Thrayam (M) – மாநகரம் திரைப்படம் போன்ற உத்தி கொண்ட ஒரு கதை. ஒரே இரவில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் வகையிலான திரைக்கதை. மோசம் என்று சொல்ல முடியாது. கடைசி வரை பார்க்க வைக்கிறார்கள். அதேபோன்று அற்புதம் என்றும் சொல்லிவிட முடியவில்லை. ஒரே காட்சிகள் அளவுக்கு மீறி மீண்டும் மீண்டும் வருவது எரிச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. முடிவு என்று ஒன்று இல்லாமல் என்ன நடந்ததோ அதன் விளக்கத்துடன் போதுமென்று முடித்து விட்டார்கள். யூகிக்கக் கூடிய சின்ன கதையை முன் பின்னாக மாற்றி நமக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எப்படியோ பார்க்க வைக்கிறார்கள். த்ரயம் என்றால் மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள். மென் இன் மிஸ்டிரஸ்ட், மென் இன் மெஸ், மென் ஆஃப் மொமென்ட்ஸ் என்பதை த்ரயம் என்கிறார்கள் போல. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ப்ரைமில் கிடைக்கிறது.
Tag Archive for மலையாளத் திரைப்படம்
Anbodu Kanmani Malayalam Movie
அன்போடு கண்மணி (M) – சென்ற வாரமே பார்த்த திரைப்படம். குறிப்பு எழுதி வைக்க மறந்து போய்விட்டது. சுமாரான படம். குழந்தை பிறக்காத தம்பதியரைப் பற்றி ஏற்கெனவே வெளிவந்த விசேஷம் திரைப்படம் போன்ற கதை. எனவே பல காட்சிகள் ஒரே போல் இருக்கின்றன. விசேஷம் திரைப்படத்தின் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். விசேஷம் திரைப்படத்தில் நெளிய வைக்கும் காட்சிகள் சில உண்டு. இந்தப் படத்தில் அவையும் கிடையாது.
இப்படத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் மெல்லிய புன்முறுவல் வரவைப்பதை மறுக்க முடியாது. அதே சமயம் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாகவும் உருவாகி வரவில்லை. ஹீரோ அர்ஜுன் அசோகனுக்காக ஒரு முறை பார்க்கலாம்
Thudarum Malayalam Movie
துடரும் (M) – இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும். எப்படியோ தவறிப் போய்விட்டது. இன்றுதான் பார்த்தேன். (ஜியோ ஹாட்ஸ்டார்.)
ஒரு கமர்சியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் படம் மெல்ல சம்பந்தமில்லாமல் போவது போல் தோன்றினாலும் பின்னர் முடியும் வரை ஒரு நொடி கூட திரையிலிருந்து கண்ணை விலக்கத் தோன்றவில்லை. அப்படி ஒரு இறுக்கமான திரைக்கதை. இடைவேளைக் காட்சியும் அதன் பிறகு வரும் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக் காட்சியும் பதற வைக்கும் மாஸ் காட்சிகள். இப்படி இரண்டு காட்சிகள் ஒரு படத்திற்கு இருந்து விட்டால் நிச்சயம் அது பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும். வசூலுக்கும் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் 200 கோடி வசூலித்தது எந்தவித ஆச்சரியமும் இல்லை.
மோகன்லால் அதகளப்படுத்தி விட்டார். போலீசாக வரும் பிரகாஷ் வர்மா மோகன்லாலையும் மிஞ்சி விட்டார். சிறந்த வில்லனுக்கான விருது இவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல் இன்னொரு போலீசாக வரும் நடிகரும் கலக்கி விட்டார். இந்த மூவரும் திரைப்படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்கள். படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் ஷோபனா. மோகன்லால் ஷோபனா கெமிஸ்ட்ரி மேல் அந்தக் கால மலையாளிகளுக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. அதை நம்பி இப்படி ஜோடி வைத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை.
இந்தப் படத்தில் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் ரெஃபரன்ஸ் வருகின்றன. இளையராஜாவின் பாடல்கள் ஆங்கங்கே ஒலிக்கின்றன. தமிழில் பார்க்காமல் மலையாளத்தில் பாருங்கள். கேரளாவின் காடுகளும் மழையும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் பின்னணி இசையும் மறக்க முடியாத கமர்சியல் திரைப்பட அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.
Ouseppinte Osiyathu Malayalam Movie
ஔசப்பின்டெ ஒசியத்து (M) – நல்ல திரைப்படம். அசல் மலையாளத் திரைப்படம். மெல்ல நகரும் திரைப்படம் என்றாலும் முழுக்கப் பரபரப்பைத் தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது. போலீசின் தேடுதல் காட்சிகள் ஆரம்பித்த பிறகு, ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ உயில் சம்பந்தப்பட்ட திரைப்படம் என நினைத்து விட்டேன். இல்லை. இதுவும் ஒரு வகையில் திரில்லர் போன்றதுதான். ஆனால் இந்த முறை கடுமையான கொலை, தேடல் என்றெல்லாம் இல்லாமல், ஏன் எதற்கு கொலை என்பதெல்லாம் முதலிலேயே காட்டிவிட்டு, அதை ஒரு பாசப் போராட்டமாகச் சித்திரித்து இருக்கிறார்கள்.
அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. அதிலும் திலீஷ் போத்தன் அட்டகாசம். கலங்கடிக்கிறார். அதேபோல் விஜயராகவன். அருமையான நடிப்பு. எந்த நடிகருக்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை இறுக்கி இருந்தால் படம் இன்னும் வேறு தளத்திற்குப் போயிருக்கும். இப்போதே கூட தவறவிடக் கூடாத படமே.
வழக்கம் போல கேரளத்தின் நிலமும் இயற்கையும் ஒரு கதாபத்திரத்தைப் போலவே திரைப்படம் முழுக்கத் தொடர்ந்து வருகிறது. கேரளத் திரைப்படத்துக்குள் நம்மை சட்டென இழுத்துக் கொள்வது அவர்கள் தேர்ந்தெடுக்கும் லொகேஷன்தான்.
நாராயணின்டெ மூணான்மக்கள் திரைப்படம் போன்ற ஒரு மனநிலை கொண்ட திரைப்படம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் தந்த எரிச்சலை இந்தப் படம் போக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்
Bromance and Marana Mass – Malayalam Movies
ப்ரொமான்ஸ் (M) – முதலில் கொஞ்சம் இழுவையாக ஆரம்பித்தாலும், அண்ணனைத் தேடி தம்பியுடன் ஒரு கும்பல் கர்நாடகா சென்ற பின்பு படம் சுவாரஸ்யமாகிவிட்டது. பல காட்சிகளில் வாய்விட்டுச் சிரிக்க முடிந்தது. நடிகர்களின் இயல்பான நடிப்புதான் பெரிய பலம். கதையே இல்லாத ஒன்றை, இயல்பான நகைச்சுவை மூலம் ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள். மரண மாஸ் படம் போன்ற ஒரு திரைப்படம்தான் என்றாலும், அதைவிட கொஞ்சம் இது பெட்டர் என்பதால், வெட்டி நேரம் நிறைய இருப்பவர்கள் பார்க்கலாம்.
Maranamass (M) – அறுவை. சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் ஒட்டுமொத்தமாக பெரிய மொக்கை. இந்த மலையாளிகள் இன்னும் எத்தனை சீரியல் கொலைகள் படம் எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ப்ளாக் காமெடி என்று நினைத்துக்கொண்டு என்னவோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.
Am Aha Malayalam and Pravinkoodu shappu Malayalam Movies
அம் அஹ (அம்மா) – (M) – விதந்தோதத்தக்க படம் அல்ல என்றாலும், மனதைக் கனக்கச் செய்துவிட்ட படம். படத்தின் முதல் பாதி த்ரில்லர் போலச் சென்றது. அதற்கான காரணத்தை விவரிக்கும்போது கலங்கடித்துவிட்டது. குறிப்பாக அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமற்ற முகம்.
அனைத்து நடிகர்களும் மிக இயல்பாக நடிக்கிறார்கள். நம்ம ஊர் தேவதர்ஷினிக்கு வாழ்நாள் கதாபாத்திரம். நன்றாக முயன்றிருக்கிறார் என்றாலும், நாம் பழக்கப்பட்டுவிட்ட தேவதர்ஷினியைத் தாண்டி, இந்தக் கதாபாத்திரத்துக்குள் செல்ல முடியவில்லை. வேறு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். பாடல்களைக் குறைத்திருக்கலாம்.
மனம் இருண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்து, புது மழை கசடை எல்லாம் நீக்கி குளிரச் செய்துவிடுவது போன்ற கடைசி இரண்டு நிமிடம் – மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.
கதைக் களம் நடக்கும் இடம் மலை சார்ந்த பகுதி. இப்படிப்பட்ட ஊரில் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒவ்வொரு நொடியும் அதிசயிக்க வைக்கிறார்கள். தங்கள் படத்தில் தங்கள் நிலத்தை இத்தனை அழுத்தமாகக் காண்பிப்பதில் மலையாளிகளுக்கு நிகர் எவருமில்லை.
திலீஷ் போத்தன் தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடிக்கிறார் என்றாலும், இத்தனை நல்ல இயக்குநர் இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வீணாகிப் போகிறாரே என்ற வருத்தம் எழாமல் இல்லை.
அம் ஆ – பொறுமை இருப்பவர்களுக்கான படம்.
Primeல்கிடைக்கிறது.
ப்றாவின்கூடு ஷாப்பு (M) – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தரம். கதை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதைதான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் அட்டகாசம்.
பாஸில் ஜோசஃப் படம் என்று நினைத்து கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் பார்க்கத் தொடங்கினேன். வந்தார் சௌபின் ஷாஹிர். கூடவே செம்பன் வினோத். இவர்கள் இருவரும் இருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ பார்த்திருப்பேன். மூவரும் கலக்கிவிட்டார்கள். உண்மையில் இது சௌபின் படம். அவரது மேக்கப்பும் நடையும் அட்டகாசம். நடிப்பு அதகளம்.
ச்சாந்தினி – நோ சான்ஸ். செம அழகு, செம நடிப்பு.
எப்படி இத்தனை விதம் விதமான கொலை த்ரில்லர்களை எடுக்கிறார்களோ மலையாளிகள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, எடிட்டிங் இசை என அனைத்திலும் துல்லியம்.
ஏன் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என்பது புரியாத புதிர்தான்.
டோன்ட் மிஸ் வகையறா படம். அதிலும் கொலையாளி யார் என்று நின்று நிதனமாகச் சொல்லும் காட்சி தரத்திலும் தரம்.
சோனி லைவில் கிடைக்கிறது.
Bougainvillea Malayalam Movie
போகன்வில்லா (M) – சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை. படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் மேக்கிங் மிக அருமையாக இருக்கிறது. இசை அருமை. கடைசி வரை ஏன் இப்படி நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸைத் தக்க வைத்தது சிறப்பு. மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் ஹீரோதான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பது சீக்கிரமே தெரிந்து விடுகிறது. ஃபகத் ஃபாசிலை இத்தனை வீணடித்திருக்கக் கூடாது. பல காட்சிகள் அவர் இல்லாமலேயே நகர்கின்றன. கடைசியில் நம்ம ஊர் சினிமா போலீஸ் போலத் துப்பாக்கியுடன் வந்து கைது செய்து விட்டுப் போவதற்கு அவர் எதற்கு? ஹீரோதான் காரணம் என்று தெரிந்த பிறகு வரும் காட்சிகள் நீளம். சுமாரான படம்.
Five Movies
கிருஷ்ணம் ப்ரணய சகி (K) – கணேஷின் திரைப்படம் ஃபீல் குட் முவீயாக இருக்குமே என்று பார்க்க நினைத்தது ஒரு குத்தமாய்யா? சிதைச்சி விட்டுட்டாய்ங்க. கட்டுன பொண்டாட்டியையே காதலிக்கிற கதையை ஃபீல் குட்டா காமிக்க நினைச்சி, நான்லீனியர் கதையை அதுல செருகி, அப்படியே நம்ம தலைலையும் அதை செருகி.. மிடில.
ஒரு ஜாதி ஜாதகம் (M) – வினீத் ஸ்ரீனிவாசன் நடித்தும் படம் அறுவை. ஆங்காங்கே ஒவ்வொரு சமயம் சிரிக்கிறோம் என்றாலும் மொத்தத்தில் சிரிப்பே வரவில்லை. ஒரு ஆணுக்கு இத்தனை சிரமமா என்றெல்லாம் தோன்றினாலும், கதை நாயகனை இத்தனை அடி அடிக்கும் ஒரு படமா என்று தோன்றினாலும், பலவீனமான கதையும் அதைவிட பலவீனமான திரைக்கதையும் சாவடித்துவிட்டன.
பணி (M) – ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் திரைப்படம். முதல் பாதி மிக விறுவிறுப்பு. அட்டகாசமான திரைக்கதை. அத்தனையையும் இரண்டாம் பாதியில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெறும் பழிவாங்கும் கதை என்று போய்விட்டது. அதில் சுவாரசியமும் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை. முதல் பகுதி அத்தனை புத்திசாலித்தனமாக இருக்க இரண்டாம் பகுதி பைத்தியக்காரத்தனமாகிவிட்டது. ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். சோனி லைவில் கிடைக்கிறது.
I am Kathalan (M) – பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. டெக்னிகல் கிரைம் த்ரில்லர் வகையறா என்றாலும் படத்தில் ஒரு ஃபீல் குட் தன்மையும் இருந்தது. இளமையான படம். இதில் இருக்கும் தவறுகளை டெக்னிகல் ஆள்கள் கண்டுபிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். ஆஹா ஓஹோ படமில்லை என்றாலும் ஈகோ கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் எளிமையான படம். ப்ரைமில் கிடைக்கிறது.
Ponman (m) – எப்படித்தான் இப்படி ஒரு கதையை கண்டுபிடித்தார்களோ. ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய படமாக்கி இருக்கிறார்கள்! ஓரளவுக்குப் பார்க்கும்படியாகவே வந்துள்ளது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்று தோன்றினாலும் கூட, படத்தின் விறுவிறுப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தொண்டி முதலும் திருகாக்ஷியும், மகேஷிண்டெ பிரதிகாரம் போன்ற, இருவருக்கிடையேயான ஈகோவை நினைவூட்டும் ஒரு கதை என்றாலும், இந்தக் கதை வேறு களம். உயிரே போனாலும் வெல்ல நினைக்கும் ஒரு பிடிவாதம். கேரளத்தின் நிலம், மக்கள் என அனைத்தையும் அத்தனை அசலாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சமூக ஊடங்களில் ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட அளவுக்கு எனக்கு இதில் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும், நிச்சயம் மோசமான படம் அல்ல.


