Archive for ஹரன் பிரசன்னா

Arattai app

என் நண்பர்கள் என்னை அரட்டை ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். 🙂

அரட்டை நன்றாகவே இருக்கிறது. பல சின்ன சின்ன விஷயங்கள் அசத்தலாகவே இருக்கின்றன.

அரட்டை என்றால் என்ன? வாட்ஸப் போன்ற ஒரு ஆப். இந்திய ஆப். ஃபோன் நம்பர் இருந்தால் எப்படி வாட்ஸப் பயன்படுத்துகிறோமோ அப்படி இதைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸப்புடன் ஒப்பிடும்போது என்ன இல்லை என்று பார்த்தால்…

* வாட்ஸப்பில் பணம் அனுப்பும் வசதி இருந்தது. இதில் இல்லை. பெரிய குறை எனக்கு இது. ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன்.

* டூயல் ஆப் வசதி வாட்ஸப்புக்கு ஆண்ட்ராய்டில் வருகிறது. அரட்டைக்கு வருவதில்லை. வேறு எந்த வழியில் அரட்டை ஆப்பை டூயல் ஆப்பாக வைப்பது என்று தெரியவில்லை. அரட்டை ஆப்பின் நோக்கில் இது மிக முக்கியமானது. இல்லையென்றால், அரட்டை ஆப்பும் வாட்ஸப்பும் ஆப்பும் தேவை என்றாகிவிடும்.

* பிசினஸ் விஷயங்களில் அரட்டை ஆப்பை எந்த அளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. சொல்லி சொல்லித்தான் மற்றவர்களை மாற்றவேண்டும். அது நடக்காது. அந்த விஷயத்தில் வாட்ஸப் தொடவே முடியாத உயரத்தில் உள்ளது.

* அரட்டை ஆப்பில் ஸூம் போன்ற மீட்டிங் வசதிகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, 40 நிமிட எல்லை இல்லை என நினைக்கிறேன். அதைவிட முக்கியம், மொபைல் ரெக்கார்டிங், மொபைலில் சேமிக்கும் வசதி இருக்கிறது. எத்தனை எம்பி சேமிக்க முடியும் என இன்னும் சோதிக்கவில்லை. இந்த மீட்டிங் வசதி அட்டகாசம். அதாவது கூகிள் மீட்டும் வாட்சப்பும் இணைந்த வசதி அரட்டையில் கிடைக்கிறது.

* சில சமயம் வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், அதை ஃபிக்ஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் அரட்டை ஆப்பில் அதை ஃபிக்ஸ் செய்ய எளிதான வழி கொடுத்திருக்கிறார்கள். அதுவே செட்டிங்க்ஸை சோதித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிரது. இது அட்டகாசம். நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்ற நண்பர்களுக்கு இதை அனுப்பி இருக்கிறேன்.

* இனி வரப் போவதுதான் அரட்டையின் ஆகப் பெரிய குறை. பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள், ஓடிபி வரவில்லை, எனவே இந்த ஆப்பை நிறுவமுடியவில்லை என்றார்கள். நிர்வாகம் உடனே இதைச் சரி செய்வது நல்லது.

* வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மிக முக்கியமானது இது. இது அரட்டையில் இல்லை. ஃபீட் பேக் அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என. அதற்குப் பதிலாக பாக்கெட் என்றொரு வசதி இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்பு பாக்கெட் என்றொரு ஆர் எஸ் எஸ் ஃபீடை சேமித்துப் படிக்கும் வசதி இருந்தது. மிக உபயோகமானது. அப்போதெல்லாம் ஆன்லைன் லின்க்கை க்ளிக் செய்து பாக்கெட்டில் சேமித்தால் அதை எப்போது வேண்டுமானாலும், ஆஃப்லைனிலும் படித்துக்கொள்ளலாம். அதைப் போன்ற வசதி என நினைத்தேன். ஆனால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போதுவரை தெரியவில்லை. இன்னும் ஆழமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும்.

  • அரட்டை குரூப்பிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லது எனக்குத் தான் பார்க்கத் தெரியவில்லையா என தெரியவில்லை குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதில் இன்ஃபோ சென்று பார்த்தல் யார் யாரெல்லாம் அந்த மெசேஜை பார்த்து இருக்கிறார்கள் அல்லது ஆடியோ மெசேஜ் ப்ளே செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க முடியும். அந்த வசதி அரட்டையில் இல்லை என நினைக்கிறேன்.

* வாட்ஸப்பில் ஸ்டேட்டஸுக்குப் பெரிய அளவிலான விசிறிகள் உண்டு. மெசேஜைப் பார்க்காவிட்டாலும் ஸ்டேட்டஸைப் பார்க்காவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்னும் அளவுக்கு. அரட்டையில் அது ஸ்டோரீஸ் என்று இருக்கிறது. ஆனால் என்னைத் தவிர ஒருவரும் ஸ்டோரி வைக்கவில்லை. 🙂

* வாட்ஸப்பில் ரிமைண்டர் ஆப்ஷன் கிடையாது. அரட்டையிலும் இல்லை. இதை மட்டும் அரட்டை கொண்டு வந்து, இதை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்தால், பெரிய அளவில் ரீச் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் ஃபீட்பேக்காக அனுப்பி இருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் நண்பர்கள் அரட்டைக்கு வாருங்கள்!

Update

அரட்டை ஆப் குறித்து எழுதி இருந்தேன். அதில் இருக்கும் முக்கியக் குறைபாடு ஒன்றையும் சொல்லியாக வேண்டும். அதாவது தனிப்பட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான குறைபாடு.

ஒரு சாட்டிலோ அல்லது ஒரு குழுவிலோ பிறர் அனுப்பும் மெசேஜை நாம் நமக்கு மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதி இல்லை. இந்த வசதியை எப்படி அதில் ஏற்படுத்தாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. இது மிகவும் அடிப்படையானது.

பலர்‌ அனுப்பும் மெசேஜில் ஒரு மெசேஜைப் படித்து விட்டோம் அல்லது நமக்குத் தேவையில்லை அல்லது பிரைவசி காரணமாக, அந்த மெசேஜை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அந்த மெசேஜை மட்டும் டெலிட் செய்யும் வசதி கூட இல்லாமல் ஓர் ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது?

உண்மையில் அரட்டை ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தத்தான் வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பும் அளவிற்கான குறைபாடு இது.

ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன். சரி செய்வார்களா எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் இந்த முக்கியமான குறைபாட்டை உடனே சரி செய்யச் சொல்லி ஃபீட்பேக் அனுப்புங்கள்.

சுதேசியாக இருப்பதைவிட முக்கியமானது, சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது.

Share

Dharmasthala ‘murders’

தி நியூஸ் மினிட் மற்றும் பிற இடதுசாரி-ஹிந்து எதிர்ப்பு பெய்ட் ஊடகங்கள் தர்மஸ்தலா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க உள்நோக்கத்துடன் செயல்பட்டன.

2012ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி தொடர்பான பழைய வழக்கைத் திடீரெனக் கையில் எடுத்துக்கொண்டு SM media போஸ்ட் ஒன்று வருகிறது.

அடுத்து ஒரு வீடியோவில், ஒரு முகமூடி அணிந்த மனிதர், கோயிலுக்கு அருகில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்களைத் தானே புதைத்ததாகக் கூறுகிறார்.

தி நியூஸ் மினிட், இந்தச் செய்தி உண்மையா என்று சரிபார்க்காமல், அல்லது சரி பார்க்க விரும்பாமல் வேண்டுமென்றே அந்தச் செய்தியைப் பெரிய அளவில் விவாதத்திற்கு உட்படுத்திப் பரப்புகிறது. தன்யா ராஜேந்திரன் ஆர்வமாக இதைச் செய்கிறார்.

கர்நாடகா ஆந்திரா கேரளா எனப் பல இடங்களில் செய்யப்பட்ட கொலைகள் அனைத்தும் தர்மஸ்தலாவை ஒட்டிப் புனையப்படுகின்றன.

இறுதியில், இது ஒரு பொய் என்றும், தர்மஸ்தலாவிற்கு எதிரான பிரசாரம் என்பதும் கண்டறியப்படுகின்றன. தர்மஸ்தலாவை ஒட்டிய இடங்களில் தோண்டிய போது ஒரே ஒரு பிணம் மட்டுமே கிடைத்தது. அதுவும் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட ஒருவரது பிணம்.

முகமூடி அணிந்த மனிதர் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறத் தான் வற்புறுத்தப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

முழுமையாக,‌ சுருக்கமாக அலசுகிறது இந்த வீடியோ.

நான்கு நாள்களுக்கு முன்பு சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. என்னதான் நடந்தது, அங்கு நிலவும் மர்மம் என்ன என்பதைக் கண்டறிய நாம் இன்னும் சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் போல.

https://www.thehindu.com/news/cities/Mangalore/dharmasthala-case-sit-seizes-five-skulls-100-bones-at-banglagudde/article70062233.ece

***

தர்மஸ்தலா கொலைப் புரட்டு தொடர்பாக போலி டாக்ஸின் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கவும். (பலர் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள்.)

நேராகக் களத்துக்குச் சென்று, அதுவரை மீடியாவில் சொல்லப்பட்டவற்றில் எவை எல்லாம் பொய் என்பதை ஆதாரத்துடன் சொல்கிறார்.

மீடியாவில் எப்படி எல்லாம் பேசினார்கள் என்பதையும், கொலை நடந்த இடத்தையும் பார்த்தால் நமக்குத் தெரியும், இந்தத் தமிழ்நாட்டு பெய்ட் மீடியா எப்படியெல்லாம் நேரேடிவ் செட் செய்கிறது என.

போலிடாக்ஸ் விக்னேஷ் எப்போதுமே அட்டகாசமாக வீடியோ வெளியிடக் கூடியவர். இதில் ஸ்க்ரிப்ட் இன்னும் அட்டகாசம்.

Share

Navarathri 2025 – Neo India

ஜிஎஸ்டி தொடர்பான சீர்திருத்தங்களைப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுமைக்கும் பாஜக திணறிய நிலையிலும், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியால் இந்தியப் பொருளாதார நிலைமை என்ன ஆகுமோ என்று எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி வந்த நிலையிலும், இவை இரண்டையும் எதிர்கொள்ளும் விதமாக மோடி இன்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசி இருக்கிறார்.

இந்தியா முழுமைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு தரப் போகிற பயனைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.

அமெரிக்கா பற்றி நேரடியாக எதுவும் பேசாவிட்டாலும் இந்தியா தன்னைத்தானே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பாக பேசியிருக்கிறார். இதனால் அனைவரும் இந்தியப் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரம் இன்குளுசிவ் ஆக தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் ஒன்று முக்கியமாக நடக்கும். அது இந்திய அளவில் அனைவருக்கும் ஒரு தைரியத்தை கொடுக்கும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதார இன்க்ளூசிவ்நெஸ் குறித்துப் பேசப்படும்.

அனைவரும் இல்லாவிட்டாலும் பலர் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சுதேசிப் பொருட்களை வாங்க இயன்றவரை ஆர்வம் காட்டினால், (இதன் பொருள் முழுமையாக விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பதல்ல, அது இயலாது என்பது எல்லோருக்கும் தெரியும்) அது உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாகவும் அமையும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசி இருக்கிறார் பிரதமர்.

ஏன் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தி இருக்கிறார் மோடி.

நவராத்திரியில் நயோ இந்தியா பிரகாசமாகத் தொடங்கட்டும்.

Share

Mura Malayalam Movie

Mura (M)

பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.

ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.

Spoilers ahead.

பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Athaikku Maranamillai

அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய் எழுதிய நாவல். தமிழில் மொழிபெயர்த்தவர் தி.அ.ஸ்ரீனிவாஸன். காலச்சுவடு வெளியீடு.

நல்ல மொழிபெயர்ப்பு. சுவாரஸ்யமான நாவல். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், குறு நாவல்.

விறுவிறுப்பான நாவல் என்றும் சேர்த்துச் சொல்லவேண்டும். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் நாவல். என்றாலும், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நாயகியின் பார்வையில்தான் முழு நாவலும் பார்க்கப்படவேண்டும் என்பது என் பார்வை.

அத்தையின் ஆவி சொல்வதெல்லாம், எம்விவியின் காது நாவலின் உத்தியை நினைவூட்டினாலும், சுவாரஸ்யமாகவும், சில இடங்களில் அட்டகாசமாகவும் இருக்கின்றன. ஆனால் ஆவி சொல்லாது என்று எடுத்துக்கொண்டால், ஏன் இந்த நாவலை இரண்டாம் தலைமுறைப் பெண்ணான சோமலதாவின் பார்வையில் பார்க்கவேண்டும் என்பது புரியும்.

ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்ணின் ஏக்கம், தாகம், வெறி, வெற்றி, காமம், அதிகாரம் என எல்லாவற்றுக்கும் விடை கிடைப்பது, ஆவியின் குரலை சோமலதாவின் குரலாகப் பார்க்கும்போதுதான்.

கடைசி அத்தியாயம், ஒரு பிராயச்சித்தம். சோமலதாவின் பிராயச்சித்தம். குற்ற உணர்வின் மீதான பிராயச்சித்தம்.

நேரம் இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள். விலை 125 ரூபாய்தான்.

ஃபோன் மூலம் வாங்க, 81480 66645

பின்குறிப்பு: ஆங்கில நாவலில் வரும் ஒரு பெயர் போஷோன். ஆனால் அதைத் தமிழில் வசந்தா என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வைப்பது சரியா என்று தெரியவில்லை. தமிழில் வாசிப்பதற்கு வசந்தா சட்டென்று ஒட்டிக்கொண்டதும் உண்மைதான். இதைப் பற்றிய குறிப்பும் நாவலில் இல்லை. ஒருவேளை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறானோ என்னவோ.

Update

‘அத்தைக்கு மரணமில்லை’ நூல் தொடர்பாக நான் நேற்று எழுதிய குறிப்புக்கு, அந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் தி.அ.ஸ்ரீனிவாசன் இந்தக் குறிப்பை எனக்கு வாட்ஸப்பில் அனுப்பி இருக்கிறார். அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

//ஹரன் பிரசன்னா, வணக்கம்.‌ நான் தி.அ ஸ்ரீனிவாஸன். அத்தைக்கு மரணமில்லை புத்தகம் பற்றிய உங்கள் முகநூல் பதிவை நண்பரொருவர் எனக்கு அனுப்பியிருந்தார். நன்றி. போஷோனை ஏன் வசந்தா என்று தமிழ்ப்படுத்தினேன் என்ற உங்கள் சந்தேகத்திற்கு: அந்தப் பெண் வசந்தகாலத்தில் பிறந்ததால் அப்பெயரை இட்டோம் என்ற வரி கதையிலேயே இடம்பெற்றுள்ளது. வங்கமொழியில் அகரமும் வகரமும் எழுத்துக்கள் உண்டே தவிர ஓசை முறையே ஒகரமும் பகரமும்தான். எனவே வசந்தா என்பது பொஷோன்(தா) ஆனது. தமிழில் நான் அதை வசந்தா ஆக்கினேன். வங்க ஒலிப்புமுறையிலேயே பெயர்ச்சொற்களைத் தமிழில் தரவேண்டும் என்றால், ரவீந்திரர் ரொபீந்த்ரோ வாகவும் விவேகானந்தர் பிபேகானோந்தோவாகவும் விபின்சந்த்ர பாலர் பிபின்சந்தரோ பாலராகவும் ஆகிவிடுவார். பாரதி ஓரிடத்தில் போஸ் என்பதை வசு என்று எழுதிய நினைவு இருக்கிறது. வங்கக் குடும்பப் பெயர்களான பந்தோபாத்யாயா, போஸ் போன்றவற்றை‌ மட்டும்‌ பெரும்வழக்கு கருதி நாம் அப்படியே பயின்றுவருகிறோம். எனது விளக்கம் உங்களுக்கு உடன்பாடாக அமையும் என்று நம்புகிறேன். நன்றிகள்.//

Share

Hypocrisy of dog lovers

நாயைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவன் ஃபாசிஸ்ட். காட்டுமிராண்டி. யூதர்களைக் கொல்லச் சொன்ன ஹிட்லரைப் போன்றவன். கையில் கத்தியுடன் திரியும் மதவாதி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொல்லச் சொல்பவனும் நாயைக் கொல்லச் சொல்பவனும் ஒனறு. பூனைக்கு உணவளிக்கப் பிச்சை எடுக்கும் கருணைவாதிகளின் குரல்கள் ஃபாசிஸ்ட்டுகளால் அமுக்கப்படுகின்றன. சாருவின் அதிரடி அறச்சீற்றக் கட்டுரை!

நாய்க்கு மட்டும்தான் கருணை. மற்ற எந்த உயிரையும் கொன்று பதமாகச் சமைத்து ருசித்துச் சாப்பிடலாம். அதில்‌ தவறில்லை. ஆனால், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், அரசு கைவிட்டுவிட்ட நிலையில், நாயைக் கொல்லச் சொல்லிப் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் அவர்கள் ஃபாசிஸ்டுகள்.

நாயைக் கொல்லாமல் வேறு தீர்வுகள் இருந்தால் நிச்சயம் யாரும் நாயைக் கொல்லச் சொல்லப் போவதில்லை. ஆனால் எத்தனையோ தீர்வுகள் இருந்தும் அத்தனை உயிரினங்களையும் கொன்று ரசித்து உண்ணும் மனிதர்கள், நாய்க் கொலையைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

நாயைக் கொல் என்று வாய் வார்த்தையில் செல்பவனை, தினம் தினம் ஒவ்வொரு உயிரினத்தையும் கொன்று தின்று கொண்டிருப்பவரோ அல்லது இவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பவர்களோ பேசலாமா?

பின்குறிப்பு: தெரு நாயைக் கொல்வதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது. நான் அந்தத் தீர்வை ஏற்கவும் இல்லை. அதே சமயம் தெரு நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களின் உயிரை விட மனிதர்களின் உயிர் முக்கியமானது. தெரு நாய்கள் கடிக்காமல் இருக்குமானால் அதை ஏன் வெறுக்கப் போகிறார்கள்? நாய்களை வீட்டில் வைத்து வளருங்கள். இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.

Share

Trending Tamil Movie

Trending – மிரட்டலான தமிழ்ப்படம். தவறவிடக்கூடாத வகையறா. குறைந்த செலவில், பெரும்பாலும் ஒரே வீட்டில், மொத்தமே 5 நடிகர்களுக்குள் தொடக்க நொடி முதல் இறுதி வரை பரபரப்பு. எமோஷனல் சைகலாஜிகல் திரில்லர். உண்மையில் எப்படி வகைப்படுத்துவது என்பது கடினம். சில இடங்கள் குரூரமான உளவியல். இப்படி எல்லாம் நடக்குமா என்கிற நம்பகத்தன்மை அற்ற ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் விளையாடி விட்டார்கள். தமிழில் இது போன்று வந்ததில்லை. ஏதேனும் வெளிநாட்டுத் திரைப்படத்தின் நகலோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உணர்ச்சி ரீதியாக ஆடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எது உண்மை எது விளையாட்டு என்கிற சந்தேகமும், அதுக்காக இவ்வளவா என்கிற கேள்வி தரும் எரிச்சலும் இப்படத்திற்கான வெற்றிச் சான்றுகள். ஏனென்றால் நாமே இந்த விளையாட்டின் லைக் மற்றும் வ்யூஸ் பலியாடுகள்தான். இந்தப் படம் இந்த இயக்கங்களின் உண்மையான கதை என்றால் இந்த இயக்குநர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

சில லாஜிக் பிழைகள் இருக்கின்றன. நாயகி குழந்தை உண்டாவது போல் காட்டுவது, ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஹீரோவே சொல்லிவிட்டு, கருவுற்றதற்காகக் கோபப்படுவது போன்றவை.

டார்க் விளையாட்டு ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து.

Share