Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share

பைரி

பைரி – சில சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று. அசல் திரைப்படம். மிரட்டல். டோண்ட் மிஸ் வகையறா.

மதயானைக் கூட்டத்துக்குப் பிறகு நான் பார்க்கும் அசல் திரைப்படம் இதுவே. கொஞ்சம் கூட ரொமாண்டிசைஸ் செய்யப்படாத ஒரு படம். பந்தயப் புறாவைப் பற்றி இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. முதல் நொடி முதல் இறுதி நொடி வரை பந்தயம் மற்றும் அதைச் சுற்றிய வன்முறையை மட்டுமே திரைக்கதையாகக் கொண்ட ஒரு படமெல்லாம் தமிழில் அபூர்வம். திகட்ட திகட்ட திரைக்கதையும் வசனமும் எழுதி இருக்கிறார்கள்.

இதைவிட இன்னொரு அபூர்வம், தமிழில் கிராமத்து அம்மாக்களை இத்திரைப்படத்தின் அம்மாவைப் போல் யாரும் இதுவரை சித்திரித்ததில்லை. அம்மா மகன் உறவை இத்தனை குரூரத்துடனும் இத்தனை பாசத்துடனும் இத்தனை அசலாகவும் இத்தனை உயிர்ப்புடனும் எவரும் படமாக்கியதில்லை. அம்மாவாக நடிக்கும் நடிகை கலக்கிவிட்டார். அதேபோல் வில்லுப்பாட்டைப் படத்தோடு இணைத்த விதம் அட்டகாசம்.

நாகர்கோவில் வட்டார வழக்கில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை. புறா கிராஃபிக்ஸ் மிக மோசம். அனைத்து நடிகர்களும் ஒரே போல் நடிப்பது இன்னொரு குறை என்றாலும், ஒரு கட்டத்தில் நமக்கு இது பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்பது அதிசயம்தான். இந்தத் திரைப்படத்தில் ஒரு நடிகரைக் கூட எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு எந்தத் திரைப்படத்திலும் அதிகம் பார்த்ததாக நினைவில்லை. அப்படியானால் இயக்குநர் எந்த அளவு உழைத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

ரத்தமும் சதையுமான தமிழ்ப்படம் இது. ஹிந்துத்துவ மற்றும் ஹிந்துத்துவ-வெறுப்பு நண்பர்கள் குறியீடுகளில் சிக்காமல் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். ஏனென்றால் ஹிந்து ஆதரவு மற்றும் கிறித்துவ ஆதரவு, இவற்றுக்கிணையாக இரண்டு பக்கங்களுக்கான எதிர்ப்பையும் நாம் யோசித்துப் பிரித்தெடுக்க, படம் நெடுக அத்தனை சட்டகங்களிலும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் க்ளாடி.

மலையாளத்தில் பல புதிய புதிய இயக்குநர்கள் என்ன என்ன ஜாலமெல்லாமோ செய்துகொண்டிருக்க, தமிழில் இயக்குநர்கள் புரட்சிக்குள் சிக்கிப் பாழாகப் போய், பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜான் க்ளாடி போன்ற இயக்குநர்களால் முடியும். தடம் மாறாமல், திரைப்படம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் போதும்.

இத்திரைப்படத்தில் பிரான்ஸிஸ் கிருபாவைப் பார்க்கும்போது பக்கென்று இருந்தது. 2021ல் கிருபா மறைந்துவிட்டார். அப்படியானால் எப்போது எடுக்கப்பட்ட படம் இப்போது வந்திருக்கிறது பாருங்கள்!

இரண்டாம் பாகம் வருகிறது என்று இறுதியில் காட்டுகிறார்கள். அது வரும்போது வரட்டும். முதல் பாகத்தைக் கட்டாயம் பாருங்கள்.

பைரி ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Thalaimai seyalagam web series

தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ்)

முதலில் பாஸிடிவ்வான விஷயம். தமிழக அரசியலின் குடும்ப அரசியலை நன்றாக எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய பலம் இது. முழு எபிசோடையும் பார்க்க வைப்பது இது மட்டுமே.

இனி மற்றவை.

ஸ்பாய்லர்ஸ் உண்டு.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. மாவோயிஸ்ட் பெண் அதிகாரத்தைக் கைப்பற்றும் கதையைச் சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் இந்த மாவோயிஸ்ட் புரட்சி ஜல்லியை விட்டுவிட்டு, தமிழக அரசியலில் மட்டும் கவனம் குவித்து எடுத்திருந்தால் பிரமாதமான அரசியல் சீரிஸாக வந்திருக்கும்.

தமிழக அரசியலில் குடும்ப அரசியல் என்றால் யாரை நினைப்போம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தச் சாயல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஊழலில் தண்டனை பெறப் போகும் முதல்வர் என்று சொல்லி, ஜெயலலிதாவின் சாயலைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனாலும் குடும்ப அரசியல் பற்றிய காட்சிகளைப் பார்க்கும்போது நாம் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

1998ல் அமைக்கப்படும் ஆட்சி மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க ஒரு கமிட்டி அமைக்கிறது. அந்த கமிட்டியில் மூன்று முதல்வர்கள் மட்டும் வன்முறைக்கு எதிராகக் களம் இறங்குகிறார்கள். அதில் ஒருவர் தமிழக முதல்வர். இதை சட்னின்னா இட்லி கூட நம்பாது மொமெண்ட். அந்த மத்திய ஆட்சி 99ல் கலைகிறது. அந்த ஆட்சி, ‘நியாயத்துக்காக’ப் போராடும் மாவோயிஸ்ட்டுகளை, கிராமத்து மக்கள் கையில் துப்பாக்கிகளைக் கொடுப்பதன் மூலம் கொல்கிறதாம். ஏன் வாஜ்பாயி இப்படிச் செய்யாமல் விட்டார் என்கிற எண்ணம்தான் வருகிறது.

பேராசைப்படும், அரசியல் குயுக்தி செய்யும் பிராமண வக்கீல்கள். நமாஸ் செய்தபடி நியாயத்துக்காகப் போராடும் போலிஸ். கூடவே வரும் நல்ல கிறித்துவ போலிஸ். எல்லாம் பக்கா. எங்கேயும் ‘போராளி’ இயக்குநர் தவறவே இல்லை. தவறி இருந்தால் செம சீனாகிரும்னு அவருக்குத் தெரியும்.

அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் ஆளுமைகளை ஒருங்கே பயன்படுத்தியது சிறப்பு. ‘ஊழல் செய்த ஒரு முதலமைச்சராகவும் இருக்கவேண்டும், அவர் மேல் மக்களுக்குக் கரிசனமும் வரவேண்டும்’ என்று யோசிக்காமல், உள்ளது உள்ளபடி காட்டி இருக்கலாம். இப்படியான நல்ல ஆனால் கெட்ட முதல்வர் என்பதுதான் இயக்குநரின் கையைக் கட்டிப் போட்டுவிட்டது.

அடுத்த முதல்வர் யாரென்று சொன்னதோடு படம் முடிந்துவிட்டது. அப்படியே முடித்திருந்தால் உண்மையில் இது மைல் கல் சீரிஸாகி இருந்திருக்கும். ஆனால் போராளி இயக்குநர் விழித்துக்கொண்டு விட்டார்.

ஒரே ஃப்ரேமில் கதையை மாற்றி, போராளியை முதல்வராக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றி.. மொத்தமும் பாழ்.

மேக்கிங்கில் பல காட்சிகள் தரம். பல காட்சிகள் குழந்தைத்தனம். பல காட்சிகள் டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும் வகையிலான திரைக்கதை. முதலிரண்டு எபிசோடுகள் பொறுமைக்கான சோதனை. திரைப்படமல்ல என்பதற்காகவே பத்து நொடி காட்சியை முப்பது நொடிக்கு இழுக்கவேண்டியதில்லை. எபிசோட் ஆரம்பிக்கும்போது எதாவது திடுக்கென இருக்கவேண்டும் என்பதறாக எதையாவது காண்பிக்கும் அவலம். செத்துப் போன போலிஸ், அவன் மனைவி எனக் கொடுமைகளின் வரிசை.

அரசியல் சீரிஸாக உச்சம் தொட்டிருக்கவேண்டிய ஒரு வாய்ப்பை, தேவையற்ற மாவோயிஸ்ட் திணிப்பால் கோட்டை விட்டிருக்கிறார் வசந்தபாலன். ஒன்று மாவோயிஸ்ட் படம் எடுக்கவேண்டும், இல்லையென்றால் தமிழக அரசியல் படம் எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றாகச் செய்தது சறுக்கல்.

ஸீ 5ல் கிடைக்கிறது. பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

Idamum valamum asaivuru siru sudar

பி.ஆர்.மகாதேவன் எழுதிய முக்கியமான நாவல் (Auto fiction) ‘இடமும் வலமும் அசைவுறு சிறுசுடர்’. இளமைக் காலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பமும், சித்தாந்தக் குழப்பமும் அதனால் ஏற்படும் அடையாளச் சிக்கலையும் தெளிவாகச் சொல்லும் ஒரு நாவல். இடதுசாரிகள் நீக்கமற நிறைந்திருக்கும் இலக்கியச் சூழலை இப்படிக் குழப்பமான இளைஞன் எப்படி எதிர்கொள்வான்? அவன் நம்பிச் செல்லும் இடமும் அவனைத் துரத்தினால் அவன் எந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்துவான்? எதையுமே எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழகும் வயதில் அவன் எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டான்? நம்பிக்கைத் துரோகத்தின் நிழல்கள் அவனை எப்படித் துரத்தின? எல்லாவற்றையும் எப்படி எதிர்க்கேள்விகள் கேட்கத் துவங்கினான்? அத்தனையையும் இந்த நாவல் சிறப்பாகச் சொல்கிறது.

Share

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக.

பொதுவாக அராத்து சென்ஸிபிளாக எழுதக் கூடியவர். ஆனால் இந்த முறை சறுக்கி இருக்கிறார். சில பூமர் அங்கிள்கள் பொழுதுபோகாமல் அவ்வப்போது ராஜாவைத் திட்டி லைக் வாங்குவது கண்கூடு. அராத்து அப்படிச் செய்பவரும் அல்ல.

* இசை தெரியாது என்று சொன்னால் இசை குறித்த கருத்தில் இருந்து விலகி இருந்திருக்கவேண்டும்.

* தபேலாவில் டொண்டனக்க என்று இசையமைப்பவர் என்று செவிடர்கள் கூட சொல்ல மாட்டார்கள்.

* கணவன் மனைவிக்கு, காதலர்களுக்கு ராஜாவின் பாட்டே கிடையாது என்பது அபத்தம். ஒருமுறை சுரேஷ்குமார் இந்திரஜித், ‘ராஜாவின் பாடல்களில் அதிகபட்சம் 15 தேறும்’ என்றார். அதற்கு இணையான அபத்தம். மூன்று தலைமுறைகள், ராஜாவின் பாடலால்தான் காதலித்தது, காமம் கொண்டது, சோகத்தில் அழுதது, வெற்றியில் நிமிர்ந்தது, சந்தோஷத்தில் தளுதளுத்தது. இது எம்.எஸ்.விக்கும் கே.வி.எம்முக்கும் பின்னர் ரஹ்மானுக்கும் நடந்தது.

* ‘என் இசை’ என்ற கர்வமே ஒரு கலைஞனைச் செலுத்தக் கூடியது. அராத்து அடிப்படையில் ஓர் எழுத்தாளர். அவர் எப்படி இதைத் தவறவிட்டார் என்பது ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ‘என் எழுத்து’ என்னும் திமிருக்காகவே அவரது வாசகர்கள் அவரை வாசிப்பது அராத்துவுக்குத் தெரிந்திருக்கும். அந்த உரிமை ராஜாவுக்கு உண்டு. அதுவும் சாரு நிவேதிதாவைவிட பல மடங்கு உண்டு.

* இன்னொருவரை வளரவிடவில்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இளையராஜாவை மீறி வளர, அவரளவு திறமை உள்ள ஒருவர் வரவேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்கள் வருவார்கள். வந்தார்கள். ரஹ்மான் புதிய இசையோடு வந்தபோது இளையராஜா அவர் வளர்ச்சியை ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே வரலாறு.

* இளையராஜா போன்ற, கற்பனைக்கெட்டாத சாதனையாளர்கள் இப்படித் தூற்றப்படுவது நாம் யார் என்பதைத்தான் சொல்கிறதே ஒழிய, ராஜாவின் திறமையை இம்மியளவும் மதிப்பிட்டுவிடவில்லை.

Share

Avesham Malayalam Movie

ஆவேஷம் (M) – ஃபகத்தின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நம்ப முடியாத கதை. நம்பினால் சில அருமையான காட்சிகளும் அனுபவமும் இருக்கின்றன. அது முழுமையானதாக இருக்கிறதா என்றால் இல்லை. மலையாளப் படங்களின் பிரத்யேகத் தன்மையில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு தமிழ்ப் படம் போல நகர்கிறது இப்படம். தனுஷின் பல படங்கள் இப்படிப்பட்ட வகையறாக்கள்தான். எனவே நமக்கு எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை.

மலையாளிகள் நல்ல வசூல் தரும் படங்களை எடுப்பதிலும் மெல்ல மெல்ல மேலேறி வருகிறார்கள். குருப் படத்தில் ஆரம்பித்து இப்போது வரை பல படங்களில் நல்ல வசூல். இத்தனைக்கும் குருப் சுமாரான திரைப்படமே.

இந்தப் படமும் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் அதாவது ஃபகத் ஃபாசில் வரும் வரையிலான திரைப்படம் அசல் மலையாளத் திரைப்படம். அந்த மூன்று இளைஞர்களின் நடிப்பும் முகமும் மறக்க முடியாதவை. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியதாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது மிகப்பெரிய பலவீனம். ஃபகத் பல இடங்களில் ஓவராக நடித்தாலும் அது இந்த கேரக்டருக்குப் பொருந்தித்தான் போகிறது.

இத் திரைப்படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை குடி குடி குடிதான். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரே ஒரு காட்சியில் அந்த மூன்று இளைஞர்களும் குடியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இத்தனை குடி அவசியமா என்று எரிச்சல் வரும்போது தமிழ்ப் படங்களின் லட்சணம் முகத்திலறைகிறது.

விடுவித்துக் கொள்ளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதைகளின் முடிவு எப்போதுமே மிக எரிச்சல் தருவதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும் என்றால், கேங்ஸ்டர் படத்தை இன்னொரு கோணத்தில் காண்பித்ததற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Share

Premalu Malayalam Movie

ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின்‌ அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.

ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

2024 Parliament election – vote for BJP

இன்றோடு பிரசாரம் முடிகிறது. நம் கண்ணெதிரே இருக்கும் போட்டியாளர்களில் அண்ணாமலையின் நிழலைத் தொடக்கூட யாரும் இல்லை என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நிச்சயம் தெரியும். படித்தவர், அறிவாளி, நேர்மையானவர், கண்டிப்பானவர், நிர்வாக ரீதியாகத் திறமையானவர் என்று பல திறமைகள் ஒருங்கே பெற்ற ஒருவர் அரசியலுக்கு வருவது அபூர்வம். அப்படி ஒருவர் வந்தாலும் அவர் மக்களின் ஆதரவைப் பெறுவது இன்னும் அபூர்வம். அவர் வெற்றி பெறாவிட்டால் அது நம் தவறு.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ தொகுதிகள் நாளைய முதல்வருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் எந்த ஒரு தொகுதியும் நாளைய பிரதமர் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றதே இல்லை. கோயமுத்தூருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோயமுத்தூர் அண்ணாமலையை நிச்சயம் வெற்றி பெற வைத்து, நாளைய பிரதமர் ஒருவருக்கு முதல் எபி பதவியைக் கொடுத்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு தேசியவாதியின் கடமை. அற்பக் காரணங்களுக்காக வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் தேசியத்துக்காக வெட்டியாகப் பேசும் தவறைச் செய்யாமல், பாஜகவுக்கு வாக்களிப்போம். ஊழலற்ற அரசைத் தரும் ஒரே அரசு பாஜகவின் அரசாகவே இருக்கமுடியும் என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

Share