Archive for ஹரன் பிரசன்னா

கவிதைகள்

அழகோவியம்

பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும்‌ சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால்‌ எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.

சொற்களை விட்டோடியவன்

அட்டைக் கத்தியால்
வானில்‌ சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி‌ பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது

நடைக்கோலம்

நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.

Share

எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்

அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.

பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.

பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.

நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.

(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)

Share

கோவிட் 19 தடுப்பூசி

தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று காரணங்களைப் பட்டியலிட்டார். தடுப்பூசி என்கிற மருந்தின் உலகளாவிய லாபி, அதன் பின்பு வந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் உலகம் முழுக்க அத்தடுப்பூசி நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என என்னவெல்லாமோ பேசினார். கேட்கும் யாரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பின்பு அது அவரது மனத்துக்குள்ளே அவரறியாத ஒரு இடத்தில் இருந்துகொள்ளும். இதைப் போல கொரோனா தடுப்பூசி வரும்போது, அப்போதும் சில குரல்கள் அதைப் போடாதே என்று சொல்லும்போது, விவேக் போன்ற ஒரு நடிகர் அதிர்ச்சியாக மரணமடையும்போது, மனதுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் நினைவிலி எண்ணம் தான் மட்டுமே சரி என்னும் ஆங்காரத்துடன் எழுந்து வரும். தமிழ்நாட்டில் இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் அரசியல் தேவைகளுக்காக தடுப்பூசியைப் பழித்தவர்கள் இன்று மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

முதலில் இப்படி இருக்கும், பின்னர் போக போகப் போட்டுக்கொண்டு விடுவார்கள், இது சின்ன பிரச்சினை என்றே நான் நினைத்தேன். ஆனால் இப்போதும் நிறைய பேருக்குத் தயக்கம் உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனங்களைக் கீழே உள்ளபடி தொகுக்கலாம்.

– தடுப்பூசியால் பலனே கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரத்தானே செய்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குத்தான் கொரானா வந்திருக்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மட்டும்தான் ஒருவர் இறந்திருக்கிறார். என் மாமாவின் சித்தியின் ஒன்றுவிட்ட சகோதரியின் சம்பந்திக்கு இப்படி ஆனது.

– தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு வரும்.

– தடுப்பூசி என்று உடலுக்குள் செலுத்தப்படுவது கொரோனா கிருமிதான். எனவே கொரோனா வந்தது போலவே உடல் பாதிக்கப்படும்.

– தடுப்பூசி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு லாபத்துக்காக செய்யப்படும் பிரசாரம்.

– தடுப்பூசி போட்ட பின்பு குடித்தால் மாரடைப்பு வரும், எனவே போட வேண்டாம்.

– யார் வந்து கேட்டாலும் தடுப்பூசி போட்டாகிவிட்டது என்று சொல்லிவிடலாம், யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படிப் பல காரணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

தடுப்பூசி போட்ட பின்பு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தடுப்பூசி போடாமல் இறந்தவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. எப்படியும் உயிர் போகப் போகிறது என்று நினைத்து தடுப்பூசியை கைவிடுவதற்குப் பதிலாக, அதே பயத்துடனாவது போட்டுத் தொலையுங்கள். உங்களைத் தடுப்பூசி காப்பாற்றும்.

போலியோ சொட்டு போட்டதும் குழந்தை மரணம், ஒரு தடுப்பூசி போட்டதும் சிறுவன் மரணம் என்ற கதைகள் எல்லாம் நம் நாட்டில்தான் சாத்தியம். என் மகளுக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் இதே பிரசாரம். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவள் பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போடப் போனேன். சுத்தமாகக் கூட்டமே இல்லை. அரசு இலவசமாகத் தந்த தடுப்பூசி. இந்த பிரசாரத்தால் பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய், அனைவரிடமும் என் முழு சம்மதத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறேன் என்று ஒரு தாளில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி இருந்தார்கள். எந்த நாளில் தடுப்பூசி போடப்பட்டதோ அந்த நாளில் 70% குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. அத்தனை பெரிய பிரசாரம் நடந்தது. நான் என் மகளுக்குப் போட்டுக்கொண்டேன். அன்று மீதி இருந்த 30% குழந்தைகளுக்கும் போடப்பட்டது. ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த லட்சணத்தில்தான் நாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது பழியைப் போடுகிறோம், கொஞ்சம் கூட அறிவோ வெட்கமோ இல்லாமல்.

ஒருவகையில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. நேரடியாக, மறைமுகமாக இந்தத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லை என்றே அவர்கள் பேசினார்கள். இன்று வந்து யோக்கியன் போல, அப்படியெல்லாம் இல்லை என்று பூசி மெழுகினாலும், இதுவே உண்மை. ஒரு நல்ல விஷயம், இன்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தடுப்பூசியின் தேவையைப் பேசத் துவங்கி இருக்கிறார்கள்.

அரசு என்னவெல்லாம் செய்யலாம்.

– அனைத்து நடிகர் நடிகைகளிடம் 30 நொடி வீடியோ பைட் வாங்கி அதை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பச் செய்யலாம். (முக்கியமாக இந்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். பாதி பிரச்சினை இவர்களால்தான்!)

– மதக்குருமார்கள் அனைவரிடமும் இதேபோல் பைட் வாங்கி ஒளிபரப்ப வேண்டும்.

– அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இதேபோல் வீடியோ வாங்கி அதை அனைத்து தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும்.

– கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட்ட அனைத்து பிரபலங்களிடமும் வீடியோ பைட் வாங்கி ஒளிபரப்பவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தமிழ்நாடு இத்தனை பின் தங்கி இருப்பது நல்லதல்ல. அபாயமானது.

Share

மண்டேலா – அதீதம்

மண்டேலா – எதையுமே நமக்கு உரக்கச் சொல்லித்தான் பழக்கம். அதிலும் எதாவது ஒரு நாடகத்தை நுழைக்காவிட்டால் தூக்கம் வராது. ஒவ்வொரு கதை விவாதத்திலும் யாரேனும் ஒருவர் நிச்சயம் ‘இது தமிழ் ஆடியன்ஸுக்கு செட் ஆகாது சார்..’ என்று சொல்வார்கள் என நினைத்துக்கொள்வேன். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் அலுக்க வைக்கும் திரைக்கதை. எளிதாக யூகிக்கக் கூடிய நிகழ்வுகள். ஒரு ஓட்டு என்னும் செயற்கைத்தனத்தின் மேல் நம் இயக்குநர்களுக்கு இருக்கும் வெறித்தனமான ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு என்பதெல்லாம் ஓவர். நாமாகவே இது தேர்தலுக்கும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால் திராவிட இயக்கம் தோலை உரித்தாலும் உரித்துவிடும். ஆனால் மோடி பிரச்சினையில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருத்தருக்கு 15,000 ரூபாய் என்று சொல்லலாம். பாரதம் தூய்மைத் திட்டம் என்றும் சொல்லலாம். ஒரே விதிவிலக்காக இருபது ரூபாய் டோக்கன் என்ற ஒன்றைக் காண்பிக்கிறார்கள்.

நம் இயக்குநர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை வினோதமானது. அவர்கள் எடுக்க நினைப்பது 80 அல்லது 90களின் கதையை. அப்படியே எடுத்தால் எப்படி இன்றைய இந்திய அரசைக் கிண்டல் செய்வது என்று நினைப்பார்களோ அல்லது ஒரு பீரியட் படமாகச் செய்வது தேவையற்ற வேலை என்று நினைப்பார்களோ தெரியாது. அவர்களது கனவை இன்றைய நிலையில் கொண்டு வந்து பொருத்தி வைக்கிறார்கள். அது அழகான கழுதையாகவும் இல்லாமல் அசிங்கமான கழுதையாகவும் இல்லாமல் எதோ ஒன்றாகப் பிறக்கிறது. (கழுதைப் புலி உவமானத்தைச் சொல்ல விரும்பவில்லை, காரணம் இதில் ஒரு புலி கூட இல்லை!) எந்த கிராமத்தில் இத்தனை பேர் இன்னும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற பூதாகரமான கேள்வி எழுகிறது. நிச்சயம் வாய்ப்பில்லை. உடனே முற்போக்காளர்கள், அதெல்லாம் இருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகள் திராவிட இயக்கங்கள் செய்ததுதான் என்ன என்ற கேள்வியும் சேர்ந்து எழவே செய்யும். இதையே 90கள் என்று வைத்துவிட்டால், கொஞ்சம் சமாளித்திருக்கலாம். ஆனால் இன்று நிகழ்வது போல வைக்கிறார்கள். அப்போதுதானே டிஜிடல் இந்தியா என்று சொல்லமுடியும். நான் இப்படிச் சொல்வதால், என்னவோ இந்தப் படத்தில் பூதாகரமாக அரசைக் கிண்டல் செய்திருக்கிறார்கள் என நினைக்கவேண்டாம். போகிற போக்கில் சொல்லப்படும் கிண்டல்களே. எனக்கு இருக்கும் வருத்தம், தெளிவாக அதிமுகவையோ திமுகவையோ தொடாமல் விட்டு விலகும் அந்த சாமர்த்தியத்தின் மேல் மட்டும்தான். இந்த தெளிவு இருக்கும் வரை தமிழ்நாட்டில் உருப்படியான அரசியல் பகடி படங்கள் வர வாய்ப்பில்லை.

நோட்டா, ஒரு ஓட்டில் வெற்றி என்று குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மண்டேலா குண்டுச் சட்டிக்குள் கழுதையை ஓட்டும் ஒரு முயற்சி. முதல் இருபது நிமிடத்தில் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எப்படியோ முழுமையாகப் பார்த்துவிட்டேன். அப்படி முழுமையாகப் பார்க்க முடிந்தது ஒன்று மட்டுமே படத்தின் வெற்றி.

2021ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அது வாக்கு இயந்திரத்தில் நடக்காது என்று இயக்குநர் நம்புகிறார் போல! இத்தனைக்கும் அந்த ஊரில் போட்டி இடுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

Share

தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்

பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.

Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM

இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!

Share

Book fair thoughts

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நகைச்சுவையாக ஃபேஸ்புக்கில் எழுதிய தெறிப்புகளின் தொகுப்பு! #நகைச்சுவை

”சார்.. எனக்கு டிஸ்கவுண்ட்டே வேண்டாம். சொன்னா கேளுங்க..”
“ஐயையோ.. அதெப்படிங்க? புத்தகக் கண்காட்சில 10% டிஸ்கவுண்ட் குடுத்தே ஆவணும்..”
“இல்ல சார். டிஸ்கவுண்ட்டோடதான் நான் புத்தகம் வாங்கணும்னா எனக்கு அப்படி ஒரு புத்தகமே வேணாம்! புத்தகத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்!”
“டிஸ்கவுண்ட் இல்லாமத்தான் நான் புத்தகம் விக்கணும்னா அப்படி விக்கவே வேணாம். புத்தகக் கண்காட்சிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்..”
*
நைட்டெல்லாம் இதோட ஒரே ரோதனை. தள்ளிப் படுங்க! நிம்மதியா தூங்க முடியுதா?


சார், பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு புக் பாத்தேன் சார். யார் எழுதினதுன்னு ஞாபகம் இல்ல. யார் போட்டதுன்னும் மறந்துட்டேன். அட்டை சேப்பு கலர்ல இருக்கும் சார். நாவலா சிறுகதையா கட்டுரையான்னு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. அந்தப் புத்தகம் கிடைக்குமா சார்?

நேத்து பத்து புத்தகம் வாங்கினேன். வீட்ல போய் பாத்தா பதினொன்னு இருக்கு சார். இந்தாங்க சார்.
உங்களை போல வாசகர்கள் இருக்கிறதாலதான்..
ரெண்டு பக்கம் படிச்சிப் பாத்தேன். தப்புன்னு தோணிச்சி சார்.

வாசகர்: போன வருஷம் வாங்கின புக்ஸையே படிச்சி முடிக்கல. அதான்..

பதிப்பாளர்: போன வருஷம்‌ போட்ட புக்ஸையே வித்து முடிக்கல. நாங்க புது புக் போடலியா? கூச்சப்படாம வாங்குங்க சார்.

மனசே சரியில்லை சார்.
என் புத்தகத்தைப் படிங்க..
அதுக்கப்புறம்தான் சார்..

‘தூரம் போகும் பறவைகள்’ நாவல் பேரை அடுத்த ப்ரிண்ட்லயாவது ‘தூரமாகப் போகும் பறவைகள்’னு மாத்திருங்க சார், ப்ளீஸ்.

சார்.. புத்தக அட்டை பிரமாதம்.
தேங்க்ஸ் சார்.
அட்டை மட்டும் தனியா கிடைக்குமா சார்? பத்து ரூபா வேணா குடுத்துர்ரேன்..

ஆடியோ புக் என்ற பெயரில் ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் சிடி விற்பனை செய்தவருக்கு போலீஸார் எச்சரிக்கை.

என்ன சார் தமிழ் இது. ஒரு வரி கூட புரியலை. நானும் கடைசி வரை ஒரு வரி விடாம படிச்சி பாத்துட்டேன். எப்படி சார் இதையெல்லாம் ப்ரிண்ட் பண்றீங்க?”

“படிக்காமதான் சார்”

ட்ரைன்ல ஏறினா அடுத்து இறங்குறதுக்குள்ள படிச்சி முடிக்கணும். அப்படி எதுனா இருக்கா சார் உங்க ஸ்டால்ல?
நாங்க ட்ரைன் டிக்கெட் விக்கிறதில்லைங்க.

சார், உங்க புத்தகமெல்லாம் விலை கூடிக்கிட்டே போகுது..
இதுவே சினிமாக்குன்னா.. ஹோட்டலுக்குன்னா..
அதில்ல சார். விலை எவ்ளோ வேணா வெச்சிக்கோங்க. புத்தகம்‌ பத்து பக்கத்துக்குள்ள இருந்தா நல்லருக்கும்.

வாசகர்: நேத்து வாங்குன உங்க நாவல்ல பத்து பக்கம் ப்ரிண்ட்டே ஆகாம வெள்ளையா இருக்கு சார்.
ஹரன் பிரசன்னா: ஸாரி சார். ப்ரிண்ட்டிங் மிஸ்டேக். மாத்தி குடுத்துடறேன் சார்.
வாசகர்: நோ நோ. அந்தப்‌ பத்துப் பக்கம்தான் க்ளாஸ். அதுவே இருக்கட்டும்.

பின் நவீனத்துவ நாவல் என்று சொல்லி புத்தக விலைப்பட்டியலை விற்க முயன்றவரால் புத்தகக் காட்சியில் பரபரப்பு.

கொரானாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற நூலால் கொரானா பரவுமா என்று கேட்ட அப்பாவியை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வரலாற்றைத் திறந்த மனதுடன் அணுகி அதைத் திருகலின்றிப் பதிவு செய்யவேண்டும்.

– ஒரு கம்யூனிஸ்ட்டின் வெளிப்படையான ரகசியக் குறிப்பிலிருந்து.

சார், நல்ல புக்ஸ் நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.
இப்படி கேட்டீங்கன்னா நான் எழுதின எல்லா புத்தகத்தையுமே உங்களுக்கு சொல்ல வேண்டி வரும்.
அதில்ல சார்.. நல்ல புக்ஸா நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.

எழுத்தாளரின் ஆன்மா: என் எல்லா‌ புத்தகமும் ஸ்டால்ல இருக்கா?
பதிப்ப்பாளரின் ஆன்மா: ப்ரின்ட்ல இருக்கு சார். எப்ப வேணா வரலாம்.

சார், புத்தகத்தை எடுத்தா கீழ வைக்க முடியக் கூடாது. அப்படி ஒரு புக் வேணும்!
அதுக்கு நீங்க பைண்டிங் ஆஃபிஸ்க்குத்தான் போகணும். அங்கதான் பசை ஒட்டி காய வெச்சிருப்பாங்க.

புத்தகத்துக்கு 10% டிஸ்கவுண்ட் ஒரு தடவையா இரண்டு தடவையா என்று கேட்ட நபரை‌ பதிப்பாளர்கள் விரட்டியடித்தனர்.

“பில்லிங் க்ளோஸ் பண்ணிட்டோம் சார்..”
“சார்.. தாம்பரத்துல இருந்து வரேன் சார்! எங்கல்லாம் தேடினேன் சார் இந்த புக்கை! என்னா ட்ராஃபிக்.. அதான் லேட்டாயிடுச்சு சார்.. இந்த ஒரு‌ புக் மட்டும் பில்‌ போட்ருங்க சார்.. ப்ளீஸ் சார்.”
அவர் கையில் இருந்த பொன்னியின் செல்வனைப் பார்த்த பதிப்பாளர் மயக்கமடித்தார். அடுத்த வருடம்தான் மயக்கம் தெளியும்.

புத்தகக் கண்காட்சியில் இரண்டு பதிப்பாளர்கள் சந்தித்துக்கொண்ட போது –
“உங்களுக்கு ஃபர்ஸ்ட் ரோ-லயே கடை. எங்களுக்கு உள்ள மாட்டிக்கிச்சு சார். கூட்டமே இல்லை.”
“உங்களுக்கு சொல்லிக்க ஒரு காரணமாவது இருக்கு சார்!”

அப்பளக்கடைக்காரர் தன் மகனிடம்: தம்பி, கூட்டமா வர்றாங்கள்ல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும். ஒவ்வொருத்தரையும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. அவங்க பொறாமைப்பட்டு வாய் வெச்சி வெச்சித்தான் நம்ம சேல்ஸும் குறைய ஆரம்பிச்சிருச்சி. நீ வளர்ந்து பெரியாளாகி ஒரு புத்தகம் எழுதி அதை அவங்களயே விக்க வெச்சி நீ பழி வாங்கணும். இதுதாண்டா என் வாழ்நாள் ஆசை!

“சார்.. போன வருஷம் இந்த புக் உங்க கடைலதான் வாங்கினேன்.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..”
“தம்பி இங்க‌ வாங்க. அதோ நிக்கிறார் பாத்தீங்களா.. அவர் நாலு வருஷம் முன்னாடி வாங்குனவரு..”

எழுத்தாளர் அவரது நண்பருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது-
“சார்.. பன்மைத்துவம் வேணும் சார். எங்களை பாருங்க.. நான் மார்க்ஸிஸ்ட். அவரு சோஷியலிஸ்ட். அவங்க எக்ஸ் நக்ஸல். இவங்க மாலெ. அதோ அவங்க சோஷியலிஸ்டிக் மாவோயிஸ்ட். இவங்க சிபிஎம். அவங்க சிபிஐ. இதுதான் சார் முக்கியம்.”

இரண்டு எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்ட போது –
“உங்க புக் அட்டை‌ பிரமாதம் சார்!”
“நானும் சொல்லணும்னு நெனச்சேன். உங்க புக் அட்டையும் அட்டகாசம் சார். டிசைனர் பின்னிட்டான்!”

“எழுத்தாளர் முத்தத்துல இருக்கார்ன்னா ‘எழுத்தாளர் முற்றம்’ அரங்கில் இருக்கிறார்னு அர்த்தம்யா.. யதார்த்தமா இருங்கய்யா..”

இரண்டு வாசக நண்பர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட போது –
“கம்யூனிஸம் பத்தி புக் வாங்கிருக்கேன் மச்சி”
“அட.. நானும்தான் மச்சி”
“மூலதனத்தை அடிப்படையா வெச்சி எளிமையான தமிழ்ல…”
“அட நானும்தான் மச்சி!”
“புக் பேரு கம்யூனிச சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து.”
“ஓ! நான் வாங்குன புக் பேரு கம்யூனிசச் சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து. ச் இருக்கு. நாம எக்ஸேஞ் பண்ணி படிச்சிக்கலாம்!”

பதிப்பாளர்: லீவ் நாள்ன்னு பேரு. ஆனா சுத்தமா கூட்டமே இல்ல.
வாசகர்: ஆமா சார். எனக்கு டிக்கெட் நேத்தே கிடைச்சி படமும் பாத்துட்டேன்.

எழுத்தாளர்: ரொம்ப டீட்டெய்ல்டா ஆழமா விரிவா எல்லா கோணங்கள்லயும் சிந்திச்சி இதுவரை வராத மாதிரி ஒரு புக் எழுதணும்..
பதிப்பாளர்: நீங்க எதுனா எழுதுங்க சார், போட்ரலாம்.

‘புக் ஃபேர் முழுக்க சுத்தி பாத்துட்டேன்.. பெரியார், கம்யூனிஸம் புக்ஸெல்லாம் அவ்ளோ இல்லியே ப்ரொ?’
‘ப்ரொ… ப்ரொ.. எந்திரிங்க ப்ரொ!’

பித்தகக் கண்காட்சிக்கு போகசொல்லோ ஒரே குருவிங்கோ!

டெரரிஸ்ட் மாரி மூஞ்சி கை எல்லாம் மூடிக்கினு இருக்குமே!

ஆமா.. ஆனா குருவிங்கோ முத்தம் குடுத்துகினு இருந்திச்சுங்கோ.

Share

பிரபல கொலை வழக்குகள் – பாகம் 2

பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பாகம் வாசித்தேன். சிறிய நூல். இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம். இதற்கேற்ற இலகுவான நடை. எடுத்தால் கீழே வைக்க முடியாது என்னும் அளவுக்கான வேகம். அந்தக் கால வழக்குகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டம் கடுமையான பின்பு, கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் பயன்படத் தொடங்கிய பின்பு, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று புரிந்துகொள்ளலாம். கூடவே கல்வியும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியும், எதற்கெடுத்தாலும் கொல் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் வழக்குகள் நடைபெற்றாலும், இந்தியர்களுக்கு மட்டுமே தண்டனை என்கிற நிலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுவிட்டால் லண்டனில் பிரிவி கவுன்ஸிலில் மேல் முறையீடுக்குப் போகவேண்டுமாம். பணம் இருந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தண்டனையைக் குறைத்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.

நரசம்மா கொலை வழக்கில், எப்படிச் செய்திருந்தால் கிராமணி தப்பித்திருக்கலாம் என்று நூலாசிரியர் எஸ்பி சொக்கலிங்கம் சொல்லும் இறுதி வரியை ரசித்தேன்! சூலூர் சுப்பாராவ் வழக்கில் திருப்பத்துக்கு மேல் திருப்பம். வழக்கைச் சொன்னதோடு அந்தக் காலத்தில் இந்த வழக்குகளைப் பற்றி எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்பதையும் தந்திருப்பது சிறப்பு. ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு நமக்கு நன்கு பரிச்சயமானவையே என்றாலும், நாவரசு வழக்கை படித்தபோது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி என்றால், வழக்கு நடந்தபோது இவ்வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியதில் ஆச்சரியமில்லை.

பில்லா ரங்கா வழக்கு – படிக்கும்போதே ஒரு பதற்றத்தை வரவழைத்தது. இந்தியா முழுக்க இவ்வழக்கு பேசப்பட்டதில் விந்தையில்லை.

கொலை வழக்கில் கொல்லப்பட்ட உடல் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இப்புத்தகத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

இந்நூல் முழுக்கவே பல கொலைகளும் பாலியல் அத்துமீறல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. படிக்கும்போது படபடப்பு இல்லாமல் படிக்க முடியாது. அதற்கேற்ற நடை, அதற்கேற்ற வேகம், தேவையான தகவல்களை மட்டும் தந்தால் போதும் என்கிற தெளிவு இப்புத்தகம் முழுக்க சீராகக் கையாளப்பட்டுள்ளது.

எஸ்பி சொக்கலிங்கத்திடம் சில வருடங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்குகள் என்றே ஒரு புத்தகம் கொண்டு வரலாம் என்றேன். பாலியல் வழக்குகள் என்பதில் சொக்கலிங்கம் அவர்களுக்கு உடன்பாடில்லையோ என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் இந்தியாவை (தமிழ்நாட்டை) உலுக்கிய பாலியல் வழக்குகள் என்று ஒரு புத்தகம் வருமானால், அது முக்கியமான புத்தகமாகவே இருக்கும்.

பின்னட்டை வாசகம்:

மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.
சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.

நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும்
படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.

வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.

Share

விலங்குச் சாலை (கவிதை)

விலங்குச் சாலை

தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.

Share