பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

1975 இரா முருகனின் நாவல்

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818

Share

சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)

சிறந்த திரைப்படம்: வடசென்னை

முக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த நடிகர்: யாருமில்லை

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)

சிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),

நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0

சிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)

சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை

சிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்

படு மோசமான படம்: கஜினிகாந்த்

அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96

இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)

Share

ஜனம் டிவி

ஜனம் தொலைக்காட்சி (மலையாளம்) – தென்னிந்திய அளவில் இது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு. இந்திய அளவில்கூட இருக்கலாம். ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் விட ஒரு படி மேல். ரிபப்ளிக்கை முழுமையாக நம்பிவிட முடியாது என்னும் சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. ஜனம் டிவியில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஆதரவாகக் குரல்கள் தீவிரமாகக் காதில் விழும்போது ஆச்சரியமாக உள்ளது. திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனின் தொலைக்காட்சி இது.

தமிழில் இப்படி ஒரு தொலைக்காட்சி அவசியம். அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வலதுசாரிக்கு எதிராக இருக்கும்போது ஆதரவுக் குரல் ஒன்றாவது வேண்டும்.

இன்று புதிய தொலைக்காட்சி ஆரம்பிப்பவர்கள் மீண்டும் வலதுசாரி எதிர்ப்புக் குழுவில் ஐக்கியமாகி, தங்களுக்கென்று ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கத் திணறுகிறார்கள். ஓர் உருப்படியான வலதுசாரித் தொலைக்காட்சி வருமானால் எடுத்த எடுப்பில் 20 சதவீதப் பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். ஜனம் டிவி ஓர் உதாரணம். ஆனால் அப்படி ஆரம்பிக்க முடியாத அளவுக்கு இங்கே கருத்து ரீதியான ஆதிக்கம் நிலவுகிறது. இதை எதிர்த்த ஒற்றை வெடிப்பு போதும். அதை நிகழ்த்தும் தொலைக்காட்சிக்கு, முதலாவது என்னும் தகுதி தரும் செல்வாக்கு எப்போதும் நீடிக்கும். அதை அறுவடை செய்யப்போகும் புதிய வரவு எது?

Share

2018ல் வாசித்தவை

2018ல் படித்த புத்தகங்கள்:

* சைவ பேலியோ டயட் – பா.ராகவன்
* பேட்டை – தமிழ்ப்பிரபா
* எனது நாடக வாழ்க்கை – அவ்வை சண்முகம்
* வருவதற்கு முன்பிருந்த வெய்யில் – ஜி.கார்ல் மார்க்ஸ்
* எனது பர்மா நடைப்பயணம் – வெ.சாமிநாத சர்மா
* முஸ்தபாவைச் சுட்டுக் கொன்றவர்கள் – அகரமுதல்வன்
* சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்
* Mistress Throne – Ruchir Gupta
* Ivory throne – Manu S. Pillai (Half read!)
* நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
* Idol Thief – Vijayakumar
* ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
* வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி
* பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், தமிழில்: இரா.முருகன்
* காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், தமிழில்: நல்லதம்பி
* சிள்வண்டு முதல் கிகா பைட் வரை – ஹாலாஸ்யன்
* சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா (விந்தன் செய்த நேர்காணல்)
* இந்தியாவின் இருண்ட காலம் – சசி தரூர் (பாதி!)
* பேட்டை – தமிழ்ப் பிரபா
* எம்ஜியார் என்கிற ஹிந்து – ம.வெங்கடேசன்
* நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் – மாரிதாஸ்
* ஊழல் உளவு அரசியல் – சவுக்கு சங்கர்
* வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு)
* பின்லாந்து காட்டும் வழி
* கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (இன்னும் வெளிவரவில்லை.)
* 1975 – இரா.முருகன் (இன்னும் வெளிவரவில்லை.)
* மலைக்காடு – சீ.முத்துசாமி (இன்னும் வெளிவரவில்லை.)
* பழி – அய்யனார் விஸ்வநாத் (இன்னும் வெளிவரவில்லை.)
* சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் (சென்னையர் கதைகள்)

இவை போக, 12 வலம் இதழ்கள் வெளிவருவதில் பங்காற்றி இருக்கிறேன்.

பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடித்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் முடிக்காமல் விட்ட சில புத்தகங்களும் உள்ளன. இந்த வழக்கத்தைக் கைவிட்டு, எதிர்வரும் 2019ல் முழுமையாக ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஏப்ரல் வாக்கில் தொடங்கும் ஒருவித சோம்பேறித்தனம் ஜூன் முடிவது வரை நீடிக்கிறது. பிள்ளைகளுக்கு விடுமுறை நேரம் என்பதே காரணம்.

அடுத்த வருடத்தில் இதைவிட இரண்டு மடங்கு புத்தகங்களாவது படிக்கவேண்டும் என்று ஒரு சபதம். பார்க்கலாம்.

Share

தொலைக்காட்சி சானல்களுக்கு தனித்தனி விலை

ஒவ்வொரு சானல்களுக்கும் தனித்தனி விலை நிர்ணயம் என்பதால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியவில்லை. முதலில் கேபிள் வழியே பார்த்தபோது மாதமே 100 ரூ வரைதான் ஆனது. டிஷ் வழி பார்க்க ஆரம்பித்தபோது 170 ரூ முதல் 250 வரை ஆனது. இப்போது இப்படி ஒவ்வொரு சானலுக்கும் ஒரு தனி விலை என்றால் பல சானல்களைக் கை கழுவவேண்டியதுதான். ஏன் இந்த விதி என்பதற்கு ட்ராய் என்ன சொல்கிறது? இப்படிச் செய்வதன் மூலம் போலியான பரப்புரைகளைக் குறைக்கலாம் என்றா? எந்த சானல்களை எடுப்பது, விடுப்பது என்று குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளருக்கு ஏற்படும்.

நான் வீட்டில் டிவியை இப்படியாகப் பார்க்கிறேன். ஆங்கில செய்தி சானல்கள், தமிழ்ச் செய்தி சானல்கள் எப்போதாவது, மீதி நேரம் பெரும்பாலும் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பது குழந்தைகளுக்கான சானல். கிரிக்கெட் 50 ஓவர் மேட்ச் இருந்தால் அதைப் பார்ப்பேன். ஆதித்யா மற்றும் சிரிப்பொலி அடிக்கடி கொஞ்சம் நேரம் பார்ப்பேன். மற்றபடி டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருநிமிடம் கூடப் பார்ப்பது இல்லை. ஆனால் இதையே அடிப்படையாக வைத்து எல்லாத் தமிழ் சானல்களையும் சப்ஸ்க்ரைப் செய்யாமல் இருந்துவிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மலையாள சானல்களும் தேவை! அப்படியானால் என்ன செய்வது?

சன் டிவிக்குத் தனியே 25 ரூ என்பதெல்லாம் தண்டம். விஜய் டிவியின் சானலுக்கு 25 ரூ என்பது இன்னொரு தண்டம். சன் டிவியின் சான்லகளில் எதாவது தேவை என்றால் சன் நெக்ஸ்ட்டில் பார்த்துக்கொள்ளலாம். விஜய் டிவியில் எதுவுமே பார்ப்பது இல்லை என்பதால் அது தேவையில்லை.

ஒருவழியாகத் தொகுத்தால்:

* குழந்தைகளுக்கான சானல்கள் எதாவது இரண்டு.
* ஆதித்யா மற்றும் சிரிப்பொலி
* புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 18, நியூஸ் 7, பாலிமர் செய்திகள்.
* என் டி டிவி, டைம்ஸ் நௌ, ரிபப்ளிக், இண்டியா டுடே.
* ஏஸியா நெட், சூர்யா, ஏஸியாநெட் முவீஸ், ஜனம் டிவி.

தலைல துண்டுதான் போடணும் போலயே.

Share

பிரபஞ்சனுக்கு அஞ்சலி

பிரபஞ்சனுக்கு அஞ்சலி. வானம் வசப்படும் படித்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. அவரது ஆர்ம்ப கால நாவல்கள் தந்த ஏமாற்றமெல்லாம் கொஞ்சநஞ்சமல்ல. அப்படியான நாவல்களுக்கும் வானம் வசப்படும் நாவலுக்கும் இடையே பெரிய பயணம் இருந்ததை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து அவர் எழுதிய பண்டைத் தமிழ் சார்ந்த உரைநடைகள் மிகவும் நன்றாக இருந்தன – படிக்க. கருத்து சார்ந்து அவர் மிகத் தெளிவாக இடதுசாரி முற்போக்கு மனப்பான்மையுடனேயே இருந்தார். மற்ற பெரும்பாலான இலக்கியவாதிகளையும் போல.

எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட மாத்தா ஹரி நாவலை அவர் வெளியிடவேண்டும் என்று அவரை அழைக்க நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். என்னவெல்லாமோ பேசினார். நீண்ட நேரம் நடந்த சந்திப்பு அது. மேடையில் எழுத்தாளர்களுக்குப் பேச வராது என்பதை உடைத்தவர் அவர். மிகத் தெளிவாகவும் சுவையுடனும் பேசும் எழுத்தாளர். நேர்ப்பேச்சிலும் அப்படியே பேசினார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிய காஸிப்புகளுக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. அவர் சொன்னதில் இன்னும் குறிப்பாக நினைவில் நிற்பது, “… வலது காலில் விழுந்து கிடக்கிறார் அவர், இடது காலில் இவர், தமிழே என் காலுக்குக் கீழே” என்று அந்த அரசியல்வாதி சொன்னதாகச் சொன்னதுதான். அவர் சொன்ன எழுத்தாளர்களின் பெயரையும் அரசியல்வாதியின் பெயரையும் இங்கே சொல்ல விரும்பவில்லை. நானும் கொஞ்சம் மறந்துவிட்டேன்!

மாத்தா ஹரி நாவலை வெளியிட்டுப் பேசும்போது பாண்டிச்சேரியில் ஒரு தேவாலயத்தில் இரண்டு சாதியினர் தனித்தனியாக அமர நேர்ந்த வரலாற்றுக் குறிப்பை அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை மையமாக வைத்துச் சிறப்பாகப் பேசினார்.

பிரபஞ்சனுக்கு அஞ்சலி.

Share