Archive for திரை

சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)

சிறந்த திரைப்படம்: வடசென்னை

முக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த நடிகர்: யாருமில்லை

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)

சிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),

நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0

சிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)

சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை

சிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்

படு மோசமான படம்: கஜினிகாந்த்

அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96

இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)

Share

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share

Arjun Reddy

அர்ஜூன் ரெட்டி – ஒரு முறை பார்க்கலாம். விஜய் வாழ்ந்திருக்கான். ரத்தமும் சதையும் காதலும் காமமும் கலந்த ஒருத்தனாலதான் இப்படி இயக்கமுடியும். 3 மணி நேரப் படத்தில் 30 முத்தக்காட்சியாவது இருக்கும். கமல் ரசிகர்கள் தெளியவும். படம் கொஞ்சம் நீளம். கடைசியில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் வரும் கிளைமாக்ஸோ என நினைத்தேன். அதற்கும் கடைசியில் கற்பை நிலைநாட்டிவிட்டார்கள். தெலுங்கானாகாரன்கிட்ட வெச்சிக்காதன்னு தெலுங்குக்காரர்கள் பேசும் வசனம் – ஒரே மொழி இரு மாநிலம்‌ என்ற நிலையில் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

Share

Kolamaavu Kokila

கோலமாவு கோகிலா – சமீபத்தில் இத்தனை சிரித்து பார்த்த படம் இதுதான். யோகி பாபு செம. நயந்தாரா நடிப்பு சூப்பர். அனிருத் பின்னணி இசை அபாரம். சூது கவ்வும், நேரம், மூடர் கூடம் வரிசையில் (கொஞ்சம் குறைந்தாலும்) வரவேண்டிய படம். நெல்சனின் முதல் படம் ஒருநாள் கூத்து என்கிறது விக்கி. அதுவே கொஞ்சம் உருப்படியான படம்தான். குறிப்பாக எஃப் எம் பயன்படுத்தப்பட்டது பிடித்திருந்தது. இப்படம் அட்டகாசம்.

ஆனால் ஏன் இப்படி கற்பகாம்பாள் மெஸ்ஸைக் காட்டினார்கள்? ஏன் தொடர்ந்து பிராமணர்களை இப்படி? எரிச்சல் ஒரு பக்கம் என்றால், எப்படி கற்பகாம்பாள் மெஸ்காரர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பது ஆச்சரியம். அவர்களுக்கு படம் வரும் முன்பு தெரியாது என வைத்துக் கொண்டால், படம் வந்த பின்பு எதிர்ப்பு தெரிவித்தார்களா?

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம் என்றொரு கொடுமையைப் பார்த்தேன். தலையெழுத்து. ஒரு காட்சி கூடவா நல்லா இருக்காது? மாயாண்டி குடும்பத்தார் போன்ற இன்னொரு‌ கொடுமை இது. இதில் விவசாயி காளை ஆணவக் கொலை என்றெல்லாம் அங்கங்கே தூவல் வேறு. ஜாதியைத் திட்டிக்கொண்டே அவங்களும் பெரிய தலைக்கட்டு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். வளவள என்று காது தொங்கும் அளவுக்கு வசனம். கண்றாவி.

Share