Anirudh and Resonance

நான் பத்தாம் வகுப்பு (அல்லது பன்னிரண்டு) படிக்கும்போது முதன்முதலில் அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். ஒத்ததிர்வு. அதாவது resonance என்னும் வார்த்தைக்கான தமிழ் வார்த்தை.

அதற்கு ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டிருந்தது. மேம்பாலங்களில் நடக்கும் போது ராணுவ வீரர்கள் மார்ச் பாஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நடை அதிர்வெண்ணும் மேம்பாலத்தின் இயல் அதிர்வெண்ணும் ஒன்றாக ஒரு புள்ளியில் இயைந்து, ஒத்ததிர்வு ஏற்பட்டு, பாலம் இடிந்து விட சாத்தியக்கூறு இருக்கிறது. இதுதான் நான் படித்தது.

மொபைல் ஃபோனை வைப்ரேஷன் மோடில் நெஞ்சருகே வைக்கும் போதெல்லாம் எனக்கு ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். நெஞ்சமும் மொபைலும் ஒத்ததிர்வில் ஈடுபட்டால் என்னாகும் என்று. உடனே மொபைலைத் தள்ளு வைத்து விடுவேன்.

இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால்…

அனிருத் இசை அமைக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒரு பத்து பேருக்காவது திரையரங்கில் ஒத்ததிர்வு ஏற்படத்தான் போகிறது. அனிருத் இப்போதே முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Share

Coolie Movie Review

கூலி – இடைவேளை வரைபடம் பட்டாசு. பெண்கள் தங்கும் விடுதியில் வரும் அந்தச் சண்டைக்காட்சியில் நீண்ட காலத்திற்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்க்க முடிந்தது.

பின்னர் வரும் தேவையற்ற ஒரு பாடல் படத்தின் போக்கைக் கொஞ்சம் இடறினாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் குறிப்பாக நாகர்ஜுனா ரஜினியின் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இடைவேளை பிளாட் அருமை. அதோடு பல மடங்கு எதிர்பார்ப்பையும் தந்து விடுகிறது.

அதன் பிறகு படம் கொஞ்சம் தொய்வடைகிறது. ஏன் எதற்கு ஓடுகிறார்கள், ஒருவரை ஒருவர் ஏன் துரத்துகிறார்கள் என்பதெல்லாம் புரியாமலேயே பல நிமிடங்கள் படம் ஓடுகிறது. பிறகு மீண்டும் கொஞ்சம் பரபரப்பாகிறது.

இறுதிக்காட்சியில் அமீர்கான் வருவதெல்லாம் விக்ரம் திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போலவே இருந்தது. ரஜினி நாகார்ஜுனா சௌபின் ஷாபிர் மூவரும் கலக்கி விட்டார்கள். லோகேஷ் விக்ரமின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது படம் நெடுகத் தெரிகிறது. பல காட்சிகள் விக்ரமை நினைவூட்டுகின்றன. அதுமட்டுமின்றி ரஜினியின் பிற பிடங்களையும் விஜயின் படங்களையும் பல காட்சிகள் நினைவூட்டுவது படத்திற்கு மைனஸ் பாயிண்ட். சத்யராஜ் கௌரவ வேடம் போல அவ்வப்போது வந்து போகிறார்‌ ஸ்ருதிஹாசன் அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே சௌகார் ஜானகி ஆக்கிவிட்டார்கள்.

விக்ரம், விக்ரமை விட ஜெயிலர், அதை விட இந்தப் படத்தில் கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. பட முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம். குடியும் சிகரெட்டும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

ரஜினி காந்த், கமல் திரைப்படங்களில் பிளாஷ்பேக்கில் ஏஐ உதவியுடன் இளமையாகக் காட்ட வேண்டும் என்பது கிட்டத்தட்ட சட்டம் ஆகிவிட்டது. இந்தப் படத்திலும் உண்டு.

உபேந்திராவை இந்த அளவு ஏமாற்றி இருக்கக் கூடாது. ஐயோ பாவம். அதனால்தான் அவருக்கு இயக்கத்தான் வரும் என்று ரஜினி சூசகமாக சொன்னார் போல.

அனிருத் தலைவலி.

மொத்தத்தில் வேட்டையன் அளவுக்கு மோசம் இல்லை. தக் லைஃப் அளவிற்குக் கொடுமை என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

தன் கதாபத்திரத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற் போல் கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் இந்தப் படத்திலும் தன் சிறப்பான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துகிறார். அந்த ரஜினிக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்.

கூலி ஸ்பாய்லர்‌ அஹெட்.

.
.
.

பார் மகளே பார் என்ற ஒரு திரைப்படம். சிவாஜி பெரிய பணக்காரனாகவும் பணக்காரத் திமிர் கொண்டவராகவும் இருப்பார். தன் இளம் வயதில் ஏழையாக இருந்த போது தன்மகளைத் தன் நண்பனின் மகனுக்குக் கல்யாணம் செய்து தர ஒப்புக் கொண்டிருப்பார். ஆனால் பணக்காரனானதும் பணத் திமிரில் அந்த நண்பனை ஏழை என்று இகழ்ந்து பேச, அந்த நண்பன் எல்லார் முன்னிலையிலும் சிவாஜியிடம், உனக்கு இருக்கும் இரண்டு மகளில் ஒன்று உனக்குப் பிறந்ததில்லை என்று சொல்லிவிடுவார். அந்த நண்பராக நடித்தவர் வி கே ராமசாமி. வி கே ராமசாமியின் வாழ்நாள் காட்சி என்றால் இந்தக் காட்சியைத்தான் நான் சொல்லுவேன்.

அதன் பிறகு சிவாஜியின் தவிப்பும் ஈகோவும் அவரைப் பாடாயப்படுத்தும். எது தன்மகள் என்று தெரிந்து கொள்ள சித்திரவதை அனுபவித்து ஒவ்வொரு நாளும் துடிப்பார். கடைசியில் எந்த மகள் அவரது மகள் என்று தெரிய வரும்போது, தெரிய வேண்டாம் இரண்டுமே என் மகளாக இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார்.

இந்தக் கதையை 20 நாட்களுக்கு முன்புதான் ஜெயக்குமாரிடம் விமானத்தில் வைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இன்று கூலி பார்க்கும் போது அந்தப் படத்தின் நினைவு வந்தது.

முதல் காட்சியிலேயே சந்தேகமாக இந்தக் கதையை என்னால் யூகிக்கவும் முடிந்தது.

Share

Nehru’s rule

நேருவின் ஆட்சி – பதியம் போட்ட 18 ஆண்டுகள்

விஎஸ்வி ரமணன் எழுதி சுவாசம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் நூல்.

நேருவைப் பற்றி இன்று பலருக்கும் இருக்கும் பிம்பம், நேரு இந்திய எதிரி என்பது. நேருவால்தான் இந்தியா இன்று இத்தனை பாடு படுகிறது என்பது பலரும் சொல்வது. ஆனால் இது உண்மையல்ல.

நேரு நிஜமான ஜனநாயகவாதி. நிச்சயம் இந்தியாவின் மீது பற்று கொண்டிருந்தவர். எந்நிலையிலும் இந்தியாவுக்கு எதிராகச் சிந்திக்கவே சிந்திக்காதவர்.

நேருவின் சில நம்பிக்கைகள் தகர்ந்து போயிருக்கலாம். நேரு ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் நேரு உண்மை என்று நம்பி ஏமாந்தவையே ஒழிய, இந்தியாவுக்கு எதிராக நேரு சிந்தித்தவை அல்ல.

இந்தியா மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருந்தபோது நேரு பிரதமரானவர். இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்குப் பல வழிகளில் நேரு விதை ஊன்றியவர். அதே சமயம் அவர் ஓர் அரசியல்வாதியும் கூட. எனவே நேரு தன் கட்சியையும், தன் பதவியையும் காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தது. தனக்குப் போட்டியாளர்களை அடக்கித் தான் முன்னேற வேண்டி இருந்தது. அதையும் செய்தவர் நேரு. இதுவும் ஜனநாயகத்தில் ஒரு அங்கமே. இதில் முக்கியமான விஷயம், இதைச் செய்வதற்காக ஒரு தலைவர் அநியாயமான வழிகளைக் கை கொள்கிறார்களா என்பதுதான்.

இந்தப் புத்தகம் நேரு எப்படிப்பட்ட ஜனநாயகவாதி என்பதைப் பறை சாற்றுகிறது. அதே சமயம் நேரு மேல் எந்தத் தவறும் இல்லை என்று பூசி மெழுகவும் இல்லை. நேர் நம்பி ஏமாந்து போனவற்றையும் பதிவு செய்கிறது. நேருவின் அந்தத் தோல்விகள் கூட, நேருவின் ஜனநாயகத் தன்மையால் விளைந்தவையே என்று பறைசாற்றுகிறது.

இந்தியாவின் சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பட்ட போது, நேரு ராணுவ நடவடிக்கைகளை முதலில் ஆதரிக்கவில்லை. ஆனால் படேல் உறுதியாக இருக்கிறார். அதை நேரு ஏற்கவில்லை என்றாலும், ஹைதராபாத்தில் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து, படேலின் நிலைப்பாடே சரி என்று நேரு புரிந்துகொள்கிறார். ராணுவ நடவடிக்கைகளை ஏற்கிறார். தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரு தயங்கவில்லை.

உண்மையான செக்யூலராக இருக்க நேரு முயன்றிருக்கிறார். காந்தியைப் போலவே இவரும் மற்றவர்களால் ஏமாற்றப்படுகிறார். அது ஹிந்துக்களுக்கு எதிராகப் போய் நிற்கிறது. முக்கியமாக இவர் ஷேக் அப்துல்லாவை நம்புகிறார். நேருவின் நட்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஷேக் அப்துல்லா காஷ்மிர் விவகாரத்தில் நேருவின் நம்பிக்கை தவறு என்று அவருக்கே பாடம் கற்பிக்கிறார்.

ஜின்னாவைப் போன்ற அரசியல் ஆட்டத்தை நேருவுக்கு எதிராக, மதத்தை மையமாக வைத்து அரங்கேற்றுகிறார் ஷேக் அப்துல்லா. சிறப்புச் சட்டப்பிரிவு 370 காஷ்மிருக்குத் தரப்பட்டும் ஷேக் அப்துல்லாவின் இரட்டை வேடம் நேருவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஹரி சிங்கிற்கு எதிராக களம் இறங்கிய ஷேக் அப்துல்லாவை, ஹரி சிங்கிடம் இருந்து பெற்ற அதே காஷ்மீருக்கு தலைவராக்கிய நேருவுக்கு ஷேக் அப்துல்லா அளிக்கும் அதிர்ச்சி வைத்தியம் இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவேதான் நேருவின் சீனா மீதான பாசத்திலும் நிகழ்கிறது. நேரு கம்யூனிஸ்ட் அல்ல. அதே சமயம் ஒரு ஜனநாயக சோஷியலிஸம் நம் நாட்டுக்குத் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார். கம்யூனிஸம் உலகம் முழுக்கத் தேவை என்பதை நேரு உணர்ந்துகொண்டுதான் இப்படி நடிக்கிறார் என்று கம்யூனிஸ்ட்டுகள் நேருவை சாதாரண அரசியல்வாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். அண்ணாதுரையும் நேருவை ‘காங்கிரஸின் சோஷலிஸம் இனிக்காது’ என்று விமர்சிக்கிறார்.

நேரு சோஷலிசத்தை ஆதரித்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸுக்கு சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு காங்கிரஸ்காரராகவும் இருக்கிறார். இதுவும் அவர் இந்தியாவுக்குச் செய்த முக்கியமான பங்களிப்பு என்றால் மிகையில்லை!

சீனா மீது நேருவுக்கு வந்த பாசம் வரலாற்றுப் பிழை. ஆனால் நேரு அதை உணரவில்லை. திபெத் விஷயத்தில் சீனாவுக்கும் நேருக்கும் எழும் கருத்து மாறுபாடு பெரியதாகிறது. ஆரம்பம் முதலே படேலும் ராஜாஜியும் இதைப் பற்றி எச்சரித்தும், நேரு தான் நம்பியது சரி என்று தீவிரமாக நினைக்கிறார். ஆனால் இந்தியா தயாராக இல்லாத ஒரு சமயத்தில் சீனாவின் படைகள் இந்தியாவை ஆக்கிரமிக்கும்போது நேருவுக்குத் தன் நம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிரச்சினையின் தீவிரம் புரிகிறது. அதற்குள் நிலைமை கைவிட்டுப் போய்விடுகிறது.

இப்படிப் பல விஷயங்கள் இந்த நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. ஜனசங்க எதிர்ப்பு, காந்தி படுகொலை, ஆர் எஸ் எஸ் தடை, பெண்களுக்கான சொத்துரிமை, இந்துச் சட்ட மசோதாக்களும் நேரு மீதான அம்பேத்கரின் வருத்தமும் எனப் பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளன.

நேருவைப் பற்றி மட்டுமின்றி, அந்தக் கால அரசியல் சூழலையும், மாபெரும் அரசியல் ஆளுமைகளின் நிலைப்பாடுகளையும் பதிவு செய்கிறது இந்த நூல்.

அதே சமயம், வரலாற்று நோக்கில் நேருவின் அரசியல் சறுக்கல்கள் குறித்து விரிவாகப் பேச வேண்டிய வரலாற்று அவசியம் இருப்பதையும் நினைவூட்டுகிறது.

நூலை வாங்க https://www.swasambookart.com/books/9788198341419

ஃபோன் மூலம் வாங்க 81480 66645

Share

Sri Raman and Vairamuthu

திகைத்தனை போலும் செய்கை

திகைத்தனை என்ற சொல்லுக்கு, மதி மயங்கிச் செய்தல் என்ற ஒரு பொருளும் உண்டு என்பதைக் கண்டுபிடித்துவிட்டு, தனக்கு ஏற்றவாறு வைரமுத்து அடித்துவிட்டிருக்கிறார்.

தன் மனைவியைப் பிரிந்த ராமன், எது நியாயம் என்று தெரியாமல், மனைவியைப் பிரிந்த மதி மயக்கத்தில் தன் மீது மறைந்திருந்து அம்பெய்துவிட்டான் என்பது வாலி சொல்லும் குற்றச்சாட்டு. பின்னர் வாலியே ராமனைக் கடவுள் என்று புரிந்துகொண்டுவிட்டான். இது உண்மையில், ராமனைக் கடவுள் என்று அறியாமல், தன் மேல் அம்பு பாய்ந்த மதி மயக்கத்தில் வாலி சொல்வது!

உண்மையில் ராமன் மதி மயங்கித்தான் இதைச் செய்தாரா? இல்லவே இல்லை. முதலில் ராமன் சுக்ரீவனை வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறார். ஆனால் அன்று ராமன் வாலி மீது அம்பெய்யவில்லை. வாலி சுக்ரீவனை வெளுத்து அனுப்புகிறான். ஏன் அம்பெய்யவில்லை என்று சுக்ரீவன் கேட்டபோது, இருவரில் யார் வாலி என்று தனக்குப் பிடிபடவில்லை என்று சொல்லும் ராமன், மறுநாள் சுக்ரீவனை ஒரு மாலை அணிந்துகொண்டு வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறான். இதுவா மதி மயங்கிச் செய்வது? இது சிறப்பாக யோசித்துச் செய்வது. சீதையின் பிரிவால் மனம் வாடிச் சோர்வுற்றுக் கிடந்தாலும் ராமன் மதி மயங்கிக் கிடக்கவில்லை. மதி மயங்கவே இல்லை என்னும்போது, எங்கே புத்தி சுவாதினம் இல்லாமல் போவது?

பின்னர் ஏன் வைரமுத்து போன்றவர்கள் இப்படி வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்?

இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். இதே வைரமுத்துவின் இன்னொரு பேச்சு யூடியூபில் கிடைக்கிறது.

அதில் வைரமுத்து சொல்கிறார். கருணாநிதியும் இவரும் லிஃப்ட்டில் போகிறார்கள். லிஃபிட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஆறாவதாக ஒருவர் லிஃப்ட்டுக்குள் ஏறுகிறார். லிஃப்ட் அதிகப் பளு காரணமாக இயங்காமல் போக, ஒருவர் வெளியேற வேண்டியதாகிறது. பின்னர் லிஃப்ட் கிளம்பவும் கருணாநிதி சொன்னாராம், லிஃப் பாஞ்சலி போல, ஐந்து பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றாராம். இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். எதையும் உடலுடன் முடிச்சுப் போடுவது. இதைக் கற்றதே இவர்கள் செய்த சாதனை. எத்தனை பெரிய காவிய நாயகி என்றாலும் உடலும் உடலுறவுமே பிரதானம். ஏனென்றால் இவர்கள் புத்தி எப்போதும் இருப்பது அதற்குள்ளே மட்டும்தான். இவர்களிடம் என்ன தீவிரமான இலக்கிய ஆய்வை எதிர்பார்த்துவிட முடியும்?

வைரமுத்து சொல்கிறார், புத்தி சுவாதீனம் இல்லாமல் ராமன் வாலி வதம் செய்தது தவறில்லையாம், ஏனென்றால், இன்றைய சட்டம் அதைச் சொல்கிறதாம். அடித்துவிடுவது என்றானபின்பு, என்ன வேண்டுமானாலும் பேசலாம். இன்றைய சட்டத்தை அன்றே ராமன் கணித்தானா? விவாதிப்போம்!

மதி மயங்கிச் செய்வதும் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஒருவன் செய்வதும் ஒன்றல்ல. ராமன் மதி மயங்கிச் செய்ததல்ல வாலி வதம். அது வாலிக்கே தெரியும். புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்வது என்றுமே ராமனல்ல. இப்படி பேசித் திரியும் வைரமுத்துக்களே.

Share

Ronth Malayalam Movie

ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.

கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.

கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டும். தீலீஷுக்காக.

Share

Saiyaara Hindi movie

சையாரா (H) – நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு ஹிந்தித் திரைப்படம். அதுவும் துபாயில்.

90களின் ஹிந்தித் திரைப்படம் போன்ற ஒரு கதையை, இன்றைய தேதிக்கு மார்டனாக எடுத்திருக்கிறார்கள். கேன்சர், மூளைக் காய்ச்சல் போன்றவற்றையெல்லாம் காட்டிச் சாவடித்தது போல் இந்த நோயை வைத்துக்கொண்டு இன்னும் என்ன பாடுபடுத்த போகிறார்களோ! என்றாலும் இந்தத் திரைப்படம் பார்க்கும்படியாகவே இருக்கிறது.

தன்மாத்ர திரைப்படம் தந்த அளவு மன அழுத்தத்தையும் பயத்தையும் இந்தப் படம் தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார்

மிக அழகான ஒரு கதாநாயகன். முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அதைவிட அழகான கதாநாயகி. இளமை துள்ளும் கேமரா. அட்டகாசமான இசை எனப் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தமிழின் மூன்றாம் பிறை (ஹிந்தியில் சத்மா) திரைப்படத்தின் எதிர்த் திரைக்கதை என்று இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையைச் சொல்லலாம். அதிலும் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையை ஹீரோ சொல்லும்பொழுது கமலஹாசனை நினைவுகூராமல் இருக்கவே முடியாது.

படத்தின் பலம் என்ன? ஐ லவ் யூ மகேஷ் என்று கதாநாயகி கதாநாயகனைப் பார்த்துச் சொல்லும்பொழுது ஒரு திடுக்கிடல் அனைவருக்குள்ளும் வருகிறது. அதைக் கொண்டு வந்ததில்தான் இந்தப் படத்தின் வெற்றியும் இயக்குநரின் சாமர்த்தியமும் இருக்கின்றன. முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று, படத்தில் வில்லன் அடிதடி ரத்தம் துப்பாக்கி என எதுவும் இல்லை. படம் இயல்பாக ஒரே நேர்கோட்டில் செல்கிறது.

பொறுமையாக நகரக்கூடிய, இளமைத் துள்ளலான படத்தை பார்க்க விரும்புபவர்கள், முக்கியமாக அழகான ஹீரோவுக்காகவும், சிம்ரனையும் ஆலியாவையும் அனஸ்வரா ராஜனையும் கலந்த, அடுத்த பத்தாண்டு ஹிந்தித் திரை உலகை ஆளப்போகும் திறமையான ஒரு கதாநாயகியையும் பார்க்க விரும்பினால் இந்தத் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள்.

Share

infinix blocked in UAE

அலறவிட்ட அபுதாபி

கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை அபுதாபியில் விமானம் தரையிறங்கும் போது மனதுக்குள் ஓர் எண்ணம். ஒரு டைரியில் சில போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாமே என்று நினைத்தேன். அடுத்த நொடியே, இனி ஏன் குறித்து வைக்க வேண்டும், அதுதான் அபுதாபியில் தரையிறங்கி விட்டோமே என்றும் நினைத்துக் கொண்டேன்.

தரையிறங்கிய உடனே ஜெயக்குமாருக்கு மெசேஜ் அனுப்பவில்லை. அவர் தூங்கட்டும். இறங்கி இமிகிரேஷன் அடித்து விட்டு நமது லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்ட பிறகு அவருக்குச் சொல்லலாம் என நினைத்திருந்தேன். லக்கேஜ் அருகில் வந்தேன். அவருக்கு மெசேஜ் அனுப்ப எனது போனில் இலவச வைஃபை கனெக்ட் செய்தேன். அடுத்த நொடி என்னுடைய போன் லாக் ஆகிவிட்டது. அதாவது தடை செய்யப்பட்டு விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எத்தனை செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். வெக்கை முகத்தில் அடித்தது.

ஜெயக்குமார் உட்பட யாருடைய எண்ணும் என்னிடத்தில் இல்லை. அங்கே இருந்து வாட்ஸ் அப்பில் இன்னொருவர் போன் மூலம் என் மனைவியை அழைக்கலாம் என்றால், வாட்ஸ் அப் கால் அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு என் மனைவி இன்டர்நெட்டை ஆஃப் செய்து வைத்திருந்தாள்.

ஒரு வழியாக ஒருவரைப் பிடித்து இந்தியாவுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று கேட்டேன். இந்தியர்தான். வடநாட்டுக்காரர். ஏதோ யோசித்தவர் சரி என்று ஃபோனைக் கொடுத்துவிட்டார். என் மனைவிக்கு ஃபோன் செய்து அவளை எழுப்பினேன். விஷயத்தை சுருக்கமாகச் சொல்லி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் பார் என்று சொல்லித் துண்டித்து விட்டேன்.

அருகில் இருந்த இன்னொரு தொழிலாளி நண்பர் தமிழ்நாட்டுக்காரர் அவருடைய வாட்ஸ் அப்பில் இருந்து என் மனைவி எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப உதவினார். உடனடியாக ஜெயக்குமார் எண்ணை எனக்கு அனுப்பு என்று சொன்னேன். அவள் அனுப்பிய அந்த நம்பரைப் பார்த்துவிட்டு மனனம் செய்து கொண்டேன். மீண்டும் அதே நண்பர் போனிலிருந்து whatsapp மூலமாக ஜெயக்குமாருக்கு இன்னொரு மெசேஜ் அனுப்பினேன். அவர் விமான நிலையத்துக்கு வந்து விட்டதாகவும் ஐந்தாவது கேட்டுக்கு வருகிறேன் என்றும் சொன்னார். உதவிய நண்பரை வழி அனுப்பி வைத்துவிட்டு அவருக்குக் காத்திருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார் ஜெகே. இது அனைத்தும் நடந்து முடிய 45 நிமிடங்கள் ஆகி இருந்தன. அந்த 45 நிமிடங்களில் என்னை நானே நினைத்து நொந்து கொண்டேன். ஒழுங்காக ஒரு டைரியில் ஃபோன் என்னை எழுதி வைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அத்தனை பிரச்சினைகளும் ஒரே நொடியில் தீர்ந்திருக்கும்.

என் ஃபோன் செத்தது செத்ததுதான். எனக்கு எல்லாமே கைவிட்டுப் போனது போல் இருந்தது. அந்த ஃபோனை நம்பித்தான் நான் அபுதாபிக்கே வந்திருந்தேன். என்னுடைய ஃபோன் இன்பினிக்ஸ் ஃபோன். இன்பினிக்ஸ் இங்கே அனுமதி இல்லையாம்.

நாங்களும் இந்த ஃபோனை சரி செய்ய நான்கு ஐந்து கடைகளுக்கு ஏறி இறங்கினோம். யாருமே சரி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஃபோன் ஆன் செய்தால் ஸ்கிரீனில் ஒரு மெசேஜ் வந்தது. இப்படிச் செய்தால் உங்கள் ஃபோனை சரி செய்யலாம் என்றது. அதற்கு ஃபோனின் ஆதி முதல் அந்தம் முறை அனைத்தையும் கேட்டார்கள். எப்போது வாங்கியது எங்கே வாங்கியது அதன் இன்வாய்ஸ் எனது போர்டிங் பாஸ் என எல்லாவற்றையும் கேட்டார்கள். எப்படியோ சகலத்தையும் கொடுத்து, அன்லாக் கிளிக் செய்தேன். காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

தினமும் மூன்று முறை அன்லாக் ஆகிவிட்டதா என செக் செய்வேன். ஃபோன் அப்படியே பிளாக் மெசேஜை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிச்சலாகிப் போனது.

மூன்று நாட்கள் பெரும்பாடாகிவிட்டது. ஜெயக்குமாரின் இன்னொரு ஃபோனை எடுத்துக்கொண்டு அதில் எனது நம்பரை போட்டு, மூன்றாவது ஃபோனில் லோக்கல் யு ஐ ஈ நம்பரைப் போட்டு எப்படியோ அடித்துப் பிடித்துச் சமாளித்தேன்.

மூன்று நாள் கழித்து நான்காவது நாள் இன்று எனது ஃபோனை எரிச்சலுடன் ஆன் செய்த போது, அது அன்லாக் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தான் உயிர் வந்தது போல் இருக்கிறது. இப்போது ஃபோன் பேக்கப் ஆகிக் கொண்டு இருக்கிறது.

ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனமான நடைமுறை எனப் புரியவில்லை. நான் முன்பே துபாயில் நான்கு வருடம் இருந்திருக்கிறேன் என்பதாலும் அபுதாபியில் எப்படியும் ஜெகேவுடன் பேசி விடலாம் என்ற தைரியம் இருந்தாலும் எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் இப்படி அமையாது. இதே போல் ஒரு பெண் அல்லது முதல்முறை வருபவர்கள் தனியாக வந்து மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டிருந்தால் உண்மையில் நொந்து போய் இருப்பார்கள். இன்பினிக்ஸ் போன் வைத்திருப்பவர்கள் அல்லது வேறு பிராண்ட் போன் வைத்திருப்பவர்கள் அமீரகத்துக்குள் வரும்போது கவனமாக இருங்கள்.

தமிழ்நாட்டின் பொக்கிஷமான எனக்கே இந்தக் கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Share

mareesan movie review

மாரீசன் – மோசம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. அருமை என்று கொண்டாடவும் முடியாது. இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் படம் முழுவதும் வரும்போது ஏற்படக்கூடிய ஒரு அலுப்பு இந்த படத்தில் பெரிய அளவுக்கு ஏற்படாததற்குக் காரணம், இதில் வந்திருக்கும் இரண்டு நடிகர்கள் ராட்சசர்கள். அந்த இரண்டு நடிகர்களைப் பிடிக்கும் என்றால் இந்தப் படம் நீங்கள் தவற விடக்கூடாதது.

வடிவேலு தன் எல்லை மிகாமல் தெளிவாக ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே பிரமாதப்படுத்தி இருக்கிறார். இதற்கு முந்தைய மாமன்னன் திரைப்படத்தில் வந்ததைவிட இதில் இன்னும் விரிவான பாத்திரம். நன்றாகச் செய்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அவர் அழும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

ஃபகத் ஃபாஸில் பற்றித் தனியே சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு நொடியும் முகபாவத்தில் அசரடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாகிறது. இடைவேளை வரை கவிதை என்றால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் கவிதை கொஞ்சம் தொலைந்து போனாலும் கூட, இறுதிவரை பார்க்க முடிகிறது.

படத்தின் லாஜிக் ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டால் பெரிய பட்டியலே போடலாம். அதிலும் போலீசின் பங்கு இத்தனை கேவலமாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தானோ என்னவோ கோவை சரளாவை போலீஸாகப் போட்டு சிரிப்பு போலீஸ் என்று சிம்பாலிக்காகக் கட்டியிருக்கிறார்கள் போல. கோவை சரளாவுக்கு நடிக்கவே வரவில்லை.

நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம் பாடல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இரண்டு நடிகர்களும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

ஃபகத் ஃபாசிலுக்காகவும் வடிவேலுக்காகவும் பொறுமை இருந்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

பின்குறிப்பு: படத்தின் மையக்கதை இதுதான் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் படத்துக்குப் போயிருக்கவே மாட்டேன். இது ஒரு ரோடு ஸ்டோரி, அதிலும் ஃபகத்தும் வடிவேலும் நடித்திருக்கிறார்கள் என்பதற்காகவே போனேன். பொதுவாக எனக்கு இதுபோன்ற கதை தரும் படபடப்பு சொல்லி மாளாதது. கதை தெரியாததால் மாட்டிக் கொண்டு விட்டேன்.

Share