Tag Archive for மலையாளத் திரைப்படம்

Kerala crime files Season 2

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (M) – ஒருமுறை பார்க்கலாம். ஆகா ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல தருணங்கள் உள்ளன. முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி இரு அத்தியாயங்களும் அருமை. அதிலும் முதல் 5 நிமிடங்கள் வாவ். நடுவில் இரண்டு அத்தியாயங்கள் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயல்கின்றன. அதில் தப்பித்துக் கொள்வது நம் சாமர்த்தியம்.

தொடர் முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆறு எபிசோட் எப்படியாவது வந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் போல. அதிகாரிகள் மாறினாலும் அதே விஷயத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பேசுகிறார்கள். போதும்டா சாமி நீங்க பேசுனது என்று நினைக்கும் போதுதான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். இதில் போதாக்குறைக்கும் மனைவி கதாபாத்திரங்களின் எரிச்சல் வேறு.

கதையில் ஓர் ஆச்சரியம் கொலை எதற்காக என்பது.  அதில் ஒரு மைனஸ் இதற்காகத்தான் இருக்கும் என்பதை முதல் காட்சியிலேயே யூகிக்க முடிவது. இன்னொரு மைனஸ், என்னதான் நியாயம் என்றாலும் அதற்காக இத்தனை கொடூரமான கொலையா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதை எல்லாம் தாண்டி இந்தத் தொடரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, திரைக்கதை எழுதிய விதம். கடைசி வரை எதற்காக கொன்றான் என்று ஒரு சாதாரண பார்வையாளன் யோசித்தாலும் பரவாயில்லை, அது பூடகமாகவே இருக்கட்டும் என்று, பொதுவான கிரைம் த்ரில்லர்களில் வருவது போல கொலைகாரன் அவன் வாயிலேயே வெளிப்படையாகச் சொல்லாதது. அதெல்லாம் கதைக்குள்ளே இருக்கிறது. காட்சிகள் மூலமாக முன்பின் இணைத்து, இதற்குத்தான் கொன்றான் என்பதை நீயே புரிந்து கொள் என்று விட்டிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், 5 மணி நேரமாக காரில் ரோட்டில் படகில் வீட்டில் என்று சதா பேசிக் கொண்டே இருப்பவர்கள், இதை மட்டும் ஏன் வெளிப்படையாக சொல்லாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. யூட்யூபில்‌ சேட்டன்கள் இதைப் புளி போட்டு விளக்கிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இல்லாமல் திறமையான நடிகர்களை வைத்து இயக்கி இருப்பது இன்னொரு நல்ல விஷயம். முதல் இரண்டு எபிசோடுகளில் ஐந்து நிமிடங்களே வந்தாலும் இந்திரன்ஸ் காட்டும் முகபாவம், அதைவிட குறைவான நிமிடங்களே வந்தாலும் ஹரிஸ்ரீ அசோகனின் மேக்கப்பும் குறைவான மிரட்டலான நடிப்பும் இந்தத் தொடரில் முக்கியம் எனலாம்.

இன்னும் வெப் சீரியஸ் விஷயத்தில் மலையாளிகளுக்குப் பிடி கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைச் சரியாகப் பிடிக்கும் போது, வெப்சீரிஸில் பல மாயங்கள் மலையாளிகளால்தான் நிகழப் போகிறது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Vadakkan Malayalam Movie

வடக்கன்  (M) – சுமாரான திரைப்படம்தான். ஆனால்…

சில மலையாளப் படங்களை சுமார் என்று சொல்லிவிட்டு ஆனாலும் புறக்கணிக்க முடியாததாக இருக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே அந்த வகையில் வருகின்றன. ஆஹா ஓஹோ என்று கொண்டாடவும் முடியவில்லை. சுத்தக் குப்பை என்று தள்ளவும் முடியவில்லை. அதில் ஒன்று வடக்கன்.(ஹிந்தி வடக்கன் என்ற பொருளில் அல்ல.)

பேய்த் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். நமக்கு அதிகம் அறிமுகமானது காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள்தான். ஆனால் மலையாளத்தில் வேறு வகையும் வருகின்றன. குமாரி, பூதகாலம், பிரமயுகம் போன்ற சைக்காலஜிக்கல் ஹாரர். இதில் இந்த மூன்றுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. அந்த மூன்று திரைப்படங்களிலும் எனக்குச் சில குறைகள் இருந்தாலும் கூட, அவை முக்கியமான திரைப்படங்கள் என்பதில் மாற்றமில்லை.

இந்தத் திரைப்படம் அந்த அளவுக்குப் போகவில்லை என்பது பெரிய குறை. முதல் முக்கால் மணி நேரம் சாகடித்து விட்டார்கள். ஏன் இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும் என்று விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்ல கதை விறுவிறுப்பாகிறது. சைக்கலாஜிக்கல் தில்லர் வகைக்குள் போகிறது. ஃபிளாஷ்பேக் கட்சிகளில் ஜாதிய வேறுபாடு, தெய்யம் ஆட்டம், அதன் பின்னால் இருக்கும் காமம் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால் அதை எடுத்த விதம் பார்க்க வைக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வழக்கமான பேய்ப் படங்கள் போல அல்லாமல் ஒரு சீரியஸான பேய்ப் படமாக எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கதாநாயகியின் நடிப்பு, ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் கூட, மிரள வைக்கிறது. இன்னொரு குறை என்று பார்த்தால் கதாநாயகனாக கிஷோரை நடிக்க வைத்தது.

பொறுமையாக, கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

முக்கியமான விஷயம் 18+ திரைப்படம்.

Share

Alappuzha Gymkhana Malayalam Movie

ஆலப்புழா ஜிம்கானா (M) – சுமார். ஆனா…

வித்தியாசமான கதைக் களம். ஆனால் கதையே இல்லை. முழுக்க முழுக்க இளமைக் கொண்டாட்டம். இளைஞர்கள் கூட்டம். எத்தனை எத்தனை இளைஞர்கள்! கலக்குகிறார்கள். படத்தில் முதியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். படத்தின் முதல் ஒரு மணி நேரம் பட்டாசு. நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கின்றன. அதிலும் ஆலப்புழா ஜிம்கானா குத்துச் சண்டை வளையத்துக்குள் இறங்கத் தயாராகும்போது பாடும் பாடல் – அப்படி ஒரு சிரிப்பு வந்தது எனக்கு. ஆனால், படம் பாக்ஸிங் களத்துக்குள் வந்ததும் அதே வைப் தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் சலிப்பாகிறது. அதன் பின்னர் படம் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறது. நஸ்லேன் காஃபூர் நடிப்புக்காகவும், படத்தின் கேமரா மற்றும் எடிட்டிங்கிறாகவும் நிச்சயம் பாருங்கள்.

Share

Padakkalam Malayalam Movie

படக்களம் (M) – சுமார். ஆனால்…

படம் பார்க்க நினைச்சது ஒரு குத்தமாய்யா! மண்டையை இப்படிக் குழப்பி விட்டீங்களே. இவனுக்குள்ள யாருன்னு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே படம் பார்த்தேன். கதை பின்னிப் பெடலெடுத்துவிட்டார்கள். அந்தத் திறமையைத் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.

தமிழில் மரகத நாணயம் திரைப்படத்தில் இப்படி ஒரு பிளாட் உண்டு. அதற்காகவே அந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த யோசனையை இந்தப் படத்தில் இன்னும் ஆழமாக விரிவாகக் கையாண்டு இருக்கிறார்கள். பல காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன. ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டத்தில் போதும்டா உங்க விளையாட்டு என்று தோன்றாமல் இல்லை‌

இப்படி ஒரு கதையை யோசித்ததற்காகவே இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள். குறிப்பாக, குழந்தைகளுடன் பாருங்கள். தமிழில் இந்தக் கதை வந்திருந்தால் ஆபாசமாக ஒரு காட்சியாக வைத்திருப்பார்கள். அப்படி ஆபாசமான காட்சி வைப்பதற்கும் ஏற்ற பிளாட்தான் இந்தத் திரைப்படம். ஆனாலும் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. மிஸ் செய்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். அல்லது அப்படி ஒரு காட்சி தேவை இல்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் என்றும் சொல்லலாம். மூளை கழன்று போகும் அனுபவம் பிடிப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

Share

Thrayam Malayalam Movie

Thrayam (M) – மாநகரம் திரைப்படம் போன்ற உத்தி கொண்ட ஒரு கதை. ஒரே இரவில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் வகையிலான திரைக்கதை. மோசம் என்று சொல்ல முடியாது. கடைசி வரை பார்க்க வைக்கிறார்கள். அதேபோன்று அற்புதம் என்றும் சொல்லிவிட முடியவில்லை. ஒரே காட்சிகள் அளவுக்கு மீறி மீண்டும் மீண்டும் வருவது எரிச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. முடிவு என்று ஒன்று இல்லாமல் என்ன நடந்ததோ அதன் விளக்கத்துடன் போதுமென்று முடித்து விட்டார்கள். யூகிக்கக் கூடிய சின்ன கதையை முன் பின்னாக மாற்றி நமக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எப்படியோ பார்க்க வைக்கிறார்கள். த்ரயம் என்றால் மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு என்று பொருள். மென் இன் மிஸ்டிரஸ்ட், மென் இன் மெஸ், மென் ஆஃப் மொமென்ட்ஸ் என்பதை த்ரயம் என்கிறார்கள் போல. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Anbodu Kanmani Malayalam Movie

அன்போடு கண்மணி (M) – சென்ற வாரமே பார்த்த திரைப்படம். குறிப்பு எழுதி வைக்க மறந்து போய்விட்டது. சுமாரான படம். குழந்தை பிறக்காத தம்பதியரைப் பற்றி ஏற்கெனவே வெளிவந்த விசேஷம் திரைப்படம் போன்ற கதை. எனவே பல காட்சிகள் ஒரே போல் இருக்கின்றன. விசேஷம் திரைப்படத்தின் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். விசேஷம் திரைப்படத்தில் நெளிய வைக்கும் காட்சிகள் சில உண்டு. இந்தப் படத்தில் அவையும் கிடையாது.

இப்படத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் மெல்லிய புன்முறுவல் வரவைப்பதை மறுக்க முடியாது. அதே சமயம் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாகவும் உருவாகி வரவில்லை. ஹீரோ அர்ஜுன் அசோகனுக்காக ஒரு முறை பார்க்கலாம்

Share

Thudarum Malayalam Movie

துடரும் (M) – இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும். எப்படியோ தவறிப் போய்விட்டது. இன்றுதான் பார்த்தேன். (ஜியோ ஹாட்ஸ்டார்.)

ஒரு கமர்சியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் படம் மெல்ல சம்பந்தமில்லாமல் போவது போல் தோன்றினாலும் பின்னர் முடியும் வரை ஒரு நொடி கூட திரையிலிருந்து கண்ணை விலக்கத் தோன்றவில்லை. அப்படி ஒரு இறுக்கமான திரைக்கதை. இடைவேளைக் காட்சியும் அதன் பிறகு வரும் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக் காட்சியும் பதற வைக்கும் மாஸ் காட்சிகள். இப்படி இரண்டு காட்சிகள் ஒரு படத்திற்கு இருந்து விட்டால் நிச்சயம் அது பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும். வசூலுக்கும் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் 200 கோடி வசூலித்தது எந்தவித ஆச்சரியமும் இல்லை.

மோகன்லால் அதகளப்படுத்தி விட்டார். போலீசாக வரும் பிரகாஷ் வர்மா மோகன்லாலையும் மிஞ்சி விட்டார். சிறந்த வில்லனுக்கான விருது இவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல் இன்னொரு போலீசாக வரும் நடிகரும் கலக்கி விட்டார். இந்த மூவரும் திரைப்படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்கள். படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் ஷோபனா. மோகன்லால் ஷோபனா கெமிஸ்ட்ரி மேல் அந்தக் கால மலையாளிகளுக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. அதை நம்பி இப்படி ஜோடி வைத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை.

இந்தப் படத்தில் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் ரெஃபரன்ஸ் வருகின்றன. இளையராஜாவின் பாடல்கள் ஆங்கங்கே ஒலிக்கின்றன. தமிழில் பார்க்காமல் மலையாளத்தில் பாருங்கள். கேரளாவின் காடுகளும் மழையும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் பின்னணி இசையும் மறக்க முடியாத கமர்சியல் திரைப்பட அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

Share

Ouseppinte Osiyathu Malayalam Movie

ஔசப்பின்டெ ஒசியத்து (M) – நல்ல திரைப்படம். அசல் மலையாளத் திரைப்படம். மெல்ல நகரும் திரைப்படம் என்றாலும் முழுக்கப் பரபரப்பைத் தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது. போலீசின் தேடுதல் காட்சிகள் ஆரம்பித்த பிறகு, ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ உயில் சம்பந்தப்பட்ட திரைப்படம் என நினைத்து விட்டேன். இல்லை. இதுவும் ஒரு வகையில் திரில்லர் போன்றதுதான். ஆனால் இந்த முறை கடுமையான கொலை, தேடல் என்றெல்லாம் இல்லாமல், ஏன் எதற்கு கொலை என்பதெல்லாம் முதலிலேயே காட்டிவிட்டு, அதை ஒரு பாசப் போராட்டமாகச் சித்திரித்து இருக்கிறார்கள்.

அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. அதிலும் திலீஷ் போத்தன் அட்டகாசம். கலங்கடிக்கிறார். அதேபோல் விஜயராகவன். அருமையான நடிப்பு. எந்த நடிகருக்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை இறுக்கி இருந்தால் படம் இன்னும் வேறு தளத்திற்குப் போயிருக்கும். இப்போதே கூட தவறவிடக் கூடாத படமே.

வழக்கம் போல கேரளத்தின் நிலமும் இயற்கையும் ஒரு கதாபத்திரத்தைப் போலவே திரைப்படம் முழுக்கத் தொடர்ந்து வருகிறது. கேரளத் திரைப்படத்துக்குள் நம்மை சட்டென இழுத்துக் கொள்வது அவர்கள் தேர்ந்தெடுக்கும் லொகேஷன்தான்.

நாராயணின்டெ மூணான்மக்கள் திரைப்படம் போன்ற ஒரு மனநிலை கொண்ட திரைப்படம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் தந்த எரிச்சலை இந்தப் படம் போக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்

Share