரண்டையும் ஒன்றாகவே கருதி, தணிக்கை இரண்டுக்கும் வேண்டும் என்று சொல்லும் அசட்டுத் துணிச்சல் எனக்கில்லை. உண்மையில் அரவிந்தன் கண்ணையனுக்கும் முடிந்து இருக்க முடியாது. ஆனால் ஹிந்து மதத்தை ஆதரிப்பவரை பாசிஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்ற அவரது பதற்றமே இதற்குக் காரணம். இரண்டாவதாக கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி இதுபோன்ற தளங்களுக்கு தணிக்கை என்பதற்கு முற்றிலும் எதிரானவர். ஆனால் இது ஒரு பொருட்டாக அரவிந்தன் கண்ணையனுக்குத் தெரியவில்லை. அதில் வேலை செய்யும் எனது கருத்தை வைத்துக்கொண்டு வேகவேகமாகக் கருத்தைச் சொல்வது அவருக்கு முதன்மை ஆகிறது. அதற்கும் காரணம் இந்து மதம்தான்.
ஹிந்து மதம் என்று வரும்பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது என்பது ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. பொதுவாக இதை அடிப்படையாக வைத்து எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது முற்போக்காளர்கள் என்ற பெயரில் உலாவரும் கம்யூனிஸ்டுகள்தான். இன்று அது ஒரு பொதுவான போக்காகவே மாறிவிட்டிருக்கிறது. இந்து மதத்தை வம்படியாகத் திரைப்படங்கள் தாக்கும்போது இவர்கள் யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள். மாறாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தணிக்கை வேண்டும் என இப்படி ஒரு அறிக்கை விடும்போது என்று வரும் பொழுது மிகச்சரியாக ஓடி வருவார்கள்.
அந்த எனது பதிவில் ஒரு கமெண்ட்டில் நானே தெளிவாகச் சொல்லி இருந்தேன், சிவசேனா என்பது புனிதம் அல்ல என்று. அதுவெல்லாம் இவர்களுக்கு முக்கியமே அல்ல. இவர்களது நோக்கம் இந்து மதத்தை ஆதரிக்கும் ஒருவரை பாசிஸ்ட் என்று அழைப்பதும் அவர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை இழுத்து அதற்குத் தணிக்கை வேண்டும் என்று கேட்பதும்தான். அது எந்த அளவுக்கு என்றால் திரைப்படங்களும் புத்தகங்களும் ஒன்று என்ற அளவிற்கு.
உண்மையில் இன்று புத்தகங்களுக்குத் தணிக்கை இல்லை என்பதனால் நீங்கள் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது. புத்தகம் வெளிவந்த மறுதினமே தடைசெய்யப்படும் அத்தனை சாத்தியங்களும் உள்ளது. மேலும் புத்தகம் வாசிப்பாளர்கள் மிகமிகக் குறைந்துவிட்ட தருணத்தில் இன்று புத்தகங்களையும் திரைப்படங்களையும் ஒன்றாக வைக்கமுடியாது. அதிலும் வீட்டுக்குள்ளே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வரும் இது போன்ற சேனல்களில் வரும் திரைப்படங்களை, சீரியல்களை ஒப்பிடவே முடியாது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் தைரியத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.
அதே பதிவில் ஒரு அறிவுக்கொழுந்து என்னைப் பற்றி, 21 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று கூறியவர்தானே இவர் என்று கேட்டிருக்கிறார். நான் சொன்னது, உண்மைதான். ஆனால் அது யாருக்குச் சொன்னது என்பது முதலாவது விஷயம். கல்யாணத்தைக் காரணம் காட்டி, மதமாற்றத்தைக் காரணம் காட்டி, பெண்களுக்குப் பாலிய விவாகம் வேண்டும் என்று கூறுபவர்களிடம், தயவுசெய்து 21 வயது வரையிலாவது பொறுத்திருங்கள் என்ற தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. தன் மகள் மதம் மாற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ள இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் 25 வயது 30 வயது வரையில் கூடக் காத்திருந்து அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்ளட்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் தன் மகள் மதம் மாறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர், பால்ய விவாகம் என்ற கருத்தை நோக்கிச் செல்வது அபத்தமானது, அநியாயமானது, அராஜகமானது; அது கூடாது என்ற நோக்கில் குறைந்தபட்சம் 21 வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 18. நான் 21 வயதில்தான் திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்குக் கூட அல்ல, பெண்களுக்கு மட்டுமே, அதுவும் தவிர்க்கமுடியாத பட்சத்தில். ஆனால் அந்த அறிவுக்கொழுந்துக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒருவேளை தானும் தன் மகளும் எதிர்காலத்தில் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்பவர்களுக்கும், தானே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லது செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று தோன்றலாம். அவர்களுக்கானது அல்ல இது.
இந்து மதத்தினரும், எந்த ஒரு மற்ற மதத்தினரும் கல்யாண ஆசை காட்டி சூறையாடப்பட்டு விடக்கூடாது என்பதற்கான பதில்தான் நான் எழுதி இருந்தது. ஆனால் இந்த அறிவுக்கொழுந்து அதையெல்லாம் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை. படித்தாலும் புரிந்திருக்குமா என்பது இரண்டாவது விஷயம். அல்லது எந்த ஒன்றையும் ஒரே வரியில் சொல்வது இன்றைய சமூக ஊடக ஜாதியைச் சேர்ந்த ஒரு விஷயம் ஆகிவிட்டதால் அவருக்கும் அந்த வியாதி தாக்கி இருக்கலாம். எனவே அந்த அறிவுக்கொழுந்துக்கு இனியும் பதில் சொல்வது தேவையற்றது.
ஆனால் அதில் நான் நம்பும் சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள். அந்தப் பதிவை நான் எழுதியபோது இதற்கு ஒரு பதில் சொல்ல நினைத்தேன். இன்று அதே நண்பர்கள் மீண்டும் அதையே செய்யும்பொழுது இதைத் தெளிவாக்குவது என் கடமையாகிறது.
அவர்களை விடுங்கள். மீண்டும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய மகனோ மகளோ கல்யாணம் என்ற ஒன்றைக் காட்டி மதம் மாறக் கூடாது என்று நினைத்தால் அதுவும் அதை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். மதம் என்பதை திருமணத்தின் போது திடீரென ஒன்றாக நுழைத்தால் இதுதான் நிகழும். நீங்களே சரியாக இருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஒருவேளை வராது. அப்படியும் மீறி இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் மகள் கல்யாணம் என்ற ஒன்றைக் கட்டி மதம் மாற்றப்படக் கூடிய அபாயம் இருந்தால், உண்மையில் 21 வயதில் திருமணம் செய்விப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பால்ய விவாகத்தை ஆதரிக்கும் கட்டத்துக்குள் போய்விடாதீர்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நிலைப்பாடு. இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை.
என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் நேரு அல்ல பிரச்சினை நேருவியர்களே என்று. அந்த நேருவியர்கள் வெற்று காங்கிரஸ்காரர்களாக மாறிவிடும் அபாயமான சூழல் இன்று சூழ்ந்திருக்கிறது என்பதை உணருகிறேன்.
இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.
ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!
————————————-+———————-+—————
திமுக விட்ட ராக்கெட்
விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.
பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?
விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.
அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.
கண்டு கொள்ளுவோம் கழகங்களை
இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.
————————————–+———————+—————-
இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.
ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!
இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂
என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.
அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.
ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.
இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.
இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.
அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂
பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂
பாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை! பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂
படம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.
* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.
* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.
* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.
* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.
* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.
* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.
* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.
* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.
* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.
1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய தோல்வி கண்டது. வரலாறு காணாத தோல்வி அது. எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் கூட. 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றே கருதினார்கள். ஒட்டுமொத்த தேர்தல் கணிப்புகளும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. பல ஊடகங்கள் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றே எழுதின. அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று கூட மக்கள் சொல்ல கூச்சப்பட்ட நேரம் அது. ஆனால் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியே ஜெயலலிதாவுக்கு மீட்சியாக அமைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.
2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வெல்லும் என்றே நான் கருதினேன். ஆனால் சிலர் நிச்சயம் அக்கூட்டணி தோற்கும் என்று சொன்னார்கள். நான் எப்படி பாஜக ஆதரவாளனோ, அப்படியே அந்தச் சிலர் திமுக ஆதரவாளர்கள். எனவே நான் அவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதுதான் அந்த வார்த்தையை அவர்கள் சொன்னார்கள். கள நிலவரம்! எனக்குக் கள நிலவரம் எதுவும் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னதில் தவறேதுமில்லை. அதேசமயம் தங்களுக்குக் கள நிலவரத்தின் நாடி கச்சிதமாகத் தெரியும் என்றார்கள். தேர்தல் முடிவு நான் சொன்னபடி இருக்கவில்லை. அவர்கள் ஆரூடம் சொன்னபடித்தான் அமைந்தது.
2011 தேர்தலில் அதே சிலர் கள நிலவரத்தின்படி மீண்டும் திமுகவே வெல்லும் என்றார்கள். நான் நிச்சயம் அதிமுக வெல்லும் என்றேன். எனக்குக் கள நிலவரம் தெரியவில்லை என்று மீண்டும் சொன்னார்கள். கள நிலவரம் என்ற அந்த வார்த்தை எனக்குள் பெரிய கலவரத்தைக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டேன். தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மை பெற்றது. 2006ல் கள நிலவரத்தைச் சொன்ன திமுக ஆதரவாளர்களின் கூற்றுப்படி அது தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது தனிக்கதை. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாத சிறுபான்மை அரசாகவே அமைந்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நிச்சயம் வெல்ல வாய்ப்பில்லை என்று களநிலவரக்காரர்கள் சொன்னார்கள். நிச்சயம் மோடி வெல்வார் என்று நான் சொன்னேன். குறைந்தது 250 சீட்டுகள் வெல்லும் என்றும், கூடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரப்படி அப்படி இல்லை என்றார்கள். எல்லாக் கள நிலவரத்தையும் தவிடுபொடியாக்கி தேசிய ஜனநாயக் கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்தது.
2016ல் மீண்டும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று நான் சொன்னேன். மக்கள் நலக்கூட்டணி 7%க்கு மேல் வாக்குகளைப் பெறாது என்றும், அது ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரக்காரர்கள் அடித்துச் சொன்னார்கள். திமுகவே நிச்சயம் வெல்லும் என்றார்கள். என் மேல் மீண்டும் அதே கள நிலவரப் புகார். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று, எம்ஜியாருக்குப் பின்னர் ஜெயலலிதா புதிய வரலாற்றைப் படைத்தார்.
இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று நான் நம்புகிறேன். இப்போதும் அதே நண்பர்கள் கையில் களநிலவரக் குண்டாந்தடியுடன் வருகிறார்கள். தங்களது முந்தைய கள நிலவரங்கள் பிசுபிசுத்துப் போனதில் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. இந்தியாவெங்கும் கள நிலவரம் நிச்சயம் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள். தேர்தல் முடிவின்போது களநிலவரம் புரிந்துவிடும்.
கள நிலவரம் என்பது ஒரு மாயை. அது யாருக்கு எப்படிப் பார்க்கப் பிடிக்கிறதோ அப்படி முகம் காட்டும். முடிவில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் நாங்கள் அன்றே கள நிலவரத்தைச் சொன்னோம் என்று பெருமை பட்டுக் கொள்வார்கள். தோற்றவர்களோ, ஒரு மாய அலை இருந்ததைக் கணிக்கமுடியவில்லை என்பார்கள்.
ஒவ்வொரு தேர்தல் கணிப்பிலும் இந்த கிரண்வுட் ரியாலிட்டி என்னும் கள நிலவரம் என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். அறிவியல் ரீதியாக நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் கணிப்புகள் தோற்கக் காரணம் என்ன? கள நிலவரம் என்ற சொல் பொய்த்துப் போவது ஏன்? இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கணிப்புகளை ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும். அவை நிச்சயம் வெல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தக் கணிப்புகள் ஏன் குறைபாடுள்ளது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. இவர்கள் குறைபாடுகளை மறந்துவிட்டு, கணிப்புகளை மட்டும் நம்புவார்கள்.
உண்மையில் வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் உண்மைத்தன்மையை அப்படியே வெளிப்படையாகக் கணிப்புகளில் சொல்வதில்லை. முன்பெல்லாம் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குச்சாவடிக் கணிப்புகள் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இவையும் சரியாகக் கணிப்புகளைச் சொல்வதில்லை. காரணம், மக்கள் தங்கள் வாக்கைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். அதிமுகவுக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூச்சப்படலாம். பாஜகவுக்கு வாக்களித்ததைச் சொன்னால் மதவாதி என்ற முத்திரை கிடைக்கலாம் என நினைக்கலாம். ஜாதிக்கட்சிக்கு வாக்களித்ததைச் சொல்ல அஞ்சலாம். இப்படிப் பல காரணங்கள். எனவே கள நிலவரத்தை நம்பி மட்டுமே நாம் முடிவைக் கணித்துவிடமுடியாது. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தமிழ்நாட்டு முடிவுகளே இதற்குச் சரியான உதாரணம்.
அதேசமயம் இந்தக் கணிப்புகள் சுவாரஸ்யமான விளையாட்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டு மாதங்கள் ஊடகங்களுக்கு இவை பெரிய உற்சாகத்தையும் செய்திகளையும் தருகின்றன. மற்ற பொருளற்ற பயனற்ற விளையாட்டைப் போல இது இல்லாமல், பயனுள்ளதாக இருக்கிறது என்பதாலேயே, கள நிலவரத்தை ஒரு பொருட்படுத்தத்தக்க விளையாட்டாகக் கருதி விளையாடலாம்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 330 இடங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். அல்லது விரும்புகிறேன்! தமிழ்நாட்டில் என்ன ஆகும்? அதிமுக கூட்டணி 15 இடங்கள் வரை வெல்லலாம். திமுக ஹிந்துக்களை மட்டுமே சீண்டுகிறது என்ற எண்ணம் இன்று பெரிய அளவில் பரவி இருக்கிறது. அது இன்னும் பொதுமக்கள் மத்தியில் கூடுதலாகப் பரவி, ஹிந்து வாக்கு வங்கி என்பதன் முதற்படியை ஒருவேளை அடைந்தால் தேர்தல் முடிவின்போது திமுகவுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கும்.
செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.
இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.
மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.
செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.